புதுச்சேரி முன்னாள் முதல்வர் ஜானகிராமன், பஸ் டிரைவராக இருந்தவர். கடுமையான உழைப்பாளியான அவர் பின்னர் சொந்த பஸ் வாங்கினார். சொந்த பேருந்துக்கும் அவர்தான் டிரைவர். திண்டிவனம் மரக்காணம் பாண்டிச்சேரி பாதையில் தன் பஸ்சை இயக்கி வந்தார். பிற்காலத்தில் ஜானகிராமன் பல பேருந்துகளுக்கு அதிபரானார். பிறகு, அரசியலில் ஈடுபட்டு பாண்டிச்சேரி முதலமைச்சர் பதவியிலும் அமர்ந்தார்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகேயுள்ள ஆலத்தூர் என்ற கிராமம்தான் ஜானகிராமனுக்குச் சொந்த ஊர். நேற்று முன்தினம் மரணமடைந்ததும் அவரின் உடல் பாண்டிச்சேரியில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. பிறகு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அவரின் உடல் சொந்த ஊரான ஆலத்தூருக்குக் கொண்டு செல்லப்பட்டது. உடன் அவருக்குச் சொந்தமான பேருந்தும் ஒன்று வந்து கொண்டிருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அனுமந்தை டோல்கேட் அருகே ஜானகிராமனின் உடல் வைக்கப்பட்டிருந்த வாகனம் வந்த போது திடீரென்று ரிப்பேர் ஆனது. வாகனம் பழுதடைந்ததால் வேறு வாகனங்களை அமர்த்தவில்லை. மாறாக, அவருக்குச் சொந்தமான பேருந்தில் ஜானகிராமனின் உடலை ஏற்றி சொந்த ஊருக்குக் கொண்டு சென்றனர். இந்தச் சம்பவம் யதார்த்தமாக நடந்திருந்தாலும் டிரைவராக வாழ்க்கையைத் தொடங்கிய ஜானகிராமனின் உடல் அவருக்குச் சொந்தமான பேருந்திலேயே கடைசியில் எடுத்துச் செல்லப்பட்டதை கண்டு தி.மு.க தொண்டர்கள் கண்ணீர் விட்டனர்.

ஆலந்தூர் கிராமத்தில் ஜானகிராமன் உடலுக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின், பாண்டிச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். ஜானகிராமனின் பெற்றோர் அடக்கம் செய்யப்பட்ட சமாதி அருகிலேயே அவரின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது.