Published:Updated:

கருணாநிதி பாலிசி அவுட்... உதயநிதி உலா ஆரம்பம்! தி.மு.கவில் இனியெல்லாம் இப்படித்தான்!

கருணாநிதி பாலிசி அவுட்... உதயநிதி உலா ஆரம்பம்!  தி.மு.கவில் இனியெல்லாம் இப்படித்தான்!
கருணாநிதி பாலிசி அவுட்... உதயநிதி உலா ஆரம்பம்! தி.மு.கவில் இனியெல்லாம் இப்படித்தான்!

கருணாநிதி பாலிசி அவுட்... உதயநிதி உலா ஆரம்பம்! தி.மு.கவில் இனியெல்லாம் இப்படித்தான்!

``தி.மு.க-வின் மூன்றாம் தலைமுறை தலைவராக உதயநிதி உதயமாகிறார்” என்ற பேச்சு தி.மு.க-வில் பலமாக அடிபடத்துவங்கியுள்ளது. இதற்கேற்ப, தி.மு.க-வின் முக்கிய முடிவுகளைக்கூட அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், இனி உதயநிதி மூலமே செயல்படுத்தத் திட்டமிடுகிறார் என்கிற புதிய தகவலும் அறிவாலயத்தின் அறைகளில் ஒலிக்க ஆரம்பித்துள்ளது.

திருச்சியில் சில நாள்களுக்கு முன்பு அன்பில் தர்மலிங்கம் சிலை திறப்பு விழா நடைபெற்றது. தி.மு.க தலைவர் ஸ்டாலினோடு, அவருடைய மகன் உதயநிதி, மருமகன் சபரீசன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டவர்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். தி.மு.க-வின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் சார்பிலும் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். இந்தக் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ``நாங்குனேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க போட்டியிட வேண்டும். இனி வர இருக்கிற தேர்தலிலும் தி.மு.க கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக இடங்கள் ஒதுக்காமல் தி.மு.க-வே போட்டியிட வேண்டும்” என்று பேசினார். இந்தப் பேச்சு தி.மு.க கூட்டணியினர் மத்தியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

கருணாநிதி பாலிசி அவுட்... உதயநிதி உலா ஆரம்பம்!  தி.மு.கவில் இனியெல்லாம் இப்படித்தான்!

இதுகுறித்து தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தால், ``இனி தி.மு.கவை இயக்கும் நபர்களாக உதயநிதி, சபரீசன், அன்பில் மகேஷ் போன்ற இளைஞர் பட்டாளமே இருக்கப்போகிறது என்பது மூத்த நிர்வாகிகளுக்கு நன்றாகத் தெரிகிறது. கூட்டணி குறித்த முடிவு, தேர்தலில் போட்டியிடுவது போன்ற விஷயங்களை தி.மு.கவின் உயர்நிலைக் குழுவோ, செயற்குழுவோ முடிவு செய்த காலம் இருந்தது. கருணாநிதி தலைவராக இருந்தபோது சில முடிவுகள் அவரால் எடுக்கப்பட்டாலும் சம்பிரதாயத்திற்காகக் கட்சியின் உயர்நிலைக் குழுவைக் கூட்டி, அதில் தனக்கு வேண்டியவர்களை வைத்து தன் கருத்தைக் கட்சிக்குள் பதிவுசெய்ய வைப்பார். இதனால், வெளியில் இருப்பவர்களுக்கு தி.மு.கவில் உட்கட்சி ஜனநாயகம் தழைத்தோங்குவதாக நம்பிக்கையிருந்தது. தி.மு.கவின் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற தேர்தலிலும் இதுபோன்ற உயர்நிலைக்குழு கூட்டங்கள் நடைபெற்றன. இந்தக் கூட்டத்தின் மூலமே கூட்டணி குறித்த முடிவுகளும், பேச்சுவார்த்தை குழு போன்றவை நியமிக்கப்பட்டன. இந்நிலையில் இப்போது உதயநிதி பேச்சு என்பது கட்சி ரீதியாகப் பார்க்கும்போது அது நன்மையாகத் தெரிந்தாலும், கட்சியின் ஜனநாயத்திற்கு இந்தக் கருத்து எந்த வகையில் ஒத்துப்போகும் என்று தெரியாத நிலை உள்ளது.

உதயநிதி ஸ்டாலின் விரைவில் இளைஞர் அணிச் செயலாளர் பதவியில் நியமிக்கப்படவுள்ளார். அந்தப் பதவிக்கு அவர் வந்தாலும்கூட இதுபோன்ற கருத்துகளைப் பொதுவெளியில் பேசினால், அது தி.மு.க கூட்டணிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தும். அவருடைய கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியது. ஆனால், கூறிய இடம் சரியில்லை. அவர் சொன்னதுபோலவே நாங்குனேரியில் தி.மு.க போட்டியிட வேண்டும் என்பது பல தொண்டர்களின் விருப்பம். ஆனால், கூட்டணிக் கட்சியினரும் கலந்துகொண்ட மேடையில் இந்தக் கருத்தை எதற்காக முன்மொழிந்தார் என்று தெரியவில்லை” என்கிறார்கள்.

கருணாநிதி பாலிசி அவுட்... உதயநிதி உலா ஆரம்பம்!  தி.மு.கவில் இனியெல்லாம் இப்படித்தான்!

மற்றொரு தரப்பிலோ, ``உதயநிதியின் இந்தக் கருத்து அவருடைய கருத்தாக அந்த மேடையில் ஒலிக்கவில்லை. மாறாக, கூட்டத்திற்கு ஹோட்டலிலிருந்து அவர் புறப்படும் முன்பே தி.மு.க முன்னணியினர் உதயநிதியுடன் பேசினார்கள். அவர்கள் அப்போது சொல்லிய கருத்தை மேடையில் சொல்லியுள்ளார், உதயநிதி. இது, காங்கிரஸ் தரப்புக்கும் தெரியும். அ.தி.மு.க ஆட்சி இவ்வளவு சிக்கலில் இருக்கும்போது, தி.மு.க அங்கிருந்து எம்.எல்.ஏ-க்களை இழுத்து ஆட்சி மாற்றத்திற்கு ஆர்வம் காட்டாமல் இருப்பதற்குக் காரணமே, இப்போது ஆட்சிக்கு வந்தால் காங்கிரஸ் தயவில் ஆட்சியை நகர்த்த வேண்டிவரும். எனவே, ஆட்சி அதுவாகக் கலையட்டும்; தேர்தல் மூலம் அரிதி பெரும்பான்மையோடு நாம் ஆட்சியைப் பிடிக்கலாம் என்று ஸ்டாலின் திட்டமிட்டு வருகிறார். அவரின் திட்டத்தை அவருடைய மகன்மூலம் பேசவைத்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்றப் பொதுத்தேர்தல் நடைபெற்றால், 'இனி தி.மு.க தனித்துப் போட்டியிடவே விரும்புகிறது' என்பதைக் கூட்டணிக் கட்சியினருக்குத் தன் மகன்மூலம் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்” என்கிறார்கள்.

உதயநிதி தரப்பிலோ, ``இந்த முறை தி.மு.க-விற்கு ஆதரவாக மிகப்பெரிய அலை வீசியும் இருபதுக்கும் குறைவான இடங்களில் மட்டுமே தி.மு.க நேரடியாகப் போட்டியிடும் நிலை ஏற்பட்டது. இதற்குக் காரணம், கூட்டணிக் கட்சிகளுக்கு சீட்களை வாரி வழங்கியதுதான் என்கிற வருத்தம் குடும்பத்தில் இருக்கிறது. அ.தி.மு.க வலுவில்லாத இந்த நேரத்தில், கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்றால் கட்சியில் உள்ள நிர்வாகிகளுக்கு அதிக அளவில் சீட் வழங்க வேண்டும் என்று உதயநிதி ஓபனாகவே அவருடைய அப்பாவிடம் சொல்லியிருக்கிறார். மேலும், ஓ.எம்.ஜி குழுவும் இந்தக் கருத்தையே தொடர்ந்து ஸ்டாலினிடம் முன்வைக்கிறது. ஸ்டாலினும் எந்த முடிவாக இருந்தாலும் மருமகன் சபரீசனிடம் கேட்காமல் எடுப்பதில்லை. ஆனால், கட்சியின் வாரிசு என்று வரும்போது உதயநிதியே ஸ்டாலினுடைய சாய்ஸ். இதனால் கட்சியின் கொள்கை முடிவுகளை இப்போது துணிச்சலுடன் உதயநிதி சொல்ல ஆரம்பித்திருக்கிறார். இனி, மெள்ளமெள்ள தி.மு.கவில் உதயநிதியின் கருத்துகளுக்கு வலுச்சேர்க்கப்படும். அது தி.மு.க-வின் வளர்ச்சிக்கு உதவினால் மகிழ்ச்சியே” என்கிறார்கள் தெளிவாக.

களத்தில் இறங்கிவிட்டார் உதயநிதி. கருணாநிதி குடும்பத்திலிருந்து உதயமாகிறது புதிய சூரியன்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு