Published:Updated:

`நொண்டிச்சாக்குகள் முக்கியமில்லை'னு சொன்னது நீங்கதானே கெஜ்ரிவால் ஜீ! - ஆம் ஆத்மி சரிந்தது எப்படி?

`நொண்டிச்சாக்குகள் முக்கியமில்லை'னு சொன்னது நீங்கதானே கெஜ்ரிவால் ஜீ! - ஆம் ஆத்மி சரிந்தது எப்படி?
`நொண்டிச்சாக்குகள் முக்கியமில்லை'னு சொன்னது நீங்கதானே கெஜ்ரிவால் ஜீ! - ஆம் ஆத்மி சரிந்தது எப்படி?

`நொண்டிச்சாக்குகள் முக்கியமில்லை'னு சொன்னது நீங்கதானே கெஜ்ரிவால் ஜீ! - ஆம் ஆத்மி சரிந்தது எப்படி?

றுமுகம் கண்ட வேகத்தைவிடவும் இறங்குமுகத்தில் இருக்கிறது ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சி. காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்த டெல்லியை, கட்சியைத் தொடங்கிய ஓராண்டிலேயே தன் வசமாக்கிக்கொண்டார் கெஜ்ரிவால். இந்த வெற்றியைக் கொடுத்ததில், அம்மாநில இளைஞர்களின் பங்கு முக்கியமானது. இந்த நிலையில் இளைஞர்களின் ஆதரவையும், தற்போது இழந்துவருகிறார், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் டெல்லியில் ஓரிடத்தில்கூட வெற்றிபெறாத நிலையில், அந்தக் கட்சியின் வாக்குசதவிகிதம் கணிசமாகக் குறைந்திருக்கிறது. இன்னும் எட்டு மாதங்களில் டெல்லியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அந்தத் தேர்தலிலாவது ஆம் ஆத்மி புத்துயிர் பெறுமா? அக்கட்சியின் அரசியல் எதிர்காலத்துக்கு மிகப் பெரிய சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய காலகட்டம் இது. 

மகுடம் சூடிய கெஜ்ரிவால்!

தலைநகர் டெல்லியின் அரசியல் களம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. அங்கு நிலவும் அரசியல் அனலுக்கு ஒருபோதும் ஓய்வே கிடையாது. 1998-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டுவரை தொடர்ந்து 15 ஆண்டுகள் டெல்லி மாநிலத்தை ஆட்சி செய்தது காங்கிரஸ் கட்சி. 2010-ல் டெல்லியில் கோலாகலமாக நடந்து முடிந்தது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி. வண்ணமயமான அந்தப் போட்டிகளின் தாக்கம் மறைவதற்குள், அப்போட்டியை நடத்தியதில் பெருமளவில் ஊழல் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு, காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடத்தியதில் ஊழல் உட்பட பல்வேறு ஊழல் முறைகேடுகள், மத்திய காங்கிரஸ் அரசுக்கு எதிராக எழுந்தன. அந்தக் குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் தங்களின் பிரசாரம் மூலம் தேசம் முழுக்க வலுவாகப் பரப்பியதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சிக்கு எதிரான நிலை உருவானது.

`நொண்டிச்சாக்குகள் முக்கியமில்லை'னு சொன்னது நீங்கதானே கெஜ்ரிவால் ஜீ! - ஆம் ஆத்மி சரிந்தது எப்படி?

இந்த நிகழ்வுகள் நடைபெற்ற காலகட்டத்தில், `ஊழலுக்கு எதிரான இந்தியா' என்ற இயக்கத்தின் மூலம், `ஜன் லோக்பால் மசோதா'வுக்காகப் போராட்டத்தைத் தொடங்கினார் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே. இதன்மூலம் ஒட்டுமொத்த தேசத்திலிருந்தும் அவரின் போராட்டத்துக்கு ஆதரவு பெருகியது. அவரின் குழுவில் இடம்பெற்றிருந்தவர் அரவிந்த் கெஜ்ரிவால். அரசியல் கட்சி நிலைப்பாட்டில் அன்னா ஹசாரேவுடன் கெஜ்ரிவாலுக்கு கருத்துவேறுபாடு ஏற்பட்டது. ஹசாரேவின் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, `ஊழலுக்கு எதிராக ஒன்றிணைவோம்' என 2012-ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியைத் தொடங்கினார் கெஜ்ரிவால்.

ஊழலுக்கு எதிராக நாடுமுழுக்க காங்கிரஸ் கட்சிக்கு எதிர்ப்பலை வீசிக்கொண்டிருக்க, அந்தக் கனல் டெல்லியில் அதிகமாகவே இருந்தது. எனவே, `நம் அரசியல் பயணத்தைத் தொடங்கவேண்டிய முதல்களம் இதுதான்' என்று டெல்லி மாநிலத்தைத் தேர்வு செய்தார் கெஜ்ரிவால். மாநிலம் முழுக்க ஊழலுக்கு எதிராக முழங்கியவர், காங்கிரஸ், பி.ஜே.பி உள்ளிட்ட பிரதான கட்சிகளைக் கடுமையாகச் சாடினார். `ஊழல் இல்லாத புதிய மாநிலத்தை உருவாக்குவோம். அதற்கு நீங்கள் உறுதுணையாக இருக்கவேண்டும்' என்று இளைஞர்களை நோக்கி குரல் கொடுத்தார்.

`புதிய கட்சிகள் உருவாவது இயல்பான ஒன்றுதான். அவருடைய கட்சியெல்லாம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது' என்றுதான் அப்போது எதிர்க்கட்சிகள் கூறிவந்தன. ஆனால், டெல்லி தேர்தலில் கெஜ்ரிவால் புதிய சகாப்தத்தை உருவாக்குவார் என காங்கிரஸோ, பி.ஜே.பியோ நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. என்றாலும் கெஜ்ரிவாலுக்கு கைமேல் பலன் கிடைத்தது. 2013-ம் ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டமன்றத் தேர்தலில், 28 இடங்களில் வென்றது ஆம் ஆத்மி. மேலும், முதல் தேர்தலிலேயே 29.45 சதவிகித வாக்குகளையும் பெற்றது அந்தக் கட்சி. அந்த வெற்றியை ஒட்டுமொத்த இந்தியாவும் வியந்து பார்த்தது. 

`நொண்டிச்சாக்குகள் முக்கியமில்லை'னு சொன்னது நீங்கதானே கெஜ்ரிவால் ஜீ! - ஆம் ஆத்மி சரிந்தது எப்படி?

மக்களின் முதல்வர்!

பெரும் தோல்வியைச் சந்தித்து, டெல்லி சட்டசபையில் வெறும் 8 இடங்களில் மட்டுமே வென்ற காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மியின் ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவளிப்பதாகக் கூறியது. முதல் முயற்சியிலேயே முத்திரைப் பதித்து, முதல்வரானார் கெஜ்ரிவால். காங்கிரஸ் கட்சியின் ஊழல்களைப் பட்டியலிட்டு வார்த்தைக் கணைகளை வீசிய கெஜ்ரிவால், அதே கட்சியின் தயவில் ஆட்சியமைத்தது அவரின் நிலைப்பாட்டுக்கு விழுந்த முதல் செக்.

ஆனால், ஆட்சிக்கு வந்த உடனேயே வேகமாகச் செயல்பட்டார். ஒவ்வொரு வீட்டுக்கும் மாதந்தோறும் 700 லிட்டர் இலவச குடிநீர், மின்கட்டணம் குறைப்பு, ஊழலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது எனப் பல ஆக்கபூர்வமான பணிகளைச் செய்தார். இதனால் மக்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு பெருகியது. 'ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவோம்' என ஆட்சியைப் பிடித்த கெஜ்ரிவாலுக்கு, அந்த மசோதாவை நிறைவேற்ற போதிய எம்.எல்.ஏக்களின் ஆதரவு கிடைக்கவில்லை. எனவே, ஆட்சியமைத்த 49 நாள்களிலேயே தன் அமைச்சரவையுடன் பதவியிலிருந்து விலகினார். அதனால், அவருக்கு மக்களின் ஆதரவு மேலும் உயர்ந்தது. இந்த நிலையில் குடியரசுத் தலைவர் ஆட்சி முதல் பல்வேறு அதிரடிக்காட்சிகள் டெல்லி மாநில அரசியலில் அரங்கேறின. 

`நொண்டிச்சாக்குகள் முக்கியமில்லை'னு சொன்னது நீங்கதானே கெஜ்ரிவால் ஜீ! - ஆம் ஆத்மி சரிந்தது எப்படி?

அபார வெற்றி... அதிர்ச்சி வைத்தியம்!

2015-ம் ஆண்டு மீண்டும் டெல்லி மாநிலத்துக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலுக்கு இடைப்பட்ட காலங்களில் மக்களிடையே தன் நெருக்கத்தை அதிகப்படுத்திக்கொண்ட கெஜ்ரிவாலை, `மிஸ்டர் க்ளீன்'தலைவராக மக்கள் கருதினர். இதனால், ஆம் ஆத்மி கட்சி 70-க்கு 67 இடங்களில் வெற்றிபெற்று பி.ஜே.பி மற்றும் காங்கிரஸ் கட்சிக்குப் பெரும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. டெல்லி மாநிலத்தைக் கைப்பற்றவேண்டும் என நினைத்த பி.ஜே.பி, கெஜ்ரிவாலின் வெற்றியை ரசிக்கவில்லை. 

ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களின் இரட்டைப் பதவி விவகாரத்தில் பல மாதங்களுக்கு கெஜ்ரிவாலின் தூக்கம் கலைந்தது. அந்தக் கட்சியின் 20 எம்.எல்.ஏக்களைத் தகுதி நீக்கம் செய்யும் விவகாரத்தில் மத்திய பி.ஜே.பி அரசு அதிக முனைப்பு காட்டியது. குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் 20 எம்.எல்.ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். `அதிகார வரம்பு யாருக்கானது' என்பதில் வெடித்தது, அடுத்த கலவரம். இம்முறை துணைநிலை ஆளுநர் மூலமாக கெஜ்ரிவால் அரசுக்கு நெருக்கடி கொடுத்தது பி.ஜே.பி. கெஜ்ரிவாலுக்கும் மாநில ஆளுநருக்கும் மோதல் முற்றியது. ஆனாலும், எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம், மாநில அதிகார வரம்பு விவகாரங்களில் நீதிமன்றம் சென்று சட்டப்போராட்டத்தால் வென்றார் கெஜ்ரிவால். 

`நொண்டிச்சாக்குகள் முக்கியமில்லை'னு சொன்னது நீங்கதானே கெஜ்ரிவால் ஜீ! - ஆம் ஆத்மி சரிந்தது எப்படி?

இடியாப்பச் சிக்கல்!

மத்திய பி.ஜே.பி அரசு தற்போது வரை கெஜ்ரிவாலுக்குத் தொல்லை கொடுத்துவருவது ஊர் அறிந்த ரகசியம். இப்படி ஒவ்வொரு சிக்கல் முடிச்சையும் அவிழ்ப்பதிலும், ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதிலும், மத்திய அரசின் அழுத்தங்களிலிருந்து தப்பிக்கவுமே ஒவ்வொரு நாளும் போராடிக்கொண்டிருக்கிறார் கெஜ்ரிவால். இதனால் மக்கள் பிரச்னைகளில் அவர் ஆக்கபூர்வமாகக் கவனம் செலுத்துவது குறைந்தது. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளையும் அவரால் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. பெரும்பாலான மாநிலங்களிலும் தங்கள் கட்சியைப் பரவலாக்கும் முயற்சிகளையும் மேற்கொண்ட கெஜ்ரிவாலுக்கு, டெல்லியைத் தவிர பஞ்சாப், கோவா மாநிலங்களில் மட்டும் செல்வாக்கு கிடைத்தது. மேலும், `மக்களவைத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை' என்ற தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, கடந்த 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடியை எதிர்த்து வேட்பாளராகக் களமிறங்கி தோல்விடைந்தார். இப்படிப் பல செயல்பாடுகளில் மாறுபட்ட நிலைப்பாடுகளையே மேற்கொண்டுவருகிறார் கெஜ்ரிவால்.

`நொண்டிச்சாக்குகள் முக்கியமில்லை'னு சொன்னது நீங்கதானே கெஜ்ரிவால் ஜீ! - ஆம் ஆத்மி சரிந்தது எப்படி?

எனவே, மக்களுக்கு ஆம் ஆத்மி கட்சி மீதான நம்பகத்தன்மை குறையத் தொடங்கியது. 2017-ம் ஆண்டு கெஜ்ரிவால் கூறுகையில், ``கடந்த இரண்டு நாள்களாகப் பல தன்னார்வலர்கள், வாக்காளர்களிடம் பேசினேன். இதன் மூலம் ஓர் உண்மை தெளிவாகப் புரிகிறது. ஆம்! நாம் தவறு செய்து விட்டோம். தவறுகள் குறித்து நமக்கு நாமே சுய ஆய்வு செய்து கொண்டு, தவறுகளைச் சரிசெய்ய வேண்டும். வாக்காளர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் நாம் கடன்பட்டிருக்கிறோம். இப்போதைக்கு நமக்கு செயல்தான் முக்கியம். நொண்டிசாக்குகள் முக்கியமல்ல" என்றார். இதன் பிறகாவது கட்சியை முந்தைய பாய்ச்சலுக்குக் கொண்டுசென்றாரா கெஜ்ரிவால்?

விளக்கம் கொடுங்கள் கெஜ்ரிவால்!

