Published:Updated:

மத்திய அரசுப் பணி வெறும் கனவா... வாழ்விழக்கப்போவது யார்?

இட ஒதுக்கீட்டு உரிமையைக் காக்க வேண்டுமானால், இந்தியாவெங்கும் உள்ள சமூகநீதி இயக்கங்கள் ஒன்றிணைய வேண்டும். ஒன்றிணைந்து போராடினால் மட்டுமே இந்தியாவை வர்ணாசிரம காலத்துக்குப் போய்விடாமல் காக்க முடியும்.

``நான் இருக்கும்வரை, அம்பேத்கர் நமக்கு வழங்கிச் சென்றுள்ள இடஒதுக்கீட்டில் மாற்றம் கொண்டுவர முடியாது” என 2019 ஏப்ரல் 22-ம் தேதி மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது முழங்கினார், பிரதமர் மோடி. இந்த நிலையில் நடைபெற்று முடிந்த 17-வது நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் பி.ஜே.பி. கட்சியே பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்று அரியணை ஏறியிருக்கிறது. மோடி 2.0 ஆட்சியை அமைத்துள்ளதுடன், பதவியேற்ற அமைச்சர்களுக்கும் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சமீபத்தில் மத்திய எல்லைப் பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 300 ரேடியோ ஆபரேட்டர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்புகள் சமீபத்தில் வெளியாகின. அதில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர்களுக்கான இடஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், கடந்த ஆட்சிக் காலத்தில் பி.ஜே.பி அரசால் புதிதாகக் கொண்டுவரப்பட்ட பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டிற்கான இடங்கள் மட்டும் வழங்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன.  

மத்திய அரசுப் பணி வெறும் கனவா... வாழ்விழக்கப்போவது யார்?

கடந்த 2015-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்தைச் சார்ந்தவர்கள் நடத்திய இடஒதுக்கீட்டிற்கான போராட்டங்கள் பெரும் கவனம் பெற்றன. அப்போது ஆர்.எஸ்.எஸ்ஸின் அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இடையேயான கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அதில் ஆர்.எஸ்.எஸ். தேசியத் தலைவர் மோகன் பகவத் பேசியபோது, ``இடஒதுக்கீட்டுக் கோரிக்கைகளைத் தனிப்பட்ட சிலர், தங்களின் அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்துகிறார்கள். இப்போது உள்ள இடஒதுக்கீட்டுக் கொள்கையில் மாற்றம் கொண்டுவருவது அவசியம்” என்றார்.

அதேவேளையில்தான் பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்புகளும் வெளியாகி இருந்தன. அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமாரும், அம்மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவும் கடந்த முப்பது ஆண்டுகளில் பீகார் மாநில அரசியலில் இடஒதுக்கீட்டிற்கான ஆதரவுக் குரல்களை வலுப்பெறச் செய்துள்ளனர். இந்நிலையில் மோகன் பகவத்தின் இடஒதுக்கீட்டிற்கு எதிரான பேச்சை, தேர்தல் பிரசாரக் களத்தில் பேசு பொருளாக்கினார் லாலு பிரசாத் யாதவ். ஏறிய மேடைகளில் எல்லாம் இடஒதுக்கீட்டு ஆதரவு முழக்கத்தையே முன்மொழிந்தார். இடஒதுக்கீட்டிற்கு எதிரான நிலைப்பாடு பீகார் தேர்தல் வெற்றியைப் பாதிக்கும் என்பதைக் கருத்தில்கொண்டு, ``மோகன் பகவத்தின் கருத்து தனிப்பட்டது. அதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை" என அறிவித்து பி.ஜே.பி.

மத்திய அரசுப் பணி வெறும் கனவா... வாழ்விழக்கப்போவது யார்?

ஆனால் அடுத்த இரண்டரை ஆண்டுகளில் நிலைமை மாறியது. ``2015-ல் இந்தியாவில் வழங்கப்பட்டுவரும் இடஒதுக்கீட்டு முறையில் மாற்றம் வேண்டும்" என ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் மோகன் பகவத் முழங்கிய முழக்கம், 2019 ஜனவரி 8-ம் தேதி இந்திய நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. அப்போதைய மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் பொதுத் தொகுப்பிலிருந்து பொருளாதாரரீதியாகப் பின்தங்கியவர்களுக்கான 10 சதவிகித இடஒதுக்கீடை அறிமுகப்படுத்தினார். வட இந்தியாவையும் கருத்தில்கொண்டு இந்த மசோதாவை வரவேற்றதாகக் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்தார். ஆனால், இதன் அடுத்தடுத்த நகர்வுகளால் இன்று தென்னிந்தியாதான் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகிறது. ஏற்கெனவே மத்திய அரசுப் பணிகளில் தமிழர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகளும் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், எல்லை பாதுகாப்புப் படையில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்காமல் வெளியாகியிருக்கும் அறிவிப்பு இடஒதுக்கீட்டின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

மத்திய அரசுப் பணி வெறும் கனவா... வாழ்விழக்கப்போவது யார்?

இதுகுறித்து திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், ``எல்லை  பாதுகாப்புப் பணிகளுக்கு இடஒதுக்கீட்டை வழங்காதது என்பது திட்டமிட்டு சமூகநீதியையும், இடஒதுக்கீட்டையும் ஒழிக்கும் முயற்சியே ஆகும். இந்தச் செயல்பாடும், ஆர்.எஸ்.எஸ் கருத்துகளையே பி.ஜே.பி பின்பற்றுகிறது என்பதையே காட்டுகிறது. தேர்தல் நேரப் பிரசாரத்தின்போது மட்டும் இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாகப் பேசினாலும் நடைமுறையில் அதற்கு எதிராகத்தான் செயல்பட்டு வருகின்றனர். பொருளாதாரரீதியிலான இடஒதுக்கீட்டை மூன்றே நாளில் நடைமுறைப்படுத்தியது, நீட் தேர்வு முறையைக் கொண்டுவந்தது போன்ற கடந்த ஐந்து ஆண்டுக்கால பி.ஜே.பி-யின் செயல்பாடுகள் இடஒதுக்கீட்டிற்கு எதிரானவையாகத்தான் இருக்கின்றன. ஏற்கெனவே தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு முழுமையான பிரதிநிதித்துவம் கிடைக்காத நிலையில், பொருளாதாரரீதியிலான இடஒதுக்கீட்டின் அவசியம் எங்கிருந்துவந்தது? இடஒதுக்கீடு பொருளாதாரரீதியில் வழங்கப்படக் கூடாது என்றுதான் அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. இந்நிலையில் எல்லை பாதுகாப்புப் படையில் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டிற்கு மட்டும் வாய்ப்பளித்துவிட்டு பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை வழங்காதது என்பது சமூகநீதிக்கு எதிரானது; தமிழர் விரோதச் செயலாகும்” என்றார்.

எழுத்தாளர் அசோக் பேசியபோது, ``பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களுக்கு இல்லாத இடஒதுக்கீடு பி.ஜே.பி-யின் கண்களுக்கு மட்டுமே தென்படும். அந்த விசித்திரமான உயர்சாதி ஏழைகளுக்கு

மத்திய அரசுப் பணி வெறும் கனவா... வாழ்விழக்கப்போவது யார்?

(ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய் வரை சம்பாதிப்பவர்கள்) மட்டுமே இடஒதுக்கீடு உண்டென்றால், இதைவிட ஒரு மக்கள் விரோதச் செயல் சுதந்திர இந்தியாவில் இருக்க முடியாது. எல்லை பாதுகாப்புப் படை பணி நியமனத்தில் இந்தச் சட்டவிரோதத்தைச் சோதனை முயற்சியாகச் செய்கிறார்கள். அடுத்து எல்லா உரிமைகளிலும் கைவைப்பார்கள். இப்போதாவது இந்தியாவெங்கும் இருக்கும் முற்போக்காளர்கள், தலித் இயக்கங்கள், இடதுசாரி இயக்கங்கள் எல்லாம் ஆதரித்தபோதும்கூட, திராவிட இயக்கம் மட்டும் ஏன் உயர்சாதியினருக்கான பொருளாதார இட ஒதுக்கீட்டைத் தொடக்கத்திலிருந்தே எதிர்த்தது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். பாரதிய ஜனதா என்பது இந்துக்களுக்கான `மத'க்கட்சி என வெளியில் காட்டிக்கொண்டாலும், அது முழுக்க முழுக்க 3 சதவிகித உயர்சாதியினர் தங்களுக்காக நடத்தும் 'சாதி'க்கட்சிதான். அதனால் பாதிக்கப்படுவது 97 சதவிகித பிற்படுத்தப்பட்ட/தாழ்த்தப்பட்ட இந்துக்கள்தான் என்பதற்கு பா.ஜ.க அரசின் இந்த நடவடிக்கை மற்றுமோர் எடுத்துக்காட்டு. மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்திருக்கும் பி.ஜே.பி ஆட்சியில் இது மட்டுமல்ல, இன்னும் ஏராளமான அவலங்கள் அரங்கேறப்போகின்றன. அடுத்த ஐந்தாண்டுகளும் போராட்டம்தான். பெரியார், அம்பேத்கர், அண்ணா, விபி.சிங் உருவாக்கிக் காத்த இட ஒதுக்கீட்டு உரிமையைக் காக்க வேண்டுமானால், இந்தியாவின் சமூகநீதி தலைநகரமான தமிழ்நாட்டில் இந்தியாவெங்கும் உள்ள சமூகநீதி இயக்கங்கள் ஒன்றிணைய வேண்டும். ஒன்றிணைந்து போராடினால் மட்டுமே இந்தியாவை வர்ணாசிரம காலத்துக்குப் போய்விடாமல் காக்க முடியும்” என்றார், மிகத் தெளிவாக. 

இதுகுறித்து பி.ஜே.பி-யின் மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், “நம் நாட்டிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது அதன் பாதுகாப்பாகும். தாம் பதவியேற்றவுடன் பாதுகாப்புப் படையினருக்காக முதல் கையெழுத்தைப் போடுகிறார் பிரதமர் மோடி.  அதற்குப் பாராட்டுகளைத்  தெரிவிக்க மனமில்லாதவர்கள் குற்றங்களை மட்டும் கண்டுபிடிக்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு, பெயரையே குற்றம்கண்டுபிடிக்கும் நாடு என வைத்துவிடலாம். குற்றம் நடந்திருந்தாலும் பரவாயில்லை. இல்லாத குற்றத்தைக்  கண்டுபிடிக்கிறார்கள். இந்தத் தேர்தலிலும்கூட அதிகமான தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு வாய்ப்பளித்து வெற்றிபெறச் செய்ததுள்ளது பி.ஜே.பி-தான். இதே நிலைப்பாட்டைத்தான், கடந்தகாலங்களில் நாங்கள்  எதிர்க்கட்சியாக இருந்தபோதும் எடுத்தோம். பி.ஜே.பி இடஒதுக்கீட்டிற்கு ஆதரவான நிலைப்பாட்டைத்தான் எடுத்துவருகிறது. ‘ஏற்கெனவே உள்ள இடஒதுக்கீட்டு முறையில் எந்த இடத்திலும் கைவைக்கவில்லை’ என பாரதப் பிரதமரே பல மேடைகளில் பேசியிருக்கிறார். அனைவரையும் ஒன்றிணைத்து முன்னேற்றம் என்பதே எங்களின் நிலைப்பாடாக உள்ளது” என்றார்.

இடஒதுக்கீட்டின் தேவையறிந்து அரசு முடிவுகளை எடுத்தல் அவசியம்! 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு