Published:Updated:

"மக்களுக்கும் எங்களுக்குமான உறவு எங்கோ அறுபட்டிருக்கிறது!" - மனம் திறக்கும் வானதி சீனிவாசன்

மன்மோகன் சிங் காங்கிரஸ் ஆட்சியில் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டபோது அவரும்கூட அக்கட்சியில் அடிப்படை உறுப்பினராகக்கூட இல்லை. சசிதரூர் கூட அப்படித்தான் ஆனார்

"மக்களுக்கும் எங்களுக்குமான உறவு எங்கோ அறுபட்டிருக்கிறது!" - மனம் திறக்கும் வானதி சீனிவாசன்
"மக்களுக்கும் எங்களுக்குமான உறவு எங்கோ அறுபட்டிருக்கிறது!" - மனம் திறக்கும் வானதி சீனிவாசன்

டந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், மிக மோசமான தோல்வியைச் சந்தித்திருக்கிறது, தமிழக பி.ஜே.பி. ஆகையால், கட்சியினுள் நிறைய மாற்றங்களை நிகழ்த்த இருக்கிறார்கள். குறிப்பாக, மாநிலப் பொதுச் செயலாளர் வானதி சீனிவாசனுக்கு, அடுத்த தலைமைப் பொறுப்பு அளிக்கப்படலாம் என வந்த செய்திகளையொட்டி, இன்னும் சில கேள்விகளுடன் அவரிடம் பேசினோம்.

"மக்களுக்கும் எங்களுக்குமான உறவு எங்கோ அறுபட்டிருக்கிறது!" - மனம் திறக்கும் வானதி சீனிவாசன்

``தமிழக பி.ஜே.பி. முற்றிலும் மாற்றியமைக்கப்பட இருப்பதாகச் செய்தி வருகிறதே?"

``தமிழகத்தில் எங்களுக்கு வெற்றிவாய்ப்பு முற்றிலும் கிடைக்காத சூழலில், எங்கள் கட்சியின் சீனியர் தலைவர்களே தோல்வியடைந்திருக்கிற நிலையில் கட்சியைப் பலப்படுத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இருக்கிறது. ஆகவே, தமிழக பி.ஜே.பி-யின் தலைமை மாற்றியமைக்கப்படலாம்".

``பி.ஜே.பி. தலைவராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள் என வரும் செய்தியைப் பற்றி"

``என் பெயருடன் சேர்த்து இன்னும் சிலரின் பெயர்கள் பரிந்துரைக்கப்படுகிறது. பதவிக்காக அன்றி மக்கள் பணிக்காக அரசியலுக்கு வந்தவள் நான். என்னுடைய பணியைச் செய்து வருகிறேன். பதவி கிடைக்குமென்று இருந்தால் நிச்சயம் கிடைக்கும்".


``ஆர்.எஸ்.எஸ் பின்புலம்கொண்ட ஒருவர்தான் அடுத்து தலைமை வகிக்க வேண்டுமென மேலிடம் உத்தரவிட்டிருக்கிறதாமே?"

``எனக்கு அதுபற்றி உறுதியாத் தெரியவில்லை".


``கட்சியின் அடிப்படைப் பதவிகூட இல்லாத ஜெய்சங்கர் கேபினெட் அமைச்சராக ஆனதன் பின்னணி?"

``முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காங்கிரஸ் ஆட்சியில் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டபோது அவரும்கூட அக்கட்சியில் அடிப்படை உறுப்பினராகக்கூட இல்லை. முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர்கூட அப்படித்தான் ஆனார். கட்சியில் இருப்பவர்களை, கட்சிக்காக வேலை செய்பவர்களை மட்டுந்தான் அமைச்சரவையில் கொண்டுவர வேண்டுமென இல்லை. கட்சியில் இல்லை எனினும், குறிப்பிட்ட துறையில் `எக்ஸ்பர்ட்' ஆக இருந்தால், அவர்களுக்கு முக்கியப் பதவி கொடுக்கப்படும். அதனடிப்படையில்தான் ஜெய்சங்கருக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது".

"மக்களுக்கும் எங்களுக்குமான உறவு எங்கோ அறுபட்டிருக்கிறது!" - மனம் திறக்கும் வானதி சீனிவாசன்

``தமிழக பி.ஜே.பி-லிருந்து யாரெல்லாம் ராஜ்ய சபா எம்.பி-க்களாக ஆக வாய்ப்பு இருக்கிறது?"

``மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி-க்களுக்குத்தான் முதல் வாய்ப்பு. அவர்களுக்கான துறைகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. அடுத்தகட்டமாகத்தான் ராஜ்ய சபா எம்.பி-க்கள் குறித்தான அறிவிப்புகள் வரும். அதுவரை காத்திருப்போம்".

``அமைச்சர்களில் தமிழகத்தின் பிரதிநிதிகளாக ஒருவர்கூட இல்லாதபட்சத்தில், தமிழர்களின் வாழ்வுரிமை மேம்படுவது குறித்து என்ன உத்தரவாதம் இருக்கிறது?"

``மத்திய அமைச்சர்களான நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகிய தமிழர்கள் இருக்கிறார்கள்தானே! தவிர, தமிழக மக்களின் தேவைகளை அரசாங்கத்திடம் முறையிட நாங்கள் இருக்கிறோம். அரசியலமைப்புரீதியான அங்கீகாரம் இல்லையென்றாலும் கட்சியில் அங்கீகாரம் கொடுத்திருக்கிறார்கள். எங்கள் கட்சிதான் மத்தியில் ஆட்சி என்கிற பட்சத்தில், தமிழக மக்களுடன் களத்தில் நின்று அவர்கள் பிரச்னையைக் கொண்டுசெல்வோம். தமிழக நலன்கள் பாதுகாக்கப்படும். கடந்த ஆட்சியில் பிரதமர் மோடி தமிழகத்திற்கு ஐந்து லட்சம் கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார். யாருடைய மத்திய ஆட்சியிலும், தமிழகத்திற்கு இவ்வளவு தொகை கிடைத்ததில்லை. தமிழகத்தின் நீண்டகால பிரச்னைகளை அறிந்தவர் மோடி. வருகிற ஐந்தாண்டுக்கால ஆட்சியில் அவையெல்லாம் ஒவ்வொன்றாகக் களையப்படும்".

``பிரதமர் மோடி, உண்மையாகவே தமிழக மக்களின்மீது நலன் கொண்டவர் எனில், தேர்தலில் ஏன் இவ்வளவு பெரிய நிராகரிப்பு?"

``அதுதான் எங்களுக்கும் தெரியவில்லை. மக்களுக்கும் எங்களுக்குமான உறவு எங்கோ அறுபட்டிருக்கிறது. இதைத் தெளிவாக உணர்கிறோம். முற்றிலும் எங்களை சுயபரிசோதனை செய்துகொள்ளும் நிலையில் இருக்கிறோம். ஆனால், நாங்கள் மக்களுக்கு எதிரானவர்கள் எனத் திட்டமிட்டு உருவாக்கும் கட்சிகளை, அமைப்புகளை, அதற்காக அவர்கள் செய்யும் வேலைத்திட்டத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அப்புரிதல் ஏற்படுகிறபோது, பி.ஜே.பி-யின் வெற்றியைத் தமிழகத்தில் யாராலும் தடுக்க முடியாது."

Vikatan