Published:Updated:

24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்கும் - சாதகமா பாதகமா?

24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்கும் - சாதகமா பாதகமா?
24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்கும் - சாதகமா பாதகமா?

''தமிழக அரசு விதித்துள்ள நிபந்தனைகள் இடையூராக இருக்கும். இதில் சில நிபந்தனைகள் கால சூழ்நிலையால் கடைப்பிடிக்க முடியுமா என்று தெரியவில்லை. வணிக சமூகம் 18 மணி நேரம் உழைப்பார்கள். எட்டு மணி நேரம் என்றால் ஊதியம் குறையும்..''

மிழகத்தில் 24 மணிநேரமும் வணிக நிறுவனங்கள் இயங்குவதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து, அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை ஆதரித்தும், எதிர்த்தும் பலர் குரல் கொடுத்து வருகின்றனர். மத்திய தொழில்துறை அமைச்சகம், வணிகம் மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்க, `நாடுமுழுவதும் உள்ள வணிக நிறுவனங்கள் அனைத்தும், வருடத்தின் அனைத்து நாள்களிலும், இருபத்து நான்கு மணி நேரமும் இயங்கலாம்' என்று  மாநில அரசுகளுக்குச் சட்ட முன்வடிவு வரைவுத் திட்டத்தை அனுப்பியது. மூன்றாண்டுகளுக்குப் பிறகு, தமிழக அரசு இதற்கான அரசாணையை தற்போது வெளியிட்டுள்ளது.

24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்கும் - சாதகமா பாதகமா?

இனி, 24 மணிநேரமும் கடைகள், தொழில் நிறுவனங்கள், உணவகங்கள், விடுதிகள், திரையரங்குகள் ஆகியவை எல்லா நாள்களிலும் திறந்திருக்கும். மூன்று வருடம்வரை இந்த அரசாணை செயல்பாட்டில் இருக்கும். பெண் ஊழியர்கள், இரவு எட்டு மணிக்கு மேல் பணிபுரியக் கூடாது. பெண்கள் இரவுப் பணியில் இருக்க வேண்டுமானால், அவர்களின் எழுத்துபூர்வ ஒப்புதலைப் பெற வேண்டும். அதோடு, தொழிலாளர்களுக்கும் சுழற்சி முறையில் வாரத்தில் ஒருநாள் கட்டாயமாக விடுப்பு கொடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசின் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் மாநிலத்தில் பல்வேறு தரப்பினரும் பல கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். வணிகர் சங்கங்கள் இந்த அரசாணையை ஆதரித்துப் பேசிவரும் சூழ்நிலையில், ஊழியர்களின் பாதுகாப்பை இந்த அரசாணை கேள்விக்குறியாக்கியுள்ளது என்கின்றன தொழிலாளர் அமைப்புகள். தொழிலாளர் அமைப்பைச் சேர்ந்த சிலர் கூறுகையில், ``தமிழகத்தில் தற்போது பல இடங்களில், வெளி மாநிலத்தவர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் ஏற்கெனவே, அதிக நேரம் வேலை வாங்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிற இந்த நேரத்தில், 24 மணி நேரமும் வணிக நிறுவனங்கள் திறந்திருந்தால், வெளிமாநிலங்களில் இருந்து இங்கு வேலைக்கு வந்திருப்பவர்களின் நிலை இன்னும் மோசமாகி விடும். கூலிக்காக மாநிலம் விட்டு மாநிலம் வந்து வேலைசெய்யும் இவர்கள், அதிக கூலி கிடைக்கும் என வேலைசெய்தால், அவர்களின் உடல்நிலை பாதிக்கப்படும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். அதேநேரம், வேலைவாய்ப்பை ஊக்குவிக்காமல், இருக்கும் ஊழியர்களைக் கொண்டே 24 மணி நேரமும் வணிகநிறுவனங்கள் இயங்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இதை அரசு முறைப்படுத்த வேண்டும். முறையாக அனைத்து வணிக நிறுவனங்களும் கண்காணிக்கப்பட வேண்டும்'' என்றனர்.

24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்கும் - சாதகமா பாதகமா?

``வெளிநாடுகளில் 24 மணிநேரமும் வணிக நிறுவனங்கள் செயல்படுவதுபோல, தமிழ்நாட்டிலும் செயல்படுத்த முடியும். மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை உயர்த்தும் நோக்கத்தில்தான் 24 மணிநேரமும் கடைகளை நடத்துவதற்குத் திட்டமிட்டிருக்கிறோம். இதில் எந்தக்கட்டாயமும் இல்லை. விருப்பமுள்ளவர்கள் இரவு நேரத்திலும் கடைகளை நடத்தலாம். அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும். பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அரசும், காவல்துறையும் இருக்கின்றன. காவல்துறையினர் இரவுநேர ரோந்துப் பணிகளில் தொடர்ந்து ஈடுபடுவார்கள்'' என்கிறார் தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத். தொழிலாளர் பாதுகாப்போடு பொதுமக்கள் பாதுகாப்பு குறித்தும் பேசப்பட வேண்டும்.

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் கூடுதல் செயலாளர் வி.பி.மணி கூறுகையில், ``இந்த அறிவிப்பை நாங்கள் முழுமையாக வரவேற்கிறோம். கடந்த ஆறு வருடங்களாகப் பல போராட்டங்களை நடத்தி, இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறோம். தமிழக அரசு விதித்துள்ள நிபந்தனைகள் இடையூறாக இருக்கும். இதில் சில நிபந்தனைகள் காலச்சூழ்நிலையால் கடைப்பிடிக்க முடியுமா என்று தெரியவில்லை. வணிகச் சமூகம் 18 மணி நேரம் உழைப்பார்கள். எட்டு மணி நேரம் என்றால் ஊதியம் குறையும். இதனால் தமிழகத்தின் மொத்த வருவாய் குறையும். தொடர்ந்து எட்டுமணி நேரம் யாருக்கும் வேலைகொடுப்பது கிடையாது.  தமிழகத்தின் வருவாய் அதிகரிக்கும் என்றாலும், இந்திய மக்கள் வாங்கும் சக்தியை இழந்துவிட்டார்கள். ஜிஎஸ்டி-யால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அரசு, இந்த அறிவிப்பில் இன்னும் சில திருத்தங்களைச் செய்ய வேண்டும்.

24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்கும் - சாதகமா பாதகமா?

ஐ.டி நிறுவனங்களுக்கு இதனால் நன்மை கிடைக்கும். தனிநபர் வருமானம் அதிகமாகும். படிப்படியான பொருளாதார வளர்ச்சி இருக்கும். காவல்துறையிலிருந்து சுதந்திரம் பெற்றதாகவே நினைக்கிறோம். இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறது. இதற்கு முன் பல போலீஸ் அதிகாரிகள் வணிக நிறுவனங்களில் அத்துமீறியிருக்கிறார்கள். காவல்துறை தங்கள் போக்கை மாற்றிக்கொண்டு, இந்த அரசாணைக்கு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும். பொதுமக்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் காவல்துறை அச்சுறுத்தலாக இருக்கக் கூடாது. முதலீடு அதிகம் செய்து, லாபம் குறைவாய் கிடைக்கும் என்ற சூழ்நிலையில், இந்த அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது. சிறு வணிகர்களைத் தவிர்த்துப் பார்க்காமல், அவர்களுக்கும் இந்த அறிவிப்பு செல்லுபடியாகும்படி தமிழக அரசு, தன் உத்தரவில் மாற்றம் செய்ய வேண்டும்'' என்றார்.

தற்போது தமிழக அரசின் அரசாணையை அடுத்து, 24 மணி நேரமும் வணிக நிறுவனங்கள் செயல்படுவதால் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. அதே நேரம் அரசாணையில் சில திருத்தங்களை முன்வைக்கின்றனர் வணிக நிறுவனங்கள். தொழிலாளர்களை அதிக நேரம் வேலை வாங்கினால், தமிழக அரசு எப்படி முறைப்படுத்தும் என்பது போன்ற நிறைய கேள்விகளுக்கு அரசு என்ன பதில் அளிக்கப்போகிறது?

Vikatan
அடுத்த கட்டுரைக்கு