Published:Updated:

ஏழைத்தாயின் மகன் மீண்டும் இந்தியாவின் பிரதமரான கதை...

ஏழைத்தாயின் மகன் மீண்டும் இந்தியாவின் பிரதமரான கதை...
News
ஏழைத்தாயின் மகன் மீண்டும் இந்தியாவின் பிரதமரான கதை...

குஜராத் மாநிலத்தின் குக்கிராமம் ஒன்றில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஒருவர் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் இரண்டாவது முறையாக பிரதமராகி இருக்கிறார் நரேந்திர மோடி. தன் சிறுவயதில் ரயில் நிலையத்தில் தேநீர் விற்றதிலிருந்து, இரண்டாவது முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் பிரதமராக வெற்றி பெற்றதுவரை அவர் கடந்துவந்த பாதை எப்படி இருந்தது என்பதை விவரிப்பதே இந்த தொகுப்பு...

ரேந்திர மோடி, 1950-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ம் தேதி குஜராத் மாநிலம், மேஹ்சானா மாவட்டத்தின் வட்நகர் கிராமத்தில் பிறந்தார். இவருடைய தந்தை தாமோதர் தாஸ் முல்சந்த் மோடி. தாயார் ஹீராபென். வீட்டில் மூன்றாவது குழந்தையாகப் பிறந்த மோடிக்கு ஆறு சகோதரர்கள் உள்ளனர்.

வட்நகர் ரயில் நிலையத்தில் சிறுவயதில் தந்தையுடன் சேர்ந்து தேநீர் விற்றார். பின்னாளில் தன் சகோதரருடன் இணைந்து பேருந்து நிலையம் அருகே தேநீர்க் கடை நடத்தியுள்ளார். தேநீர் விற்கும்போது சந்நியாசிகளுடன் பேசுவதற்கு மோடிக்கு வாய்ப்பு கிடைத்தது. இதன்மூலம் இந்து மதத்தின் மீது தீராக்காதல் உருவானது. ரயில்களில் பயணம்செய்யும் ராணுவ வீரர்களுக்குத் தேநீர் விற்பனை செய்தபோது, தேசத்தைக் காக்கும் அவர்கள் மீது மோடிக்குத் தனி மரியாதை ஏற்பட்டதாம். 

ஏழைத்தாயின் மகன் மீண்டும் இந்தியாவின் பிரதமரான கதை...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதனால், `ராணுவத்தில் சேர வேண்டும்' என்ற தன் ஆசையை வீட்டில் தெரிவித்தார். ஆனால், அதற்குக் கடும் எதிர்ப்பு உருவானது. அதே பகுதியைச் சேர்ந்த யசோதா பென் என்ற சிறுமியுடன் மோடிக்குத் திருமணம் நடந்தது. இதனால் மனமுடைந்த மோடி, வீட்டை விட்டு வெளியேறி விட்டார். அப்போது அவருக்கு வயது 17. வட்நகரில் மேல்நிலைக் கல்வியை முடித்திருந்த அவர், இரண்டு வருடங்கள் வரை வடக்கு, வடகிழக்கு மாநிலங்களில் பயணம் செய்துள்ளார். ஆனால், அந்த இரண்டுவருட காலம் அவர் எங்கு சென்றார், என்ன செய்தார் என்பது குறித்து ஊர்ஜிதமான தகவல்கள் இல்லை.

பின்னர் மூன்றாண்டுகள் கழித்து மீண்டும் தன் சொந்த ஊருக்குத் திரும்பினார். தொலைதூரக் கல்வி மூலம் டெல்லி பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டமும், குஜராத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுநிலைப் பட்டமும் பெற்றார் மோடி. 

2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மோடியின் வேட்புமனுத் தாக்கலின்போதுதான் மோடிக்குத் திருமணம் ஆனதே வெளியுலகத்துக்குத் தெரியவந்தது. பிரதமராக மோடி பதவி ஏற்றப் பின்னர், யசோதா பென்னுக்கு உயர் பாதுகாப்பு வழங்கியது அரசு. இது, யசோதாவுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியது.  பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தி வரும் அவரை, பாதுகாப்பு என்ற பெயரில் காவல்துறை வாகனங்கள் தான் செல்லும் பேருந்தைப் பின் தொடர்ந்து வருவதாகப் பத்திரிகை ஒன்றுக்கு யசோதா பென் அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்ட எமர்ஜென்சியின்போது, ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டது. அந்த அமைப்பின் முக்கியத் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டனர். அந்தச் சூழ்நிலையில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சில முக்கிய ஆர்.எஸ்.எஸ் தலைவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு மோடிக்கு அளிக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில்தான், சுப்பிரமணியன் சுவாமி, ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்றோர் தலைமறைவு வாழ்க்கை வாழ்வதற்கு உதவினார் மோடி. மேலும், தன் அரசியல் குருவான எல்.கே அத்வானியை முதன்முதலில் சந்தித்தார். அந்தச் சமயத்தில் அரசுக்கு எதிரான துண்டுப் பிரசுரங்கள் அச்சடித்து, அதை மக்களிடத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கும் பணியில் ஈடுபட்டார் மோடி. எமர்ஜென்சி அவருக்கு பல்வேறு அனுபவங்களைக் கற்றுக்கொடுத்தது.

ஏழைத்தாயின் மகன் மீண்டும் இந்தியாவின் பிரதமரான கதை...

1978-ல் ஆர்.எஸ்.எஸ் பிரசாரகரான மோடி, சூரத் மற்றும் வதோதரா பகுதிகளில் தீவிரமாகச் செயல்பட்டார். 

1979-ல் டெல்லி சென்ற மோடி, எமர்ஜென்சி வரலாற்றில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கு குறித்து ஆராய்ச்சி செய்து எழுதும் பணியில் ஈடுபட்டார்.

1980-ம் ஆண்டு ஜனதா கட்சியிலிருந்து விலகி அத்வானியும், வாஜ்பாயும் ஆர்.எஸ்.எஸ் ஆதரவுடன் பாரதிய ஜனதா கட்சியை உருவாக்கினர். இந்துத்துவா கொள்கைகளை நாடு முழுவதும் பரப்ப, இயக்கம் மட்டும் போதாது என்று உணர்ந்த ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பியை முழுமையாக ஆதரித்தது. 1985-ல் ஆர்.எஸ்.எஸ்ஸில் இருந்து மோடி பி.ஜே.பி-க்கு அனுப்பப்பட்டார். 1987-ல் பி.ஜே.பி உறுப்பினர் ஆனார்.

அவருக்குக் கொடுக்கப்பட்ட முதல் பணி அகமதாபாத் உள்ளாட்சித் தேர்தல் வேலை. அந்தத் தேர்தலில் பி.ஜே.பி வெற்றிபெற்றது. அகமதாபாத்தில் பி.ஜே.பி அடைந்த முதல் வெற்றி அது. 1988-ல் குஜராத் மாநில பி.ஜே.பி ஒருங்கிணைப்புக் குழு செயலாளராகத் தேர்வுசெய்யப்பட்டார் மோடி. 1990-ல் அத்வானியின் ராமர் ரத யாத்திரையைப் பிரபலப்படுத்தி, அந்தப் பணியை செவ்வனே செய்து முடித்தார். அத்வானியிடம் ஏற்கெனவே நல்ல பெயர் எடுத்திருந்த மோடி, அவருடன் மேலும் நெருக்கமானார். 

பின்னாளில் 1995-ல் குஜராத்தில் பி.ஜே.பி ஆட்சியமைத்தது. கேசுபாய் பட்டேல் முதலமைச்சர் ஆனார். மோடியைக் குஜராத் பி.ஜே.பி-யின் பொதுச்செயலாளர் ஆக்கினார் அத்வானி. தொடர்ந்து பஞ்சாப், ஹரியானா மற்றும் இமாசலப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் பி.ஜே.பியை வலுப்படுத்தும் பணி மோடிக்குக் கொடுக்கப்பட்டது. அந்தப் பணிகளைச் சிறப்பாகச் செய்து முடித்தார்.

இந்தச் செயல்பாடுகளால் பி.ஜே.பி-யில் தேசிய அளவில் புகழ்பெற்றார் மோடி. 1998-ல் பி.ஜே.பி பொதுச்செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார். 

2001-ம் ஆண்டு குஜராத் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பி.ஜே.பி தோல்வியடைந்தது. 2001 அக்டோபர் 6-ம் தேதி, குஜராத் முதல்வராக இருந்த கேசுபாய் பட்டேல் ராஜினாமா செய்தார். இதையடுத்து, மோடியைக் குஜராத் முதல்வராக நியமித்தது கட்சி மேலிடம். தனிப்பெரும்பான்மை ஆதரவுடன் 2001 அக்டோபர் 7-ல் குஜராத் மாநில முதல்வராக முதல்முறையாகப் பதவியேற்றார். 2002 பிப்ரவரி 24-ல் நடந்த இடைத்தேர்தலில் ராஜ்கோட் தொகுதியில் வெற்றிபெற்று சட்டசபை உறுப்பினரானார் மோடி. 2002 பிப்ரவரி 27-ல் ஆண்டு நடந்த `கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தைத்' தொடர்ந்து, முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். 

ஏழைத்தாயின் மகன் மீண்டும் இந்தியாவின் பிரதமரான கதை...

கோத்ரா சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத்தில் ஏற்பட்ட கலவரம், இப்போதுவரை மோடி மீது படிந்துள்ள அழிக்கமுடியாத கரும்புள்ளியாகவே தொடர்கிறது.

பின்னர் 2002-ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் மணிநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஒஷா யதின்பாயைத் தோற்கடித்து, இரண்டாவது முறையாகக் குஜராத் முதல்வரானார் மோடி. என்றாலும், மோடி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தன. அந்த நிலையை மாற்றுவதற்கு மாநிலத்தின் வளர்ச்சியை அதிகரிப்பதே ஒரேவழி என்று கருதி தீவிரமாகப் பாடுபட்டார் அவர். மாநிலத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு புதிய உள்கட்டமைப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தார். புதிய தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக பல்வேறு திட்டங்களை வகுத்தார். இதனால், குஜராத்தில் அதிவேகமான வளர்ச்சி ஏற்பட்டது. கூடவே மோடியின் பெயரும் நாடு முழுவதும் பிரபலமாகத் தொடங்கியது.

சோலார் மின் உற்பத்தியைப் பெருக்கி, மின் தட்டுப்பாடு நிலவிய குஜராத்தை மின்மிகை மாநிலமாக மாற்றினார். எனினும் வளர்ச்சி என்ற போர்வையில் பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களை வளர்ச்சியடையச் செய்வதாக ஏராளமான விமர்சனங்களும் எழுந்தன. மாநிலத்தின் விவசாய வளர்ச்சிக்கும் பல்வேறு வசதிகளைச் செய்து கொடுத்திருந்தார் மோடி. மீண்டும் 2007-ம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று, மூன்றாவது முறையாகக் குஜராத் முதல்வரானார். குஜராத் மாநில அரசியல் வரலாற்றில், நீண்டகாலம் முதல்வராக இருந்தவர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

மோடி அறிமுகப்படுத்திய ஈ-கவர்னன்ஸ் (e-governance) திட்டம், அரசுத் துறைகளில் ஊழல் குறைவதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது. கோத்ரா கலவர வழக்கில் மோடியின் தொடர்பு குறித்து உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையில், 2010 டிசம்பர் மாதத்தில் `மோடிக்கு எந்தத் தொடர்பும் இல்லை' என்று விடுவிக்கப்பட்டார். அதற்கான அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. கோத்ரா சம்பவத்தில் மோடி மீதான கரும்புள்ளி சற்றே மறையத் தொடங்கியது.  

பிரபல பத்திரிகையாளர் ரூதம் வோரா எழுதிய கட்டுரை ஒன்றில் `` `வைப்ரண்ட் குஜராத்' திட்டத்தின் கீழ் 84 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. ஆனால், இவற்றில் பெரும்பாலானவை நிறைவேற்றப்படவில்லை. தனிநபர் வருமானத்தின் அடிப்படையிலும் நாட்டில் ஐந்தாவது இடத்தில் குஜராத் இருப்பது உண்மைதான். ஆனால், நரேந்திர மோடி பொறுப்புக்கு வருவதற்கு முன்னரும் வளர்ச்சி பெற்ற மாநிலங்களில் ஒன்றாகவே குஜராத் இருந்தது" என்று குறிப்பிட்டிருந்தார்.

மோடி அரசு மேற்கொண்ட பல்வேறு நலத்திட்டங்களினால், குஜராத் மக்கள் அனைவரும் பலன் அடைந்துள்ளனர் என்பதை வெளிப்படுத்தும்விதமாக, 2012-ல் அந்த மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற்று நான்காவது முறையாக முதல்வரானார் மோடி. இதனால், பி.ஜே.பி-யில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் மோடியின் செல்வாக்கு உயரத் தொடங்கியது. 

இதைத் தொடர்ந்து, எல்.கே. அத்வானிக்குப் பதிலாக மோடியை முன்னிறுத்தியது பி.ஜே.பி. 2013-ல் கட்சியின் ஆட்சி மன்றக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட மோடி, அடுத்த சில மாதங்களிலேயே, நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். 2014-ம் ஆண்டு தேர்தலில் பி.ஜே.பி-யின் பிரதமர் வேட்பாளராக அத்வானி நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், 2013 செப்டம்பர் மாதத்தில், மோடியைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்தது பி.ஜே.பி. அந்த நிகழ்ச்சியில் அத்வானி கலந்துகொள்ளவில்லை. மோடியைப் பிரதமர் வேட்பாளராக பி.ஜே.பி அறிவித்ததால் அதிருப்தியடைந்தார் அத்வானி. மூத்த நிர்வாகிகள் அவருடன் பேசி சமாதானப்படுத்தினர். மோடியின் அரசியல் வளர்ச்சியில் மிகமுக்கிய பங்காற்றியவர்களில் அத்வானிக்கு மிகமுக்கியப் பங்குண்டு.

2014 மக்களவைத் தேர்தலில், அமோக வெற்றிபெற்று பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை அமைத்தார் மோடி. கடந்த 30 ஆண்டுகளில் எந்தக் கட்சிக்கும் கிடைக்காத பெரும்பான்மை அப்போது பி.ஜே.பி-க்கு கிடைத்தது. பிரதமராகப் பொறுப்பேற்பதற்கு வசதியாகக் குஜராத் முதல்வர் பதவியில் இருந்து விலகினார் மோடி. 

60-வது ஆண்டுகளில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு நிறைவேற்றாத பல திட்டங்களை தமது அரசு செய்யும் என்று உறுதியளித்து மிகப்பெரிய வெற்றியைத் தழுவிய மோடி, 2019 வரை கடந்த ஐந்து ஆண்டுகளில் என்னென்ன திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறது என்பதை நாட்டு மக்கள் நன்கறிவார்கள்.

நடந்து முடித்த மக்களவைத் தேர்தலிலும் பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. மோடி தலைமையிலான பி.ஜே.பி. கூட்டணிக்குக் கடந்த தேர்தலைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் அதாவது 351 தொகுதிகளில் மக்கள் வெற்றி அளித்துள்ளனர். இரண்டாவது முறையாக மோடி பிரதமர் பதவியேற்றுள்ளார். பொதுவாக ஆட்சியில் உள்ள கட்சி மீது பல்வேறு விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைப்பது வழக்கம்தான். ஆனால், அவற்றை ஆளுங்கட்சித் தலைவர்கள் எவ்வாறு முறியடிக்கிறார்கள் என்பதில்தான் அந்தக் கட்சியின் திறமையும், சவாலும் அமைந்துள்ளது. அந்தவகையில், எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தை முறியடித்து, மீண்டும் வெற்றிவாகை சூடியுள்ளார் ஏழைத் தாயின் மகன் மோடி. 

மத்தியில் மோடி தலைமையிலான பி.ஜே.பி. மீண்டும் ஆட்சியமைத்த போதிலும், தமிழகத்தில் இன்னமும் தாமரை மொட்டுகூட உருவாகவில்லை. தாமரை மலராமல் போனதால், அடுத்த ஐந்தாண்டுகள் தமிழகத்தின் தேவைகளை மத்திய அரசு எவ்வாறு பார்க்கப்போகிறது என்பதை வருங்காலங்களில்தான் பார்க்க வேண்டும். நடப்பவை தமிழகத்துக்கு நல்லதாக நடக்கட்டும்.