Published:Updated:

‘காந்தியின் அகிம்சை’ - பாவம்... விட்டுவிடுங்கள், மிஸ்டர் என்.ஜி.கே!

‘காந்தியின் அகிம்சை’ - பாவம்... விட்டுவிடுங்கள், மிஸ்டர் என்.ஜி.கே!
‘காந்தியின் அகிம்சை’ - பாவம்... விட்டுவிடுங்கள், மிஸ்டர் என்.ஜி.கே!

படத்தின் நாயகன், நந்த கோபாலன் குமரன் ஒரு கம்யூனிஸ்டா, திராவிட அரசியலை முன்வைப்பரா, தமிழ் தேசியவாதியா என்பதற்கான பதில் நேசமணியின் உடல்நிலை போல கவலைக்கிடமாகத்தான் உள்ளது.  

`இந்திய கம்யூனிஸ்டும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் எப்போது இணையும்?' என நீண்டகாலமாகக் காத்துக்கொண்டிருக்கும் தோழர்களுக்கு இடையில், நடிகர் சூர்யாவும், இயக்குநர் செல்வராகவனும் இணைந்து படம் பண்ணமாட்டார்களா எனக் கனவு கண்டுகொண்டிருந்த தமிழ் சினிமா ரசிகர்களில் நானும் ஒருவன். இருவரும் என்.ஜி.கேவில் கைகோக்க, கூடுதல் மகிழ்ச்சியாக அரசியல் படமென்ற அறிவிப்பும் வெளியாகியது. ஆனால், அந்தப் படம் பேசிய குழப்பமான அரசியல்தான் இன்னும் மனதில் விளங்கியபாடில்லை. படத்தின் நாயகன், நந்தகோபாலன் குமரன் (என்.ஜி.கே) ஒரு கம்யூனிஸ்டா, திராவிட அரசியலை முன்வைப்பவரா, தமிழ் தேசியவாதியா என்பதற்கான பதில், அண்மையில் டிரெண்டான கான்ட்ராக்டர் நேசமணியின் உடல்நிலைபோல கவலைக்கிடமாகத்தான் இருக்கிறது. இந்தநிலையில் அடுத்த பகுதிக்குச் செல்லும் முன்பு இங்கு குறிப்பிடவேண்டியது, இது திரை விமர்சனமல்ல; சமகாலத்தில் அதிக அளவிலான தமிழ்ப் படங்கள் அரசியல் பேச ஆரம்பித்துள்ளன. அந்தப் படங்கள் மீதான ஓர் மீள் பார்வையே...

‘காந்தியின் அகிம்சை’ - பாவம்... விட்டுவிடுங்கள், மிஸ்டர் என்.ஜி.கே!

`இன்றைய சூழலில் இளைஞர்களுக்கு இந்தச் சமூகம் மற்றும் அரசியல் குறித்தான அக்கறையில்லை' என்ற வாதம், கடந்த தலைமுறையினரால் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. ஆனால், உண்மையில் இன்றைய இளைஞர்கள் அரசியல்வயப்பட்டுத்தான் இருக்கிறார்கள். குறைந்தபட்சம் ஆர்வத்தின் வாயிலாக, அரசியலை அணுகத் தொடங்கி இருக்கின்றனர். ஒரு காலத்தில் டீக்கடைகளும் சலூன்களும் அரசியலுக்கான விவாதக்களமாக இருந்தன. தொடக்க காலங்களில் தமிழகத்தின் அரசியல் பயிலரங்குகளாகச் செயல்பட்டவையும்கூட அவையே. கடை உரிமையாளரின் அரசியலைப் பொறுத்து குறைந்தபட்சம் முரசொலியோ, நமது எம்.ஜி.ஆரோ அந்தக் கடைகளில் வாங்கப்படும். ஒருசில இடங்களில் வேறுசில கட்சிகளின் நாளிதழ்களும் வாங்கப்படலாம். அதுபோன்ற நாளிதழ்களைப் படிப்பதற்கான கூட்டமும் கடைகளுக்கு வந்துசேரும். `சண்டையில் கிழியாத சட்டை எங்கிருக்கிறது' என்பதுபோல, `கலைஞரா, எம்.ஜி.ஆரா' என்ற சண்டைகளுக்கு இடையே முரசொலியோ, நமது எம்.ஜி. ஆரோ அந்தநாளின் அரசியல் சூழலைப் பொறுத்து கிழிக்கப்பட்டிருக்கும்.

