Published:Updated:

சீட் வாங்க போட்டி... வாட்ஸ் அப் மூலம் எதிராளிகளை மிரட்டும் தி.மு.க-வினர்!

சீட் வாங்க போட்டி... வாட்ஸ் அப் மூலம் எதிராளிகளை மிரட்டும் தி.மு.க-வினர்!
சீட் வாங்க போட்டி... வாட்ஸ் அப் மூலம் எதிராளிகளை மிரட்டும் தி.மு.க-வினர்!

“ ....டேய், நீ ஏன்டா இன்னைக்கு வாக்கிங் வரல. இதுதானேடா உன்னோட கார் நம்பரு. 25 வண்டில ஆள் கூட்டிட்டு, போஸ்டர் ஒட்டிட்டா உனக்கு சீட் கொடுத்துடணுமா.... பையா, கையில மாட்டுனனா செத்தடா நீயி. நாளைக்கு நீ வெளிலயே வர முடியாதுடா…” இப்படித்தான் போகிறது தி.மு.க பிரமுகர் ஒருவரின் அந்த வாட்ஸ் அப் ஆடியோ உரையாடல்.

சென்னை விருகம்பாக்கம் 137-வது வார்டு வட்டப் பொருளாளர் கதிரேசன் என்பவரைக் குறிவைத்து, தலைமைச் செயற்குழு உறுப்பினரான கே.கே.நகர் தனசேகரனின் உறவினர் சுதாகர் என்பவர்தான் இப்படிப் பேசியுள்ளார். கதிரேசனை, சுதாகர் மிரட்டியதாக மொத்தம் 100 ஆடியோக்கள் சென்னை நகர தி.மு.க வாட்ஸ் அப் குழுக்களில் வைரலாகிவருகின்றன. எம்.எல்.ஏ சீட்டுக்காக இப்போதே தி.மு.க-வுக்குள் களேபர காட்சிகள் அரங்கேறத் தொடங்கிவிட்டதாக விருகம்பாக்கம் தொகுதி மிரண்டுபோயுள்ளது.

இந்த ஆடியோவின் பின்புலம் குறித்து விருகம்பாக்கம் தி.மு.க-வினரிடம் விசாரித்தோம். “கடந்த சில வருடங்களாக கே.கே.நகர் தனசேகரனுக்கும் தொகுதியின் மற்ற நிர்வாகிகளுக்கும் நல்ல உறவு இல்லை. இவ்வளவு காலம் அமைதியாக இருந்த நிர்வாகிகள், இப்போது வெளிப்படையாக அவரை எதிர்க்க ஆரம்பித்துவிட்டனர். குறிப்பாக, தென் சென்னை மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியனுக்கும் தனசேகரனுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான். தென் சென்னை தொகுதி எம்.பி-யாகத் தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றிபெற்ற பிறகு, தனசேகரனின் மருமகனான சுதாகர் என்பவர் ஏரியா முழுவதும் நன்றியறிவிப்பு போஸ்டர் ஒன்றை ஒட்டினார். அதில், பகுதிச் செயலாளர் கண்ணனின் படம் மட்டும் இல்லை. மார்ச் 1-ம் தேதி, உதயநிதியை வைத்து கலைஞர் சிலை திறப்பு விழாவை கண்ணன் நடத்தியதை தனசேகரன் தரப்பு ரசிக்கவில்லை. அப்போதே, கூட்டத்துக்கு ஆள்சேர விடாமல் உள்ளடி வேலைபார்த்தனர். அதையும் மீறித்தான் கூட்டம் நடைபெற்றது. இதையெல்லாம் மனதில் வைத்து, பகுதிச் செயலாளரின் படம் இல்லாமலேயே சுதாகர் நன்றியறிவிப்பு போஸ்டர் ஒட்டினார். இதனாலேயே பிரச்னையும் வெடித்தது.

சீட் வாங்க போட்டி... வாட்ஸ் அப் மூலம் எதிராளிகளை மிரட்டும் தி.மு.க-வினர்!

