Published:Updated:

இதைத்தான் டாஸ்மாக்கில் மதுவென்று விற்கிறார்களா? - #DoubtOfCommonman

டாஸ்மாக் குறித்து ஓர் அலசல்!

``டாஸ்மாக் கடை திறக்கும் மதியம் பன்னிரெண்டு மணிக்கு முன்பும் இரவு பத்து மணிக்குப் பின்பும் கடையினுள்ளேயே அமர்ந்து ஒரு குடிசைத் தொழில் போல இதைச் செய்கிறார்கள்."

இதைத்தான் டாஸ்மாக்கில் மதுவென்று விற்கிறார்களா? - #DoubtOfCommonman

``டாஸ்மாக் கடை திறக்கும் மதியம் பன்னிரெண்டு மணிக்கு முன்பும் இரவு பத்து மணிக்குப் பின்பும் கடையினுள்ளேயே அமர்ந்து ஒரு குடிசைத் தொழில் போல இதைச் செய்கிறார்கள்."

Published:Updated:
டாஸ்மாக் குறித்து ஓர் அலசல்!

மிழகத்தில் மது அருந்துவது என்பது, எப்போதாவது என்று இருந்த நிலைமாறி, அது ஒரு பழக்கமாக இருந்த காலம்போய் இன்றைய சூழலில் மது அருந்துதல் ஒரு நோயாகவே மாறியிருக்கிறது என்று சொன்னால், அதை யாரும் மறுத்துவிட முடியாது. குடிகாரர்களாக இருந்தவர்களெல்லாம் குடிநோயாளிகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் போக்கு மதுபான கடைகள் தனியார்வசம் இருந்த காலத்தைவிடவும் அரசின் கட்டுப்பாட்டில் வந்தபின்புதான் அதிகமாகின. அதற்கு மிக முக்கிய காரணம், மதுவின் தரம் எனலாம். தரமற்ற இத்தகைய மதுவினால் எத்தனையோ மரணங்கள் நிகழ்கின்றன. அவையெல்லாம் நேரடியாக மதுவின் தாக்கத்தினால் இல்லையென்ற போதிலும் தரமற்ற மதுவினால் கல்லீரல் பாதிப்பு, கணைய அழற்சி, மாரடைப்பு எனப் பல நோய்களினால் தினமும் தமிழகத்தில் உயிரிழப்புகள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இதுதவிர, வாகன விபத்துக்கு மதுவும் ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது.

இதைத்தான் டாஸ்மாக்கில் மதுவென்று விற்கிறார்களா? -  #DoubtOfCommonman

மது பழக்கத்தை தனிநபர் அழிவுக்கான நிலைமையாகப் பார்க்காமல், அவர் சார்ந்த குடும்பமும் பெரும் இன்னலுக்கு உள்ளாகிறது என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும். அதையொட்டி நம் மாநிலமும் கடுமையான சிதைவுக்கு உள்ளாகிறது. சமூகச் சீர்கேடான காரியங்கள் செய்வதற்கு மது மிகப்பெரிய உந்து சக்தியை அளிக்கிறது. இவையெல்லாம் ஒட்டுமொத்தமாகத் தடுக்கப்பட வேண்டுமென்றால் மதுவிலக்கு மட்டுமே தீர்வு. ஆனால், அதற்கு முன்பு தற்காலிகத் தீர்வாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது மது விற்பனையில் அரசு காட்டும் அலட்சியத்தையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும்தான். இந்த நிலையை அரசுக்கு நாம் சுட்டிக்காட்ட வேண்டும். வருவாய் என்கிற ஒற்றை இலக்கை நோக்கி ஆட்சியாளர்கள் செல்வதால், எத்தனை பேரின் உயிர் பறிபோகிறது? மனிதப் பிணங்களின் மீது அரசும் ஆட்சியாளர்களும் சவாரி செய்கிறார்கள் என்பதை அவர்களுக்கு நினைவூட்டும் ஒரு பதிவாக நாம் இதை எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் தரமற்ற மது எப்படி உருவாக்கப்படுகிறது, தரத்தை உறுதிசெய்வதில் ஏன் அரசு கவனம் செலுத்துவதில்லை என்பதைத் தெரிந்துகொள்ளும் விதமாக சட்டப்பஞ்சாயத்து அமைப்பைச் சார்ந்த செந்தில் ஆறுமுகத்திடம் பேசினோம். 

