அ.தி.மு.க-வை எம்.ஜி.ஆர் ஆரம்பித்தது ஒரு வகையில் நல்லதுதான் என்று தம்மிடம் கருணாநிதி சொன்னதாக கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வரும் தி.மு.க-வின் முன்னாள் தலைவருமான கருணாநிதி பிறந்த நாள் கருத்தரங்கம், சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் நடைபெற்றது. அதில், கவிஞர் வைரமுத்து சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர், ``எம்.ஜி.ஆர் பிரிந்துசென்றதற்காக, அல்லது பிரிக்கப்பட்டு சென்றதற்காக என்றாவது வருந்தியிருக்கிறீர்களா என்று கலைஞரிடம் ஒருமுறை நான் கேட்டேன். இந்தக் கேள்வியை அவர் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும், அவர் சொன்ன பதில், தமிழ்நாட்டு அரசியலில் மிகமிக முக்கியம்.

அவர் சொன்னார், ‘எம்.ஜி.ஆர் பிரிந்துசென்றது, இன்னொரு கட்சி ஆரம்பித்தது எல்லாம் ஒரு வகையில் நல்லதுதான். ஏன் தெரியுமா? அவர் மட்டும் பிரிந்து இன்னொரு கட்சி ஆரம்பிக்காமல் இருந்திருந்தால், அந்த வெற்றிடத்தில், திராவிட இயக்கத்துக்கு எதிரான ஒரு கட்சி வந்து விழுந்திருக்கும்’ என்றார். அந்தப் பதிலைக் கேட்டு நான் அசந்துபோய்விட்டேன். எப்படி யோசிக்கிறார் பாருங்கள். அந்த இடத்தில் இன்னொரு கட்சி வந்து விழுந்திருக்கும்; அது திராவிட இயக்கத்துக்கு எதிரான கட்சியாக இருந்திருக்கலாம்; வடக்குக்கு சார்பான கட்சியாக இருந்திருக்கலாம்; நல்லவேளை பிரிந்தார். நல்லவேளை, அண்ணாவின் பெயரைச் சொல்லிக்கொண்டு ஒரு கட்சி தமிழ்நாட்டில் பிரிந்தது என்பதாக, அவர் தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொண்டார். இது எவ்வளவு அரசியல் ஞானம் என்று இன்றுவரை நான் யோசிக்கிறேன்” என்றார் வைரமுத்து.