Published:Updated:

கேரளாவின் புரட்சி நாயகி... கௌரியம்மாவுக்கு 100 வயது

ஆ.பழனியப்பன்

முதல் சட்டமன்றத்தில் உறுப்பினரான ஒரே பெண் எம்.எல்.ஏ அவர்தான். புரட்சியின் கனலாய் தளிர்த்த பூமரம் என்று போற்றப்பட்ட கௌரியம்மாவுக்கு வந்தனம்” - என்று, கேரள சட்டமன்றத்தில் கௌரியம்மாவுக்கு புகழாரம் சூட்டினார் சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன்.

கேரளாவின் புரட்சி நாயகி... கௌரியம்மாவுக்கு 100 வயது
கேரளாவின் புரட்சி நாயகி... கௌரியம்மாவுக்கு 100 வயது

100 வயதைக் கடந்துள்ளார், கேரளாவின் ‘புரட்சி நாயகி’ கே.ஆர்.கௌரியம்மா. மக்கள் செல்வாக்கு மிகுந்த இந்தத் தலைவரின் பிறந்தநாள் விழாவை ஆலப்புழாவில் முதல்வர் பினராயி விஜயன் இன்று தொடங்கிவைத்தார்.

கேரளாவின் புரட்சி நாயகி... கௌரியம்மாவுக்கு 100 வயது


கேரளாவின் முதல் சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தவர் கௌரியம்மா. 1957-ல் கேரளாவில் அமைந்த, முதல் கம்யூனிஸ்ட் அரசில் வருவாய், கலால், தேவசம் அமைச்சராகப் பணியாற்றிய இவர், 100 வயதைக் கடந்து ஆலப்புழா மாவட்டத்தில் சதனாடு என்கிற சிற்றூரில் வசித்துவருகிறார் .

உழுபவருக்கே நிலம் சொந்தம், நில உச்சவரம்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்களைக் கொண்ட நிலச் சீர்திருத்த மசோதா, பெண்கள் ஆணைய மசோதா உட்பட பல முக்கிய மசோதாக்களை அறிமுகம் செய்தவர் என்கிற பெருமைக்குரியவர் கௌரியம்மா. இ.எம்.எஸ் தலைமையிலான அரசுகளில் இருமுறை, ஈ.கே.நாயனார் தலைமையிலான அரசுகளில் இருமுறை அமைச்சராகப் பணியாற்றி கேரளாவில் பல சீர்திருத்தங்களுக்கும் வளர்ச்சிக்கும் வித்திட்டவர் கௌரியம்மா.

கட்சி வேறுபாடின்றி அனைத்துத் தலைவர்களாலும் பெரிதும் மதிக்கப்படும் கௌரியம்மாவுக்கு, ஆலப்புழாவில் இன்று பிறந்த நாள் விழா நடைபெற்றது. அதையொட்டி, கேரளச் சட்டமன்றத்துக்கு இன்றைய தினம் சிறப்பு விடுமுறை அளிக்கப்பட்டது.

“போராட்டங்களின் வீரியத்தில் தாயாக, மலையாளக் கரையில் மாற்றத்தின் வழிதிறக்க கனல்வழிகள் ஏற்ற வீரப்பெண்மணியான கேரளத்தின் கௌரியம்மாவுக்கு, 100 வயது நிறைவுற்றது. காலம் பாதுகாத்த முன்விதிகளைத் தூக்கியெறிந்து, வரலாற்றில் தலையீடு செய்து முன்சென்ற அவர், இன்று உயிர் வாழ்கிறார். முதல் சட்டமன்றத்தில் உறுப்பினரான ஒரே எம்.எல்.ஏ அவர்தான். புரட்சியின் கனலாய் தளிர்த்த பூமரம் என்று போற்றப்பட்ட கௌரியம்மாவுக்கு வந்தனம்” - என்று, கேரள சட்டமன்றத்தில் அவருக்குப் புகழாரம் சூட்டினார் சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன்.

கௌரியம்மாவின் பிறந்த நாள் விழாவை முதல்வர் பினராயி விஜயன் தொடங்கிவைக்க, எதிர்க்கட்சித் தலைவரான ரமேஷ் சென்னிதாலா விழாவுக்குத் தலைமை தாங்கினார். கௌரியம்மாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய ஆவணப்படத்தை வெளியிட்டார், முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன். கௌரியம்மா அறக்கட்டளையைத் தொடங்கி வைத்தார், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி. கௌரியம்மா வாழ்க்கை வரலாறு பற்றிய நூலை வெளியிட்டார், சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணா. இதிலிருந்தே கேரள அரசியலில் கௌரியம்மாவின் சிறப்பையும் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்ள முடியும்.

"நம்முடைய காலத்தில் வாழும் மிக உயர்ந்த தலைவர்களில் ஒருவர் கௌரியம்மா. அவர், கேரளாவுக்கு மிகப்பெரிய பங்களிப்பை ஆற்றியுள்ளார். அவருடைய 100 வது பிறந்த நாளில் அவரை வணங்குகிறோம்" என்று பினராயி விஜயன் நிகழ்ச்சியில் குறிப்பிட்டார். 

கேரளாவின் புரட்சி நாயகி... கௌரியம்மாவுக்கு 100 வயது

களத்திபரம்பில் ராமன், பார்வதி அம்மா தம்பதிக்கு 1919-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி பிறந்தவர் கௌரியம்மா. மிகவும் வசதியான குடும்பம். திருவனந்தபுரம் சட்டக்கல்லூரியில் படித்துவிட்டு வழக்கறிஞராகப் பணியாற்றிவந்த கௌரிக்கு, அரசியல்மீது ஆர்வம் ஏற்பட்டது. அதற்குக் காரணம், இவரின் அண்ணன் சுகுமாறன். அவர், 1946-ல் நடைபெற்ற புன்னப்புரா - வயலாறு புரட்சியில் பங்கேற்றவர். அவரால் ஈர்க்கப்பட்டு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார் கௌரியம்மா.

திருவாங்கூர் - கொச்சி சட்டமன்றத்துக்கு 1952, 1954-ம் ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் கௌரிம்மா. அதன் பிறகு 1960, 1967, 1970, 1982, 1987, 1991, 2001 எனப் பலமுறை எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

1957-ல், உலகிலேயே முதன்முறையாக ஜனநாயக வழியில் அமைந்த முதல் கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்கிற பெருமையைப் பெற்ற இ.எம்.எஸ் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தபோதுதான், புரட்சிகரமான நிலச்சீர்திருத்த மசோதாவை அறிமுகம் செய்தார். அதே அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த டி.வி.தாமஸைக் கரம்பிடித்த கௌரியம்மா, 1964-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாகப் பிரிந்தபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தம்மை இணைத்துக்கொண்டார்.

1994-ம் ஆண்டு, கட்சி விரோத நடவடிக்கையின் பேரில் கௌரியம்மாவை வெளியேற்றியது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. அது, கேரள அரசியலில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மக்கள் செல்வாக்கு மிகுந்த கௌரியம்மா, ‘ஜனாதிபத்ய சம்ரஷனா சமிதி’ (மக்களாட்சிப் பாதுகாப்பு பேரவை) என்கிற புதிய கட்சியைத் தொடங்கினார். அதன் பிறகு ஏ.கே.அந்தோணி மற்றும் உம்மன் சாண்டி தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி அரசுகளில் அமைச்சராக இருந்தார்.

1957-ல் இ.எம்.எஸ் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றவர்களில் தற்போது உயிருடன் இருப்பது கௌரியம்மா மட்டுமே. 100 வயதைக் கடந்த நிலையிலும், தினமும் காலையில் எழுந்து செய்தித்தாள்களை வாசிக்கும் கௌரியம்மா, கேரளா மக்களுக்கு வழிகாட்டியாக இருந்துவருகிறார்.

Vikatan