Published:Updated:

'ரகசியம் காப்பதில் இரும்புப்பெட்டி' - கருணாநிதி நம்பிக்கையைப் பொய்யாக்கிய துரைமுருகன்!

'ரகசியம் காப்பதில் இரும்புப்பெட்டி' - கருணாநிதி நம்பிக்கையைப் பொய்யாக்கிய துரைமுருகன்!
'ரகசியம் காப்பதில் இரும்புப்பெட்டி' - கருணாநிதி நம்பிக்கையைப் பொய்யாக்கிய துரைமுருகன்!

2009 நாடாளுமன்றத் தேர்தலில் துரைமுருகன் மீது கருணாநிதி வைத்திருந்த நம்பிக்கை 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தகர்ந்து போனது!

``ரகசியத்தைக் காப்பாற்றுவதில் துரைமுருகன் இரும்புப்பெட்டி'' - மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, 2009-ம் ஆண்டு எழுதிய ஒரு கவிதையில் இப்படிக் குறிப்பிட்டார். `கருணாநிதியின் கணிப்பு தவறு' என்பதை இந்த நாடாளுமன்றத் தேர்தல் தெளிவுபடுத்திவிட்டது.

நடந்து முடிந்த தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளுடனும் ஒரேநேரத்தில் தே.மு.தி.க நடத்திய கூட்டணி தொடர்பான சித்து விளையாட்டை அம்பலப்படுத்தினார் துரைமுருகன். நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே, இரண்டு திராவிடக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியது தே.மு.தி.க. ``எங்களுடன் அனைத்துக் கட்சிகளும் பேசி வருகிறார்கள்'' என்றார் சுதீஷ். கடைசியில், அ.தி.மு.க கூட்டணியில் இணைய முடிவு செய்தது தே.மு.தி.க. ஆனால், அதற்கு முன்பே பா.ம.க-வுக்கு தொகுதிப் பங்கீட்டை முடித்துவிட்டது அ.தி.மு.க. மூன்றாவது பெரிய கட்சி என மார்தட்டிக்கொண்டிருந்த தே.மு.தி.க, `முதலில் தங்களைத்தான் அழைத்துப் பேசியிருக்க வேண்டும்' எனக் கொதித்தது. அதனால், கூட்டணியில் சேர்வதற்கு `பிகு' பண்ணியது. இப்படியான சூழலில் தி.மு.க கூட்டணி தொகுதிப் பங்கீடு முடிந்துவிட்டது. ``பா.ம.க-வைவிட கூடுதலாக ஒரு தொகுதியை எங்களுக்குத் தர வேண்டும்'' என பிரேமலதா சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால், அ.தி.மு.க இறங்கி வரவில்லை.

நிர்கதியாய் நின்ற தே.மு.தி.க-வுக்கு பி.ஜே.பி. கைகொடுத்தது. நான்கு இடங்கள் தருவதாகச் சொன்னது அ.தி.மு.க. சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பிரசாரக் கூட்டத்தில் விஜயகாந்தின் படம் வைக்கப்பட்டு, கடைசி நேரத்தில் எடுக்கப்பட்டது. அதுவரை கூட்டணி உடன்பாடு ஏற்படாததுதான் அதற்குக் காரணம் என்று சொல்லப்பட்டது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தபோதே, தே.மு.தி.க நிர்வாகிகள் சிலர், முன்னாள் அமைச்சர் துரைமுருகனை நேரில் சந்தித்து, தி.மு.க-வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ரகசியமாக நடந்த அந்தச் சந்திப்பை ஊடகங்கள் மத்தியில் வெட்டவெளிச்சம் ஆக்கினார் துரைமுருகன். ``சுதீஷ் என்னிடம் போனில் பேசினார். `கூட்டணிக்கு வருகிறோம். எங்களுக்கு அ.தி.மு.க கூட்டணி வேண்டாம்' என்றார். உடனே நான் எங்களிடம் இடங்கள் இல்லையே, இருந்தால்தானே, உங்களுக்குக் கொடுக்க முடியும். கூட்டணி பற்றி முடிவெடுக்கவேண்டியது தி.மு.க. தலைவர்தான்' என்றேன். சுதீஷ் போனில் பேசியபிறகு தே.மு.தி.க நிர்வாகிகள் வந்து என்னைச் சந்தித்தார்கள். அவர்களிடமும் `வாய்ப்பில்லை' எனச் சொல்லிவிட்டேன்'' என்று பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார் துரைமுருகன்.

'ரகசியம் காப்பதில் இரும்புப்பெட்டி' - கருணாநிதி நம்பிக்கையைப் பொய்யாக்கிய துரைமுருகன்!

தேர்தல் காலங்களில் நடக்கும் அதிகாரபூர்வமற்ற கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை எந்தக் கட்சியும் வெளிப்படையாகத் தெரிவிப்பதில்லை. அதை முதன்முறையாகப் போட்டு உடைத்தார் துரைமுருகன். அவரைத் தேடி, தே.மு.தி.க. நிர்வாகிகள் வருவதற்கு முன்பே அங்கே ஊடகத்தினர் இருந்தார்கள். ``இதெல்லாம் துரைமுருகன் கைங்கரியம்'' எனக் கொதித்தது தே.மு.தி.க. அதன்பிறகு அ.தி.மு.க கூட்டணியில் நான்கு இடங்களை வாங்கிக்கொண்டு, அடங்கிப்போனது தே.மு.தி.க. பிறகு துரைமுருகன் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்தியதும், வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா புகார் எழுந்ததும், வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டதும் 17-வது மக்களவைத் தேர்தலில் நடந்த ஹைலைட்டுகள்.

இப்போது விஷயத்துக்கு வருவோம். `துரைமுருகன் ரகசியத்தைக் காப்பாற்றுவதில் இரும்புப் பெட்டி'' எனக் கருணாநிதி வைத்த நம்பிக்கையை இப்போது குலைத்துப் போட்டுவிட்டார் அவர். அரசியல்வாதிகள் பொதுவாக ரகசியங்களைக் காப்பார்கள். ஆனால், துரைமுருகன் அதற்கு மேலானவர் என்பதால்தான் `இரும்புப் பெட்டி' என்றார் கருணாநிதி. அவர் ஏன் இப்படிச் சொன்னார் என்பதற்கு ஒரு வரலாறு உண்டு. அதுவும் 2009 நாடாளுமன்றத் தேர்தலில் வெளிப்பட்டதுதான். 2009 தேர்தல் பரபரப்புக்கிடையே கவிதை ஒன்றை வெளியிட்டார் கருணாநிதி.

``தம்பி ஒருவர் தி.மு.க-வில் இருந்தபோது, என் பதவிக்குக் குறி வைத்தார். நான் நீண்ட காலம் உயிரோடு இருந்தால், தலைவர் பதவியை அடைய முடியாதே என்றும் கவலைப்பட்டார்'' என அந்தக் கவிதையில் ஒருவரைச் சுட்டிக் காட்டினார் கருணாநிதி. சில ஆண்டுகளுக்கு முன்பு குமரிமுனைக் கடற்கரை விருந்தினர் மாளிகையில் நடந்த ஒரு சம்பவத்தைக் கவிதையில் விவரித்திருந்தார் கருணாநிதி. கருணாநிதி தூங்கிக் கொண்டிருந்தபோது துரைமுருகனும், ஆற்காட்டாரும் அந்தத் தம்பியும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் அந்தத் தம்பி கருணாநிதியின் இடத்துக்குக் குறிவைத்து கருத்துகளை வெளியிட்டார். இதுபற்றி கவிதையில் இப்படிக் குறிப்பிடுகிறார் கருணாநிதி.

“ஏன் துரைமுருகன்; நான் கலைஞருக்குப் பிறகு
தலைவனாவேன் என்கிறீர்களே? ஒரு வேளை நமது
கலைஞர், பெரியார் போல-ராஜாஜி போல-தொண்ணூறு
வயதுக்கு மேல் வாழ்ந்து விட்டால்; நான் தலைவனாவதற்கு
எத்தனை வருடம் காத்திருப்பது?’’

இதைக் கேள்வியாகக் கருதாமல்; மற்ற இரு தம்பியரும்
தேள் பிலிற்றும் விஷமாக எண்ணிக் கலங்கி-
இருவரும் ரகசியமாகச் சத்தியம் செய்து கொண்டார்களாம் -
இந்தச் செய்தியை இருவரும் தலைவரிடம்
எப்போதும் சொல்வதில்லையென்று !
ஆனால் -
துரைமுருகன் ரகசியத்தைக் காப்பாற்றுவதில் இரும்புப் பெட்டி!
ஆற்காட்டாரோ -அசல்; கண்ணாடிப் பேழை

2009 நாடாளுமன்றத் தேர்தலில் துரைமுருகன் மீது கருணாநிதி வைத்த நம்பிக்கை 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தகர்ந்து போனது.

அடுத்த கட்டுரைக்கு