Published:Updated:

வைகோ, அன்புமணி, பொன்னார்... ராஜ்யசபா ரேஸில் யார், யார்?

வைகோ, அன்புமணி, பொன்னார்... ராஜ்யசபா ரேஸில் யார், யார்?
வைகோ, அன்புமணி, பொன்னார்... ராஜ்யசபா ரேஸில் யார், யார்?

தமிழ்நாட்டிலிருந்து ராஜ்யசபா தேர்தலுக்குத் தேர்வாகப்போகிறவர்கள் யார், யார்?

க்களவைத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் மாநிலங்களவைத் தேர்தலுக்குத் தயாராகிவிட்டன. தமிழகத்திலிருந்து ராஜ்ய சபாவுக்குத் தேர்வாகியிருந்த தி.மு.க-வின் கனிமொழி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, அ.தி.மு.க.வைச் சேர்ந்த வி.மைத்ரேயன், கே.ஆர்.அர்ஜுனன், ஆர்.லட்சுமணன், டி.ரத்தினவேல் ஆகியோரின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த இடங்களுக்கான தேர்தல் நடைபெறும் தேதி விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஓட்டுப்போட்டு ராஜ்யசபா உறுப்பினர்களைத் தேர்வு செய்வார்கள். போட்டியில்லாத நிலையில், ஒருமனதாகத் தேர்வுசெய்யப்படுவது வழக்கம். சட்டசபையில் அதிக எம்.எல்.ஏ-க்களைக் கொண்ட கட்சிகளே, மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவியிடங்களுக்குப் போட்டியிட முடியும்.

வைகோவுக்கு எம்.பி பதவி உறுதி

தமிழக சட்டப்பேரவையில் தற்போது அ.தி.மு.க-வுக்கு 122 உறுப்பினர்களும் தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சேர்த்து 110 உறுப்பினர்களும் உள்ளனர். சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க வசமிருந்த 13 தொகுதிகளைத் தி.மு.க கைப்பற்றியதால், இப்போதைய சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மாநிலங்களவையில் காலியாகும் ஆறு இடங்களில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க தலா மூன்று இடங்களைப் பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சரி, மொத்தம் ஆறு பேர், ஆனால் மோதுவது?

வைகோ, அன்புமணி, பொன்னார்... ராஜ்யசபா ரேஸில் யார், யார்?

'எந்தக் கட்சி அலுவலகத்துக்குப் போனாலும், 'அண்ணன் ராஜ்ய சபா போறாருல்ல' என யாரோ ஒரு தொண்டர் மொபைலில் பேசியபடி அங்குமிங்கும் திரிவதைக் காண முடிகிறது. உண்மையில் யார் யாருக்கெல்லாம் அந்த அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது என்பது பற்றி ஆளுங்கட்சியான அ.தி.மு.க வட்டாரத்தில் பேசினோம்.

"தேர்தலுக்கு முன்னாடியே ஒரு ராஜ்யசபா சீட்டை பா.ம.க-வுக்கு தர்றதா சொல்லிட்டோம். அதனால ஒரு சீட் அவங்களுக்குத்தான். மீதமுள்ள ரெண்டு சீட்டுக்கு எக்கச்சக்கப் போட்டி இருக்கு. நிறைய பேர் முட்டி மோதிட்டு இருக்காங்க. மக்களவைத் தேர்தல்ல தங்களோட வேட்பாளர்களுக்கு எங்க ஆளுங்க வேலை செய்யலைன்னு பி.ஜே.பி கோபத்துல இருக்கறாங்கன்னும், அதைச் சரிசெய்ய பி.ஜே.பி மேலிடத் தலைவர்களோட நெருக்கமான தொடர்பு வச்சிருக்கிற மைத்ரேயனுக்கு மறுபடியும் சீட் தர்றதாகவும் ஒரு பேச்சு இருக்கு. சிலர் வேற மாதிரியும் சொல்றாங்க. மக்களவைத் தேர்தல்ல சப்போர்ட் பண்ணாததற்குப் பிராயச்சித்தமா ஒரு ராஜ்யசபா சீட் தங்களுக்கே வேணும்னு பி.ஜே.பி கேக்கறதாகவும் பேச்சு அடிபடுது. வெளியுறவுத்துறை அமைச்சரா பதவி ஏற்றிருக்கிற ஜெய்சங்கருக்காக அந்த சீட்டைக் கேக்கறாங்களாம்.

கட்சியிலிருந்து அன்வர் ராஜா, முதல்வருக்கே லெட்டர் எழுதியிருக்கார். 'மத்தியில் பி.ஜே.பி வெற்றி பெற்றதால சிறுபான்மை மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கிற மாதிரி எனக்கு ராஜ்யசபா சீட் தந்தே ஆகணும்கிற லெவல்ல அந்தக் கடிதம் இருக்கு. முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவும் ராஜ்யசபா உறுப்பினருக்கான ரேஸில இருக்காங்க" என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத பேச்சாளர் ஒருவர்.

வைகோ, அன்புமணி, பொன்னார்... ராஜ்யசபா ரேஸில் யார், யார்?

அன்வர் ராஜா, கோகுல இந்திரா தவிர வேறு சிலரும் முயற்சி செய்கிறார்கள். இந்தப் பஞ்சாயத்தில் சிக்காமல் இருக்க ஜெ. பாணியில் புதுமுகங்கள் எவருக்காவது தந்து விடலாமா என யோசிக்கிறார்களாம் ஒங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும்.

பா.ம.க தரப்பிலோ, முன்பு பேசியபடி அ.தி.மு.க தங்களுக்கு மாநிலங்களவை சீட்டை ஒதுக்கித் தருமா என்கிற சந்தேகம் திடீரென எழுந்துள்ளது. சில தினங்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, அழுத்தந்திருத்தமாக அதை ஞாபகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 'ஜெயலலிதா இருந்தபோது ஒருமுறை தருவதாகச் சொல்லிவிட்டு ஏமாற்றினார்' எனப் பழைய வரலாற்றை உதாரணம் காட்டுகிறார்கள் பா.ம.க-வினர். பா.ம.க-வுக்கு ராஜ்யசபா சீட் தரப்படும் பட்சத்தில் அன்புமணிக்கே அந்த சீட் எனத் தெரிகிறது.

தி.மு.க-வினர் என்ன சொல்கிறார்கள்?

"மூணு சீட் கன்ஃபார்ம். அதுல ஒண்ணு வைகோவுக்கு என்கிறது தி.மு.க வட்டாரங்கள். மக்களவைத் தேர்தல்ல வைகோ தீவிரமா பிரசாரம் செய்ததை தளபதி மறக்கலை. அதனால, வைகோ ராஜ்யசபாவுக்கு போறது உறுதியாகிடுச்சு. மத்த ரெண்டு சீட் யாருங்கிறதை தி.மு.க தலைவர் சீக்கிரமே அறிவிப்பார்'' என்பதே அவர்களின் பதில்.

வைகோ, அன்புமணி, பொன்னார்... ராஜ்யசபா ரேஸில் யார், யார்?

சுப்புலட்சுமி ஜெகதீசன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், முத்துசாமி என சில சீனியர்கள் முயற்சி செய்து வருவதாகத் தெரிகிறது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பதவிக் காலம் விரைவில் முடிவடைவதால் அவரைத் தமிழகத்திலிருந்து மேல்சபை எம்.பி ஆக்கலாம் என நினைக்கிற காங்கிரஸ் கட்சி அதற்காகத் தி.மு.க-விடம் பேசி வருவதாகவும் காங்கிரஸ் வட்டாரத்தில் பேசி வருகின்றனர். 

இதற்கிடையில், 'மக்களவைத் தேர்தலில் தோற்ற பி.ஜே.பி-யின் பொன்.ராதாகிருஷ்ணனும் மேல்சபை எம்.பி ஆகிறார் என்றொரு தகவலும் உலா வருகிறது. அஸ்ஸாம் மாநிலத்தில் தனக்கிருக்கும் எம்.எல்.ஏ-க்களை வைத்து பொன்னாரை எம்.பி-யாக்க நினைக்கிறதாம் பி.ஜே.பி. அந்தக் கட்சிக்கு இது ஒன்றும் புதிதல்ல. தமிழகத்தில் கட்சியை வளர்க்க வேறுவழியே இல்லாததால், காலங்காலமாக மற்ற மாநிலங்களின் கோட்டாவிலிருந்தே தமிழக தலைவர்களை எம்.பி-யாக்கி வருகிறது அந்தக் கட்சி.

திருநாவுக்கரசர் பி.ஜே.பி-யில் இருந்தபோது மத்தியப் பிரதேசத்திலிருந்து தேர்வானார். தற்போது ராஜ்யசபா உறுப்பினராக இருக்கும் இல.கணேசனும் அதே மாநிலத்திலிருந்துதான் ராஜ்யசபாவுக்குத் தேர்வு செய்யப்பட்டார். நிர்மலா சீதாராமன் கர்நாடக மாநிலத்திலிருந்து தேர்வானார். எனவே, பொன்னார் தேர்வு செய்யப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

எது எப்படியோ, 6 ராஜ்யசபா இடங்களுக்கு அ.தி.மு.க - தி.மு.க-வில் இப்போதே போட்டா போட்டி தொடங்கிவிட்டது என்பதே உண்மை.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு