நாடாளுமன்ற மக்களவையின் பதவியேற்பு நிகழ்வுகள் பெரும் ஆரவாரத்துக்கிடையே நடந்து ஓய்ந்திருக்கிறது. இந்திய ஜனநாயக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு, அவையில் சில களேபரங்கள் நடந்துமுடிந்திருக்கின்றன. உத்தரப்பிரதேச எம்.பி பிரக்யா சிங் தாகூர் மூன்று முறை உறுதிமொழியைச் சொன்னது மக்களவையில் பெரிய பிரச்னையைக் கிளப்பியிருந்தது. தற்காலிக சபாநாயகர் அவர் அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது எனக் கூறியும், அதற்குப் பிறகு பதவியேற்க வந்தவர்கள் தங்களது உறுதிமொழியில் சுவாரஸ்யத்தைக் கூட்டிக்கொண்டிருந்தார்கள்.

காங்கிரஸ் எம்.பி-க்கள் பதவியேற்றபோது பாரதிய ஜனதா எம்.பி-க்கள் `ஜெய் ஸ்ரீ ராம்’ என உரக்கக் கோஷம் எழுப்பினார்கள். சோனியா காந்தி பதவி்யேற்றபோது அவர் அந்நிய நாட்டைச் சேர்ந்தவர் என்பதற்காகவே `பாரத் மாதா கீ ஜே!' எனக் கோஷம் எழுப்பப்பட்டது. அசாதுதீன் ஒவைஸி பதவியேற்க வந்தபோது, அவர் பிறப்பால் இஸ்லாமியர் என்பதற்காக `ஜெய் ஸ்ரீ ராம்’ என உரக்க கோஷம் எழுப்பப்பட்டது. சாக்ஷி மஹராஜ் பதவி ஏற்று முடித்ததும், பாரதிய ஜனதா எம்.பி-க்கள் சிலர் `மந்திர் வஹான் பனாயேங்கே' (ராமர் கோயில் அந்த இடத்திலேயே நிறுவப்படும்) எனக் கோஷம் எழுப்பினார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!


இதற்கிடையே பதவியேற்றுக்கொண்ட 37 தமிழக எம்.பி-க்களும், (ரவீந்திரநாத் குமார் தவிர) ஒரே மாதிரியாகத் தமிழில் உறுதிமொழி கூறி பதவியேற்றுக்கொண்டார்கள். தமிழில் பதவியேற்கும் யோசனையை முகநூலில் பதிவுசெய்து தொடங்கிவைத்தது விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி எம்.பி. ரவிக்குமார்தான். இது எப்படித் தொடங்கியது என அவரைத் தொடர்புகொண்டு கேட்டோம்.
நாடாளுமன்ற உணவகத்தில் அமர்ந்தபடியே நம்மிடம் பேசிய அவர், ``37 எம்.பி-க்களும் ஒற்றுமையாகத் தமிழில் பதவியேற்றது புது நம்பிக்கையை அளித்திருக்கிறது. பிரக்யா சிங் தாகூர், அப்படிச் செய்ததும் சபாநாயகர் கண்டித்த பிறகு, மற்ற பாரதிய ஜனதா எம்.பி-க்களும் அப்படியே செய்துகொண்டிருந்தனர். அவர்களுக்குப் பதிலடி கொடுக்க நினைத்துதான் நான், எங்களது பதவியேற்புக்கு முதல்நாள் முகநூலில், `தமிழில் பதவி ஏற்போம்’ எனப் பதிவு செய்தேன். அதைப் பார்த்துவிட்டு கனிமொழி எம்.பி., `அப்படியே செய்வோம்’ எனச் செய்தியனுப்பினார். ஆங்கிலத்தில் பதவியேற்பதாக இருந்த தமிழக காங்கிரஸ் எம்.பி-க்களும் எங்களது யோசனையை வரவேற்றார்கள். தயாநிதி மாறன்தான் தமிழில் உறுதிமொழி ஏற்றபிறகு `தமிழ் வாழ்க!’ என முழக்கமிடுவோம் என்று யோசனை கொடுத்தார். இந்தி திணிப்புச் சூழலுக்கு நடுவே அவர் கொடுத்த யோசனை கச்சிதமாக இருந்ததால், எல்லோரும் எங்கள் உறுதிமொழிக்குப் பிறகு `தமிழ் வாழ்க’ என்று கோஷம் வைத்தோம். ஒருமித்த குரலாக ஒலித்து எங்கள் நிலைப்பாட்டை உணர்த்தியிருக்கிறோம்'' என்றார்.
நாடாளுமன்றத்தில் தமிழ் வாழ்ந்திருக்கிறது; வாழ்ந்துகொண்டிருக்கிறது.