தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் 28-ம் தேதி கூட உள்ள நிலையில், சபாநாயகர் தனபாலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் முக்கியமாகப் பேசப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுக்குப் பிறகு, கூட்டப்படும் இந்தக் கூட்டத்தொடர் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
“தினகரனுக்கு ஆதரவாகச் சென்ற பதினெட்டு எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு கடந்த ஓர் ஆண்டாகப் பெரும்பான்மை இருக்கிறதா, இல்லையா என்கிற வினாவுக்கு விடைதெரியாமலே எடப்பாடி அரசு கச்சிதமாக ஆட்சியை நகர்த்திக்கொண்டு சென்றுவிட்டது. இப்போது நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் ஒன்பது இடங்களைப் பெற்றுள்ளது அ.தி.மு.க. இதனால் சட்டமன்றத்தில் பெரும்பான்மைக்குத் தேவையான எம்.எல்.ஏ-க்களைவிட ஐந்து எம்.எல்.ஏ-க்கள், அ.தி.மு.க-வுக்குக் கூடுதலாக இருக்கிறார்கள். ஆனால், அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் மூவர் தினகரனுக்கு ஆதரவாகத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர்களுக்குச் சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், இந்த நோட்டீஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உச்ச நீதிமன்றத்துக்குச் சென்று மூவரும் தடையாணை பெற்றுள்ளார்கள்.

அதேபோல், இரட்டை இலைச் சின்னத்தில் வெற்றிபெற்ற தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோர் கடந்த தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு எதிராகப் பிரசாரம் மேற்கொண்டனர். இந்நிலையில் மூன்று அ.தி.மு.க உறுப்பினர்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அளித்தவுடன் எதிர்க்கட்சியான தி.மு.க, சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தைச் சட்டமன்ற செயலாளரிடம் அளித்துள்ளது. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது சட்டமன்றம் கூடும்போது விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று சட்டமன்ற செயலாளர் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
வரும் 28-ம் தேதி சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கினாலும் ஜூலை 2-ம் தேதி அன்று, சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் அவையில் எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிகிறது. இந்தத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பின்போது சபாநாயகர் அவையில் இருக்க மாட்டார். துணை சபாநாயகரே இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவருவார். ஏற்கெனவே ஒருமுறை தி.மு.க, சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவந்து தோல்வியைச் சந்தித்தது. அந்தத் தீர்மானம் குறித்து பேசிய தனபால் “பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்த என்னை மாண்புமிக்க இந்த அவையில் சபாநாயகர் பதவியை அளித்தார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அந்தப் பதவியில் நான் இதுவரையும் நேர்மையாகவும் நடுநிலையாகவும் செயல்பட்டுள்ளேன் என்று நம்புகிறேன். ஆனால், என்மீது தி.மு.க கொண்டுவந்த இந்தத் தீர்மானம் மனவலியை ஏற்படுத்துகிறது” என்று உருக்கமாகப் பேசினார்.

இப்போது சபாநாயகர் மீது கொண்டு வந்துள்ள தீர்மானம் கொஞ்சம் சிக்கலான நிலையை அடைந்துள்ளது. தி.மு.க-வின் உறுப்பினர்கள் எண்ணிக்கை தற்போது 100 ஆக உள்ளது. கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் ஏழு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 என எதிர்க்கட்சிகளே 108 இடங்களில் உள்ளார்கள். இரண்டு இடங்கள் காலியாக உள்ளது. அதேபோல் எடப்பாடிக்கு எதிரான மனநிலையில் இருந்த அ.தி.மு.க வேட்பாளர்கள் மூவரும், தமிமுன் அன்சாரி மற்றும் கருணாஸ் ஆகியோர் முடிவுகளும் இந்தத் தீர்மானத்தில் முக்கிய பங்கு வகிக்கப் போகின்றன.
இதுகுறித்து அ.தி.மு.க தரப்பில் பேசியபோது, “பெரும்பான்மை பலத்தோடு நாங்கள் இருக்கிறோம். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் மூவர் ஏற்கெனவே எடப்பாடி பக்கம்வர பச்சைக் கொடி காட்டிவிட்டார்கள். எதிர்க்கட்சி வரிசையில் இரண்டு எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது. எனவே இந்தத் தீர்மானம் கண்டிப்பாகத் தோல்விடையும்” என்கிறார்கள்.
தி.மு.க தரப்பிலோ “தீர்மானம் தோல்வியடைந்தாலும் எங்கள் எதிர்ப்புகளை இந்தத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசுவோம். நடுநிலையாக இருக்க வேண்டிய சபாநாயகர் நடுநிலை தவறிவிட்டார் என்கிற காரணத்தால்தான் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவந்தோம். அது ஜெயிப்பதும் தோற்பதும் சட்டமன்றத்தில் அந்தத் தீர்மானம் வரும்போதுதான் தெரியும்” என்கிறார்கள்.
அ.தி.மு.க சின்னத்தில் வெற்றி பெற்ற தமிமுன் அன்சாரி, “இந்த ஆட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டவே மனிதநேய ஜனநாயகக் கட்சி விரும்புகிறதே தவிர, இந்த ஆட்சியை அகற்ற நாங்கள் விரும்பவில்லை. சபாநாயகர் மீதான தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கப் போவதில்லை. குறிப்பாக, எங்களைப் போன்ற சிறிய கட்சிகளுக்கும் அவையில் பேசுவதற்கு வாய்ப்பளித்துள்ளார் சபாநாயகர். அவரை மாற்ற வேண்டிய அவசியம் இப்போது இல்லை” என்கிறார். இதே நிலையில்தான் கருணாஸ் மற்றும் தனியரசுவும் இருக்கிறார்கள். இதனால் தி.மு.க கொண்டு வரும் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தனபாலுக்கு எந்தச் சிக்கலையும் ஏற்படுத்திவிடாது என்கிறார்கள் சட்டசபை விவகாரத்தை நன்கு அறிந்தவர்கள்.