Published:Updated:

சரிந்த இடதுசாரிகள்... மீண்டு எழுவார்களா?

சரிந்த இடதுசாரிகள்... மீண்டு எழுவார்களா?
சரிந்த இடதுசாரிகள்... மீண்டு எழுவார்களா?

மேற்கு வங்கத்தில் `இன்குலாப் ஜிந்தாபாத்’ என முழக்கமிட்டுக்கொண்டிருந்த கம்யூனிஸ்ட் தொண்டர்கள்… இன்றைக்கு, `ஜெய் ஸ்ரீராம்’ என்று கோஷமிட ஆரம்பித்துவிட்டார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்திருக்கிறார்கள் இடதுசாரிகள். இந்தப் படுபாதாளத்திலிருந்து அவர்கள் எழுந்து வருவது அவ்வளவு எளிதான விஷயமாகத் தெரியவில்லை. 

அது ஒரு காலம். இடதுசாரிகளின் பொற்காலமென்றே அதைச் சொல்லலாம். பிரதமர் பதவியே அவர்களைத் தேடிவந்தது. 1996-ல் ஐக்கிய முன்னணி அரசு மத்தியில் இருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதிப்புமிகு தலைவராக விளங்கிய அன்றைய மேற்குவங்க முதல்வர் ஜோதிபாசுவை, பிரதமர் பதவியில் அமருங்கள் என ஐக்கிய முன்னணி தலைவர்கள் சிவப்புக்கம்பளம் விரித்து அழைத்தனர். அந்த நேரத்தில், அதிர்ச்சிகரமான ஒரு முடிவை எடுத்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. பிரதமர் பதவியை ஏற்பதில்லை என்பதுதான் அந்த முடிவு. மார்க்சிஸ்ட் தலைவர் ஒருவர், இந்த தேசத்தை ஆளுகிற வாய்ப்பை அநாவசியமாக நழுவவிட்டார்கள், இடதுசாரிகள்.

சரிந்த இடதுசாரிகள்... மீண்டு எழுவார்களா?

பிரதமர் பதவியே தேடிவருகிற அளவுக்கு செல்வாக்கு பெற்றிருந்த கம்யூனிஸ்ட்களின் நிலை, இன்றைக்குத் தலைகீழாக மாறியிருக்கிறது. நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், மிகப்பெரிய பின்னடைவை அவர்கள் சந்தித்திருக்கிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் (சி.பி.எம்) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் (சி.பி.ஐ) இந்தியா முழுவதும் போட்டியிட்டன. வெற்றிபெற்றது ஐந்தே ஐந்து இடங்களில் மட்டுமே. அதிலும் நான்கு இடங்களைத் தாராளமாகத் தந்திருப்பது தமிழகம்தான். தமிழகத்தில் நான்கு (சி.பி.எம் – 2, சி.பி.ஐ – 2) கடவுள் தேசமும் கைவிட்டு விட, அங்கே கிடைத்தது ஒரே ஒரு தொகுதிதான். சுதந்திரப் போராட்டக் காலத்தில் தோன்றிய பாரம்பர்யமிக்க கம்யூனிஸ்ட் இயக்கம், இவ்வளவு பெரிய தோல்வியைச் சந்திப்பது இதுவே முதல்முறை. இதேநிலை தொடர்ந்தால் தேர்தலில் ஜெயிப்பது இதுவே கடைசி முறையாகக்கூட இருக்கலாம். 

இந்தத் தேர்தலுக்கு முன்பாக சி.பி.எம் மூன்று தீர்மானங்களை நிறைவேற்றியது. `பி.ஜே.பி-யைத் தோற்கடிக்க வேண்டும்’, `மத்தியில் மதச்சார்பற்ற அரசு அமைய வேண்டும்’, `தன் கட்சியின் பலத்தை அதிகரிக்க வேண்டும்’ ஆகியவையே அந்தத் தீர்மானங்கள். இவற்றில் ஒன்றைக்கூட அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை. தற்போதைய அரசியல் சூழல், எதிராளியின் `அதிரடி’ வியூகங்கள், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தவறுகள் என இதற்கு பல காரணங்களை அடுக்கலாம்.

கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தால், ஒப்பீட்டு அளவில் அவர்கள் எந்தளவுக்குச் செல்வாக்குடன் இருந்தார்கள் என்பது புரியும். 1952-ல் நடைபெற்ற முதல் நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் (மொத்தம் 489) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 49 இடங்களில் போட்டியிட்டு, 16 இடங்களில் வெற்றிபெற்றது. 1964-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவு ஏற்பட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவான பிறகு, 1967-ல் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அதில், சி.பி.ஐ 109 இடங்களில் போட்டியிட்டு 23 இடங்களில் ஜெயித்தது. சி.பி.எம் 59 இடங்களில் போட்டியிட்டு 19 இடங்களில் ஜெயித்தது. 2004-ல் 34 இடங்களில் போட்டியிட்ட சி.பி.ஐ 10 இடங்களிலும், 69 இடங்களில் போட்டியிட்ட சி.பி.எம் 43 இடங்களிலும் ஜெயித்தன.

2004 நாடாளுமன்றத் தேர்தல், இடதுசாரிகளின் செல்வாக்கை உயர்த்தியது. சி.பி.எம்., சி.பி.ஐ உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளுடைய எம்.பி-க்களின் எண்ணிக்கை 59 என அதிகரித்தது. இவர்களின் தயவினால்தான், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சியே அமைந்தது. குறைந்தபட்சப் பொதுத்திட்டத்தின் அடிப்படையில் அரசுக்கு ஆதரவு அளித்தார்கள். அப்போது, இடதுசாரிகளின் அழுத்தம் காரணமாக தகவல் அறியும் உரிமைச்சட்டம், மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டம் எல்லாம் கொண்டுவரப்பட்டன. ப.சிதம்பரம் போன்ற அன்றைய அமைச்சரவையில் முக்கியப் பங்கு வகித்தவர்கள், இதுபோன்ற திட்டங்களைக் கொண்டுவர விரும்பவில்லை. ஆனால், இன்று வரையிலும் அந்தத் திட்டங்களைத்தான் தங்களின் ஆகப்பெரிய சாதனைகளாக ப.சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ்காரர்கள் சொல்லி வருகிறார்கள் என்பது வேறு கதை.

சரிந்த இடதுசாரிகள்... மீண்டு எழுவார்களா?

பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கும் முயற்சி ஐ.மு.கூட்டணி ஆட்சியில் நடைபெற்றது. அதற்கு இடதுசாரிகள் முட்டுக்கட்டை போட்டார்கள். இதனால் அரசுக்கு உள்ளேயும் வெளியேயும் இடதுசாரிகளுக்கு எதிரான மனநிலையில் பலர் இருந்தனர். அந்தச் சமயத்தில், இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்திய அரசு முடிவெடுத்தது. அதற்கு, இடதுசாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், அரசு தன் முடிவிலிருந்து பின்வாங்கவில்லை. எனவே, அரசுக்கு அளித்துவந்த ஆதரவை இடதுசாரிகள் வாபஸ் பெற்றனர். வேறு வழிகளில் அரசை அப்போது காப்பாற்றிவிட்டனர். 

அந்தப் பிரச்னைதான், இடதுசாரிகளின் இன்றைய சரிவின் ஆரம்பப்புள்ளி என்று பார்க்கப்படுகிறது. ஏனெனில், ``இந்திய அரசையே கட்டுப்படுத்துகிற அளவுக்கு இடதுசாரிகள் வந்துவிட்டார்கள் என்பதை அந்நிய சக்திகளாலும், பெரு முதலாளிகளாலும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால், 34 ஆண்டுகளாக இடதுசாரிகளின் எஃகு கோட்டையாகத் திகழ்ந்துகொண்டிருந்த மேற்குவங்கத்தை அவர்கள் குறிவைக்க ஆரம்பித்தனர்” என்கிறார்கள், இடதுசாரிகள்.

