Published:Updated:

மக்களவை துணை சபாநாயகர் பதவி... ஜெகன்மோகன் ரெட்டி கட்சிக்கா?

ஆ.பழனியப்பன்
மக்களவை துணை சபாநாயகர் பதவி... ஜெகன்மோகன் ரெட்டி கட்சிக்கா?
மக்களவை துணை சபாநாயகர் பதவி... ஜெகன்மோகன் ரெட்டி கட்சிக்கா?

நாடாளுமன்ற மக்களவை துணை சபாநாயகர் பதவியை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு வழங்க பிரதமர் மோடி விரும்புவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

மக்களவை துணை சபாநாயகர் பதவி... ஜெகன்மோகன் ரெட்டி கட்சிக்கா?

ஆந்திர மாநிலத்தில், நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்டமன்றத் தேர்தலிலும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மகத்தான வெற்றியைப் பெற்றது. அதனால், சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி முடிவுக்கு வந்தது. தற்போது, ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் அங்கு ஆட்சி அமைந்துள்ளது. தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து டெல்லிக்குச் சென்று பிரதமர் மோடியைச் சந்தித்தார் ஜெகன் மோகன் ரெட்டி. மத்திய அரசுடன் இணக்கமான போக்கை அவர் விரும்புகிறார்.

இச்சூழலில், மக்களவை துணை சபாநாயகர் பதவியை, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸுக்கு அளிக்க பா.ஜ.க விரும்புவதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், அதை ஏற்கும் நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி இல்லை. காரணம், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை.

மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கவில்லை என்ற காரணத்தைச் சொல்லியே, மத்திய பா.ஜ.க ஆட்சிக்கு அளித்துவந்த ஆதரவை சந்திரபாபு நாயுடு வாபஸ் பெற்றார். தற்போது, ஜெகன்மோகன் ரெட்டியும், மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையில் தீவிரமாக இருக்கிறார். ஆனால், மத்திய பி.ஜே.பி அரசுக்கு அதில் ஆர்வம் இருப்பதாகத் தெரியவில்லை.

மக்களவை துணை சபாநாயகர் பதவியால் என்ன லாபம் என்று ஜெகன்மோகன் ரெட்டி யோசிக்கிறார் என்று செய்திகள் வெளிவந்துள்ளன. பா.ஜ.க-வால் அனுப்பப்பட்ட தூதரிடமும் இதை அவர் தெரிவித்துவிட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் 37 எம்.பி-களைப் பெற்றிருந்த அ.தி.மு.க-வின் தம்பிதுரை, மக்களவை துணை சபாநாயகராக இருந்தார். அதனால் தமிழகத்துக்கு என்ன பலன்?. இதைத்தான் ஜெகன்மோகன் ரெட்டியும் யோசிக்கிறார்போல.

Vikatan