``பழச்சாறுகளை நொதிக்க வைப்பதினால் கிடைக்கிற பானம்தான் மது. ஆனால், இன்று அப்படியா அது தயாரிக்கப்படுகிறது? வெறும் ஸ்பிரிட்டில்தான் இப்போது மதுவைத் தயாரிக்கிறார்கள். தற்போது முழுக்க முழுக்க கெமிக்கலும் தண்ணியும் கலரும் சேர்ந்த கலவையைத்தான் அரசு மதுபான கடைகளில் விற்கிறார்கள். ஆலையில் மது முறையாக தயாரிக்கப்படுகிறதா என்பதையெல்லாம் பார்க்க டாஸ்மாக்கில் ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால், முறையாக, நேர்மையாக சோதனை நடத்துகிறார்களா என்கிற மிகப்பெரிய கேள்வி இருக்கிறது. மதுவினால் இறப்பு சதவிகிதம் அதிகமாவதும், கல்லீரல் பாதிப்புக்கு உள்ளாவதும் உலகில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் அதிகளவில் பாதிப்புகள் உள்ளன. இங்கே மட்டும் அது நடப்பதற்குக் காரணம் தரமற்ற மது தயாரிக்கப்படுவதினால்தான். கேரளாவில் இப்படியொரு தரத்தில் மதுவை அந்த மாநிலம் விற்பனை செய்யுமாயின் மிகப்பெரிய போராட்டம் அங்கே வெடிக்கும். 

இதைத்தான் டாஸ்மாக்கில் மதுவென்று விற்கிறார்களா? -  #DoubtOfCommonman

`குடிகாரர்களுக்குக் குடிக்காமல் இருந்தால் கை நடுங்கும். அரசாங்கத்துக்கு மக்கள் குடிக்காமல் இருந்தால் கை நடுங்கும்' என்கிற நிலைமைதான் இங்கே இருக்கிறது. ஏன் என்றால் அவர்களுக்கு இதுதான் மிக அதிக வருவாயை ஈட்டித் தருகிறது. தரத்தை ஒவ்வொரு கட்டமாகப் பரிசோதித்து மதுவை மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் அளவுக்கு அவர்களுக்கு நேரம் இல்லை. காரணம், டாஸ்மாக்கினால் கிடைக்கும் வருவாய் ஒருநாள் தாமதமானால்கூட பெரிய நிதிநெருக்கடியைச் சந்திக்கும் நிலையில்தான் அரசு இருக்கிறது. அரசாங்கத்தின் வரிவருவாயில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு டாஸ்மாக்கினால் வருகிறது. ஆக, இதில் எந்தவொரு தொய்வோ காலதாமதமோ ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் அரசு தெளிவாக இருக்கிறது. 

எந்தவொரு பொருளும் தரமற்று இருக்கும்போது, நுகர்வோர் அதற்கு எதிராகப் புகார் செய்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும். ஆனால், டாஸ்மாக்கில் கிடைக்கும் தரமற்ற மதுவிற்கு எதிராக குடிகாரர்கள் யாரும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்துவதில்லை. போதை கிடைத்தால் போதுமென்று அவர்கள் இருக்கிறார்கள். எவ்வளவு மோசமாகத் தயாரித்து அனுப்பினாலும் மதுப்பிரியார்கள் கவலைப்பட மாட்டார்கள். இருதரப்பிற்கும் தரம் ஒரு பிரச்னையே இல்லை. சமூகத்தின் மீது பற்றுதல் கொண்ட நாம்தான் இதைப் பெரிதுபடுத்த வேண்டும்" என்றார்.

எல்லாவற்றுக்கும் சங்கம் இருப்பது போல மது குடிப்போருக்கும் சங்கம் இருக்கிறதுதானே! அவர்கள் இதை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைப் பதிவு செய்யும் விதமாக, தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் மாநிலத் தலைவர் பொ. செல்ல பாண்டியனிடம் பேசினோம். அவர், தமிழக மதுபானத்துடன் புதுச்சேரியின் மதுவை ஒப்பிட்டுப் பேச்சைத் தொடங்கினார்.

``புதுச்சேரி பிரெஞ்ச் கலாசாரத்தைக் கொண்டது. அங்கே தயாரிக்கப்படும் மதுவானது திராட்சை, கோதுமை, பார்லி, அரிசி ஆகியவற்றில் தயாரிக்கப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான வகைகள், கரும்பு ஆலைகளிலிருந்து வெளிவரக் கூடிய கடைசிக் கழிவான் மொலாசஸ் என்னும் வேதிப்பொருளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. ஒரு லிட்டர் மொலாசஸில் பத்து லிட்டர் தண்ணீரை ஊற்றி அதை எவாப்ரேட் செய்தால் ஒரு லிட்டர் ஸ்பிரிட் கிடைக்கும். அந்த ஸ்பிரிட்டில் மீண்டும் பத்து லிட்டர் தண்ணீரை ஊற்றி, அதைக் குடிக்கக்கூடிய எரிசாரயமாக ஆக்குகிறார்கள். அதன் பின்னர் விஸ்கி, பிராந்தி என்று தரத்திற்கு ஏற்றாற்போல் ஒவ்வொரு ஃப்ளேவர் கலந்து குப்பிகளில் அடைத்து விற்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள மதுபான ஆலைகளில் தயாரிக்கப்படுவது முழுக்க முழுக்க ஸ்பிரிட்தான்.  

ஏற்கெனவே மோசமாக தயாரிக்கப்படும் இந்த மது ஆலை முதலாளிகள் சட்ட விரோதிகளின் துணையுடனும் காவல்துறையின் ஆதரவுடனும் போலி மதுபானங்களாக மாற்றுகிறார்கள். ஒரு ஹேன்ஸ் பாக்கெட்டை பத்து லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை இவர்கள் தயாரித்த பாட்டிலில் சீலை உடைக்காமல் ஸ்டிக்கரை மட்டும் எடுத்து சிரஞ்ச் மூலம் ஏற்றுகிறார்கள். டாஸ்மாக் கடை திறக்கும் நேரமான பகல் பன்னிரெண்டு மணிக்கு முன்பும், இரவு பத்து மணிக்குப் பின்னரும் கடைக்குள்ளேயே அமர்ந்து ஒரு குடிசைத் தொழில் போல இதைச் செய்கிறார்கள். ஏற்கெனவே தரமற்றதாக இருக்கும் மதுவுடன் இதுவும் சேரும்போது அது மேலும் விஷம் தோய்ந்ததாக மாறுகிறது. அதைத்தான் இன்றைக்குப் பெரும்பாலானோர் டாஸ்மாக்கில் வாங்கிக் குடித்துக் கொண்டிருக்கிறார்கள். 

இதைத்தான் டாஸ்மாக்கில் மதுவென்று விற்கிறார்களா? -  #DoubtOfCommonman

வெளிநாடுகளில் ஆல்கஹால் தயாரிப்பைக் கண்காணிக்கத் தனி ஆணையம் இருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை உணவுப் பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டம் 2006 என்ன சொல்கிறதெனில் இந்தியக் குடிமகன் எந்தப் பொருளை உட்கொண்டாலும் அதனால் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு உத்தரவாதம் அளிக்கவும் உரிய இழப்பினைக் கொடுக்கவும் சம்பந்தப்பட்ட துறைக்குப் பொறுப்பு இருப்பதாகச் சொல்கிறது. ஆனால், இப்படியொரு பாதுகாப்பு அளிக்கக்கூடிய சட்டத்தின் கீழ் மதுபான வகைகள் இல்லை. அவற்றை அந்தச் சட்டத்தின் கீழ் கொண்டுவந்தால்தான், மதுவினால் ஏற்படும் பாதிப்பிலிருந்து மீட்பதற்கான தீர்வை நோக்கி நாம் நகர முடியும். 2004 ல் மதுபான வகைகளையும் உணவுப் பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டத்தின் கீழ் உள்ள உணவுப் பட்டியலின் கீழ் கொண்டுவரச் சொல்லி சட்டம் இயற்றப்பட்டது. ஆனால், மும்பை, ஜபல்பூரில் உள்ள மதுபான ஆலை முதலாளிகள் அதற்கு தடை வாங்கினார்கள். எம்.ஆர்.பி விலை, போலி தயாரிப்பு, ஆல்கஹால் அளவு என எல்லாவற்றையும் கட்டுப்படுத்த வேண்டுமெனில் மதுபான வகைகளை உணவுப் பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டத்தின் கீழ் கொண்டுவருவதுதான் ஒரே வழி. 

உலக சுகாதார அமைப்பு என்ன சொல்கிறதெனில் ஒரு நாட்டில் மதுபான வகைகள் விற்கப்பட்டால் அந்த வருவாயில் ஒரு பெரும் தொகையைக் குடிபோதை மறுவாழ்வு மையத்தை உருவாக்கி அதற்காகச் செலவிட வேண்டும் என்கிறது. அது போன்ற மையங்கள் தமிழ்நாட்டில் ஓரிடத்தில்கூட திறக்கப்படவில்லை. அதேபோல ஒவ்வொரு மதுபான கடைக்கும் குறிப்பிட்ட இடைவெளி இருக்க வேண்டுமெனச் சொல்கிறது. அவர்கள் சொல்லும் எந்த விதியையும் அரசு பின்பற்றுவதே இல்லை" என்றார்.

மேலும், ``சென்னையில் தற்போது கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாடு உள்ள சூழலில் ஒரு லிட்டர் மதுபானம் தயாரிப்பதற்கு பத்து லிட்டர் தண்ணீர் வேண்டும். ஒரு நாளுக்கு தமிழ்நாட்டில் அறுபது லட்சம் பேர் மதுபானம் குடிக்கிறார்கள். இவங்களுக்காக, ஒரு வருஷத்துல நாலு டி.எம்.சி தண்ணீர் மதுபான ஆலைகளுக்காகத் தேவைப்படுகிறது. இந்தத் தண்ணீரை மிச்சப்படுத்தினாலே ஒரு குடும்பத்துக்கு பத்துக் குடம் தண்ணீர் தினமும் கொடுக்கலாம். எல்லா தரப்பு மக்களுக்கும் அவரவர்க்கான நியாயம் இருப்பதுபோல மது குடிப்போருக்கும் இருக்கிறது. ஏன் என்றால் அவர்களும் நம்மைப்போன்ற சக மனிதர்கள்தானே" என்றார்.

இதுகுறித்து டாஸ்மாக் தரப்பின் கருத்தை அறிந்துகொள்ள அதன் மேலாண்மை அதிகாரி அலுவலகத்தைத் தொடர்பு கொண்டோம். `அலுவல் சார்ந்து அவர் பிஸியாக இருக்கிறார்' எனச் சொல்லிவிட்டதால் தகவல்களைத் தெரிந்துகொள்ள இயலவில்லை. அவர்கள் தெரிவிக்கிறபட்சத்தில் பரிசீலனைக்குப் பின்னர், அதை பிரசுரிக்க தயாராகவே இருக்கிறோம்.