Published:Updated:

அறிஞர் அண்ணாவைப் பார்த்து பயந்த அ.தி.மு.க எம்.பி ரவீந்திரநாத்குமார்!

அறிஞர் அண்ணாவைப் பார்த்து பயந்த அ.தி.மு.க எம்.பி ரவீந்திரநாத்குமார்!
News
அறிஞர் அண்ணாவைப் பார்த்து பயந்த அ.தி.மு.க எம்.பி ரவீந்திரநாத்குமார்!

ரவீந்திரநாத்குமார், மக்களைச் சந்தித்து நன்றி கூறும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை பெரியகுளத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு புறப்படும் பயணம் இறுதி நேரத்தில் மாற்றியமைக்கப்பட்டது. காரணம் அண்ணா சிலை!

தேனி நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றிபெற்று எம்.பி. ஆனார், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார். தேர்தல் முடிவுகள் வெளியானதும் டெல்லி புறப்பட்டுச் சென்ற ரவீந்திரநாத் குமார். 'எப்படியாவது அமைச்சர் பதவியைப் பெற்று, மத்திய அமைச்சராகத் தமிழகம் திரும்ப வேண்டும்' எனக் கனவு காண, அது பகல் கனவாகிப் போனது. இந்த நிலையில், பத்து நாள்களாக டெல்லி, சென்னை என தன்னுடைய முகாம்களை மாற்றிக்கொண்டே இருந்த ரவீந்திரநாத் குமார், இரு தினங்களுக்கு முன் சொந்த ஊர்ப் பக்கம் திரும்ப முடிவு செய்து மதுரை வந்தார்.

தேனி நாடாளுமன்ற தொகுதிக்குள் உசிலம்பட்டி, சோழவந்தான் இருப்பதால், அதற்குட்பட்ட அலங்காநல்லூர் மஞ்சமலை அய்யனார் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வை நடத்தினார். அவருடன் மதுரை புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளரும், மாநில அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் மற்றும் எம்.எல்.ஏ-க்கள், கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

அறிஞர் அண்ணாவைப் பார்த்து பயந்த அ.தி.மு.க எம்.பி ரவீந்திரநாத்குமார்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தேனி பயணம்:

இந்த நிலையில், தேனி தொகுதிக்கு உட்பட்ட பெரியகுளம், ஆண்டிபட்டி, கம்பம், போடி ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் பொதுமக்களைச் சந்தித்து நன்றி தெரிவிப்பதற்கான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலையில் பெரியகுளத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்துவிட்டுப் புறப்படும் பயணம், ஆண்டிபட்டி எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு இறுதியாகக் கம்பம் அருகே உள்ள லோயர்கேம்பில் பென்னிகுவிக் மணிமண்டபம் சென்று அங்குள்ள பென்னிகுவிக்கின் வெண்கலச் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் நிறைவு பெறுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. காலை எட்டுமணிக்கெல்லாம் புறப்படத் திட்டமிட்டிருந்த ரவீந்திரநாத், கடைசி நேரத்தில் தன் திட்டத்தை மாற்றிக் கொண்டார். 

அறிஞர் அண்ணாவைப் பார்த்து பயந்த அ.தி.மு.க எம்.பி ரவீந்திரநாத்குமார்!

அண்ணா சிலை ஆபத்தா?

பெரியகுளத்தில் உள்ள ஸ்டேட் வங்கி அருகே அமைந்துள்ளது அறிஞர் அண்ணா சிலை. பொதுவாக தேனி மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் சார்பாகத் தேர்தலில் நிறுத்தப்படும் வேட்பாளர்கள், மாவட்டத்தின் கன்னிமூலையில் அமைந்துள்ள ஜி.கல்லுப்பட்டி பட்டாளம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, பின்னர் தேனி மாவட்டத்திற்குள் நுழைவார்கள். பின்னர், நேராக பெரியகுளம் வந்து அங்குள்ள அம்பேத்கார் மற்றும் அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பார்கள். காலப்போக்கில், 'பெரியகுளத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தால் தேர்தலில் தோற்றுவிடுவார்கள்' என யாரோ கிளப்பிவிட, அதனை அ.தி.மு.கவைச் சேர்ந்தவர்கள், இன்று வரை நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அ.தி.மு.க மட்டுமல்லாமல், அதில் இருந்து பிரிந்த அ.ம.மு.க வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன்கூட பிரசார நேரத்தில் அம்பேத்கர் சிலைக்கு மட்டும் மாலை அணிவித்துவிட்டு, அண்ணாவை புறம்தள்ளிவிட்டுக் கிளம்பினார். இவற்றையெல்லாம் தேர்தல் சமயத்தில் ஜூனியர் விகடனில் பதிவு செய்திருந்தோம்.

அறிஞர் அண்ணாவைப் பார்த்து பயந்த அ.தி.மு.க எம்.பி ரவீந்திரநாத்குமார்!

மாலை போட்டு வெற்றிபெற்ற தி.மு.க.:

ஆனால், அண்ணாசிலை மாலை அணிவிக்கும் சென்டிமென்டைப் பொய்யாக்கும் விதமாக பெரியகுளம் சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க வேட்பாளராக நிறுத்தப்பட்ட சரவணக்குமார், சிலைக்கு மாலை அணிவித்த பின்னரே, தன்னுடைய பிரசாரத்தை ஆரம்பித்தார். “அண்ணா சிலைக்கு மாலை போட்டுவிட்டார். அவர் ஜெயிக்கமாட்டார்” என எதிர்க்கட்சி மட்டுமல்லாமல், அவரது கட்சிக்காரர்கள் சிலரே வெளிப்படையாகப் பேச ஆரம்பித்தனர். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இருந்த சரவணக்குமார் பெரியகுளம் தொகுதியில் வெற்றிபெற்றார். 'அண்ணா சிலைக்கு மாலை போடும் சென்டிமென்ட் தி.மு.க.வின் சரவணக்குமாரால் மாற்றப்பட்டது' என அனைவரும் நினைத்திருந்த நிலையில், எம்.பி.யாக வெற்றிபெற்றுள்ள ரவீந்திரநாத் குமார், தன்னுடைய பயணத் திட்டத்தில் மாற்றம் செய்தது, கட்சியினர் மட்டுமல்லாது பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அறிஞர் அண்ணாவைப் பார்த்து பயந்த அ.தி.மு.க எம்.பி ரவீந்திரநாத்குமார்!

அண்ணாவைப் பார்த்து பயந்த ரவீந்திரநாத் குமார்:

தேர்தலில் தனக்கு ஓட்டுப்போட்ட மக்களுக்கு ரவீந்திரநாத் குமார் நன்றி கூறும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த தேனி மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள், பெரியகுளம் அண்ணா சிலைக்கு ரவீந்திரநாத் குமார் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியையும் பயணத் திட்டத்தில் சேர்த்திருந்தனர். ஆனால், அந்தத் திட்டத்தைக் கடைசி நேரத்தில் பார்த்த கட்சியின் மூத்த நிர்வாகிகள், ”அண்ணா சிலை வேண்டாம். இப்போதே, 'தேர்தலில் முறைகேடு செய்துதான் ரவீந்திரநாத் குமார் வெற்றிபெற்றுள்ளார். அதனை எதிர்த்து நான் வழக்குத் தொடுக்க இருக்கிறேன்' என ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நீதிமன்றம் செல்ல இருக்கிறார். இந்த நேரத்தில் அண்ணா சிலைக்கு மாலைபோட்டு, அது விபரீதம் ஆகிவிடப் போகிறது” என அழுத்தமாகச் சொல்ல, அதனைக் கேட்டு ரவீந்திரநாத் குமார் பயந்து போனதாகக் கூறப்படுகிறது. உடனடியாகத் தன் பயணத் திட்டத்தை மாற்றிய ரவீந்திரநாத் குமார், நேராக ஆண்டிபட்டி சென்று எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு பின்னர் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான லோயர்கேம்பில் அமைந்துள்ள பென்னிகுவிக் மணிமண்டபம் சென்றார்.

"கட்சி பெயரில் அண்ணாவை வைத்துக்கொண்டு, அண்ணா சிலையைப் பார்த்துப் பயப்படும் மூடநம்பிக்கை கூட்டங்களை வைத்துக்கொண்டு மக்களுக்கு என்ன நன்மை செய்துவிடப்போகிறார் ரவீந்திரநாத்குமார்!" என கிண்டல் செய்கின்றனர் எதிர்க்கட்சியினர்.

அறிஞர் அண்ணாவைப் பார்த்து பயந்த அ.தி.மு.க எம்.பி ரவீந்திரநாத்குமார்!

சிலை வரலாறு:

எம்.ஜி.ஆர் காலத்தில் அ.தி.மு.க எம்.எல்.ஏவாக இருந்தவர் பெரியகுளம் மேத்தா. அண்ணா மீது கொண்ட அதீதப் பற்று காரணமாக, அவருக்குச் சிலை எடுக்க வேண்டும் என்று கருதிய மேத்தா, பெரியகுளம் பழைய பேருந்து நிலையம் அருகே அண்ணா புத்தகம் படிப்பது போன்ற சிலையை வடிவமைத்து நிறுவினார். சிலை திறப்பிற்கு தயாரானது. எம்.ஜி.ஆரை அழைத்தார் மேத்தா. எம்.ஜி.ஆர் வரவில்லை. அதிருப்தியடைந்த மேத்தா, அ.தி.மு.கவில் இருந்து பிரிந்து தி.மு.கவில் இணைந்தார். கருணாநிதியை பெரியகுளம் அழைத்துவந்து அண்ணா சிலையை திறந்தார். அப்படிப்பட்ட அண்ணா சிலையானது, காலப்போக்கில் அ.தி.மு.கவினரால் அதிர்ஷ்டம் இல்லாத சிலையாக சித்திரிக்கப்பட்டு விட்டது.