Published:Updated:

உகாதி திருநாள்: கருணாநிதி, ஜெ. வாழ்த்து

சென்னை, ஏப்.4,2011

உகாதி பண்டிகை இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தமிழக முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.##~~##

முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள உகாதி வாழ்த்து செய்தியில், "தி.மு.க. அரசு நடைமுறைப்படுத்திய அரசு விடுமுறை தெலுங்கு, கன்னட மொழிகள் பேசும் மக்களின் புத்தாண்டு நாள் உகாதி திருநாளாக திங்கட்கிழமை (இன்று) கொண்டாடப்படுகிறது.

தமிழகமெங்கும், குறிப்பாக சென்னை மாநகரில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களையும் சேர்ந்த அனைவரும் மகிழ்ச்சியுடனும், மனநிறைவுடனும் வாழ்கின்றனர். அவர்கள் அனைவரையும் அரவணைத்து அன்பு செலுத்திவரும் தி.மு.க. அரசு தமிழகத்தில் தெலுங்கு, கன்னட மொழிகள் பேசும் மக்களுக்கு முந்தைய அ.தி.மு.க. அரசு காலத்தில் மறுக்கப்பட்ட உகாதி திருநாளுக்கான அரசு விடுமுறையை 2006-க்கு பின் மீண்டும் வழங்கி நடைமுறைப்படுத்தியுள்ளது.

தெலுங்கு, கன்னட மொழிகளைப் பயில விரும்புவோருக்கு தமிழக பள்ளிகளில் உரிய வசதிகளை ஏற்படுத்தித்தந்தும், தனி வல்லுநர் குழுக்களை அமைத்து தரமான பாடநூல்களைத் தயாரித்து வழங்கியும் உதவியுள்ளது.

கர்நாடக மாநில அரசுடன் நல்லுறவு கொண்டு அங்கு பல ஆண்டு காலமாக முடிக்கிடந்த அய்யன் திருவள்ளுவர் சிலை திறக்கப்படவும், அதே உணர்வுடன் சென்னை மாநகரில் கன்னட கவிஞர் சர்வக்ஞர் சிலை திறக்கப்படவும் ஆவன செய்து தமிழக, கர்நாடக மாநில மக்களிடையே நல்லிணக்க உணர்வுகளை வளர்த்துள்ளது.

அதேபோல் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வந்து சேரும் கிருஷ்ணா குடிநீர் தமிழக, ஆந்திர மாநிலங்களுக்கு இடையிலான நல்லுறவை வளர்க்கப்பயன்படும் என்பதால் ஆந்திர மாநில அரசுடனும் இணக்கமான அணுகுமுறையை கடைப்பிடித்து வந்துள்ளது.

இத்தகைய நடைமுறை மூலம், தமிழகத்தில் வாழும் தெலுங்கு, கன்னடம் உள்பட பிற மொழிகள் பேசும் மக்களின் நலனை காப்பதில் தி.மு.க. தொடர்ந்து பாடுபடும் என்பதுடன் தமிழகத்தில் உகாதி திருநாள் கொண்டாடும் கன்னட, தெலுங்கு மக்களுக்கு எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்," என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

ஜெ. வாழ்த்து...

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "தமிழகத்தில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் அனைத்து மக்களுக்கும் உகாதி திருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

தங்களுடைய பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பேணிக்காத்துவரும் அதே சமயத்தில், தமிழ் மக்களோடு ஒற்றுமையுடன் இணைந்து வாழ்ந்து வருபவர்கள் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள்.

இந்த புத்தாண்டு தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களின் வாழ்வில் புது வசந்தத்தைக் கொண்டுவரும் ஆண்டாக விளங்க வேண்டும் என்றும், வளத்தையும், நலத்தையும், வெற்றியையும் தரும் ஆண்டாக விளங்க வேண்டும் என்றும் இறைவனை பிரார்த்தித்து என் இனிய உகாதி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்," என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.