Published:Updated:

`தமிழ்மக்களை திசைதிருப்பும் முயற்சியே இந்த நதிநீர் இணைப்புப் பிரசாரம்!' - பொறியாளர் சுந்தர்ராஜன்

`தமிழ்மக்களை திசைதிருப்பும் முயற்சியே இந்த நதிநீர் இணைப்புப் பிரசாரம்!' - பொறியாளர் சுந்தர்ராஜன்
`தமிழ்மக்களை திசைதிருப்பும் முயற்சியே இந்த நதிநீர் இணைப்புப் பிரசாரம்!' - பொறியாளர் சுந்தர்ராஜன்

``இவ்வளவு சிக்கல்களை வைத்துக்கொண்டு கடல்நீரைக் குடிநீராக மாற்ற வேண்டிய அவசியம் நமக்கு இல்லை. அரபு நாடுகளில் இதைச்செய்கிறார்கள் என்றால், அவர்களுடையது நீராதாரமே இல்லாத நிலப்பரப்பு. தவிர, மக்கள் தொகையும் குறைவு. நாம் ஏன் அந்தத் திட்டத்தைப் பிரதியெடுக்க வேண்டும்".

லக நாடுகளுக்குக்கிடையே மூன்றாவதாக ஓர் உலகப்போர் நடந்தால் அது தண்ணீருக்காகத்தான் நடக்கும் எனச் சொன்னால் அதிர்ச்சியடைய ஏதுமில்லை என்பதாகத்தான் தற்போதைய சூழல் இருக்கிறது. குறிப்பாகத் தமிழகத்தில் இருக்கும் நாம் இதை இன்னும் நெருக்கமாக உணர்கிறோம். எப்போதும் இல்லாத அளவுக்குத் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏன், இந்த அளவுக்கு நம்மை அச்சுறுத்துகிறது. அதற்குக் காரணம் யார், அரசாங்கமா, மக்களா அல்லது இயற்கையா, இதற்கான தீர்வை நோக்கி நாம் செல்லமுடியுமா அல்லது அழிவின் பாதையை நோக்கித்தான் நாம் சென்று கொண்டிருக்கிறோமா எனப் பல கேள்விகளுக்குப் பதில் சொல்ல பொருத்தமான நபர் சூழலியல் செயற்பாட்டாளர் பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன். ஆகவே அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தேன்.

``ஏன் இம்முறை இவ்வளவு மோசமான தண்ணீர்த் தட்டுப்பாடு?"

``தொடர்ச்சியான ஒரு வறட்சியை நாம் சந்தித்துக்கொண்டிருக்கிறோம். பருவ மழை என்பதே சரியாகப் பெய்து ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. 2015-ல் ஒரு பெரிய மழை பெய்தாலும் அடுத்தடுத்த ஆண்டுகளில் மழையே இல்லை. தொடர்ச்சியாக இம்மாதிரி மழையற்று இருப்பதை நாம் சாதாரணமாகக் கடந்து போக இயலாது. ஆனால், முரண் என்னவென்றால் நூறு சதவிகிதம் அரசாங்கம்தான் காரணம். மனிதர்கள் செய்த தவறினால் இயற்கையில் ஏற்பட்ட மாற்றங்களை அதிகப்படுத்தியது ஆட்சியாளர்களின் மெத்தனப்போக்கும் அலட்சியமும்தான். 

`தமிழ்மக்களை திசைதிருப்பும் முயற்சியே இந்த நதிநீர் இணைப்புப் பிரசாரம்!' - பொறியாளர் சுந்தர்ராஜன்

கடலுக்கு தண்ணீர் செல்ல வேண்டியது அவசியம்தான். ஆனால், 2015-ல் பெருமழையின்போது மூன்றே நாள்களில் கடலுக்குச் சென்ற வெள்ளத்தின் அளவு 320 டிஎம்சி தண்ணீர். நாம் ஒரு டிஎம்சி, ஐந்து டிஎம்சிக்கு சண்டை போட்டுக்கொண்டிருக்கிறோம். சென்னையை எடுத்துக்கொண்டால், சென்னையின் ஒரு வருடத்திற்கான தண்ணீர் தேவையே 11 டிஎம்சி மட்டுமே. உடன், திருவள்ளூர் காஞ்சிபுரம் சேர்த்தால் 15 டிஎம்சி தேவைப்படும். ஆக, ஒரு வருடத் தேவையே அவ்வளவுதான். நம்மால் 250 டிஎம்சி தண்ணீரைச் சேர்த்து வைக்கமுடியும். அதைச் செய்யத் தவறிவிட்டு வரலாறு காணாத வறட்சி, தண்ணீர்ப் பற்றாக்குறை எனச் சொல்வது எந்த விதத்திலும் நியாயமல்ல. சென்னைக்குக் குடிநீர் வழங்கக்கூடிய ரெட்டேரி, செம்பரப்பாக்கம், சோழவரம், பூண்டி என இந்த நான்கு ஏரிகளின் முழுக் கொள்ளளவு 11 டிஎம்சி. இந்த நான்கு ஏரிகளையும் தூர்வாரி முறையாகப் பராமரித்தாலே சென்னையின் தண்ணீர்த் தேவையைத் தீர்த்துவிட முடியும். இது தவிர சிட்லபாக்கம் ஏரி, அம்பத்தூர் ஏரி, கொரட்டூர் ஏரி என நிறைய சின்னச் சின்ன ஏரிகள் இருக்கின்றன. இது எல்லாவற்றையும் சேர்த்தால் சென்னை ஒருபோதும் வறட்சி ஆகவேண்டிய தேவையே கிடையாது. இது சென்னைக்கு மட்டுமல்ல தமிழகம் முழுக்க போதிய நீர்வளம் இருந்தும், மோசமான நீர் மேலாண்மையே தற்போதைய பற்றாக்குறைக்குக் காரணம். நீர் ஆதாரங்களைச் சுரண்டிவிட்டார்கள். தூர் வாருவது எனச் சொல்லி நிறைய பணமும் அடித்துவிட்டார்கள் அதன் விளைவே இதெல்லாம்".

``கடல் நீர் குடிநீர் ஆவதன் சாத்தியங்கள் இந்தப் பற்றாக்குறையைத் தீர்த்து வைக்குமா?"

``கடல்நீரைக் குடிநீராக்கினாலும் அதை நேரடியாகப் பருகமுடியாது. பருகவும் கூடாது. செலவும் அதிகம். தவிர, மிக அதிகமான மின்சாரம் இதற்குத் தேவை. இந்த மூன்றும்தாண்டி மிக முக்கியமான விஷயம், நூறு லிட்டர் கடல்நீரைக் கொண்டுவந்தால் முப்பது சதவிகித நீரை மட்டும்தான் குடிநீராக மாற்ற முடியும். ரசாயனம் கலந்த எழுபது சதவிகித தண்ணீரை கடலில்தான் கொட்ட முடியும். இதனால் கடல்வளமும், கடல்வாழ் உயிரினங்களும் முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது. இவ்வளவு சிக்கல்களை வைத்துக்கொண்டு கடல்நீரைக் குடிநீராக மாற்ற வேண்டிய அவசியம் நமக்கு இல்லை. அரபு நாடுகளில் இதைச்செய்கிறார்கள் என்றால், அவர்களுடையது நீராதாரமே இல்லாத நிலப்பரப்பு. தவிர, மக்கள் தொகையும் குறைவு. நாம் ஏன் அந்தத் திட்டத்தைப் பிரதியெடுக்க வேண்டும்."

``நதிநீர் இணைப்புத்திட்டம் சமீபமாக அதிகம் பேசுபொருளாகிக் கொண்டிருக்கிறதே?"

``உரிமையுள்ள காவிரிக்காகப் போராடுகிறோம் அதுவே கிடைக்காத பட்சத்தில் உரிமையேயில்லாத கோதாவரியை எப்படி இவர்களால் இணைக்க முடியும். ஒருவேளை முடியுமென்றால் நதிநீர் இணைப்பைப் பற்றி இவர்களைப்போய் ஆந்திராவில் பேசச் சொல்லுங்களேன். தமிழ் மக்களைக் காவிரிக்காகப் போராடுவதிலிருந்து திசை திருப்பும் ஒரு முயற்சிதான் இந்த நதிநீர் இணைப்பு. இந்த நதிநீர் இணைப்பு சாத்தியம் என யார் யாரெல்லம் பிரசாரம் செய்கிறார்கள் எனக் கவனித்தாலே நான் சொல்வதை இன்னும் நெருக்கமாக உங்களால் புரிந்துகொள்ள முடியும்."

``தண்ணீர்த் தட்டுப்பாட்டைப் போக்க நீங்கள் முன் வைக்கிற விரும்புகிற தீர்வுகள்தான் என்ன?"

``உடனடித் தீர்வாக, தமிழகத்துக்குக் கொடுக்க வேண்டிய நீரைக் காவிரியிலிருந்தும், கிருஷ்ணாவிலிருந்தும் பெற வேண்டும். எந்தெந்த தொழிற்சாலைகள் அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சி செயல்படுகிறதோ அவற்றை நெறிமுறைப்படுத்த வேண்டும். பொதுமக்களுடைய நீராதாரங்களைச் சுரண்டி கேன் வாட்டர், மினரல் வாட்டர் எனத் தனியார் நிறுவனங்கள் விற்றுக் கொண்டிருப்பதை அரசு முழுவதுமாக நிறுத்தவேண்டும். அப்போதுதான் குடிநீர் ஜனநாயக முறைப்படி எல்லா மக்களுக்கும் கிடைக்கும். சமீபகாலமாக, தமிழகத்தில் நிறைய மாணவ மாணவியர்கள், இளைஞர்கள், நீர்நிலைகளைத் தூர்வாருகிறார்கள். இயற்கையைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் நிறைய ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்களுடன் அரசாங்கமும் இணையும்போதுதான் இது சாத்தியமாகும்."

Vikatan
அடுத்த கட்டுரைக்கு