போஸ்டர் விவகாரம் தொடர்பாக, ‘அண்ணன் தனசேகரன் வழியில்...’ என்கிற வாட்ச் அப் குழுவில் கண்ணன் வாய்ஸ் மெசேஜ் அனுப்பினார். அதில், “தலைவர், தளபதி படங்கள் மட்டுமே போஸ்டரில் பயன்படுத்த வேண்டுமென்று தலைமைக் கழகம் அறிவுறுத்தியுள்ளது. மற்ற நிர்வாகிகள் படத்தையும் போட்டுத்தான் போஸ்டர் அடிக்க வேண்டுமென்றால், பகுதிச் செயலாளரின் படத்தையும் போட்டிருக்க வேண்டும். ஆனால், சுதாகர் போன்று இரண்டாம் நம்பர் பிசினஸ் செய்பவர்களின் போஸ்டரில் என் முகம் இல்லாதிருப்பது மகிழ்ச்சியே!” என்று பேசியுள்ளார். இதைத் தொடர்ந்து கண்ணனும் தனசேகரனின் மருமகன்களான சுதாகர், மணி ஆகியோரும் காரசாரமாகப் பேசிக் கொண்டனர். ஒருகட்டத்தில், இந்த வாட்ஸ் அப் குழுவிலிருந்து கண்ணன் விலகிவிட்டார்.

சீட் வாங்க போட்டி... வாட்ஸ் அப் மூலம் எதிராளிகளை மிரட்டும் தி.மு.க-வினர்!

இந்நிலையில் பொதுக்குழு உறுப்பினர் துரைராஜ் என்பவரின் பிறந்தநாள் வந்தது. இவர் பகுதிச் செயலாளர் கண்ணனுக்கு நெருக்கமானவர். ஒவ்வொரு பிறந்தநாள் அன்றும், தன் அறக்கட்டளையின் சார்பாக ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது அவரது வழக்கம். இந்நிகழ்ச்சிக்கு வாழ்த்து தெரிவித்து, சுதாகர் வாட்ஸ் அப் குழுவில் செய்தி பதிவிட்டார். அறக்கட்டளை தொடங்கும் ஐடியாவிலிருக்கும் 137-வது வார்டு வட்டப் பொருளாளர் கதிரேசன் (இவரும் கண்ணனுக்கு நெருக்கமானவர்) என்பவர், “இந்த நிகழ்ச்சியால் எத்தனை பேர் பயனடைந்துள்ளார்கள் என விவரமிருக்கிறதா?” என்று கேட்கப்போக, அதை கெட்டியாகப் பிடித்துக்கொண்ட சுதாகர் தரப்பு, “நீ எப்படி துரைராஜைக் கேள்விகேட்கலாம்?” என விளாசத் தொடங்கிவிட்டது. 

சம்பந்தப்பட்ட துரைராஜே, “கதிரேசன் யதார்த்தமாகத்தான் கேட்டார். இதில் இவ்வளவு கோபப்பட ஏதுமில்லை” எனப் பதிலளித்தும், சுதாகர் தரப்பு விடவில்லை. கெட்டகெட்ட வார்த்தைகளில் திட்டி, தனசேகரனின் மருமகன்களான சுதாகர், மணி ஆகியோர் வாட்ஸ் அப் குழுவில் விடிய விடிய வாய்ஸ் மெசேஜ் அனுப்பினர். ‘நீ அவர் கார் டயர் அளவுக்குக்கூட வரமாட்டடா கதிரேசா. ஒழுங்கா கட்சியவிட்டு ஓடிடு, இல்லைனா, அடிபட்டே செத்துடுவ. எங்கேயிருந்துடா உனக்கு இந்தத் தைரியம் வந்துச்சு? 50 பேரைக் கூட்டிக்கிட்டுச் சுத்துனா உனக்குக் கவுன்சிலர் சீட்டு கொடுத்துடுவாங்களா. மாமா சொன்னதுனாலதான் அன்னைக்கு உன்னை விட்டேன்’ என்று கடுமையாக மிரட்டி வாய்ஸ் மெசேஜ் அனுப்பினர். தனிப்பட்ட முறையிலும் கதிரேசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மெசேஜ்தான் தென் சென்னை தி.மு.க-வில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது” என்றனர்.

சீட் வாங்க போட்டி... வாட்ஸ் அப் மூலம் எதிராளிகளை மிரட்டும் தி.மு.க-வினர்!

“எதற்காக வாட்ஸ் அப் குழுவில் அவர்கள் பதிவிட வேண்டும்?” என்றோம். “தங்களுக்கு எதிராக எவரும் எழுந்துவிடக் கூடாது என்கிற அச்சம்தான் காரணம். தனசேகரனுக்கு இரண்டுமுறை விருகம்பாக்கம் தொகுதியை ஒதுக்கியும் அவரால் வெற்றிபெற முடியவில்லை. மூன்றாவது முறையாக அவருக்கு ‘சீட்’ கொடுக்க கட்சித் தலைமை விரும்பவில்லை. ஆகவே, தனசேகரனுக்குப் போட்டியாக இருக்கும் கண்ணன், துரைராஜ், கதிரேசன் ஆகியோரிடையே சிண்டுமுடிந்து சண்டையை உருவாக்க முயன்றுள்ளனர். நெருக்கடிகொடுத்து, இவர்களைப் போட்டியிலிருந்து விலக்குவதுதான் அவர்களது பிளான்” என்றனர்.

137-வது வட்டப் பொருளாளர் கதிரேசன், “சம்பந்தப்பட்ட நபர்கள் அனுப்பிய ஆடியோ மெசேஜ்களைக் கட்சி மேலிடத்துக்கு அனுப்பியுள்ளேன். போலீஸில் பாதுகாப்பு கேட்டு புகாரளிக்கவும் முடிவெடுத்துள்ளேன்” என்று முடித்துக்கொண்டார்.

சீட் வாங்க போட்டி... வாட்ஸ் அப் மூலம் எதிராளிகளை மிரட்டும் தி.மு.க-வினர்!

சர்ச்சைக்குக் காரணமான கே.கே.நகர் தனசேகரன், “நீங்கள் சொல்லும் அந்த ஆடியோ உரையாடல் உண்மைதான். இதை முதலில் பகுதிச் செயலாளர் கண்ணன்தான் ஆரம்பித்தார். தன் படத்தைப் போட்டு போஸ்டர் ஒட்டவில்லை என அவர் திட்டப் போகத்தான், பிரச்னை வேறுதிசையில் திரும்பியது. துரைராஜுக்கும் கதிரேசனுக்கும் ஆகாது. இதை மனதில்வைத்து கதிரேசன் கிண்டலாகப் பதிவுபோட, அதற்கு சுதாகர் பதிலளித்துள்ளார். இது, நாகரிகத்தைக் கடந்துசென்றது வருத்தத்துக்குரிய விஷயம். இவ்விவரங்கள் எல்லாம் எனக்கு அடுத்தநாள் காலையில்தான் தெரியவந்தது. உடனடியாக, ‘கட்சி விவகாரங்களைக் குழாயடிச் சண்டையாக வாட்ஸ் அப்’பில் போட்டுக்கொள்வது அழகல்ல. எதுவாக இருந்தாலும் பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள்’ என்றேன். மறைந்த வட்டச் செயலாளர் ஒருவரின் படத்திறப்பு விழாவில் வைத்து, இருதரப்பையும் சமாதானம் செய்தேன். பதவியை எதிர்பார்த்து நான் கட்சிப் பணியாற்றவில்லை” என விளக்கமளித்தார்.

பகுதிச் செயலாளரான கண்ணன், “எம்.எல்.ஏ. சீட் எதிர்பார்த்து நான் கட்சி வேலைபார்க்கவில்லை. தலைமை யாரை வேட்பாளராக நிறுத்துகிறதோ, அவருக்காகப் பணி செய்வதுதான் என் கடமை. நான் யாருக்கு எதிராகவும் கட்சியில் செயல்படவில்லை. தலைமை விளக்கம் கேட்கும்பட்சத்தில் பதிலளிக்கத் தயாராக உள்ளேன்” என்றார்.

நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டியது தலைமையின் கடமை.

Vikatan