Published:Updated:

தோற்றாலும் ஜெயித்தாலும் சாம்லிங், சிக்கிமின் கதாநாயகன்தான்!

தோற்றாலும் ஜெயித்தாலும் சாம்லிங், சிக்கிமின் கதாநாயகன்தான்!
தோற்றாலும் ஜெயித்தாலும் சாம்லிங், சிக்கிமின் கதாநாயகன்தான்!

தோற்றாலும் ஜெயித்தாலும் சாம்லிங், சிக்கிமின் கதாநாயகன்தான்!

தேர்தல் தோல்விகளுக்குப் பிறகு ராஜினாமா கடிதம் கொடுக்கும் தலைவர்களுக்கு இடையே, ``அரசியலில் இருந்து நான் ஓய்வுபெற மாட்டேன். அரசியல் என்பது நான் பேரார்வத்தோடு வந்தது. இந்தமுறை மக்கள் எனக்கு எதிர்க்கட்சி எனும் பெரும் பொறுப்பை அளித்துள்ளனர். அதில் சிறப்பாக செயல்படுவேன்” என்பதுதான் சிக்கிம் முன்னாள் முதல்வர் பவன் குமார் சாம்லிங், தேர்தலில் அடைந்த தோல்விக்குப் பிறகு உதிர்த்த வார்த்தைகள்.

தோல்விகள் என்பது அரசியலில் இயல்பானதுதான். ஆனால் 25 ஆண்டுக்காலம் தொடர்ந்து சிக்கிம் முதல்வராக இருந்துவிட்டு, வெறும் இரண்டு இடங்களில் வெற்றியைப் பறிகொடுக்கும்போது நிச்சயம், அந்தத் தோல்வி சற்றே கடினமானதாகத்தான் இருக்கும். ஆனால், அதை நினைத்து சாம்லிங், பெரிதாகக் கவலைகொள்ளவில்லை. காரணம் அந்த மாநில மக்கள் அவருக்குப் பின்னால் இருக்கிறார்கள். இரண்டாவது சிக்கிம் மாநிலத்தில் மீண்டும் வெற்றியைப் பெறுவது எப்படி என பவன் சாம்லிங்க்கு நன்குத் தெரியும்.

தோற்றாலும் ஜெயித்தாலும் சாம்லிங், சிக்கிமின் கதாநாயகன்தான்!

தனிநாடாகச் செயல்பட்டு வந்த சிக்கிம், 1975-க்குப் பிறகு இந்தியாவோடு இணைந்தது. ஆனால், இதுவரை நடைபெற்றுள்ள பெரும்பாலான சட்டசபைத் தேர்தல்களில் அந்த மக்கள், சிக்கிமில் உள்ள மாநிலக் கட்சிகளுக்குத்தான் ஆதரவளித்துள்ளனர். அதற்கான அடிப்படைக் காரணங்களில் ஒன்று, காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவரும் சிறப்பு அந்தஸ்தைப்போல, இந்திய அரசியலமைப்பு சட்டம் 370-ன்படி இந்த மாநிலத்துக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு வருகிறது. அதை மாநிலக் கட்சிகளால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்பதை மனதில் வைத்து அவர்களுக்கான வாய்ப்புகளை வழங்கிவரக்கூடும். இந்தத் தேர்தலிலும் பவன் குமார் சாம்லிங் வெற்றியைத் தொடர்வார் என எதிர்பார்த்தநிலையில், அதிரடியாகக் கட்சி ஆரம்பித்த ஆறே ஆண்டில் பி.எஸ்.கோலே ஆட்சியைக் கைப்பற்றினார். இந்த நிலையில், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு முதலமைச்சர் இல்லத்தை சாம்லிங் காலி செய்ததும், கண்ணீரோடு அவரை வழியனுப்பி வைத்தனர் தொண்டர்கள். ஆனால், இந்தத் தோல்விகள் எல்லாம் சாம்லிங்கின் செயல்பாடுகளில் தடையை ஏற்படுத்திவிடாது. 

பவன் குமார் சாம்லிங் ஓர் அரசியல்வாதி மட்டுமல்ல. ஓர் எழுத்தாளர், கவிஞர், சமூக ஆர்வலர் எனப் பல தளங்களில் பணியாற்றியவர். அவர் ஆற்றிய உரைகள் `சிக்கிமின் கனவுகள்' என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன. சாம்லிங்கின் ஆளுமையறிந்தே அந்த மக்கள், கடந்த கால் நூற்றாண்டு காலமாக அவர் மீது பெருங்காதல் கொண்டிருக்கிறார்கள். இந்தத் தேர்தலில் முதல்வர் வாய்ப்பை இழந்ததால் அவரை மக்கள் வெறுத்து விட்டார்கள் என்று அர்த்தமில்லை. சாம்லிங் மொழியில் சொல்வதென்றால் ஒருவேளை சிறந்த எதிர்க்கட்சித் தலைவர் வேண்டும் எனக்கூட சிக்கிம் மக்கள் நினைத்திருக்கலாம்.

கடந்த இருபத்து ஐந்து ஆண்டுக்கால சாம்லிங்கின் ஆட்சியில் சிக்கிம் மிகப்பெரும் மாற்றங்களைச் சந்தித்துள்ளது. அந்த மாற்றங்களை ஜனநாயக வழியில் சாத்தியப்படுத்தியதில் முதல்வராக சாம்லிங்கிற்கு பெரும் பங்குள்ளது. அவர் ஜனநாயகத்தின் மீது பெரும் நம்பிக்கை கொண்டவர். அது அவர் கட்சியின் பெயரைப் (சிக்கிம் ஜனநாயக முன்னணி) பார்த்தாலே தெரியும். இருபத்தைந்து ஆண்டுக்கால ஆட்சியில் அவரின் செயல்பாடுகளால் நிகழ்ந்தேறிய மாற்றங்கள் பல. அவற்றில் முக்கியமானது, கல்வித்துறையில் அவரின் முன்னெடுப்புகள். இந்தியாவில் கல்விகற்றோர் சதவிகிதம் அதிகம் கொண்ட மாநிலங்களில் சிக்கிம் முதன்மையானது. அது கிட்டத்தட்ட 90 சதவிகிதத்துக்கும் அதிகமாகும். கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய சாம்லிங், ``புதிய தலைமுறையினரைக் கட்டமைப்பதில் கல்வி பெரும் பங்காற்றுகிறது. அவர்களின் தொழில் வாய்ப்புகளைப் பலப்படுத்த மட்டுமல்ல நல்ல மனிதர்களாகச் செதுக்குவதற்கும்தான். 2018-க்குள் சிக்கிமில் கல்வி கற்றோர் சதவிகிதம் 100 ஆக அதிகரிக்கும்" எனக் கூறியிருந்தார். அந்த நிலை இன்னமும் முழுமையடையா விட்டாலும் பெரிய அளவிலான வெற்றியையே அறுவடை செய்திருக்கிறார் சாம்லிங்.

தோற்றாலும் ஜெயித்தாலும் சாம்லிங், சிக்கிமின் கதாநாயகன்தான்!

அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது இயற்கை விவசாயத்தில் சாம்லிங்கின் செயல்பாடுகள்தான். சிக்கிம் முழுமைக்கும் இயற்கை விவசாயம்தான் மேற்கொள்ளப்படுகிறது. முழுமைக்கும் என்றால் முழுமைக்கும்தான். விவசாய நிலங்களில் பெரும்பாலும் தானியங்கள் விளைவிக்கப்பட்டதால் காய்கறிகள் விளைச்சல் குறைவாக இருந்தது. இவற்றிற்கான தீர்வுகளை நோக்கிச் சிந்திக்க ஆரம்பித்தார் சாம்லிங், வீட்டுத்தோட்டம் மூலம் காய்கறிகளை அறுவடை செய்ய முடியும் என அடுத்த திட்டம் உதயமானது. உடனடியாக இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பிரசாரம் ஒருபுறமிருக்க, மாநிலம் முழுவதுமுள்ள 14 கூட்டுறவு வங்கிகள் மூலம் வீட்டுத் தோட்டத்துக்கான இடுபொருள்களுக்குக் கடனுதவி வழங்கப்படும் என அறிவித்து, பெரும் பலனை அறுவடை செய்தார். ஐ.நா அமைப்பும் இந்த முயற்சிகளைத் தேடிவந்து பாராட்டியது.

சாம்லிங் முதல்முறை முதல்வராக இருந்தபோது, `உங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் உங்களோடு இணைந்து செயல்படுகிறார்களா?’ என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. உடனே சாம்லிங், ``இல்லை, எங்கள் கட்சியில் 26 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஆனால், நான் தனிமையில் தானிருக்கிறேன். என் கனவுகள் வேறு; ஆனால், நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவர்களோடு உரையாடிக் கொண்டுதானிருக்கிறேன்” என்றார். ஆம், சாம்லிங்கின் கனவுகள் எதிர்காலத்தை நோக்கியது. எதிர்க்கட்சியானாலும் மக்களுக்காக அவர் செயல்பட்டுக் கொண்டுதானிருப்பார், செயல்படவும் ஆரம்பித்துவிட்டார். ஆம், கடந்த திங்கள்கிழமை நேபாள மொழியில் பதவி ஏற்று, சட்டசபை கூடிய முதல்நாளே புதிய முதல்வர் மீதான பழைய ஊழல் குற்றச்சாட்டுகளை வெளிக்கொணர ஆரம்பித்து விட்டார். தொடரட்டும் அவரின் ஜனநாயகப் பணி...

Vikatan
அடுத்த கட்டுரைக்கு