Published:Updated:

எடப்பாடி, பன்னீர் அறிக்கை... உபதேசங்கள் உங்களுக்கு இல்லையா?

எடப்பாடி, பன்னீர் அறிக்கை... உபதேசங்கள் உங்களுக்கு இல்லையா?
எடப்பாடி, பன்னீர் அறிக்கை... உபதேசங்கள் உங்களுக்கு இல்லையா?

`ஒற்றைத் தலைமை' விவகாரத்தில் எடப்பாடியும் பன்னீரும் வெளியிட்ட அறிக்கையில் சொன்ன அறிவுரைகள் அத்தனையும் எடப்பாடியும் பன்னீருமே பின்பற்றவில்லை என்பதுதான் நிஜம்.

`ஒற்றைத் தலைமை' என்கிற `திரி'யை எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா கொளுத்திப்போட்ட நிலையில், ``அம்மா கற்றுத் தந்த அரசியல் பாடத்தை மறவாதீர். கழகம் காக்க கைகோப்போம் வாரீர்'' என்ற தலைப்பில் தொண்டர்களுக்கு உபதேசம் செய்திருக்கிறார்கள், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும்.

இவர்கள் இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் சொன்ன அறிவுரைகள் அனைத்தும் அடிமட்ட தொண்டனுக்கு மட்டும்தான். அவர்களை வழிநடத்துவதாகச் சொல்லும் தலைமைக்கு இல்லை போலும். `கட்டுப்பாடு அவசியம். ஒழுக்கம் முக்கியம்' என அறிக்கையில் வரிக்கு வரி உபதேசங்கள். ஆனால், அதை எடப்பாடியும் பன்னீரும் பின்பற்றவில்லை என்பதே கடந்தகால வரலாறு. அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் சொன்ன விஷயங்களும், அதை எடப்பாடியும் பன்னீரும் எப்படிப் பின்பற்றினார்கள் என்பதையும் பார்ப்போம்.

`` `புரட்சித் தலைவி அம்மாவின் அகால மரணம் கழக உடன்பிறப்புகளை அரசியல் அநாதைகளாக்கிவிடும்' என்று பலரும் பகற்கனவு கண்டுகொண்டிருந்த நேரத்தில், நாம் கழகத்தைக் காப்பாற்றினோம்!"

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு பன்னீரும் எடப்பாடியும் கழகத்தைக் காப்பாற்றாமல் சண்டை போட்டுவிட்டு, இப்போது, `நாம் கழகத்தைக் காப்பாற்றினோம்' எனக் கதை வசனம் எழுதுகிறார்கள். ஜெயலலிதா இறந்தவுடன், இருவரும் சசிகலா பின்னால் அணிவகுத்து நின்றார்கள். பொதுக்குழுவில் சசிகலாவை பொதுச் செயலாளராக நியமனம் செய்தபோது, அந்தத் தீர்மானத்தை சசிகலாவிடம் கொண்டுபோய்க் கொடுத்தவர்கள் எடப்பாடியும் பன்னீரும்தான். `உடன்பிறப்புகள் அநாதையாகிவிடக் கூடாது' என்பதைவிட, தாங்கள் அரசியல் அநாதை ஆகிவிடக் கூடாது என்கிற அக்கறைதான் அவர்களிடம் மேலோங்கியிருந்தது. அப்போது முதல்வர் பதவியில் இருந்த பன்னீர்செல்வம், ``அம்மா வைத்திருந்த அதே கட்டுக்கோப்புடன் ராணுவ அமைப்புபோல கட்சியைத் தொடர்ந்து வழிநடத்திச் செல்ல வேண்டுமென்றால், அதற்கு ஒரேவழி, கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்பதுதான்" என அறிக்கை விட்டார். அன்றைக்கு, `சின்னம்மாதாசனாக' இருந்த பன்னீர்தான், கட்சியை உடைக்கும் வகையில் திடீரென்று முகாம் மாறினார். ஜெயலலிதா சமாதியில் தியானம் இருந்தார். எம்.எல்.ஏ-க்களைத் திரட்டி தனி ஆவர்த்தனம் நடத்தினார். இத்தனையும் செய்துவிட்டுத்தான் இப்போது, ``நாம் கழகத்தைக் காப்பாற்றினோம்'' என கப்சா விடுகிறார்.

எடப்பாடி, பன்னீர் அறிக்கை... உபதேசங்கள் உங்களுக்கு இல்லையா?

``புரட்சித் தலைவர் கண்ட வெற்றிச் சின்னமாம், இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுத்தோம்!"

இது, அப்பட்டமான பொய். ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாகச் செயல்பட்டபோது எடப்பாடி அணிக்கு இரட்டை இலைச் சின்னத்தைத் தரக் கூடாது எனத் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார், பன்னீர்செல்வம். அதனால்தான் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது. அ.தி.மு.க-வை எதிர்த்து மதுசூதனனை வேட்பாளராக நிறுத்தினார், பன்னீர். மதுசூதனன் இரட்டை மின்விளக்குச் சின்னத்திலும், அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தொப்பிச் சின்னத்திலும் போட்டியிடும் நிலைக்குத் தள்ளி, இரட்டை இலையை முடக்கிய பன்னீர்செல்வம்தான், இன்றைய அறிக்கையில், ``புரட்சித்தலைவர் கண்ட வெற்றிச் சின்னமாம், இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுத்தோம்'' எனக் கூசாமல் பொய் சொல்லியிருக்கிறார்.
 
``கடந்த சில நாள்களாகக் கழக உடனபிறப்புகள் சிலர் கழகத்தின் செயல்பாடுகளைப் பற்றியும், இனி என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் ஊடகங்கள் வாயிலாக வெளியிட்டுவரும் கருத்துகள் அவ்வளவு வரவேற்கத்தக்கவையாக இல்லை!"

பன்னீர்செல்வம் அரசு பங்களாவில் இருந்துகொண்டு தர்மயுத்தத்துக்கு ஆள் திரட்டியதும். அதே இடத்தில் இருந்துகொண்டு எதிர்முகாமை வசை பாடியது எல்லாம் அவ்வளவு வரவேற்கத்தக்க விஷயமா? அப்போது எடப்பாடி தரப்பும் பன்னீர் தரப்பும் கருத்து மோதல்களை ஊடகங்கள் வாயிலாகச் சொன்னபோது கட்சியின் கட்டுக்கோப்பு சிதைந்துவிடவில்லையா? அன்றைக்கு வந்தது ரத்தம் என்றால், இன்றைக்கு வந்தது தக்காளிச் சட்னியா?

``கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவருக்கும் கழகத்தின் மீது அளப்பரிய அன்பும், பற்றும் இருக்கிறது என்பதையும், அந்த உணர்வுகளின் காரணமாகத்தான் இத்தகைய கருத்துகளைக் கூறி வருகின்றனர் என்பதையும் மறுப்பதற்கில்லை. இருந்தாலும் இடம், பொருள், ஏவல் அறிந்து நாம் செயல்படவேண்டும்!"

இடம், பொருள், ஏவல் என்பதெல்லாம் தொண்டர்களுக்கு மட்டும்தானா... எடப்பாடிக்கும் பன்னீருக்கும் அது பொருந்தாதா? இரண்டு பேரும் எதிரும் புதிருமாக மோதிக்கொண்டபோது, இடம், பொருள், ஏவல் பார்த்தா மோதினீர்கள்?

எடப்பாடி, பன்னீர் அறிக்கை... உபதேசங்கள் உங்களுக்கு இல்லையா?

`` `இந்த ஆட்சி இன்னும் எத்தனை நாளைக்கு?' என்று ஆரூடம் கூறியவர்களை வாயடைக்கச் செய்யும் வகையில், அம்மா அமைத்துத் தந்த அரசைக் காப்பாற்றினோம்!"

ஆட்சிக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டசபையில் நடந்தபோது, அம்மா ஆட்சியைக் கவிழ்க்க நினைத்து எதிராக வாக்களித்த  பன்னீர் அணியை இணைத்துக்கொண்டார் எடப்பாடி. ஆனால், அந்த ஆட்சியைக் காப்பாற்ற ஓட்டளித்த தன் சொந்த கட்சி எம்.எல்.ஏ-க்கள் 18 பேரைத் தகுதி நீக்கம் செய்து அம்மா ஆட்சியைக் காப்பாற்றினோம் என்பதெல்லாம் எவ்வளவு வடிகட்டிய பொய்?

``ஊர் ரெண்டுபட்டால் யாருக்குக் கொண்டாட்டம் என்பதை எல்லோரும் நன்கறிந்து வைத்திருக்கிறோம்!"

எடப்பாடி அணி, பன்னீர் அணி என இரண்டுபட்டுக் கிடந்தபோது கொண்டாடியவர்கள் யார்? ஊர் இரண்டுபட்டால் யாருக்குக் கொண்டாட்டம் என்பதை அப்போது ஏன் அறிந்திருக்கவில்லை? இப்போது அறிந்துவைத்ததற்கு அர்த்தம் என்ன?   

``கட்டுப்பாடும், ஒழுங்கும் கட்டாயம் நமக்குத் தேவை. இவை சாதாரணமானவைதான். ஆனால், இம்மாதிரி சாதாரண விஷயங்களைக் கொண்டுதான் ஓர் இயக்கத்தை உலகம் எடைபோடும்!"

எடப்பாடியும் பன்னீரும் தினகரனும் மோதிக்கொண்ட காலத்தில் கட்டுப்பாடும் ஒழுங்கும் எங்கே போனது? தலைமைகளுக்குத் தகராறு என்றால் கட்டுப்பாடு காணாமல் போகும். ஒழுங்கையும் கடைப்பிடிக்க மாட்டார்கள். சாதாரண நிர்வாகிகளோ... தொண்டர்களோ குரல் எழுப்பினால் அந்த இயக்கத்தை உலகம் எடைபோட்டுப் பார்க்குமா?

``கழகத்தின் நலன் கருதி சில கருத்துகளை யார் கூற விரும்பினாலும், அதற்கென ஒரு நேரமும், சந்தர்ப்பமும் செயற்குழு - பொதுக்குழு - ஆலோசனைக் கூட்டம் என்று பல்வேறு வாய்ப்புகளும் இருப்பதை அன்புகூர்ந்து நினைவில்கொள்ளுங்கள்!"

ஆண்டுக்கு ஒருமுறை அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டப்பட வேண்டும். 2017 செப்டம்பர் 12-ம் தேதிதான் அ.தி.மு.க. பொதுக்குழு கூடியது. அதன்பிறகு, பொதுக்குழு கூடவில்லை. பொதுக்குழுவே கூட்டப்படாதபோது கருத்துகளை வைக்க எப்படி வாய்ப்புகள் இருக்கும்?

Vikatan
பின் செல்ல