மதிப்பிற்குரிய தோழர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு,
நீங்கள் தமிழக மக்களை விட்டுப்பிரிந்து, 10 மாதங்கள் கடந்துவிட்டன. நீங்கள் இல்லாமல், தமிழக மக்கள் உங்களை நினைவில் போற்றிக்கொண்டாடும் முதல் பிறந்தநாள் இது. தேர்தல் பிரசாரங்களிலும், தொலைக்காட்சி நேர்காணல்களிலும் உங்களை ரசித்திராத, உங்களைப் பற்றித் தெரிந்திராத ஒரு டிஜிட்டல் தலைமுறையே உங்களைக் கொண்டாடித் தீர்க்கிறது. ஏறத்தாழ, எழுபது ஆண்டுக்காலம் செய்திகளில் தொடர்ந்து இடம்பெற்ற ஓர் அரசியல் தலைவர், தன் இறப்புக்குப் பின்னரும், அடுத்த தலைமுறையால் கொண்டாடப்பட்டு சமூகவலைதளங்களில் `டிரெண்ட்' செய்யப்படும் அதிசயம் இன்று நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அந்தத் தலைமுறையிடமிருந்து, இந்தக் கடிதம் எழுதப்பட்டு வருகிறது.
இரண்டு நாள்களுக்கு முன்பு, மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையில், `இந்தி பேசாத மாநிலங்களில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படும்' என்று அறிவிக்கப்பட்டிருந்தது. உங்களை இன்று கொண்டாடும் இதே தலைமுறை, இதே டிரெண்டிங்கில் இந்தித் திணிப்புக்கு எதிராகத் திரண்டது. எப்படி, கல்லக்குடிக்கு டால்மியாபுரம் என்ற பெயர் சூட்டப்பட்டபோது, தமிழுக்காகத் தண்டவாளத்தில் நீங்கள் தலைவைத்துப் போராட்டம் நடத்தினீர்களோ, அப்படியான போர்க்குணம் எங்களிடையே வெளிப்பட்டது. ரயிலை மறிக்கும் அளவுக்கான உங்களின் வீரம் எங்களிடம் முழுமையாக இல்லாமல் சற்றே குறைவாக வெளிப்பட்டிருக்கலாம்; ஆனால், இந்த விதை 65 ஆண்டுகளுக்கு முன்பு கல்லக்குடியில் உங்களால் விதைக்கப்பட்டது. இது இந்த நாளில் நிகழ்ந்தது மிகப்பெரிய அதிசயமாக இருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் தமிழகத்தில் சட்டசபை இடைத்தேர்தல்கள் முடிந்து ஒரு வாரம் முடிந்திருக்கிறது. நீங்கள் இல்லாமல், சுதந்திர இந்தியாவில் தமிழகம் சந்தித்த முதல் தேர்தல். வடஇந்தியாவில் வீசப்படும் அலைகள் வேறாக இருக்க, தமிழகத்தில் `கலைஞர் அலை' வீசியது. தமிழ் மொழிக்கும், தமிழர்களுக்கும் ஓயாமல் உழைத்த நீங்கள், மெரினாவில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த வேளையில், ஜார்ஜ் கோட்டை முதல் குமரி முனையில் வீற்றிருக்கும் வள்ளுவர் சிலைவரை தி.மு.க தனது வெற்றியைப் பதிவுசெய்தது.
தமிழகத்தில் மிகக்குறைந்த மக்கள்தொகை கொண்ட, ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து, தன் கருத்தியல் தேர்தல் அரசியலோடு ஒன்றாத போதும், அதைப் பயன்படுத்தி, அந்த வரையறைக்குள் நின்று ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்காகவும் ஒலித்த குரல் உங்களுடையது. இப்படியாகத் தமிழகத்தின் போக்கையே நீங்கள் திருப்பியுள்ளதை வெறும் `அரசியல் சாணக்கியத்தனம்' என்று குறுகிய வட்டத்தினுள் அடைத்துவிட முடியாது. கட்சித் தலைமைகளால் முதல்வராக நியமிக்கப்பட்டு, கட்சித் தலைமையையே கைப்பற்றுவதுதான் அரசியல் சாணக்கியம்.
`எமர்ஜென்சி' முதல் தற்போதைய தேர்தல் முடிவுகள்வரை, தமிழ்நாடு சொல்லும் செய்தி ஒன்றே. `டெல்லி வேறு, தமிழ்நாடு வேறு!' என்பதுதான் அது. தொடர்ச்சியாக மாநில சுயாட்சிக்காக, நீங்களும், திராவிட இயக்கமும் வெளிப்படுத்திய தமிழ்ப்பற்று மட்டுமே காரணம். `திராவிடத்தால் வீழ்ந்தோம்' என்று இங்கு எங்கள் தலைமுறை இளைஞர்களின் வாட்ஸ்அப் குறுஞ்செய்திகளில் பரப்பப்படும் செய்திகளில், தமிழ்ப்பற்றும், `தமிழர்' என்ற இனப்பெருமையும் வழிந்து ஓடுகிறது. இன்று தமிழ்ப்பற்று கொள்வதற்காக மட்டுமாவது, திராவிட இயக்கத்தின் தேவையைப் பற்றி அந்தத் தம்பிகள் தெரிந்துகொள்ள வேண்டும்.

உங்கள் நெருங்கிய நண்பராக இருந்த எம்ஜிஆர் மறைந்தபோது, அண்ணா சாலையில் வைக்கப்பட்டிருந்த உங்கள் சிலையின் மீது ஓர் இளைஞர் கடப்பாரையினால் குத்தினான். அப்போது நீங்கள் `செயல்படவிட்டோர் சிரித்து மகிழ்ந்தாலும் அந்தச் சின்னத்தம்பி என் முதுகில் குத்தவில்லை, நெஞ்சில்தானே குத்துகிறான்' என்று சொன்னதையே இப்போதும் பொருத்திப் பார்க்கிறோம்.
உங்கள் மறைவுக்குப் பிறகு எழும் இளைஞர்களின் ஆதரவோடு, தி.மு.க மீது விமர்சனங்களும் தொடர்ந்தபடியே இருக்கின்றன. முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், தி.மு.க வேட்பாளர்களாக நின்று வென்றவர்கள் பெரும்பாலும் வாரிசுகள். சிறுபான்மையினருக்கான கட்சியாகத் தொடர்ந்து கொண்டாடப்பட்ட தி.மு.க, கூட்டணிக்குச் சிறுபான்மையினருக்கான இடத்தை ஒதுக்கிவிட்டு, தன்னை எதிர்க்கட்சி முன்வைக்கும் மத ரீதியான விமர்சனத்திலிருந்து தற்காத்துக் கொண்டது. உங்களின் மூத்த பிள்ளையான முரசொலியில், `அருந்ததியினப் பெண்டிரிடம் தேநீர் பருகிய ஸ்டாலின்' என்று வெளியானது சமூக நீதியின் அடித்தளத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது.
பொது வாழ்க்கையில் 80 ஆண்டுகள், இதழியல் பணியில் 75 ஆண்டுகள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாகத் தோல்வியையே சந்திக்காதவர் என மக்களோடு தொடர்பிலேயே இருந்தவர் நீங்கள். விமர்சனங்கள் உங்கள் மீது ஆயிரம் இருக்கலாம். எனினும், கோயில்கள் கொடியவர்களின் கூடாரமாக மாறி வரும் தேசத்தில், மாநில சுயாட்சியை மத்திய அரசு நெருக்கும் வேளையில், தமிழ் மீது இந்தி மீண்டும் திணிக்கப்படும் காலத்தில், மதவாதம் தன் உச்சத்தைத் தொடும் நேரத்தில், நிச்சயமாக உங்கள் தேவையைத் தமிழகம் உணர்கிறது.
வீ மிஸ் யூ கலைஞர் அவர்களே!
இப்படிக்கு,
தமிழகத்தின் சாமான்ய இளைஞன்.