Published:Updated:

`நீங்கள் ஏன் தோற்றுப் போனீர்கள் தெரியுமா?’- பொன்னார், தமிழிசைக்குச் சுட்டிக் காட்டும் `கொங்கு' ஈஸ்வரன்

`நீங்கள் ஏன் தோற்றுப் போனீர்கள் தெரியுமா?’- பொன்னார், தமிழிசைக்குச் சுட்டிக் காட்டும் `கொங்கு' ஈஸ்வரன்
`நீங்கள் ஏன் தோற்றுப் போனீர்கள் தெரியுமா?’- பொன்னார், தமிழிசைக்குச் சுட்டிக் காட்டும் `கொங்கு' ஈஸ்வரன்

`நீங்கள் ஏன் தோற்றுப் போனீர்கள் தெரியுமா?’- பொன்னார், தமிழிசைக்குச் சுட்டிக் காட்டும் `கொங்கு' ஈஸ்வரன்

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், பிரமாண்டமான வெற்றியைப் பெற்று மத்தியில் மறுபடியும் பி.ஜே.பி தலைமையிலான ஆட்சி அமைந்திருக்கிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் வலுவான வெற்றியைப் பெற்ற பி.ஜே.பி, தமிழகத்தில் கூட்டணி அமைத்தும் பங்கமான தோல்வியைச் சந்தித்திருக்கிறது. ‘உங்களுடன் கூட்டணி வைத்ததுதான் தோல்விக்குக் காரணம்’ என பி.ஜே.பி-யும் அ.தி.மு.க-வும் மாறி மாறி  கார்ட்டூன் வரைந்து கடுமையாக விமர்சித்துக்கொண்டன. ஆனால், இரண்டு தரப்புமே தோல்விக்கான காரணத்தை கூட்டம் கூட்டி ஆராய்ந்ததாகத் தெரியவில்லை. ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியாகி 25 நாள்களுக்குப் பிறகு, தமிழகத்தில் பா.ஜ.க-வின் தோல்விக்கான காரணம் இதுதான் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

`நீங்கள் ஏன் தோற்றுப் போனீர்கள் தெரியுமா?’- பொன்னார், தமிழிசைக்குச் சுட்டிக் காட்டும் `கொங்கு' ஈஸ்வரன்

அதில், “இந்தியா முழுவதும் வெற்றிவாகை சூடி இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்த பாரதிய ஜனதா கட்சி, தமிழகத்தில் மட்டும் படுதோல்வியைச் சந்தித்ததற்கான காரணத்தைப் பலதரப்பட்ட அரசியல் நோக்கர்களும் பொதுமக்களும் பலவாறு சொல்லிக் கொண்டிருக்கின்றனர். உண்மையான காரணம் என்னவென்பதை பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் பகிர்ந்துகொண்டதை தமிழக மக்களோடு பகிர நான் ஆசைப்படுகிறேன். 

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னணித் தலைவர்கள்தான் பா.ஜ.க-வின் தோல்விக்குக் காரணம். 2014-லேயே நரேந்திர மோடியை முன்னிறுத்தி, பா.ஜ.க தலைமையிலான கூட்டணி தமிழகத்தில்  இரண்டு இடங்களில் வெற்றிபெற்று, 19 சதவிகித வாக்குகளைப் பெற்றது. கொங்கு மண்டலத்தில் அனைத்து தொகுதிகளிலுமே திராவிட முன்னேற்றக் கழகத்தை மூன்றாவது இடத்திற்குத் தள்ளி, இரண்டாவது இடத்தை தேசிய ஜனநாயகக் கூட்டணி பிடித்தது மிகப்பெரிய ஒரு எதிர்பார்ப்பை தமிழகத்தில் ஏற்படுத்தியது. பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தின் வளர்ச்சிக்கு வித்திட்டுவிட்டது என்று பேசப்பட்டது. 

அதே கொங்கு மண்டலத்தில், 2014–ல் முதலிடம் பிடித்த அ.தி.மு.க-வும், இரண்டாம் இடம் பிடித்த பா.ஜ.க-வும் கூட்டணி சேர்ந்து மூன்றாவது இடம் பிடித்த தி.மு.க கூட்டணியிடம் இந்தத் தேர்தலில் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனது.  தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராயக்கூட கூட்டணி கூட்டத்தைக் கூட்ட பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மறுத்துவிட்டார். மறைந்த பிரதமர் வாஜ்பாய்  தலைமையில், மத்தியில் பா.ஜ.க ஆட்சி இருந்தபோது, 5 ஆண்டுகள் வளரும் வாய்ப்பை தமிழக பா.ஜ.க தலைவர்கள் எப்படித் தவறவிட்டார்களோ, அதைப்போல இந்த 5 ஆண்டுகளையும் தமிழக பா.ஜ.க தலைவர்கள் பயன்படுத்திக்கொள்ளாமல் தவறவிட்டார்கள்.

`நீங்கள் ஏன் தோற்றுப் போனீர்கள் தெரியுமா?’- பொன்னார், தமிழிசைக்குச் சுட்டிக் காட்டும் `கொங்கு' ஈஸ்வரன்

2014-ல் வளர்ச்சியை முன்வைத்து ஆட்சிக்கு வந்த பாரதிய ஜனதா கட்சி அதை முன்னெடுக்காமல், தமிழக பா.ஜ.க தலைவர்களின் மத ரீதியான கருத்துகளே தங்களை வளர்த்துவிடும் என்று தப்புக் கணக்கு போட்டார்கள். கட்சி வளர்ச்சிக்கோ தமிழகத்தின் வளர்ச்சிக்கோ பங்காற்றத் தவறினார்கள். பா.ஜ.க-வின் முன்னணித் தலைவர்கள், சுயநலத்தோடு தங்களுடைய சொந்த இருப்பை வலுப்படுத்திக் கொள்ளத்தான் முயற்சித்தார்கள். 

2014 தேர்தலுக்கு முன், தமிழக பா.ஜ.க-வுக்கு தலைமை வகித்த பொன்.ராதாகிருஷ்ணன், தான் மட்டும் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக கூட்டணி நகர்வுகளைப் பயன்படுத்தினார். திட்டமிட்டது போலவே பா.ஜ.க-வில் அவர் மட்டும் வெற்றிபெற்று மத்திய அமைச்சரானார். அதோடு, தமிழகத்தில் பா.ஜ.க-வை வளர்ப்பதைக் கைவிட்டார். அவருடைய கன்னியாகுமரி தொகுதியிலேகூட கட்சியைக் கைவிட்டுவிட்டார் என்பதைத் தேர்தல் முடிவுகள் காட்டுகிறது. 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போன காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஹெச்.வசந்த குமார்,  5 ஆண்டுகள் கழித்து 2 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் பொன்.ராதாகிருஷ்ணனை வீழ்த்தினார். பொன்.ராதாகிருஷ்ணன் எப்படி மத்திய அமைச்சர் பதவியைப் பெற்றுக்கொண்டு கட்சி வளர்ச்சியில் கவனம் செலுத்தாமல் போனாரோ அதேபோல், பா.ஜ.க-வின் முன்னணித் தலைவர்களும் அவரவர்கள் மத்திய அரசிடம் தங்களுக்கு என்று என்ன பதவிகளைப் பெற முடியுமோ அதைப் பெற்றுக்கொண்டு ஒதுங்கிக்கொண்டார்கள். எனக்குத் தெரிவிக்கப்பட்ட சில விவரங்களைப் பகிர்ந்துகொள்கின்றேன்.

1.       தமிழிசை சௌந்தரராஜன் – இயக்குநர், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (BPCL), இந்திய அரசு நிறுவனம்.

2.       ஹெச்.ராஜா – இந்திய ரயில்வே பயணிகள் வசதிகள் மேம்பாட்டுக் குழு தலைவர்.

3.       சி.பி.ராதாகிருஷ்ணன் – இந்திய கயிறு வாரிய தலைவர் (தலைமை அலுவலகம் கேரளாவில்).

4.       வானதி சீனிவாசன் – இயக்குநர், சென்னை உர தொழிற்சாலை (MFL), இந்திய அரசு நிறுவனம்.

5.       லலிதா குமாரமங்கலம் – தலைவர், தேசிய மகளிர் ஆணையம் (NCW).

6.       குருமூர்த்தி – இயக்குநர், ரிசர்வ் வங்கி (RBI).

7.       முனைவரி பேகம் – மத்திய முஸ்லிம் மகளிர் நல வாரியம்.

8.       எல்.முருகன் – துணைத் தலைவர், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் (NCSC).

9.       ஆதவன் & கருப்பு முருகானந்தம் – அறங்காவலர்கள்,  சென்னை துறைமுகம், இந்திய அரசு நிறுவனம்.

10.    எஸ்.வி.சேகர் – மத்திய திரைப்பட தணிக்கைக் குழு உறுப்பினர்.

இதைப்போல ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் தங்களை வளர்த்துக்கொள்வதற்காக பதவிகளைப் பெற்றார்களே தவிர, அந்தப் பதவிகளை பொதுமக்களின் நலனுக்காகவோ, தங்கள் கட்சியின் வளர்ச்சிக்காகவோ பயன்படுத்தவில்லை. மொத்தத்தில், தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி காணாமல்போனதற்கு தமிழக பா.ஜ.க தலைவர்களுடைய மெத்தனப்போக்கும், மக்கள் விரும்பாத எதிர்க்கருத்துகளும்தான் காரணம். 

மீண்டும் பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியைப் பிடித்திருக்கும் சூழ்நிலையில், பா.ஜ.க தொண்டர்களால் தெரிவிக்கப்பட்ட இந்தக் கருத்துகளை ஆக்கபூர்வமாக எடுத்துக்கொண்டு, கிடைத்திருக்கின்ற 5 ஆண்டுகளை மாற்றி யோசித்து பயன்படுத்தினால் பா.ஜ.க-வுக்கும் நல்லது, தமிழகத்திற்கும் நல்லது. ‘தமிழக மக்கள் பா.ஜ.க கூட்டணியைத் தோற்கடித்துவிட்டதால், மத்தியிலிருந்து தமிழகத்திற்கு வளர்ச்சித் திட்டங்கள் எப்படி வரும்’ என்று பா.ஜ.க தமிழகத் தலைவர் கேள்வி எழுப்பியதன்மூலம், அவர்களின் எண்ண ஓட்டங்கள் இன்னும் மாறவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. எனவே, தமிழகத்தின் வளர்ச்சிக்காக வெற்றிபெற்று இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழக பா.ஜ.க தலைமை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதன்மூலம், மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கவில்லை, மாறாக மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தின் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்துகிறது என்று செயல்பாடுகளின் மூலமாக தமிழக மக்களுக்கு உணரவைக்க வேண்டும். தேர்தல் முடிந்துவிட்டது; கட்சி வேறுபாடுகள் இன்றி தமிழர்களாக ஒன்றிணைந்து தமிழகத்தின் உரிமைக்காகவும் தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட இந்த நேரத்தில் உறுதியேற்போம். அதற்கான முன்னெடுப்புகளை தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைமை, அகில இந்திய தலைமையின் மூலமாக செயல்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு