Published:Updated:

`மெகா கூட்டணி முறிந்தது ஏன்...' அகிலேஷ் - மாயாவதி பிளவுக்குக் காரணம் என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`மெகா கூட்டணி முறிந்தது ஏன்...' அகிலேஷ் - மாயாவதி பிளவுக்குக் காரணம் என்ன?
`மெகா கூட்டணி முறிந்தது ஏன்...' அகிலேஷ் - மாயாவதி பிளவுக்குக் காரணம் என்ன?

தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்ட மோடியும் இதைதான் ஆயுதமாக உபயோகித்தார். சமாஜ்வாடி கட்சி தன்னை இழிவு செய்ததை மாயாவதி எப்படி மறந்தார் என்று கேட்டார். அகிலேஷை எதிர்த்துப் பல மேடைகளில் பேசினாலும் முலாயம் சிங் யாதவை தனது பேச்சுகளில் அவர் குறிப்பிடவில்லை. மாயாவதியுடன் கூட்டணி வைத்து அஜித் சிங் ஜாட் சமூகத்துக்கு துரோகம் இழைத்துவிட்டதாகச் சொன்னார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ருவேளை தமிழகத்தில் அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் கூட்டணி வைத்தால் எப்படி இருக்கும்? நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, உத்தரப்பிரதேசத்தின் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியும் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் வைத்த கூட்டணி அப்படியானதுதான். அகிலேஷின் தந்தை முலாயம் சிங்கும் மாயாவதியும் எதிரும் புதிருமானவர்கள். தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதி தலைமையில் செயல்பட்ட தி.மு.க-வினரால் சட்டப்பேரவையில் இழிவுபடுத்தப்பட்டது போன்று, 1995-ல் உத்தரப்பிரதேசத்தில் மாயாவதியை முலாயம் சிங்கின் ஆட்கள் வெளிப்படையாகவே இழிவுபடுத்தியதும் வரலாறு. இருந்தும் அந்த இரு கட்சிகளும் தங்களுக்குள் கருத்துவேறுபாடுகளை மறந்து இந்தத் தேர்தலில் கூட்டணி அமைத்தன. அகிலேஷ் தன்னுடைய கட்சித் தொண்டர்களை நேர்படுத்தினால் அந்தக் கூட்டணி வலுவாக இருக்கும் என்பது அவர் கணிப்பு. பி.ஜே.பி தேசியத் தலைவர் அமித் ஷா - பிரதமர் மோடி கூட்டணியின் திட்டமிடப்பட்ட தேர்தல் செயல்பாடுகளுக்கு எதிராகச் சாதிவாரி வாக்குகள் கைகொடுக்கும் என்று கணித்தார். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு இடத்தில்கூட வெற்றிபெறாத மாயாவதி, '2019 தேர்தலில் சமாஜ்வாடி உடனான கூட்டணியால் எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும்' என நம்பினார். ஆனால், அவர் எதிர்பார்த்தது  போல எதிர்காலம் ஒளிரவில்லை. 10 இடங்களில் அந்தக் கட்சி வெற்றி பெற்றாலும், கூட்டணி அமைத்துமே பாரதிய ஜனதாவின் 62 தொகுதிகளில் வெற்றி என்கிற எண்ணிக்கைக்கு எதிராக இந்த வெற்றி என்பது மாயாவதிக்கு ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை.

ஒருவேளை மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்தலில் 272-க்கும் குறைவான சீட்டுகளைப் பெற்று பெரும்பான்மை கிடைக்காமல் தோல்வி அடைந்திருந்தால், பகுஜன் சமாஜ், தெலுங்கு தேசம், சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ் என மெகா கூட்டணி காங்கிரஸ் ஆதரவுடன் மத்தியில் ஆட்சியைப் பிடிக்கத் திட்டமிட்டிருந்தது. உத்தரப்பிரதேசத்தில் பாரதிய ஜனதாவிடம் பறிகொடுத்த ஆட்சி, தனக்கு மீண்டும் கிடைத்தால் போதும் என்று இருந்த அகிலேஷ் யாதவும் மெகா கூட்டணி சார்பில் மாயாவதியைப் பிரதமர் வேட்பாளராக முன்மொழிவதை ஒருமனதாக வரவேற்றார். 

`மெகா கூட்டணி முறிந்தது ஏன்...' அகிலேஷ் - மாயாவதி பிளவுக்குக் காரணம் என்ன?

ஆனால், 2019 தேர்தல் முடிவுகள் வேறுவகையிலாக இருந்தது. பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 352 இடங்களில் வெற்றி பெற்றது. சாதிவாரி வாக்குகள் எடுபடும் என்கிற மாயாவதியின் கணக்கு தவறாகிப்போனது. கூட்டணிக் கட்சியான சமாஜ்வாடியின் கோட்டையான கன்னோஜ் தொகுதியில்கூட அந்தக் கட்சியின் வேட்பாளர் தோல்வியைத் தழுவியது. இதனால், உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடிக் கட்சியுடனான கூட்டணி பற்றிய முடிவை மாயாவதியை மறுபரிசீலனை செய்ய வைத்தது. “அவர்களின் முக்கியத் தொகுதிகளிலேயே அவர்கள் வெற்றிபெறாதபோது எங்கள் கட்சிக்கு அவர்கள் எப்படி வலுசேர்த்திருக்கக் கூடும்?யாதவ் சமூகத்தினர் அதிகம் இருக்கும் இடத்தில்கூட அவர்கள் வாக்குகளைப் பெறவில்லை. அந்தச் சமூகத்தினர் ஏன் கட்சிக்கு எதிரான முடிவை எடுத்தார்கள்? கூட்டணி வைக்கும்போது நாங்கள் இவற்றையெல்லாம் எப்படி யோசிக்காமல் இருக்க முடியும்?” என்று டெல்லியில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் அண்மையில் மாயாவதி பேசியுள்ளார்.

மற்றொரு பக்கம், மாயாவதிக்கான ஜாதவ் சமூக வாக்குகள் இன்னும் அப்படியே இருக்கிறது. ஒருவேளை இடைத்தேர்தலில் அகிலேஷுடன் இதே கூட்டணி தொடரும் நிலையில் மாயாவதியின் இந்த வாக்கு வங்கியும் பாதிக்கக்கூடிய வாய்ப்பிருக்கிறது. யாதவ் - ஜாதவ் - ஜாட் சமூகத்தினரிடையே இருக்கும் சாதியப் பிரச்னையும் அத்தனை ஆழமாக வேரூன்றி இருக்கிறது. வெறும் மாயாவதி - அகிலேஷ் கூட்டணியால் சாதியப் பிரச்னை இன்னும் அதிகமாகத் தொடங்கியது. 

அகிலேஷும் அவரின் மனைவி டிம்பிளும் தேர்தல் மேடைகளில் மாயாவதியின் கால்களில் விழுந்து வணங்குவதை யாதவ் சமூகத்தினர் விரும்பவில்லை. கூட்டணியில் இருந்த ராஷ்டிரிய லோக்தளம் கட்சியின் அஜித் சிங்குக்கு மாயாவதி கட்டளையிட்டதை ஜாட் முஸ்லிம்கள் வாக்கு பெரும்பான்மையாக உள்ள அந்தக் கட்சி விரும்பவில்லை. 

`மெகா கூட்டணி முறிந்தது ஏன்...' அகிலேஷ் - மாயாவதி பிளவுக்குக் காரணம் என்ன?

இந்த விரிசலைத்தான் பாரதிய ஜனதா கட்சியும் பயன்படுத்திக் கொண்டது. தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்ட மோடியும் இதைத்தான் ஆயுதமாக உபயோகித்தார். சமாஜ்வாடி கட்சி தன்னை இழிவு செய்ததை மாயாவதி எப்படி மறந்தார் என்று கேட்டார். அகிலேஷை எதிர்த்துப் பல மேடைகளில் பேசினாலும் முலாயம் சிங் யாதவை தன் பேச்சுகளில் அவர் குறிப்பிடவில்லை. மாயாவதியுடன் கூட்டணி வைத்து அஜித் சிங், ஜாட் சமூகத்துக்கு துரோகம் இழைத்துவிட்டதாகச் சொன்னார். சாதிய வேறுபாட்டைக் கடந்து உத்தரப்பிரதேசத்தில் மக்கள் வாக்களித்துள்ளனர் என்று கூறப்பட்டாலும் மாநிலக் கட்சிகளின் துருப்புச் சீட்டை மோடி, அவர்களுக்கு எதிராகவே உபயோகித்ததுதான் பாரதிய ஜனதாவின் வெற்றிக்கும் மெகா கூட்டணியின் தோல்விக்கும் காரணம்.

உத்தரப்பிரதேசத்தின் 11 எம்.எல்.ஏ-க்கள் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டதால் சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தலைச் சந்திக்க இருக்கிறது அந்த மாநிலம். 2007 உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் மாயாவதி பெருவாரியான வாக்குகள் பெற்று தனித்து வெற்றி பெற்றது நினைவில் இருக்கலாம். மாயாவதி என்னும் அடையாளமும் கன்ஷிராமின் களப்பணியும் அதற்குக் கைகொடுத்தது. இதுவரை இடைத்தேர்தல்களில் போட்டியிடாத மாயாவதி தற்போது அதே உத்தியைக் கையாளுவார், மோடியைப் போலத் தன் அடையாளத்தைக் கட்டமைப்பார் என்றே தெரிகிறது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் உத்தரப்பிரதேச மாநிலத்துக்கான பொதுத் தேர்தல் வரும் நிலையில், தேசத்தின் மிகப் பெரும் மக்கள் எண்ணிக்கையைக் கொண்ட மாநிலம் தன்னாட்சியை அந்த வழியாக மட்டுமே மீட்டெடுக்க முடியும்.

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு