Published:Updated:

`இந்தியைத் திணித்தால் போராட்டம் வெடிக்கும்!' - 1965-ஐ நினைவுபடுத்தும் முத்தரசன்

`இந்தியைத் திணித்தால் போராட்டம் வெடிக்கும்!' - 1965-ஐ நினைவுபடுத்தும் முத்தரசன்
`இந்தியைத் திணித்தால் போராட்டம் வெடிக்கும்!' - 1965-ஐ நினைவுபடுத்தும் முத்தரசன்

``தமிழகத்தில் இந்தியைத் திணிக்க நினைத்தால் மிகப் பெரிய போராட்டம் வெடிக்கும்'' என இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் எச்சரித்துள்ளார்.

`இந்தியைத் திணித்தால் போராட்டம் வெடிக்கும்!' - 1965-ஐ நினைவுபடுத்தும் முத்தரசன்

தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், ``தஞ்சை மாவட்டத்தில் வருகிற 4-ம் தேதி ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கண்டித்து அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அனைத்து இயக்கங்கள் சார்பில் திட்டமிட்டபடி பெருந்திரள் போராட்டம் தஞ்சை தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற உள்ளது. இதற்காக எங்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் அனுமதி கேட்டு காவல்துறையில் கடிதம் வழங்கியிருந்தார். அதற்கு தஞ்சாவூர் நகர டிஎஸ்பி 18 கேள்விகள் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது இதுவரை இல்லாத நடைமுறையாக உள்ளது. ஒன்று அனுமதி மறுக்கப்படுகிறது; இல்லையென்றால் அனுமதிக்கப்படும் என்று மட்டும்தான் சொல்வார்கள். இப்போது டிஎஸ்பி கொடுத்துள்ள நோட்டீஸ் என்பது அவருடைய தன்னிச்சையான உத்தரவா அல்லது அரசின் உத்தரவா என்பதை தெரியப்படுத்த வேண்டும். வரும் 4-ம் தேதி கடலூரில் இதற்கான போராட்டத்தில் நான் கலந்துகொள்கிறேன். அன்று மாலை விழுப்புரத்தில் நடைபெறும் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிரான பொதுக்கூட்டத்திலும் கலந்து கொள்ள உள்ளேன்.

மத்திய அரசு ஹைட்ரோகார்பன் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும். மாநில முதல்வர் போகிற போக்கில் இது தொடர்பாக ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அதன்படி இந்தத் திட்டத்தை அமல்படுத்தக் கூடாது. ஜெயலலிதா வழியில் ஆட்சியை நடத்தும் எடப்பாடி, விவசாயிகளுடைய நலனுக்கு எதிராக எந்தத் திட்டத்தையும் கொண்டு வராது என ஜெயலலிதா அறிவித்தது போல் எடப்பாடியும் அறிவித்து விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டும். ஹைட்ரோ கார்பனுக்கான போராட்டம் என்பது ஜனநாயக ரீதியில் உணர்வுபூர்வமாக நடைபெறும் போராட்டம். இதில் நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் தினந்தோறும் ஏதாவது ஒரு கிராமத்தில் போராட்டங்கள் மூலம் விவசாயிகள் தங்களுடைய எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசு இந்தத் திட்டத்துக்கு விரைவுபடுத்துவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். 8 வழிச் சாலை திட்டத்தை மத்திய அரசு கொண்டுவர துரிதமாகச் செயல்பட்டு வருகிறது. இதற்காக 5 மாவட்ட விவசாயிகளின் நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன. அவற்றை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டது. எனவே மத்திய, மாநில அரசுகள் இந்தத் திட்டத்தை அமல்படுத்தக் கூடாது. மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு இதற்கு துணை போகக் கூடாது. அப்படி இருந்தால் அப்பகுதி விவசாயிகளோடு சேர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பல போராட்டங்களை முன்னெடுக்கும்.

இந்தத் திட்டத்திற்காக 5 மாவட்டங்களில் 1900 ஹெக்டேர் விளை நிலங்களும் 120 ஹெக்டேர் வனப்பகுதியும் கையகப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு லட்சம் மரங்கள் வெட்டப்பட்டுள்ளது. பத்தாயிரம் பாசனக் கிணறுகள் 100 குளங்களும் 8 மலைகளும் இதனால் பாதிக்கப்பட உள்ளது. எனவே, இந்தத் திட்டத்தை அமல்படுத்தக் கூடாது. பா.ஜ.க தேர்தல் அறிக்கையிலேயே இந்திக்கும் சம்ஸ்கிருதத்திற்கும் முன்னுரிமை வழங்கப்படும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. நம் நாட்டில் பல்வேறு மாநிலங்கள் பல மொழிகள் பேசுபவர்கள் இருந்தாலும் ஏற்கெனவே நேரு பிரதமராக இருந்தபோது நாடு முழுவதும் இந்தி கொண்டுவர முயற்சி செய்தார். 1965-ம் ஆண்டு தமிழ்நாட்டில் இதற்காக மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. பல மாதங்கள் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. இந்தி மொழியை திரும்பப் பெறுவதாக ஜவகர்லால் நேரு அப்போது அறிவித்தார். தற்போது மோடி அரசு இதே நிலையைக் கடைப்பிடித்தால் 1965 நடைபெற்ற போராட்டம் தற்போது நடைபெறும்.

`இந்தியைத் திணித்தால் போராட்டம் வெடிக்கும்!' - 1965-ஐ நினைவுபடுத்தும் முத்தரசன்

சமூகச் செயல்பாட்டாளர்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவிக்க முடியாமல் தமிழக அரசு அவர்களை முடக்கி வருகிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் குறுந்தகடு வெளியிட்ட சமூகச் செயற்பாட்டாளர் முகிலன் மாயமாகி இன்றுடன் 100 நாள்கள் நிறைவடைகிறது. அவர் உயிரோடு இருக்கிறாரா அல்லது கடத்தப்பட்டாரா என்பது குறித்து தமிழக முதல்வர் நேரடியாக பதில் அளிக்க வேண்டும் இது குறித்து அறிக்கை வெளியிட வேண்டும். தற்போதைய மோடியின் பா.ஜ.க அரசில் 60 சதவிகிதம் உயர் பிரிவினரைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ்-ஸின் குழந்தை இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ் என்ன சொல்கிறதோ அதைத்தான் பா.ஜ.க-வும் செயல்படுத்தி வருகிறது. இது தொடர்பாக கருத்து தெரிவிக்க வேண்டியது ஆர்.எஸ்.எஸ் தான்.

தமிழகத்தில் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதைப் போர்க்கால அடிப்படையில் நீக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி டெல்டாவில் இந்த ஆண்டு குறுவை சாகுபடி செய்ய சாத்தியமற்ற கூறுகள் நிலவுகிறது. 7-வது ஆண்டாக குறுவையை இழந்து ஒரு போக சாகுபடிக்கு தள்ளப்பட்டுள்ளோம். காவிரி மேலாண்மை ஆணையம் 9.19 டிஎம்சி தண்ணீர்  வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படுமா என்பதுதான் தமிழக விவசாயிகளின் கேள்வியாக உள்ளது. இதை,  அமல்படுத்த வேண்டியது காவிரி மேலாண்மை ஆணையம். அதைக் கண்காணிக்க வேண்டியது உச்ச நீதிமன்றம்தான். 
தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாய தொழிலாளர்கள் வேலை இல்லாமல் அண்டை மாநிலங்களுக்குச் செல்லும் நிலைமை ஏற்படுகிறது. எனவே, விவசாய தொழிலாளர்களுக்கு ஏதுவாக 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு கூடுதல் நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். காவிரி –கோதாவரி நிதிகள் இணைப்பு திட்டம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால் அதை முறையாக மத்திய அரசு செயல்படுத்துமா என்பதுதான் சந்தேகம். தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 37 எம்.பி-க்களும் காவிரி நீர், நீட் தேர்வு மற்றும் தமிழக உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி போராடுவார்கள்'' எனத் தெரிவித்தார்.

Vikatan