Published:Updated:

பி.ஜே.பியின் அடுத்த அஸ்திரம் ரெடி... சமாளிப்பாரா மம்தா பானர்ஜி?

பி.ஜே.பியின் அடுத்த அஸ்திரம் ரெடி... சமாளிப்பாரா மம்தா பானர்ஜி?
News
பி.ஜே.பியின் அடுத்த அஸ்திரம் ரெடி... சமாளிப்பாரா மம்தா பானர்ஜி?

பி.ஜே.பியின் அடுத்த அஸ்திரம் ரெடி... சமாளிப்பாரா மம்தா பானர்ஜி?

`ஜெய்ஶ்ரீராம்' ஸ்லோகன் குறித்து தனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை' என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ள நிலையில், அவருக்கு எதிராக பி.ஜே.பியினர் அடுத்த தாக்குதலைத் தொடுக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் த்ரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கலந்துகொண்ட சில பொதுக்கூட்டங்களில் பி.ஜே.பியைச் சேர்ந்த சிலர் `ஜெய்ஶ்ரீராம்' என்ற கோஷத்தை எழுப்பினர். அதைத் தொடர்ந்து, கடந்த சில தினங்களுக்கு முன் மம்தா சென்று கொண்டிருந்த வாகனத்தை இடைமறித்து சில சங்பரிவார் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அதேபோன்ற கோஷத்தை எழுப்பியதால், அவர் கடும் ஆத்திரமடைந்தார். காரை விட்டு கீழே இறங்கிச் சென்று, கோஷமிட்டவர்களை மம்தா எச்சரித்த சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பி.ஜே.பியின் அடுத்த அஸ்திரம் ரெடி... சமாளிப்பாரா மம்தா பானர்ஜி?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அந்தச் சம்பவத்தில் தொடர்புடைய சிலருக்கு எதிராக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், பி.ஜே.பியினருக்கும், த்ரிணாமூல் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. 

இந்த நிலையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பி.ஜே.பி மக்களவை உறுப்பினரான பாபுல் சுப்ரியோ மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். மம்தாவுக்கும் பி.ஜே.யினருக்கும் இடையேயான கருத்துமோதல் சர்ச்சைகள் பற்றி ஏ.என்.ஐக்கு பாபுல் அளித்த பேட்டியில், ``மம்தா பானர்ஜி மிகவும் அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர். ஆனால், அவரின் செயல்பாடுகள் என்னவோ இயல்புக்கு மாறானதாகவும், விநோதமாகவும் உள்ளது. முதல்வர் பதவிக்கான கௌரவத்தை அவர் மனதில் கொண்டு நடந்துகொள்ள வேண்டும். வேண்டுமானால், முதல்வர் பதவிக்கான பணிகளிலிருந்து சில நாள்கள் அவர் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று கூறினார். 

அதேநேரத்தில் மம்தா பானர்ஜி கூறுகையில், `ஜெய்ஶ்ரீராம்' என்ற கோஷம் மதரீதியான சித்தாந்தமாகக் கூறப்படுவதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும், ஆனால், பி.ஜே.பியைப் பொறுத்தவரை மதத்தையும், அரசியலையும் ஒன்றாகக் கலந்து செயல்படுவதைதான் தான் எதிர்ப்பதாகவும் தெரிவித்தார். அஸன்சோல் தொகுதியிலிருந்து இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாபுல் சுப்ரியோ, ஜெய்ஶ்ரீராம் கோஷத்தைத் தொடர்ந்து மம்தா பானர்ஜிக்கு எதிராக அடுத்த தாக்குதலை நடத்தத் தயாராகி விட்டார். தன்னுடைய தொகுதியைச் சேர்ந்த மக்கள் அனைவரும், `விரைவில் குணமடைய வேண்டும்' என்று தெரிவித்து அஞ்சல் அட்டைகளை மம்தாவுக்கு அனுப்ப இருப்பதாகக் கூறினார்.

பி.ஜே.பியின் அடுத்த அஸ்திரம் ரெடி... சமாளிப்பாரா மம்தா பானர்ஜி?

மேற்குவங்க மாநிலத்தில் மொத்தம் உள்ள 42 மக்களவைத் தொகுதிகளில் அங்கு ஆளும் த்ரிணாமூல் காங்கிரஸ் கட்சி, இந்த முறை 22 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. கடந்த 2014 தேர்தலில் 16 மக்களவைத் தொகுதிகளில் வெற்றிபெற்ற பி.ஜே.பி, இந்த முறை 18 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. அந்த வகையில் மேற்கு வங்க மாநிலத்தில் பி.ஜே.பியின் வளர்ச்சி அதிகரித்து இருப்பதாகவே அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி ஆட்சிக்கு வரும்முன்னர் 25 ஆண்டுக்காலம் ஆட்சியில் இருந்த இடதுசாரிக் கட்சிகள், கடந்த 2016 சட்டசபைத் தேர்தலில் சோபிக்காதது போன்றே, நாடாளுமன்றத் தேர்தலிலுல் காணாமல் போய் விட்டன. அங்கு இடதுசாரிக் கட்சிகளின் அரசியல் இடத்தை மெல்ல மெல்ல பி.ஜே.பி கைப்பற்றிக் கொண்டிருப்பதாகவே அரசியல் பார்வையாளர்கள் மேலும் கூறுகின்றனர். 

அதை உறுதி செய்யும் வகையில், கடந்த சில தினங்களுக்கு முன், ஜெய்ஶ்ரீராம் கோஷத்தை முழங்கி, மம்தாவை எரிச்சலூட்டிய பி.ஜே.பியினர், தற்போது, `மம்தா விரைவில் பூரண நலம் பெறவேண்டும்' என்ற வாசகத்தைக் கையிலெடுக்க உள்ளனர். அதையொட்டியே, மத்திய அமைச்சரும், அசன்ஸோல் தொகுதி எம்.பியுமான பாபுல் சுப்ரியோ, தொகுதி மக்களை மம்தாவுக்கு அஞ்சல் அட்டைகள் அனுப்பத் தூண்டும்வகையில் பேட்டியளித்துள்ளார். விரைவில் ஆயிரக்கணக்கான அஞ்சல் அட்டைகள், மம்தாவைச் சென்றடையும் என்று எதிர்பார்க்கலாம்.

`ஜெய்ஶ்ரீராம்' கோஷத்திற்காக காரிலிருந்து இறங்கி, கண்டிப்பு காட்டிய மம்தா, பி.ஜே.பியின் அடுத்த அஸ்திரத்தை எப்படிச் சமாளிக்கப் போகிறார் என்பதைப் பார்ப்போம்.