அத்துடன், மேற்குவங்கத்தில் புத்ததேவ் பட்டாச்சார்யா தலைமையிலான இடது முன்னணி அரசு செய்த சில தவறுகளும் தற்போதைய சரிவுக்குக் காரணம் என்பதையும் அவர்கள் மறப்பதில்லை. குறிப்பாக, சிங்கூர் மற்றும் நந்திகிராம் சம்பவங்கள். இந்தியாவிலேயே நிலச்சீர்திருத்த நடவடிக்கையை மிகச்சிறப்பாக அமல்படுத்தியது என்கிற பாராட்டுகளைப் பெற்றது, மேற்குவங்க இடதுசாரி அரசு. அதே அரசுதான், ஏற்கெனவே விநியோகிக்கப்பட்ட நிலங்களைக் கையகப்படுத்தி கார்ப்பரேட்கள் தொழிற்சாலை அமைப்பதற்கு கொடுக்க முயன்றது. அதற்கு அவர்கள் ஒரு காரணம் சொன்னார்கள். ‘நிலச்சீர்திருத்த நடவடிக்கை காரணமாக, அனைவர் கையிலும் நிலங்கள் உள்ளன. போதுமான உணவு உற்பத்தி இருக்கிறது. அடுத்த தலைமுறை படித்து வந்துவிட்டது. எனவே, அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை அளிக்க தொழிற்சாலைகள் வர வேண்டும். அதற்கு நிலம் தேவைப்படுகிறது’ என்றார்கள்.

அது நியாயமான காரணமாகத்தான் தெரிந்தது. ஆனால், நிலத்தைக் கையகப்படுத்த அரசு கையாண்ட விதம் கடும் விமர்சனங்களுக்கு ஆளானது. அதுவரை வெறுங்கையுடன் கம்யூனிஸ்ட்களுக்கு எதிராகச் சண்டையிட்டுக் கொண்டிருந்த மம்தா பானர்ஜிக்கு, மிகப்பெரிய ஆயுதங்களாக சிங்கூர் மற்றும் நந்திகிராம் பிரச்னைகள் கிடைத்தன. அதை வைத்து அரசியல் செய்ய ஆரம்பித்தார் மம்தா.

சரிந்த இடதுசாரிகள்... மீண்டு எழுவார்களா?

``நக்சலைட்களுடன் மம்தா கட்சியினர் கைகோத்தனர். பல இடங்களில் மார்க்சிஸ்ட் கட்சியினர் மீது கொலைவெறித் தாக்குதல்களை நடத்தினர். அதில், ஏராளமானோர் கொல்லப்பட்டனர். தாக்குதல்களுக்குப் பயந்து ஏராளமான மார்க்சிஸ்ட் தொண்டர்கள், வீடு வாசல்களை விட்டு வெளியேறினர். மார்க்சிஸ்ட் கட்சி முகாம்கள் அமைத்து, அவர்களைத் தங்கவைத்தது. 2011-ல் ஆட்சியைப் பிடித்தார், மம்தா பானர்ஜி. அதன் பிறகு காவல் துறையினரை வைத்து மார்க்சிஸ்ட் கட்சியினர் மீது அடக்குமுறை ஏவப்பட்டது. தொடர்ச்சியான தாக்குதல்கள், பொய் வழக்குகள் என அரசின் அராஜகங்களால் மார்க்சிஸ்ட் கட்சியை நசுக்குவதற்கு தொடர் முயற்சியில் இருந்தனர்” என்கிறார், இடதுசாரி சிந்தனையாளரும் தொழிற்சங்கத் தலைவருமான ஆர்.இளங்கோவன்.

இத்தகைய சூழலைப் பயன்படுத்தி, மேற்கு வங்கத்தில் தங்கள் கட்சியை வளர்ப்பதற்குத் திட்டமிட்டு களமிறங்கினார்கள் பிரதமர் நரேந்திர மோடியும், பி.ஜே.பி தலைவர் அமித் ஷாவும். 2014 நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. அங்கு மொத்தம் உள்ள 42 இடங்களில், 34 இடங்களை மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் பிடித்தது. காங்கிரஸ் நான்கு இடங்களையும், பி.ஜே.பி-யும், இடது முன்னணியும் தலா இரண்டு இடங்களையும் பிடித்தன.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் 18 இடங்களில் வெல்லும் அளவுக்கு பி.ஜே.பி வளர்ந்துவிட்டது. 2014-ல் 17.2 ஆக இருந்த பி.ஜே.பி-யின் வாக்கு சதவிகிதம், 2019-ல் 40.23 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. ஆனால், 34 ஆண்டுகள் மேற்கு வங்கத்தைத் தொடர்ச்சியாக ஆண்ட இடதுசாரிகளுக்கோ, 39 இடங்களில் டெபாசிட் பறிபோயிருக்கிறது. அது மட்டுமல்ல, அங்கு 2009-ல் 33.3 சதவிகிதம் ஆக இருந்த மார்க்சிஸ்ட் கட்சியின் வாக்குவங்கி, 2014-ல் 21 சதவிகிதமாகக் குறைந்து, 2019-ல் 6.28 சதவிகிதமாகச் சரிந்துவிட்டது.

சரிந்த இடதுசாரிகள்... மீண்டு எழுவார்களா?

இந்தத் தோல்விக்கு இடதுசாரிகளும் காரணமாக இருந்திருக்கிறார்கள் என்று விமர்சிக்கிறார், மூத்த பத்திரிகையாளர் ஆர்.விஜயசங்கர். அவர் பேசுகையில்...

சரிந்த இடதுசாரிகள்... மீண்டு எழுவார்களா?

``இடதுசாரிகளிடம் இருந்த குழப்பமும் இந்தத் தோல்விக்குக் காரணம். காங்கிரஸ், பி.ஜே.பி இரண்டுமே எதிரிகள் என்று முதலில் தீர்மானித்தனர். இரண்டு எதிரிகளை எதிர்க்கக்கூடிய வலு, இடதுசாரிகளுக்கு இல்லை. பாசிசமா, ஏதேச்சதிகாரமா என்று சீரியஸாக விவாதித்துக் கொண்டிருந்தனர். இந்தியாவுக்கு வேறொரு வடிவத்தில் பாசிசம் வந்துள்ளது என்று பார்த்திருக்க வேண்டும். அரசியல் சாசனத்தால் உருவாக்கப்பட்ட அமைப்புகள் அடித்து நொறுக்கப்படுகின்றன. ஜனநாயகம் என்கிற களம் காலி செய்யப்படுகிறது. சிறுபான்மையினருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. பட்டியலின மக்களுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. ஜி.எஸ்.டி., பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளால் பொருளாதாரம் காலி செய்யப்படுகிறது. இவை அத்தனையும் கண் முன்பாக நடக்கின்றன. இன்னும் ஏன் காத்திருக்கிறீர்கள்? இத்தகைய சூழலில், எல்லா எதிர்க்கட்சிகளையும் ஒன்று சேர்த்து ஒரு வலுவான அணியைக் கட்டியிருக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் இடதுசாரிகளுக்கு இருந்தது. அந்தப் பணியைச் செய்ய அவர்கள் தவறிவிட்டார்கள். மேலும், மாயாவதி உட்பட பலரும், தேசத்தில் எழுந்துள்ள அபாயத்தைக் குறைத்து மதிப்பிட்டு விட்டனர்” என்கிறார்.

மேற்குவங்கத்தில் இடது முன்னணியின் பெரும்பான்மையான வாக்குகள் பி.ஜே.பி-க்குப் போய்விட்டன. வாக்குகள் மட்டுமல்ல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் பலரும் பி.ஜே.பி-க்கே போய்விட்டார்கள். இதற்கான காரணங்களை நம்மிடம் விளக்கும் ஆர்.இளங்கோவன், ``மம்தா அரசின் அராஜகங்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சியினரால் ஈடுகொடுக்க முடியவில்லை. எனவே, மத்தியில் பி.ஜே.பி ஆட்சியில் இருப்பதால், அது தங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் என்று கருதி அங்கு போய்விட்டார்கள். அங்குள்ள ஒரு தொழிற்சங்கத் தலைவரிடம் இது பற்றி கேட்டேன். அதற்கு, `மார்க்சிஸ்ட் கட்சிக்கு அமைப்பு இருக்கிறது, ஆனால், சக்தி இல்லை. பி.ஜே.பி-யிடம் அமைப்பும் இருக்கிறது, சக்தியும் இருக்கிறது. அதனால் எங்கள் கட்சியினர் அங்கே போய்விட்டார்கள்’ என்று சொன்னார். அவரிடம், ‘அவர்கள் உங்களைத் தாக்கினால், நீங்கள் திருப்பித் தாக்க வேண்டியதுதானே?’ என்று கேட்டேன். அதற்கு, ‘நாங்களும் திருப்பித் தாக்குகிறோம். ஆனால், அவர்கள் தாக்குதலுக்கு எதிரான நாங்கள் நான்கு பேர் போய் எதிர்த்துக்கேட்டால்கூட, எங்கள் மீது நூறு வழக்குகள் போடுகிறார்கள். காவல் நிலையத்துக்கும் நீதிமன்றத்துக்கும் எங்களால் அலைய முடியவில்லை’ என்று விரக்தியுடன் சொன்னார். இதுதான் மேற்கு வங்கத்தில் உள்ள இடதுசாரிகளின் நிலைமை” என்கிறார்.

இடதுசாரிகளுக்கு தற்போது ஏற்பட்டுள்ள சரிவுக்கான வேறு பல காரணங்களைப் பட்டியலிடுகிறார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பேராசிரியர் அருணன்.

சரிந்த இடதுசாரிகள்... மீண்டு எழுவார்களா?

``மேற்கு வங்கத்துக்குப் போய் அமித் ஷா என்ன பேசினார்? ஜி.எஸ்.டி-யைக் கொண்டுவந்ததால் தொழில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று பேசினாரா? பணமதிப்பிழப்பு கொண்டுவந்ததால் நாட்டின் பொருளாதாரம் உயர்ந்துவிட்டது என்று பேசினாரா? அதையெல்லாம் பேசவில்லை. ‘இதோ, ஜெய்ஸ்ரீராம் என்று சொல்கிறேன். என்னைக் கைது செய்து பாருங்கள்’ என்று மம்தாவுக்கு சவால் விட்டார். மதத்தைப் பயன்படுத்திப் பிரசாரம் செய்யக் கூடாது என்பது தேர்தல் விதி. ஆனால், அதை அவரே மீறினார்.

அதுமட்டுமல்ல, பிரதமர் மோடி கடைசிக் கட்ட வாக்குப்பதிவு நாளன்று கேதார்நாத் போய் தியானம் செய்தார். அந்த போட்டோக்களும் வீடியோக்களும் வெளியாகின்றன. அன்றுதான் மேற்குவங்கத்திலும் ஒரு பகுதியில் வாக்குப்பதிவுகள் நடைபெற்றன. இதையெல்லாம் பார்க்க வேண்டும். முற்போக்குப் பாரம்பர்யம் கொண்ட மேற்கு வங்கத்திலும், வகுப்புவாதம் எடுபட்டிருக்கிறது. இடதுசாரிகளால் அதை முறியடிக்க முடியவில்லை. ஆகவே, இது குறித்து ஆழ்ந்த பரிசீலனை தேவை. வெறும் தேர்தல் பரிசீலனை, தோல்வி குறித்த ஆய்வு, தேர்தல் உடன்பாடு உத்தி பற்றிய ஆய்வு ஆகியவை மட்டுமே போதாது. ஒட்டுமொத்த இந்தியச் சமூகம் பற்றிய ஆய்வையும் மேற்கொள்ள வேண்டும் என்பது என் கருத்து. அந்த ஆய்வு என்பது மண்ணுக்கேற்க மார்க்சியம் என்ற நோக்கிலிருந்து மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்தியாவுக்கென சில தனித்தன்மைகள் உள்ளன. இங்கே சாதியம் இருக்கிறது. இது, பல தேசிய இனங்களின் பெரிய கூட்டமைப்பு. உதாரணமாக, தமிழர்களை மட்டும் எடுத்துக் கொண்டாலே ஏழரைக் கோடிப் பேர் இருக்கிறார்கள். எனவே, மொழிவழி தேசிய இனத்தின் உரிமைகள், அதன் நியாயமான கோரிக்கைகள் ஆகியவற்றில் கம்யூனிஸ்ட் இயக்கம் அழுத்தமாக வெளிப்பட வேண்டும், அதற்காக இன்னும் போராட வேண்டும். இந்த வகையில் மண்ணுக்கேற்ற மார்க்சியம் குறித்து ஆய்வுசெய்ய வேண்டும். இந்தியப் புரட்சிக்கான பாதையைத் துல்லியமாகக் கண்டறிய வேண்டும்” என்கிறார், பேராசிரியர் அருணன்.

மேற்குவங்கத்தையொட்டிய திரிபுராவிலும் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான ஆட்சிதான் நீண்டகாலம் நடைபெற்றது. அங்கு கடந்த சட்டமன்றத் தேர்தலில் பி.ஜேபி ஆட்சியைப் பிடித்துவிட்டது. பி.ஜே.பி-யின் அடுத்த இலக்கு மேற்குவங்கம்தான் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

சரிந்த இடதுசாரிகள்... மீண்டு எழுவார்களா?

இந்நிலையில், தங்களுக்கு செல்வாக்கு மிகுந்த கேரளா குறித்த கவலை இடதுசாரிகளில் ஒரு சாராருக்கு ஏற்பட்டிருக்கிறது. கேரளாவில்தான், உலகிலேயே முதன்முதலில் ஜனநாயக முறையிலான கம்யூனிஸ்டுகளின் அரசு அமைந்தது. தற்போது, பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சியில் இருக்கிறது. இந்தத் தேர்தலில், அங்குள்ள 20 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டுமே சி.பி.எம் வென்றது. ராகுல்காந்தி போட்டியிட்ட வயநாடு உட்பட மற்ற 19 தொகுதிகளில் காங்கிரஸ் வென்றுள்ளது. ஒருசில தொகுதிகளையாவது பிடித்துவிடலாம் என்று நம்பிக்கையில் இருந்த பி.ஜே.பி-க்கு ஓர் இடம்கூட கிடைக்கவில்லை. அது இடதுசாரிகளுக்கு ஆறுதலை அளிப்பதாக இருக்கலாம். ஆனாலும், கேரளாவில் விழிப்போடு இருக்க வேண்டுமென்று இடதுசாரிகள் எச்சரிக்கப்படுகிறார்கள்.

தேர்தல் தோல்வியால் கவலையில் இருந்த இடதுசாரிகளுக்கு சற்று நம்பிக்கை அளிக்கிற செய்தி ஒன்று மேற்கு வங்கத்திலிருந்து வந்து கொண்டிருக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 35 இடங்களில் வெற்றிபெற்ற திரிணாமுல் கட்சியால், இந்த முறை 22 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. அந்தக் கட்சிக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ள சூழலைப் பயன்படுத்தி, தங்கள் கட்சி அலுவலகங்களை மீட்கும் நடவடிக்கையில் மார்க்சிஸ்ட் தொண்டர்கள் இறங்கியுள்ளனர். அதே நேரத்தில், மார்க்சிஸ்ட்கள் தங்கள் அலுவலங்களை மீட்கும் இந்த நடவடிக்கைக்கு, அங்கு எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ள பி.ஜே.பி உதவி செய்வதாக மம்தா கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நேரத்தில் ஒரு விஷயத்தை மட்டும் இங்கு சொல்ல வேண்டியிருக்கிறது. மேற்குவங்கத்தில் ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என முழக்கமிட்டுக் கொண்டிருந்த கம்யூனிஸ்ட் தொண்டர்கள்… இன்றைக்கு, `ஜெய் ஸ்ரீராம்’ என்று கோஷமிட ஆரம்பித்து விட்டார்கள். ‘லால் சலாம்’ என்று முழக்கமிட்டுவரும் கேரள சகாக்கள், ‘பாரத் மாதா கீ ஜே’ என்று கோஷத்துக்கு மாறுவதற்குள் இடதுசாரிகள் விழித்துக் கொள்வார்களா?

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு