Published:Updated:

அகதிகளுக்கு அரசாங்கம் செய்ய வேண்டியது என்ன? - அகதிகள் தின சிறப்புப் பகிர்வு #WorldRefugeeDay

"இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையால் அகதியானவர்கள், வங்கதேசப் போர், ஆப்கானிஸ்தான் போர் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், திபெத் அகதிகள், பர்மா அகதிகள், இலங்கைத் தமிழர்கள் ஆகியோர் இந்தியாவில் உள்ள அகதிகளில் முக்கியமானவர்கள்."

அகதிகளுக்கு அரசாங்கம் செய்ய வேண்டியது என்ன? - அகதிகள் தின சிறப்புப் பகிர்வு #WorldRefugeeDay
அகதிகளுக்கு அரசாங்கம் செய்ய வேண்டியது என்ன? - அகதிகள் தின சிறப்புப் பகிர்வு #WorldRefugeeDay

`உறவுகளை இழந்த மனிதன் அநாதை... சொந்த தேசத்தை இழந்தவன் அகதி' எனச் சொல்லப்படுவதுண்டு. ஊர் உறவுகளை இழந்த அத்தகையவர்களுக்காக, ஆண்டுதோறும் ஜூன் 20-ம் தேதி உலக அகதிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. பல்வேறு மோதல்களுக்குள் சிக்கி அகதிகளாகத் தாம் வசிக்கும் நாட்டினுள்ளும், பிற நாடுகளுக்குள்ளும் இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களுக்குள்ளாகி வாழ்ந்துவரும் அகதிகள் பற்றிய விழிப்புணர்வினை உலக மக்களிடத்தில் ஏற்படுத்துவதே இத்தினத்தின் முக்கியமான நோக்கமாகும். அகதிகள் என்றால், நம் தொப்புள்கொடி உறவுகளாகக் கருதும் இலங்கைத் தமிழர்களை பற்றிய நினைவே நம் கண் முன் நிற்கும். அதையும் தாண்டி உலகம் முழுவதும் அல்லல்படும் அகதிகள் பற்றிய நினைவையும், அவர்களுக்கு அரசாங்கம் செய்யவேண்டிய கடமைகளையும் இந்நாளில் பகிர்ந்துகொள்கிறார் தமிழ்நாடு மீன்பிடித் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் மாநிலச் செயலாளர் செந்தில்வேல்.

அகதிகளுக்கு அரசாங்கம் செய்ய வேண்டியது என்ன? - அகதிகள் தின சிறப்புப் பகிர்வு #WorldRefugeeDay

``தாய்நாட்டைவிட்டு வெளியேறி வேறு நாடுகளில் தஞ்சமடைபவர்களின் எண்ணிக்கை, முன்பு எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துவருகிறது. போர்ச்சூழல் மற்றும் பாதுகாப்பின்மை காரணமாகத் தினமும் சராசரியாகத் தங்கள் நாட்டைவிட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை 28,300. இப்போதைய நிலவரப்படி சர்வதேச அளவில், சுமார் 7 கோடி மக்கள் அகதிகளாக உள்ளனர். அவர்களில் பாதிப்பேர் 18 வயதுக்குட்பட்டவர்கள். போர் என்பது ஒருபுறம் இருக்க, மறுபுறம் வெள்ளம், நிலநடுக்கம், புயல், நிலச்சரிவு, வறட்சி போன்ற காரணங்களால் இடம்பெயர்பவர்களும் உண்டு. இவர்களில் பலரும் தங்கள் நாட்டிலேயே உள்ள வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்வதுதான் வழக்கம். என்றாலும், வேறு நாடுகளுக்கு அகதிகளாகச் செல்வதும் அதிகரித்துவருகிறது. முக்கியமாக, சிறிய நாடுகளிலிருந்து பெரிய நாடுகளுக்கு. ஐ.நா. அகதிகள் ஆணையம் (UNHCR) இந்தப் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. 

ஐ.நா. பொதுச்சபை 2016 செப்டம்பர் 19-ம் தேதி ஓர் உயர்மட்டக் குழுக் கூட்டத்தைக் கூட்டியது. அதில், அகதிகள் விஷயத்தில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்த மற்றும் மனிதாபிமான கண்ணோட்டத்தோடு நடந்துகொள்ள வேண்டும் என அடிக்கோடிட்டுக் காட்டியது. இன்றைய காலகட்டத்தில், அதிகளவு அகதிகளை உருவாக்கி வரும் நாடாக, சிரியா உள்ளது. ஆப்கானிஸ்தான், சோமாலியா, இராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளிலிருந்தே மொத்த அகதிகளில் 60 சதவிகிதம் பேர் இடம்பெயர்ந்து வருகின்றனர். மேலும், அதிகளவு அகதிகளை (85%) உள்வாங்கும் நாடுகளாக வளர்ந்துவரும் நாடுகளே திகழ்கின்றன.

அகதிகளுக்கு அரசாங்கம் செய்ய வேண்டியது என்ன? - அகதிகள் தின சிறப்புப் பகிர்வு #WorldRefugeeDay

இது, கடந்த 10 வருடங்களுக்கு முன்பிருந்ததைவிட, 14 சதவிகிதம் அதிகமாகும். சிரியாவிற்கு முன்பு உலகில் அதிக அகதிகளைத் தோற்றுவிக்கும் நாடாக, கடந்த 32 வருடங்களாக ஆப்கானிஸ்தான் விளங்கி வந்தது. இதில் 95 சதவிகித ஆப்கான் அகதிகள், இரானிலும் பாகிஸ்தானிலும் தஞ்சம்புகுந்து வருகின்றனர். இதற்கடுத்து 2-ம் இடத்தில் சோமாலியாவும், 3-ம் இடத்தில் இராக்கும், 4-வது இடத்தில் சிரியாவும் கடந்த 2013-ம் ஆண்டில் இடம்பிடித்துள்ளன. அதேவேளையில், 2014-ம் ஆண்டு இறுதிக்குள் இன்னும் 3 கோடி மக்கள், சிரியா மற்றும் உள்நாட்டுக் கலவரங்களால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து பிற நாடுகளுக்கு இடம்பெயர்ந்திருக்கலாம். இவர்களில் கணிசமானோர் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்திருக்கலாம் எனத் தகவல்கள் கூறுகின்றன. ஒவ்வொரு முறையும் நாம் கண் சிமிட்டும்போதும் அதாவது, 5 நொடிகளுக்கு ஒருமுறை ஓர் அகதி உருவாகி வருவதாக ஐ.நா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையால் அகதியானவர்கள், வங்கதேசப் போர், ஆப்கானிஸ்தான் போர் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், திபெத் அகதிகள், பர்மா அகதிகள், இலங்கைத் தமிழர்கள் ஆகியோர் இந்தியாவில் உள்ள அகதிகளில் முக்கியமானவர்கள். 

அகதிகளுக்கு அரசாங்கம் செய்ய வேண்டியது என்ன? - அகதிகள் தின சிறப்புப் பகிர்வு #WorldRefugeeDay
அகதிகளுக்கு அரசாங்கம் செய்ய வேண்டியது என்ன? - அகதிகள் தின சிறப்புப் பகிர்வு #WorldRefugeeDay

இலங்கையில் ஏற்பட்ட இனமோதல்களின் தொடர்ச்சியாக, உயிரைக் காத்துக்கொள்வதற்காக எந்தவித பாதுகாப்புமில்லாத மீன்பிடிப் படகுகளில், முதன்முதலில் 1983-ம் ஆண்டு, அகதிகளாக இந்தியா நோக்கி தமிழர்கள் வந்தனர். வசதிவாய்ப்புள்ள சிலர், விமானம் மூலமும் தமிழகத்திற்கு வருகை தந்தனர். தொடர்ந்து 1983 - 1987, 1989 - 1991, 1996 - 2003, 2006 - 2010-ம் ஆண்டுகளிலும் தமிழர்கள் அகதிகளாகத் தமிழகம் நோக்கிவந்தனர். தமிழக மறுவாழ்வுத் துறை அலுவலகத்தின் கணக்கின்படி இக்காலப் பகுதியில் மொத்தமாக 3,03,076 பேர் இலங்கையிலிருந்து அகதிகளாகத் தமிழகம் நோக்கி வந்துள்ளனர்.

அகதிகளாகத் தமிழகத்திற்கு வருகை தரும் இலங்கைத் தமிழர்களுக்காக, மண்டபத்தில் ஏற்கெனவே ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டிருந்த முகாம், தற்காலிக இடைத்தங்கல் முகாமாக மாற்றப்பட்டது. அகதிகளாக வரும் மக்களை, இங்குவைத்து அவர்கள் உண்மையான அகதிகள்தானா என்பதை உறுதிசெய்த பின்னர், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அமைக்கப்பட்ட தற்காலிக முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்படுவர். தற்போது தமிழகத்தில் உள்ள 110 முகாம்களில் சுமார் 20,000 குடும்பங்களைச் சார்ந்த 65,000 பேர் வசித்து வருகின்றனர். இவர்களைத் தவிர, முகாம்களுக்கு வெளியே சுமார் 35,000 பேர் வசித்து வருகின்றனர். இது தவிர, உலகம் முழுதும் உள்ள 54 நாடுகளில் இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக வாழ்கின்றனர். உலகின் அதிக நாடுகளில் அகதிகளாக வாழும் ஒரே இனம், இலங்கைத் தமிழர்கள் என்று ஐ.நா-வின் சேவை அமைப்பான யுனிசெப் கூறியுள்ளது.

அகதிகளுக்கு அரசாங்கம் செய்ய வேண்டியது என்ன? - அகதிகள் தின சிறப்புப் பகிர்வு #WorldRefugeeDay

தமிழகத்தில் 1983-ம் ஆண்டிலிருந்து குடியிருந்து வரும் அகதிகளில் 29,000-க்கும் மேற்பட்டோருக்குத் திருமணமாகியுள்ளது. அதில், சுமார் 8,000 திருமணங்கள் மட்டுமே பதிவுசெய்யப்பட்டுள்ளன. 35,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்துள்ளனர். அவர்களுக்கு, தமிழகத்தில் பிறப்புச் சான்றிதழ்கள் உள்ளன. மீள்குடியமர்வு என்று வரும்போது, இலங்கைத் தூதரகத்தில் பிறப்புச் சான்றிதழை இலங்கை அரசின் பிறப்பு - இறப்பு பதிவுசெய்யும் சட்டத்தின்கீழ் பதிவுசெய்து, அதற்கான சான்றிதழைப் பெற வேண்டும். அதற்குப் பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ்கள், திருமணப் பதிவுச் சான்றிதழ்கள் அவசியமாகின்றன. அதைக் கொடுக்க முடியாமல் ஏராளமான அகதிகள் தவித்துவருகிறார்கள். அகதிகளாகத் தப்பி வந்தபோது, பலர் தங்களது உடைமைகளை விட்டுவிட்டு வந்தனர். சான்றிதழ்கள் போன்ற ஆவணங்களை அவர்களால் எடுத்துவர இயலாததால், இப்போது சிக்கலில் தவித்துவருகிறார்கள்.

அகதிகளில் 5,000-க்கும் மேற்பட்டோர் இந்தியாவில் பட்டப்படிப்புகளை முடித்துள்ளார்கள். ஆனால், அவர்களுடைய கல்விச் சான்றிதழ்களை இலங்கை அரசு அங்கீகரிப்பதற்கான உத்தரவாதமளிக்கும் ஒப்பந்தங்கள் இதுவரை இரு நாடுகளிடையே ஏற்படுத்தப்படவில்லை. அதனால் இங்கு கல்வி கற்று முடித்தாலும், அந்த நாட்டில் வேலைவாய்ப்பைப் பெற முடியாத நிலை உள்ளது. இன்றைய சூழலில், இருதலைக்கொள்ளி எறும்பாக இலங்கை அகதிகள் தவித்துவருகிறார்கள். மீள்குடியமர்வுக்கு இலங்கை சென்றால், தங்களது உடைமைகளைக் கொண்டுசெல்ல வேண்டும். இங்கேயே வசித்தால், வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு உள்ளது போன்ற குடியுரிமைச் சலுகைகளை வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். இத்தகையச் சூழலில் இலங்கை அகதிகளின் மீள்குடியமர்வுக்காக இந்தியா - இலங்கை இடையே புதிய ஒப்பந்தங்களை அரசுகள் ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியம்.

அகதிகளுக்கு அரசாங்கம் செய்ய வேண்டியது என்ன? - அகதிகள் தின சிறப்புப் பகிர்வு #WorldRefugeeDay

இங்கு, கல்வி பயின்றவர்களின் கல்விச் சான்றிதழ்களுக்கு இலங்கையில் அங்கீகாரம் அளித்தல், இலங்கைக்குக் கப்பல் மூலம் திரும்பிச் செல்லும் வசதி, மீள்குடியமர்வுக்காக இலங்கைக்கு திரும்பிச் செல்வோருக்கு ஓராண்டுக்கு நிவாரண உதவி, வீடு, அடையாள அட்டை போன்றவை வழங்கப்பட வேண்டும். புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகள் நிறைவேறுவது இரு நாட்டு ஒப்பந்தம் மூலமே சாத்தியம். இதை இந்திய - இலங்கை அரசுகள் உடனடியாகச் செய்ய முன்வர வேண்டும். இதுவே, இலங்கைத் தமிழ் அகதிகளின் உண்மையான மறுவாழ்வு ஆகும்'' என்றார்.

அகதிகள் அரவணைக்கப்பட வேண்டியவர்கள்.

Vikatan