Published:Updated:

''கலக்கத்தில் மாநிலத் தலைமை.. முகம்சுளிக்கும் மத்திய தலைமை! - அரசியல் பழகும் பி.ஜே.பி தலைவர்கள்

''தமிழகத்தில், ஓரிடத்தில்கூட வெற்றிபெறாதது தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த ஐந்து வேட்பாளர்களும் தங்களுக்கென ஒரு லாபியைச் செய்துவந்தார்கள். இது, பி.ஜே.பி தலைமையே எதிர்பார்க்காதது.''

பிரதமர் மோடி தலைமையில், பி.ஜே.பி தலைவர்கள் உள்பட 25 கேபினட் அமைச்சர்கள்; 9 பேருக்கு தனிப் பொறுப்பு அந்தஸ்துடன்கூடிய அமைச்சர் பதவி; 24 பேர் இணையமைச்சர்கள் என மோடியுடன் சேர்த்து மொத்தம் 58 பேர் மத்திய அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார்கள். இந்தத் தேர்தலில், தனிப் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியைத் தக்கவைத்திருக்கிறது பி.ஜே.பி. ஆனால், கர்நாடகம் தவிர்த்து, தென்னிந்தியாவில் பி.ஜே.பி-யின் நிலை பரிதாபத்துக்குரியது. அதிலும் குறிப்பாக, தமிழகத்தில் பி.ஜே.பி செல்லும் இடமெல்லாம் சறுக்கல்தான். 

''கலக்கத்தில் மாநிலத் தலைமை.. முகம்சுளிக்கும் மத்திய தலைமை! - அரசியல் பழகும் பி.ஜே.பி தலைவர்கள்

அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இடம்பிடித்தது பி.ஜே.பி. தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க-வை மிரட்டித்தான் கூட்டணி வைத்ததாக பி.ஜே.பி மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அதன்பிறகு, தமிழகத்தில் ஒரு மெகா கூட்டணி அமைத்தார்கள். ஐந்து தொகுதிகளில் பி.ஜே.பி-யின் முக்கியத் தலைவர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டார்கள். தூத்துக்குடிக்கு பி.ஜே.பி-யின் தமிழகத் தலைவர் தமிழிசை, கன்னியாகுமரியில் மத்திய அமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன், சிவகங்கையில் பி.ஜே.பி தேசிய செயலர் ஹெச்.ராஜா, கோவையில்  சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் ராமநாதபுரத்தில் நயினார் நாகேந்திரனும் பி.ஜே.பி வேட்பாளர்களாகக் களமிறக்கப்பட்டனர்.   

தேர்தலுக்கு முன்னர், 'தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான அணி 24 முதல் 28 இடங்கள் வரை வெற்றிபெறும்’ என்று ஒரு ரிப்போர்ட்டை ரெடிசெய்து மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளனர்'. இதைப் பார்த்த பி.ஜே.பி தலைமை உற்சாகமாகிவிட்டது. ஆனால், இதில் சந்தேகம்கொண்ட சிலர், தலைமையிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். இதனால், மீண்டும் கள நிலவரத்தை அனுப்பியிருக்கிறார்கள். இந்த இரண்டு ரிப்போர்ட்டுக்கும் அதிக வித்தியாசம் இருந்ததால், தமிழகத்தில் ஆளும் அரசு மீதும் தமிழக பி.ஜே.பி தலைமை மீதும் அதிருப்தியில் இருந்திருக்கிறது பி.ஜே.பி மேலிடம்.

''கலக்கத்தில் மாநிலத் தலைமை.. முகம்சுளிக்கும் மத்திய தலைமை! - அரசியல் பழகும் பி.ஜே.பி தலைவர்கள்

தேர்தல் முடிவுகள் வந்தன. மத்தியில் பி.ஜே.பி  மிகப்பெரிய வெற்றிபெற்றது. ஆனால், தமிழகத்தில் இந்தக் கூட்டணி ஓர் இடத்தில் மட்டுமே வெற்றிபெற்றது. பி.ஜே.பி சார்பில் போட்டியிட்ட ஐவரில் ஒருவர்கூட வெற்றிபெறவில்லை. இதனால், தமிழக பி.ஜே.பி மீது கட்சியின் அகில இந்தியத் தலைமை கோபத்தில் இருக்கிறது. அதனால்தான், தமிழக பி.ஜே.பி-யில் இருந்து ஒருவர்கூட மத்திய அமைச்சராகவில்லை. நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் தேர்வாகியிருக்கிறார். அவருடைய கணக்கும்  கர்நாடக மாநிலத்துக்குச் செல்கிறது. அதேசமயம், முன்னாள் வெளியுறவுத் துறை செயலர் ஜெய்சங்கர், கேபினட் அமைச்சராகி இருக்கிறார். டெல்லியில் பிறந்து வளர்ந்தாலும் ஜெய்சங்கருக்கு பூர்விகம் என்னவோ தமிழகம்தான். இவர், மத்திய அமைச்சரானதை தமிழக கணக்கில் எடுத்துக்கொள்ளமுடியாது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். ஆனால், தமிழக பி.ஜே.பி தலைமையில் உள்ள சிலரோ, ''தமிழகத்தில் இருந்து இரண்டு மத்திய அமைச்சர்கள்'' என்று பெருமைபேசுகிறார்கள்.

''கலக்கத்தில் மாநிலத் தலைமை.. முகம்சுளிக்கும் மத்திய தலைமை! - அரசியல் பழகும் பி.ஜே.பி தலைவர்கள்

'தமிழகம், ஆந்திரா' ஆகிய இரு மாநிலங்களிலும் பி.ஜே.பி-யின் ஒரு வேட்பாளர்கூட வெற்றிபெற முடியவில்லை. இதனால் இந்த மாநிலங்களில் இருந்து ஒருவருக்குக்கூட அமைச்சர் பதவியோ, இணை அமைச்சர் பதவியோ வழங்கப்படவில்லை. கோவா, ஹரியானா போன்ற சிறிய மாநிலங்களில் இருந்தும் அமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளபோது, இந்த மூன்று பெரிய மாநிலங்களில் இணை அமைச்சர்கூட இல்லை. தவிர, மணிப்பூர், சிக்கிம், மிசோரம், நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா போன்ற சிறிய மாநிலங்களில் இருந்தும் ஒருவர்கூட மோடி அமைச்சரவையில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  தமிழகத்தில், பி.ஜே.பி கூட்டணியில் அ.தி.மு.க சார்பில் தேனி நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றிபெற்ற ரவீந்திரநாத் குமாருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் அவருக்கு இடம் கிடைக்காமல்போனது. தமிழத்தின் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்துக்காவது பதவி கிடைக்கும் என்று நினைத்தவர்களின் கணக்கும் பொய்யானது. இதனால் அ.தி.மு.க சோகத்தில் இருக்கிறது. இவர்களில் யாருக்காவது ஒருவருக்குத்தான் அமைச்சர் பதவி என்று பி.ஜே.பி கறாராகச் சொல்லிவிட்டது. ஆனால் அ.தி.மு.க இரண்டு அமைச்சர் பதவிகளை எதிர்பார்க்கிறது. 

''கலக்கத்தில் மாநிலத் தலைமை.. முகம்சுளிக்கும் மத்திய தலைமை! - அரசியல் பழகும் பி.ஜே.பி தலைவர்கள்

தமிழகத்தைச் சேர்ந்த பி.ஜே.பி தலைவர்களுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  இரண்டாவது சுற்றில் தமிழிசைக்கு ராஜ்யசபா எம்.பி பதவி கொடுக்கப்படும், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு மீண்டும் அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பி.ஜே.பி தலைமை வேறு திட்டத்தை வைத்திருக்கிறது.

''தமிழகத்தில் போட்டியிட்ட ஐந்து வேட்பாளர்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், அதை அவர்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை.  ஓர் இடத்தில்கூட வெற்றிபெறாதது தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், இந்த ஐந்து வேட்பாளர்களும் தங்களுக்கென ஒரு லாபியைச் செய்துவந்தார்கள். இது, பி.ஜே.பி தலைமையே எதிர்பார்க்காதது. அதோடு, கட்சிக்காக துடிப்பாகச் செயல்படும் இளைஞர்களின் பட்டியலை அனுப்புமாறு, தலைமை கேட்டுள்ளது. ஆனால், ஒருவரும் பட்டியலை அனுப்பவில்லை. லாபி செய்வதிலேயே குறிக்கோளாக இருப்பவர்கள், புதியவர்களைத் தேர்ந்தெடுக்க விரும்பவில்லை. இதைத் தலைமை ரசிக்கவில்லை.  இதனால் இந்த ஐவருக்கும் பதவி தரக்கூடாது என இப்போது முடிவெடுத்திருக்கிறார்கள்.

''கலக்கத்தில் மாநிலத் தலைமை.. முகம்சுளிக்கும் மத்திய தலைமை! - அரசியல் பழகும் பி.ஜே.பி தலைவர்கள்

தமிழக பி.ஜே.பி-யில் புதிய முகம் ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. கட்சியை இன்னும் பலப்படுத்த வேண்டும் என இளைஞரணியைச் சேர்ந்த ஒருவருக்கு மத்திய அமைச்சர் பதவி  கொடுக்க வேண்டும் என முடிவெடுத்திருக்கிறார்கள். அதேநேரம், தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என முக்கியத் தலைவர்கள் விரும்புகிறார்கள். அதனால், பெண் உறுப்பினரும் அடுத்ததாக அமைச்சரவை விரிவுபடுத்தப்படும்போது அமைச்சர் பதவிக்கான பட்டியலில் இருக்கிறார். தமிழகத்திலிருந்து, அடுத்ததாக யார் மத்திய அமைச்சராகப் போகிறார் என்பது பற்றிய அறிவிப்பு விரைவில் அதிகாரபூர்வமாக கட்சித் தலைமை இடத்திலிருந்து அறிவிக்கப்படும்'' என்கிறது பி.ஜே.பி வட்டாரங்கள்.

மாநிலத் தலைமையின் செயல்பாடுகளால் மத்திய தலைமை முகம் சுழித்துக்கொண்டிருக்கிறது. தலைமையின் முடிவால் தமிழக பி.ஜே.பி தலைமை கலக்கத்தில் இருக்கிறது. தமிழகத்தில் பி.ஜே.பி துடைத்தெறியப்பட்ட நிலையிலும், அந்தக் கட்சியின் தலைவர்கள் அரசியல் பழகிக்கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை நிலவரம்.

Vikatan