`ஊழலுக்கு எதிரானவர்கள்' என்ற ஒற்றை அஜண்டாவை மட்டுமே பிரதானமாக முழங்கி, டெல்லியில் ஆட்சியைப் பிடித்த கெஜ்ரிவால், அதன் பிறகு அந்தக் கோஷத்தை வலுவாக மக்களிடம் கொண்டுசெல்லவில்லை. ஆம் ஆத்மியின் மூத்த தலைவரான குமார் விஸ்வாஸ், ஆம் ஆத்மி ஊழலில் திளைப்பதாகக்கூறி, பரபரப்பு வீடியோ ஒன்றையும் சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டார். தவிர, கெஜ்ரிவால் கோடிக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு தன் கட்சியினருக்கு தேர்தலில் சீட் கொடுக்கிறார் என்ற குற்றச்சாட்டை, சொந்தக் கட்சியினரே முன்வைத்தனர். உள்கட்சிப் பூசலும் அதிகரித்தது. இதெல்லாம் கெஜ்ரிவால் மீதான நம்பகத்தன்மையைக் குறைத்தன. இதற்கெல்லாம் இதுவரை அவர் வெளிப்படையாக விளக்கம் கொடுக்கவில்லை. `உங்க மேல பெரிய நம்பிக்கை வெச்சிருந்தோம்ஜீ. உங்களுக்கு என்ன ஆச்சு?' எனப் பிரசாரம் சென்ற கெஜ்ரிவாலிடமும் மக்கள் நேரிடையாகவே புலம்பினர்.

இந்த நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க, ஆம் ஆத்மி பெரும் முயற்சிகளை மேற்கொண்டது. அதற்குக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் டெல்லி மாநில முன்னாள் முதல்வருமான ஷீலா தீட்சித் முட்டுக்கட்டை போட்டார். இதனால், இவ்விரு கட்சிகளும் கூட்டணி அமைக்கவில்லை. ஆனால், ஊழலுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் எதிராக கர்ஜித்து, அரசியலில் குதித்த கெஜ்ரிவாலின் இந்த நடவடிக்கைகளை, அம்மாநில மக்கள் ரசிக்கவில்லை. இப்படி கெஜ்ரிவால் மீதான டெல்லி மக்களின் எதிர்ப்பு, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வலுவாகப் பிரதிபலித்திருக்கிறது.

`நொண்டிச்சாக்குகள் முக்கியமில்லை'னு சொன்னது நீங்கதானே கெஜ்ரிவால் ஜீ! - ஆம் ஆத்மி சரிந்தது எப்படி?

சரிவுப் பாதையில் ஆம் ஆத்மி!

கடந்த 2014-ம் ஆண்டு டெல்லி மாநில நாடாளுமன்றத் தேர்தலில் 32.9 % வாக்குகள் பெற்ற ஆம் ஆத்மி கட்சி, தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 18.1 % வாக்குகளை மட்டுமே பெற்றிருக்கிறது. டெல்லியிலுள்ள ஏழு தொகுதிகளிலும் பி.ஜே.பி வென்றுள்ளது. டெல்லி மாநிலத்திலும் வேகமாக வளர்ந்து வரும் பி.ஜே.பி, ஆம் ஆத்மியின் வளர்ச்சிக்குப் பெரிய பின்னடைவை உண்டாக்கியிருக்கிறது. தவிர, ஆம் ஆத்மிக்கு செல்வாக்குள்ள பஞ்சாப் மற்றும் கோவா மாநிலங்களிலும் சரிவைச் சந்தித்திருக்கிறது.

மக்கள் மத்தியில் ஆம் ஆத்மி மீதான ஆதரவு குறைந்துவருகிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அதாவது எட்டு மாதங்களில் டெல்லி மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த முறை ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் வேகமாகச் செயல்பட்டுவருகிறது பி.ஜே.பி. இந்த நிலையை மாற்ற கெஜ்ரிவால் கடுமையாக உழைத்தாக வேண்டும். தன் மீதும், கட்சி மீதும் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு முழுமையான விளக்கமளித்து, மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்வகையில் செயல்படவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் கெஜ்ரிவால். குறிப்பாக, அவரின் வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் ஆதரவளித்த இளைஞர்களின் நம்பிக்கையைப் பெற்றால் மட்டுமே ஆம் ஆத்மிக்கு வருங்காலத்தில் அரசியல் எதிர்காலம் உண்டு. அதை நிகழ்த்திக்காட்டி, ஆம் ஆத்மி கட்சிக்குப் புத்துயிர் அளிப்பாரா கெஜ்ரிவால்? பொறுத்திருந்து பார்ப்போம்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு