ஜாக்டோ-ஜியோ போராட்டத்தால் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான தமிழக ஆட்சியாளர்களின் கோபம், நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிகரித்துள்ளதாகவும், அதனால் தாங்கள் பழிவாங்கப்படுவதாகவும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கொந்தளிக்கிறார்கள்.
பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் ஒட்டுமொத்த ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் குதித்தனர். அவர்களின் கோரிக்கைகளைத் தமிழக அரசு ஏற்கவில்லை. அவர்களிடம், பேச்சுவார்த்தை நடத்தவும் அரசு தயாராக இல்லை. ஒருகட்டத்தில், அந்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. போராட்டத்தின்போது ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பலரின்மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டன. ஆனால், அவை வாபஸ்பெறப்படவில்லை.

ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்குப் பிறகு, தங்கள் மீது ஆட்சியாளர்கள் கடும் கோபத்தில் இருப்பதாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் கூறிவந்தனர். இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியான அ.தி.மு.க-வைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே வெற்றிபெற்றார். 37 தொகுதிகளில் தி.மு.க கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர். தபால் வாக்குகளில் 80 சதவிகிதம் தி.மு.க கூட்டணி வேட்பாளர்களுக்கே விழுந்ததாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், தங்கள் கோரிக்கை சம்பந்தமாக ஆசிரியர் சங்கங்களின் தலைவர்கள் சிலர் சமீபத்தில் ஈரோட்டுக்குச் சென்று மூத்த அமைச்சர் ஒருவரைச் சந்தித்தனர். அங்கு, தங்களுக்கு நேர்ந்த கசப்பான அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த மூத்த நிர்வாகி ஒருவர்,
“போராட்டத்தில் ஈடுபட்டதால், எங்கள்மீது போடப்பட்ட வழக்குகள் அப்படியே உள்ளன. அந்த வழக்குகள், எங்களுக்குப் பதவி உயர்வு உள்ளிட்ட பலன்கள் கிடைப்பதற்குத் தடையாக உள்ளன. எனவே, அமைச்சரைச் சந்தித்து முறையிடலாம் என்று முடிவுசெய்து, அமைச்சரைச் சந்திக்க நேரம் கேட்டோம். ஈரோட்டுக்கு வரச் சொன்னார்கள். அங்கு போய் அமைச்சரைச் சந்தித்தோம். எங்கள்மீது அவர் மிகவும் கோபமாக இருந்தார். எங்கள் பிரச்னைகளை அவரிடம் எடுத்துச் சொன்னபோது, ‘80 சதவிகிதம் அவங்களுக்கு ஓட்டுப் போட்டிங்கள்ல. 37 பேரை ஜெயிக்க வெச்சீங்கள்ல. அப்புறம் எதுக்கு எங்ககிட்ட வந்து நிக்குறீங்க? அங்கே போய்க் கேளுங்க...’ என்று கோபமாகப் பேசினார். அதற்குமேல் அவரிடம் எங்களால் பேச முடியவில்லை. எழுந்து வந்துவிட்டோம்” என்றார் வருத்தத்துடன்.

அரசு ஊழியர்கள் சார்பில் நம்மிடம் பேசிய தலைவர் ஒருவர், “நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்மீது ஆட்சியாளர்கள் கடும் கோபத்துடன் இருக்கிறார்கள். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவரும் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளருமான சுப்பிரமணியன், 32 ஆண்டுகள் அரசுப் பணியில் இருந்தவர். மிகவும் நேர்மையாகப் பணியாற்றியவர். அவரை, ஓய்வுபெறும் நாளில் திடீரென பணியிடை நீக்கம் செய்துவிட்டார்கள். அரசு ஊழியர்களைப் பழிவாங்குவதற்கு இதுபோல பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்கள். பலர்மீது ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இருப்பதால், பதவி உயர்வு பாதிக்கப்பட்டுள்ளது. சுப்பிரமணியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக, சென்னை சேப்பாக்கத்தில் மூன்று நாள்களாகப் போராட்டம் நடத்தினோம்.
அதையடுத்து, உயர் அதிகாரிகள் எங்களை அழைத்துப் பேசினார்கள். அப்போது, சுப்பிரமணியன் மீதான நடவடிக்கையை ரத்துசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்கள். ஆனால், இன்றுவரை பணியிடை நீக்கம் ரத்து செய்யப்படவில்லை. பலரும் இதுபோன்ற பாதிப்பில் இருக்கிறார்கள். அரசு ஊழியர்களை, தங்கள் எதிரிகள்போல ஆட்சியாளர்கள் நினைப்பது நல்ல அணுகுமுறை அல்ல. அதுவும், நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, இவ்வாறு ஆட்சியாளர்கள் நடந்துகொள்வது அவர்களுக்கு நல்லதல்ல” என்றார்.
அரசுத் தரப்பில் நம்மிடம் பேசிய உயர் அதிகாரி ஒருவர், “அரசு ஊழியர்களையோ, ஆசிரியர்களையோ பழிவாங்கும் எண்ணம் அரசுக்குக் கிடையாது” என்று முடித்துக்கொண்டார்.