Published:Updated:

மொழிப் பாடம்... வலுக்கும் எதிர்ப்பும்... மத்திய அரசின் மறுப்பும்!

துரைராஜ் குணசேகரன்

நாடு முழுவதும் இந்தி பேசாத மாநிலங்களில் இனி இந்தி மொழி கட்டாயமாக்கப்பட வேண்டும் என்ற புதிய கல்விக் கொள்கைக் குழுவின் பரிந்துரை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மொழிப் பாடம்... வலுக்கும் எதிர்ப்பும்... மத்திய அரசின் மறுப்பும்!
மொழிப் பாடம்... வலுக்கும் எதிர்ப்பும்... மத்திய அரசின் மறுப்பும்!

``புதிய கல்விக் கொள்கை மூலம் இந்தித் திணிப்பை மத்திய அரசு திட்டமிட்டுச் செய்கிறது” திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் தற்போது இருமொழிக் கொள்கை நடைமுறையில் உள்ளது. 1986-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தேசியக் கல்விக் கொள்கை, 1992-ம் ஆண்டு திருத்தப்பட்டது. இந்த நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலேயே பி.ஜே.பி., `புதிய கல்விக் கொள்கை’ திட்டத்தைக் கொண்டுவருவோம் என்று தெரிவித்திருந்தனர். அதன்படி, புதிய கல்விக் கொள்கை திட்டத்தை வகுப்பதற்காக, இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான நிபுணர்கள் அடங்கிய  குழு ஒன்று உருவாக்கப்பட்டது. 

மொழிப் பாடம்... வலுக்கும் எதிர்ப்பும்... மத்திய அரசின் மறுப்பும்!

இந்தக் குழுவானது, தங்களின் அறிக்கையினைக் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31-ம் தேதி மனிதவள அமைச்சகத்திடம் ஒப்படைத்தது. அக்குழு அளித்த இந்தப் பரிந்துரையில், `இந்தி மொழியை மாணவர்கள் கட்டாயமாகப் படிக்க வேண்டும் என்கிற வகையில் மும்மொழிக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது தாய்மொழி, இணைப்பு மொழி ஆங்கிலம் ஆகியவற்றுடன் இந்திய மொழி ஒன்று கட்டாயம் படிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மூன்றாவது மொழியாக இந்தி இருக்க வேண்டும்" என்றிருப்பதாகச் செய்திகள் பரவின. 

இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது ட்வீட்டில், ``8-ம் வகுப்பு வரை எந்த மொழிப் பாடமும் கட்டாயம் என்று புதிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்படவில்லை. இதுதொடர்பாக வெளியான செய்திகள், தகவல்கள் அனைத்தும் முழுக்க முழுக்கத் தவறானவை'' என்று பதிவிட்டிருந்தார். மேலும், மத்திய அரசு இதற்கு மறுப்பு தெரிவித்திருந்தது. இந்தியைத் திணிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்றும், பாடத் திட்டத்தில் இந்தியைக் கொண்டுவர மத்திய பி.ஜே.பி. அரசு முயற்சி செய்யவில்லை என்றும் இந்தச் செய்திக்கு மத்திய அரசு விளக்கம் தெரிவித்திருந்தது. 

மொழிப் பாடம்... வலுக்கும் எதிர்ப்பும்... மத்திய அரசின் மறுப்பும்!

இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம்  அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்திருந்த நிலையில், கஸ்தூரி ரங்கன் குழு, புதிய கல்விக் கொள்கைக்கான வரைவை புதிதாகப் பொறுப்பேற்றுக்கொண்ட மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்கிடம் ஒப்படைத்தனர். 

என்ன சொல்கிறது இந்த அறிக்கை:

தேசியக் கல்வி ஆணையத்தை உருவாக்குவது, பள்ளிகளின் கட்டண உயர்வைக் கட்டுப்படுத்துவது தவிர, கல்வி மற்றும் கற்றலின் கவனத்தை மீட்டெடுக்கும் வகையில் மனிதவளத் துறையின் பெயரைக் கல்வி அமைச்சகம் என மாற்றலாம் அந்தப் பரிந்துரையில் இடம்பெற்றுள்ளது. மேலும், மாணவர்கள் ஒரு பாடத்தில் தேர்வு எழுதிய பிறகு, மீண்டும் அதே பாடத்தில் தேர்வெழுத விரும்பினால் அனுமதிக்கலாம் என்றும், இந்திய நாட்டின் பரந்து விரிந்த நிலப்பரப்பு மற்றும் கலாசாரங்களை, மாணவர்கள் அறிந்துகொள்ள மும்மொழிக் கொள்கையை நாடுமுழுவதும் கட்டாயமாக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாட்டில் உள்ள மாநிலங்களை இந்தி பேசும் மாநிலங்கள், இந்தி பேசாத மாநிலங்கள் என இரண்டு வகைகளாகப் பிரித்துள்ளனர்.

மொழிப் பாடம்... வலுக்கும் எதிர்ப்பும்... மத்திய அரசின் மறுப்பும்!

இதில், இந்தி பேசாத மாநிலங்களில், அந்த மாநிலத்தின் தாய்மொழி, அடுத்து ஆங்கிலம் அதோடு இந்தி மொழியைக் கட்டாயமாகக் கற்பிக்க வேண்டும் என்றும், இந்தி பேசும் மாநிலங்களில்,  இந்தி மற்றும் ஆங்கிலம் அதோடு மூன்றாவது மொழியை அவர்களின் விருப்பத்துக்கேற்ப தேர்வு செய்யலாம் என்றும் பரிந்துரை செய்துள்ளனர். மேலும், இந்தப் புதிய கல்விக் கொள்கைகள் குறித்த பொதுமக்களின் கருத்துகளை nep.edu@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஜூன் 30-ம் தேதி வரை தெரிவிக்கலாம் என்றும் அறிவித்துள்ளது. மொத்தம் 484 பக்கங்களைக் கொண்டுள்ளது இந்த அறிக்கை. 

மொழிப் பாடம்... வலுக்கும் எதிர்ப்பும்... மத்திய அரசின் மறுப்பும்!

இந்தப் பரிந்துரையில், இந்தி பேசும் மாநிலங்களில், மூன்றாவது மொழியை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்துகொள்ளலாம் என்றும், அதேசமயம், இந்தி பேசாத மாநிலங்களில், மூன்றாவது மொழியாகக் கட்டாயம் இந்தி கற்பிக்க வேண்டும் என்றும் வரைவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

இதே அறிவிப்பு தேர்தலுக்கு முன்னர் வந்தபோது, பெரும் சர்ச்சை கிளம்பி, கடும் எதிர்ப்பலை உருவாகியது. அதற்கு, ``உடனடியாக இந்தி கட்டாயமாக்கப்படாது. இந்தி மொழி எந்த மாநிலத்தின்மீதும் திணிக்கப்படாது” என்று கூறிய இதே அரசு, இன்று தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு இந்தியைக் கட்டாயமாக்கக் காத்திருக்கிறது. 

மொழிப் பாடம்... வலுக்கும் எதிர்ப்பும்... மத்திய அரசின் மறுப்பும்!


மும்மொழிக் கொள்கை குறித்து, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், ``ஆளும் பி.ஜே.பி அரசு நியமித்த அந்தக் குழுவின் பரிந்துரையின்பேரில், எல்லா மாநிலங்களிலும் மும்மொழிக் கொள்கை என்பதைக் கொண்டுவர முயல்கிறார்கள். இதன்மூலம் இந்தி திணிப்பு என்பதை மீண்டும் கையில் எடுத்துள்ளனர். இந்தி திணிப்பை மிகக் கடுமையாக எதிர்த்த மாநிலம் தமிழ்நாடு. தங்களின் இன்னுயிரைப் பலிகொடுத்து, இந்தி மொழியின் திணிப்பை எதிர்த்த வீர மறவர்கள் வாழ்ந்த மண் இது. இன்றளவும் அந்த உணர்வு சற்றும் மங்காமல்தான் இருக்கிறது. அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்தபோது, 1968 ஜனவரி 23-ம் தேதி, இந்த மொழிச் சிக்கலுக்காகவே அந்த ஒருநாள் தமிழகச் சட்டமன்றத்தை, சிறப்புச் சட்டமன்றமாகக் கூட்டினார். அதில்தான், மும்மொழிக் கொள்கை என்பது நீக்கப்பட்டு, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இருமொழிக் கொள்கைதான் என்று திட்டம் வகுக்கப்பட்டது. அதனடிப்படையில்தான் இன்றளவும் தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் என்று இருமொழிகள் இருக்கின்றன. மீண்டும் இந்தியைக் கொண்டுவருவதென்பது, அமைதியாக இருக்கிற தேசத்தை, மிகப்பெரிய போராட்டங்களுக்கு வழிவகை செய்வதுடன், தமிழ்நாட்டின் அமைதியைக் குழைப்பது, இந்தியாவின் ஒற்றுமையைச் சீரழிப்பது போன்ற பல்வேறு தன்மைகளைக்கொண்டதாக இருக்கிறது. ஒரு மொழியைத் திணிப்பதன்மூலம் கல்வியை மேம்படுத்திவிட முடியாது. தாய்மொழிவழிக் கல்வியின் மூலம்தான், கல்வியை, அறிவை, அறிவியலை மேம்படுத்த முடியும். மொழித் திணிப்பு என்பது இயற்கைக்கும், அறிவியலுக்கும் புறம்பானது. இந்தச் செயலை, திட்டமிட்டுத்தான் மத்திய அரசு செய்ய முயல்கிறது. அவர்களின் உண்மையான எண்ணம், சம்ஸ்கிருதத்தைத் திணிப்பதுவே. பல ஆண்டுகளாக இந்தியாவின் நிதி, சம்ஸ்கிருதத்திற்குக் கொட்டிக்கொடுக்கப்பட்டு வருகிறது. சம்ஸ்கிருதம் தற்போது நடைமுறையில் இல்லாத மொழி என்பதாலும் அதிக மக்களால் பேசப்படாத மொழி என்பதாலும், இடைச்செருகலாக அவர்கள் இந்தியைப் பயன்படுத்துகிறார்கள். மத்திய அரசின் நோக்கம் சம்ஸ்கிருதத்தை இந்தியா முழுவதும் நிலைநிறுத்துவது என்பதே. இது, கடுமையான கண்டங்களுக்குரியது. மறுபடியும் இங்கு இந்தி திணிக்கப்படுமேயானால், மீண்டும் இந்த மண்ணில் இந்தி எதிர்ப்பு போர் எழும்" என்றார்.  

இந்திக்கு எதிராக மீண்டும் போராடத் தொடங்கிவிட்டது தமிழகம்.

Vikatan