அதுபோன்ற விவாதங்கள் இப்போதும் மாறிவிடவில்லை. தற்போது எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா போன்ற தலைவர்கள் இல்லாதசூழலில் வேறுவிதமான அரசியல் பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது. சொல்லப்போனால் முன்பைவிட இந்த அரசியல் தீவிரம் அடைந்திருக்கிறது என்றே கூறலாம். இந்த நவீனயுகம் விவாதங்கள் நடைபெறும் தளங்களையும் பெரிய வட்டாரத்தை நோக்கி நகர்த்தியுள்ளது. மீம்ஸ்கள், ஹேஷ்டேக்குகள், டிரெண்டுகள் போன்ற புதுயுக வார்த்தைகளை அரசியல் விவாதங்கள் தனதாக்கிக் கொண்டிருக்கின்றன.  மீம்ஸ்கள் அதிகமாக அரசியலைக் கலாய்த்துத்தான் வெளியிடப்படுகின்றன. அது, `மதில் மேல் பூனை’ ஆக இருந்தாலும் சரி. `மெயின் ரோட்டுக்கு வா பேசிக்கலாம்’ என்பவையானாலும் சரி, பரபரப்பு குறையாமல் அடுத்தடுத்து மீம்களாக்கப்பட்டு விவாதத்தைத் தொடங்கி விடுகிறார்கள் இன்டர்நெட் இளசுகள்.

இதைத் தமிழகமும் உணரத்தான் தொடங்கியுள்ளது. அடுத்தடுத்த அரசியல் படங்களும் வெளிவர ஆரம்பித்துள்ளன. மாஸ் ஹீரோக்கள் ஒரு படத்திலாவது போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துவிட வேண்டும் என்ற ஆசையுடன் இருப்பதைப் போன்று, சமீப காலமாக ஒரு படத்திலாவது முதல்வர் கதாபாத்திரத்தில் நடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால், அந்தப் படங்கள் பேசும் அரசியல் கருத்துகள்தான் `தமிழனாக இருந்தால் ஷேர் செய்யுங்கள்' என்ற பின் குறிப்புகளோடு வரும் ஃபார்வேர்டு மெசேஜ்களைவிட அபத்தமாக உள்ளன. அந்த வரிசையில் வந்துள்ள ஒரு புதிய படமாகத்தான் என்.ஜி.கே விளங்குகிறது.

இளைஞர்கள் அரசியல் ஆர்வத்தோடு நகர ஆரம்பித்துள்ள தறுவாயில், கட்சிகளும், கலையும் நவீனத்தின் வாயிலாக அரசியலைக் கற்பிக்கப் பயன்பட வெண்டும். தமிழில் திராவிட அரசியல், இடதுசாரி அரசியல், தமிழ்த் தேசிய அரசியல் எனப் பலவற்றையும் பேசிய படங்கள் ஏற்கெனவே வெளிவந்து வெற்றியும் அடைந்துள்ளன. அரசியல் என்பது சார்பு கொண்டு இயங்குவதுதான். இடதோ, வலதோ இரண்டில் ஏதேனும் ஒன்றை ஆதரிப்பது அவசியம். மைய அரசியல் கூட உலகில் சில இடங்களில் முளைக்க ஆரம்பித்திருக்கிறது ஆனால், சமகாலத்தில் மாஸ் ஹீரோக்கள் நடித்து வெளியாகும் அரசியல் சினிமாக்கள் தங்களின் நிலைப்பாட்டை மறைக்க நினைக்கிறார்கள். அதுவும் இந்தப் புரட்சிகரப் படங்கள் முதலில் முன்வைப்பது ``இழப்பதற்கு ஒன்றுமில்லை. அடைவதற்குப் பொன்னுலகம் இருக்கின்றது” என்பது போல இதற்கு முன்னால் இந்தச் சமூகத்தில் நடந்தேறிய, நடந்துகொண்டிருக்கின்ற அனைத்து அரசியல் மாற்றங்களையும் குறைசொல்லிப் புறக்கணிப்புக்கு உள்ளாக்குகின்றன. இப்படியாகச் சமகால அரசியல் படங்களில் வெளிப்படும் பல சம்பிரதாய ஸ்ட்ரீயோ டைப் வசனங்களையும், காட்சிகளையும் என்.ஜி.கேவும் தனதாக்கிக் கொண்டுள்ளது.

மேடையில் பேசி ஏமாற்றிவிட்டார்கள்

‘காந்தியின் அகிம்சை’ - பாவம்... விட்டுவிடுங்கள், மிஸ்டர் என்.ஜி.கே!

``மேடைகளில் பேசி ஏமாற்றிவிட்டார்கள்” என்ற வசனங்களின் வாயிலாகக் கருத்தை முன்வைக்கிறது என்.ஜி.கே. இந்தக் கருத்தை நாம் மறு ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. ஏனெனில், இந்த மேடைப்பேச்சுகள் தமிழகத்தில் நிகழ்த்திக் காட்டிய சாதனைகள் ஏராளம். காமராசர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர் எனப் பலரும் மேடைகளில் பேசுகையில் கொடுத்த வாக்குறுதிகளைத்தான், பின்னாள்களில் சமூகநீதித் திட்டங்களாக உருமாற்றமடைந்தன. சர்ச்சில் தொடங்கி உலகெங்கும் இருக்கும் அரசியல்வாதிகள் மேடைப் பேச்சாளர்கள் தான்.  மேடைப் பேச்சுகள் வெறும் பொழுதுபோக்கு அம்சங்களாக மட்டும் அமைந்துவிடவில்லை, ``நேர்முக வரி கொசுக்கடி, மறைமுக வரி மூட்டைப் பூச்சிக்கடி, இப்படி வைத்துக் கொள்ளுங்களேன்” என மேடைப்பேச்சின் வாயிலாக தன் கட்சியின் அடிமட்டத் தொண்டனுக்குப் பொருளாதாரப் பாடமெடுத்தார் அண்ணா. தன் தொண்டர்களுடனான உரையாடல்களை நிகழ்த்தும் களம் அமைத்துத் தந்தவையும் மேடைகள்தான். மேடைப்பேச்சு பற்றிய வாதங்களை முன்வைக்கும் போதெல்லாம் உடனே தமிழகத்தில் முன்நிறுத்தப்படும் ஒரு கேள்வி, `காமராசர் என்ன சிறந்த பேச்சாளரா?’ என்பதுதான். அதற்கான விடை அளிக்க வேண்டுமென்றால் ஆம், அவர் மக்கள் மொழிகளில் பேசிய சிறந்த பேச்சாளர்தான். இன்று ட்விட்டரில் கருத்து தெரிவித்து, பின்னர் கட்சியாக மாற்றியவர்களுக்கு வேண்டுமென்றால் இந்த மேடைகளின் அருமை தெரியாமல் இருக்கலாம்.

படித்தவர்கள்தான் அரசியலுக்கு வரணுமா?

`உன்னை மாதிரி படித்தவன்தான் அரசியலுக்கு வரணும்’ என்ற வசனங்கள் தற்போது திரைப்படங்களிலும் பொதுவெளிகளிலும் அதிகமாகக் கேட்கத் தொடங்கி உள்ளன. இது கல்வியறிவைப் பெறாதவர்களை விலக்கி வைக்கும் தீண்டாமையில்லையா. நீ பெண், நீ ஒடுக்கப்பட்டவர், நீ ஏழை என்ற எதேச்சதிகார வார்த்தைகளுக்கும் `நீ படிக்காதவர்' என புறக்கணிப்பதற்கும் என்ன வேறுபாடு கண்டீர்கள். இங்கு குறிப்பிடவேண்டிய செய்தி, தற்போது தமிழகத்தைச் சேர்ந்த பெருவாரியான அரசியல்வாதிகள் படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள்தான்.

தற்போது தமிழகத்தின் சார்பில் நாடாளுமன்றத்திற்குத் தேர்வாகிச் செல்பவர்களில் பலரும் முனைவர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள் ஆவர். ஆனால், நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அரசியலுக்கும் கல்வித் தகுதிக்கும் சம்பந்தமில்லை என்பதைத்தான். ஒரு ஜனநாயகத்தில் மக்கள் பிரதிநிதியின் தேவை என்பது சமூகத்தைப் படிப்பதுதான். அதன் வாயிலாக மக்களின் தேவைகளை நாடாளுமன்றத்திலோ, சட்டமன்றத்திலோ எடுத்துக் கூறி, அரசிடம் போராடிப் பெற்றுத்தருவதே ஆகும். அதற்கும் கல்லூரிகள் வழங்கும் சான்றிதழ்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால் தமிழகத்தில் அண்ணாவுக்குப் பிறகு பட்டம் பெற்ற முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்தான். இதன் வாயிலாக, நீங்களே ஆளுமைகளுக்கான தகுதி என்ன என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.

பாவம், காந்தியின் அகிம்சை

‘காந்தியின் அகிம்சை’ - பாவம்... விட்டுவிடுங்கள், மிஸ்டர் என்.ஜி.கே!

``காந்தி தாத்தா ஏன் அகிம்சை முறையைக் கையில் எடுத்தார் தெரியுமா, பயந்து நடுங்குபவர்களை வைத்துப் போராடி வெல்ல முடியாது என்பதைக் கவனத்தில் கொண்டுதான்“ என அகிம்சைக்கான புதிய விளக்கத்தைக் கற்பித்துள்ளது என்.ஜி.கே. அகிம்சை என்பது கோழைத்தனம் என்ற சிந்தனை, மனோபாவம், இன்றைய இளைஞர்களின் மனோநிலையில் கட்டமைக்கப்பட்டு வருகின்றது. இதனூடாக காந்தி இளைஞர்களிடமிருந்து விலக ஆரம்பித்திருக்கிறார். இளைஞர்களின் மனதில் காந்திக்கு எதிராக நேதாஜி முன்நிறுத்தப்படுகிறார். இளமையின் வேகத்தில் உள்ள இளைஞர்களுக்கு நேதாஜியின் அதிரடிகள்தான் கவர்ந்தவையாக உள்ளன. இது நேதாஜியைப் பெருமைப்படுத்தச் செய்யப்படும் முயற்சிகள் மட்டுமல்ல; காந்தியைப் பின்னுக்குத் தள்ளுவதற்கான முன்னேற்பாடுகள். காந்தியின் அறைகூவல்கள்தான் சுதந்திரப் போராட்டத்தில் அக்கறையற்றுக் கிடந்த பல லட்சம்பேரை களத்தில் இறங்கிப் போராட வைத்தது. துப்பாக்கியோடு போர் முனைக்குச் செல்வதைவிட, போர்க்களத்தில்  ஆயுதங்களின்றி துப்பாக்கி ரவைகளுக்குப் பதிலாக அன்பைப் பரிசளிப்பதுதான் வீரம். கோட்சேக்களைக் கொண்டாட ஆரம்பிக்கும் தேசத்தில் காந்திகளை சர்வநாசம் செய்துகொண்டு இருக்கிறீர்கள். ப்ளீஸ்... காந்தி பாவம் விட்டுவிடுங்கள்...

அவற்றுக்குப் பெயர் அரசியல் வார்த்தைகள்

ஊழல்,  விவசாயம் போன்றவை இன்றைய சூழலில் எளிமையாக எடுபடக் கூடிய அரசியல் வார்த்தைகளாகி விட்டன. இந்த வார்த்தைகளின் மீது ஓர் பரிதாபம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதைத் தனதாக்கிக்கொண்டு அவை பற்றிப்பேசி  கட்சிகள் உருவாகிவருகின்றன. ஆனால், அவை மட்டுமே இந்தியாவின் அரசியல் பிரச்னைகளாகக் கட்டமைக்கப்படுகின்றது. ஆனால், இவற்றைச் சட்டதிட்டங்களின் வாயிலாக அழித்துவிட முடியும். ஆனால், இந்த மண்ணில் வேரோடி இருக்கும் சாதிய அரசியலையோ தற்போதைய சூழலில் உலகளவில் வெற்றியின் பாதைகளை நோக்கிச் சென்று கொண்டிருக்கிற மதவாத அரசியலுக்கு எதிரான வலுவான குரல்களையோ ஒலிக்க இந்தத் திரைப்படம் மறுக்கிறது.

மூன்றாம் அணி வாய்ப்பில்லையா?

`இரண்டு கட்சிகளைக் கடந்து மூன்றாவது அணிக்கு அரசியலில் வாய்ப்பில்லை’ என்பதே படத்தின் இறுதிக்காட்சி. இது பொதுவாக மக்களின் மீது முன்வைக்கிற குற்றச்சாட்டு. மக்கள் மூன்றாவது மாற்றை மறுதலிக்கிறார்கள். கட்டாயம் அப்படியில்லை. மக்கள் என்றும் மாற்றுசக்திகளுக்கு ஆதரவளித்துத்தான் வந்துள்ளனர். ஆனால், ஏதோ ஒன்றின் வழியில் நீங்கள் மக்களைச் சென்றடைவதற்கான முயற்சிகளில் ஈடுபடல் அவசியம். இந்தியாவின் முதல் தேர்தலில் காங்கிரஸ் ஆளுங்கட்சி, கம்யூனிஸ்ட்கள் எதிர்க்கட்சி, ஆனால், இன்று கம்யூனிஸ்ட்களுக்கு மொத்தமே ஐந்து இடங்கள்தான். அன்று மூன்றாவது கட்சியாக உருவான பாரதிய ஜனசங்கத்தின் நீட்சியான பி.ஜே.பி இன்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

`திரைப்படங்கள் கட்டாயம் அரசியல் பேச வேண்டுமா?' இந்தக் கேள்விக்கு ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விருப்பம் உண்டு. ஆனால் கலை, அரசியல் சார்ந்திருப்பதே நலன். ரஷ்ய மக்களின் உள்ளத்தில் புரட்சி எண்ணங்களை உருவாக்க விளாடிமிர் இலீச் லெனின் ஆயுதமாகப் பயன்படுத்தியது மார்க்சியம் கார்க்கியின் தாய் நாவலைத்தான். ஆக, படங்களில் பேசும் அரசியலை குறைந்தபட்ச தெளிவோடு பேசுவதே இந்தச் சமூகத்துக்கு நலன் பயக்கும். 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு