Published:Updated:

``ஏவி பாலமா, காவிப் பாலமா?” - சர்ச்சையில் மதுரை மேம்பாலம்

``ஏவி பாலமா, காவிப் பாலமா?” - சர்ச்சையில் மதுரை மேம்பாலம்
``ஏவி பாலமா, காவிப் பாலமா?” - சர்ச்சையில் மதுரை மேம்பாலம்

``ஏவி பாலமா, காவிப் பாலமா?” - சர்ச்சையில் மதுரை மேம்பாலம்

130 ஆண்டுக்காலப் புராதனம் மிகுந்த மதுரை ஏ.வி பாலத்தில், புதிய வண்ணம் பூசும் பணிகள் கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகின்றன. நாள்தோறும் ஆற்றைக் கடந்துசெல்வோர் பாலம் வண்ணமயமாகத் திகழ்வதாகக் கூறினாலும், பாலத்துக்குக் காவி பெயின்ட் அடிக்கிறார்கள் எனப் பலர் விமர்சித்து வருகின்றனர். உள்ளூர் பாரதிய ஜனதாவின் வற்புறுத்தலால்தான் அப்படிச் செய்யப்பட்டு வருவதாக, சமூக வலைதளங்களிலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டுவருகிறது. இப்போது எதற்காக இந்த வண்ணப் பூச்சுப் பணிகள்? விசாரித்தோம்.

இதுகுறித்து மதுரைப் புறநகர் பாரதிய ஜனதா தலைவர் சுசீந்திரன், “காவி பெயின்ட்டா, அதிகாரிங்க எதுக்கு அப்படிச் செய்யப்போறாங்க. அதிகாரிங்க, அவங்களோட பணியைச் செய்யுறாங்க. அவ்வளவுதான். இந்த நிறத்துல பெயின்ட் அடிக்கச் சொல்லி நாங்க எதுக்கு அதிகாரிகளை நிர்பந்திக்கணும்? இதை நிர்ப்பந்திக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்ல. ஆனா, மக்கள் நலனுக்கு எது சரியோ அதைச் செய்வோம்” என்றனர்.

மதுரை மாநகர் பா.ஜ.க தலைவர் சசிராமன், “இப்போ, பாலத்துக்குக் காவி வண்ணம் அடிச்சாத்தான் என்ன, எல்லாமே வண்ணம்தானே. கறுப்புனா ஒண்ணுமே இல்லைனு அர்த்தம். எந்த வண்ணமா இருந்தா என்ன? எல்லாம் கடவுள் தந்ததுதான். அழகர் வந்து இறங்குற பகுதியில இருக்கும் இந்தப் பாலம் காவிநிறமா இருந்தா சிறப்புத்தானே” என விந்தையாகப் பதில் அளித்தார்.

``ஏவி பாலமா, காவிப் பாலமா?” - சர்ச்சையில் மதுரை மேம்பாலம்

பொதுமக்களிடம் கேட்டதில், “பாலத்துடைய பலமும் பழைமையும் கெடாமல் இருந்தாலே போதும். வர்ணம் பூசுகிறதைவிட, பாலத்தை இன்னும் பலப்படுத்த வேண்டியது ரொம்ப முக்கியம். பாலத்துல பிளாட்பார உயரத்துக்கு ரோடு வந்திருச்சு. அதை எடுக்க வேண்டும். பாலத்துல எடை சேர்க்கக் கூடாது. அது ஸ்திரத்தைக் காலிபண்ணிடும். வளைவுகள், கைப்பிடிச் சுவர்கள், தார்ச்சாலை இப்படி எல்லாத்தையும் புனரமைக்கணும். அதையெல்லாம் விட்டுட்டு பெயின்ட் அடிக்கிறேனு சொல்றாங்க. எது எப்படியோ, பாலத்தை பாதுகாத்தா சரி” என்றனர்.

``ஏவி பாலமா, காவிப் பாலமா?” - சர்ச்சையில் மதுரை மேம்பாலம்

நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பணியாளர் சீதாராமன் கூறுகையில், “ரொம்பப் பழைமையான பாலம்ங்கிறதால நிறைய இடங்கள்ல பெயர்ந்து சிதிலமடைஞ்சிருக்கு. அதை அங்கங்க சரிசெஞ்சு அப்படியே புதிய பெயின்ட் அடிக்கிறோம். இன்னும் ஒரு மாதத்துல வேலை முடியும். இந்தப் பெயின்ட் பணிக்கான திட்ட மதிப்பீடு, 10 லட்ச ரூபாய். பாலத்துக்குப் பொருந்தும் வகையில் சில வண்ணங்களைத் தேர்வுசெஞ்சு பாலங்களின் ஒவ்வொரு பகுதியா அடிச்சுப் பார்த்தோம். அதுல ஒண்ணுதான் தற்போது பாலத்துல அடிச்சிருக்கிற இந்தக் காவி வண்ணம். தேர்வு செய்த சில வண்ணங்கள்ல, ஒரு வண்ணத்தைத்தான் பாலத்துக்கு அடிக்கப்போறோம். அப்படி, பாலத்துக்காக நாங்க தற்போது செலக்ட் செஞ்சிருப்பது, பொன்னிற மஞ்சள் வண்ணம்தான். அடுத்த மாசம் இந்த மஞ்சள் வண்ணத்துல பாலம் சிறப்பா, புதுசுபோலத் தெரியும். மத்தபடி, கலர் செலக்‌ஷனுக்காக அடிச்ச ஆரஞ்சு நிறத்தைத்தான் காவினு மக்கள் தவறா புரிஞ்சுக்கிட்டாங்க” என்றார், மிகத் தெளிவாக.

அவரிடம், பாலத்தின் பராமரிப்பு குறித்து கேட்டோம். அதற்குப் பதிலளித்த அவர், “பாலத்தின் ஒரு ஆர்ச் மட்டும்தான் அரிச்சுப்போய் கிடக்கு. பெயின்ட் வேலை முடிஞ்ததும் அந்தப் பராமரிப்புப் பணிகள் தொடங்கிடும்” என்றார்.

”இவ்வளவு நாள்களாக நீலநிறத்தில் இருந்த இந்திய கிரிக்கெட் அணியே ஒரே இரவில் ஆரஞ்சு நிறத்துக்கு மாற்றப்படும்போது. இந்தப் பாலமெல்லாம் பெரிய விஷயமா” என்று நகைப்பாகப் கருத்து கூறிவிட்டுக் கடக்கின்றனர் மதுரை மக்கள்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு