Published:Updated:

` அறிவாலயத்தால் அசிங்கப்பட்டோம்; அவமானப்பட்டோம்!' - காங்கிரஸை கூர்தீட்டுகிறதா அ.தி.மு.க?

` அறிவாலயத்தால் அசிங்கப்பட்டோம்; அவமானப்பட்டோம்!'  - காங்கிரஸை கூர்தீட்டுகிறதா அ.தி.மு.க?
` அறிவாலயத்தால் அசிங்கப்பட்டோம்; அவமானப்பட்டோம்!' - காங்கிரஸை கூர்தீட்டுகிறதா அ.தி.மு.க?

கராத்தே தியாகராஜனின் பேச்சு தொடர்பாக, டெல்லிக்கும் தகவல் அனுப்பப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் முகாமுக்குள் `ஆன்டி தி.மு.க' நிலைப்பாட்டை சிலர் எடுத்துள்ளனர். இதனால் கூட்டணி உறவில் விரிசல் ஏற்படத் தொடங்கியிருக்கிறது.

தி.மு.க - காங்கிரஸ் கூட்டணிக்குள் கராத்தே தியாகராஜன் கொளுத்திப் போட்ட சரவெடியை நீர்த்துப் போக வைக்கும் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.`நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு ஸ்டாலின் ஆதரவு அலை காரணமல்ல, மோடி எதிர்ப்பலையால்தான் வென்றோம்' என விரிசலை அதிகப்படுத்தும் வேலைகளைத் தொடர்ந்து செய்து வருகின்றனர் சில காங்கிரஸ் நிர்வாகிகள். 

` அறிவாலயத்தால் அசிங்கப்பட்டோம்; அவமானப்பட்டோம்!'  - காங்கிரஸை கூர்தீட்டுகிறதா அ.தி.மு.க?

தமிழகச் சட்டமன்றம் வரும் 28-ம் தேதி தொடங்கி ஜூலை 30 வரை நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தக் கூட்டத் தொடரில் தி.மு.க கொண்டு வர இருக்கும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஜூலை 1-ம் தேதி எடுத்துக்கொள்ள இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் சபாநாயகர் தனபால். `இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெறுமா?' என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும், ` தேர்தல் வராமலேயே ஆட்சி மாற்றம் நடக்கும்' என ஸ்டாலின் கூறியதை நம்பிக்கையோடு உற்று நோக்குகின்றனர் உடன்பிறப்புகள். சட்டசபையில் அ.தி.மு.க-வை எதிர்கொள்வதைவிடவும் காங்கிரஸ் கட்சியின் சில நிர்வாகிகளை எதிர்கொள்வதுதான் தி.மு.க தலைவருக்குப் பெரும் சவாலாக இருக்கிறது. காரணம், கடந்த சில நாள்களாக அறிவாலயம் மீது கோபத்தைக் காட்டிய சில காங்கிரஸ் புள்ளிகள்தான். `இவர்களின் பின்னணியில் அ.தி.மு.க இருக்கிறதோ?' என்ற சந்தேகமும் சத்தியமூர்த்தி பவன் வட்டாரத்தில் எழுந்திருக்கிறது. 

` அறிவாலயத்தால் அசிங்கப்பட்டோம்; அவமானப்பட்டோம்!'  - காங்கிரஸை கூர்தீட்டுகிறதா அ.தி.மு.க?

தென்சென்னை மாவட்டத் தலைவர் கராத்தே தியாகராஜன், கடந்த 21-ம் தேதி சத்தியமூர்த்தி பவனில் பேசும்போது, ` கடந்த முறை உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவித்த பிறகு (2016) தி.மு.க-வோடு பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது திருநாவுக்கரசரோடு அறிவாலயம் சென்றிருந்தோம். எங்களிடம் பேசிய ஸ்டாலின், `200 வார்டுகளில் 14 வார்டுகளைத்தான் கொடுக்க முடியும். அதுவும் ஒரு தொகுதிக்கு 25 லட்சம் எனக் கொடுத்தால்தான் சீட்டைக் கொடுப்பேன்' என்றார். சீட்டுக்குப் பணம் கேட்டதால் அறிவாலயத்தில் அசிங்கப்பட்டு அவமானப்பட்டு வெளியே வந்தோம். மறுபடியும் அந்த அவமானமும் அசிங்கமும் வேண்டாம் என்பதுதான் என்னுடைய விருப்பம். உள்ளாட்சித் தேர்தலில் நாம் தனித்து நிற்க வேண்டும். அப்படி உங்களால் தனித்து நிற்க முடியவில்லை என்றால் தென்சென்னையில் நான் தனித்து நிற்பதற்கு அனுமதி கொடுங்கள்.

என்னுடைய மாவட்டத்துக்குட்பட்டு 35 கவுன்சிலர்கள் தொகுதிகள் வருகின்றன. தி.மு.க அல்லாத கூட்டணியை உருவாக்கும் சாமர்த்தியம் எனக்கு இருக்கிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக வருவதற்கே என் பெயரை ஒருமுறை பரிந்துரை செய்யும் அளவுக்குச் செல்வாக்கு இருந்தது. தி.மு.க மாவட்டச் செயலாளர்களை எப்படி எதிர்கொள்வது என்று எனக்குத் தெரியும். அவர்களது தந்திரம் எல்லாம் என்னிடம் எடுபடாது. என்னுடைய விருப்பப்படி செயல்படவிட்டால், 35 வார்டுகளில் 15 பேரை வெற்றி பெறவைத்து உங்கள் முன்னால் கொண்டு வந்து நிறுத்துகிறேன்' எனப் பேசி அமர்ந்தார். அவரது இந்தப் பேச்சு தி.மு.க முகாமில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

` அறிவாலயத்தால் அசிங்கப்பட்டோம்; அவமானப்பட்டோம்!'  - காங்கிரஸை கூர்தீட்டுகிறதா அ.தி.மு.க?

இதன் தொடர்ச்சியாக, `காங்கிரஸைப் பல்லாக்கில் ஏற்றிச் சுமந்தது போதும்' எனக் கடுமையாக விமர்சித்தார் திருச்சி தி.மு.க மாவட்டச் செயலாளர் கே.என்.நேரு. தன்னுடைய விமர்சனத்துக்கு அடுத்த சில மணி நேரங்களில் விளக்கத்தையும் அளித்தார். ` தலைவர் கலைஞரை விமர்சனம் செய்தவர்கள் எல்லாம் அங்கே பதவியில் இருக்கிறார்கள். திருச்சி மாநகராட்சி தேர்தலில் இரண்டு இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தாலும்கூட மேயர் பதவியைக் கொடுத்துவிட்டு நாங்கள் கைக்கட்டி நின்றிருந்தோம். நான் கூறிய தகவல், தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது' என்றார் நிதானமாக. 

கராத்தே தியாகராஜனின் கருத்து குறித்து நம்மிடம் பேசிய காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர், `` தி.மு.க உறவில் விரிசலை ஏற்படுத்தும் பணிகளைச் சிலர் சிறப்பாகச் செய்து வருகின்றனர். இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநிலத் தலைவர் அழகிரியிடம் வலியுறுத்திக் கூறியிருக்கிறோம். ப.சிதம்பரத்தின் ஆதரவு இருப்பதால்தான் சிலர் வெளிப்படையாக விமர்சனம் செய்து வருகின்றனர். எதிர் விமர்சனம் செய்ததற்கு தி.மு.க மாவட்டச் செயலாளர் நேருவும் விளக்கம் கொடுத்துவிட்டார். ஆனாலும், `மோடி எதிர்ப்பலையால்தான் 37 தொகுதிகளில் வெற்றி கிடைத்தது. தி.மு.க ஆதரவு மனநிலையில் மக்கள் இருந்தார்கள் என்றால் 22 தொகுதிகளிலும் ஸ்டாலின் வெற்றி பெற்றிருக்கலாமே...' என முகநூலில் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் பதிவு செய்திருக்கிறார். 

` அறிவாலயத்தால் அசிங்கப்பட்டோம்; அவமானப்பட்டோம்!'  - காங்கிரஸை கூர்தீட்டுகிறதா அ.தி.மு.க?

உள்ளாட்சித் தேர்தல் தேதிக்கான அறிவிப்பு வெளிவர இருக்கும் நிலையில் இதுபோன்ற தன்னிச்சையான பேச்சுகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தலைவரிடம் கூறியிருக்கிறோம். கராத்தே தியாகராஜனின் பேச்சு தொடர்பாக, டெல்லிக்கும் தகவல் அனுப்பப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் முகாமுக்குள் `ஆன்டி தி.மு.க' நிலைப்பாட்டைச் சிலர் எடுத்துள்ளனர். இதனால் கூட்டணி உறவில் விரிசல் ஏற்படத் தொடங்கியிருக்கிறது. இதன் பின்னணியில் அ.தி.மு.க-வின் தலையீடு இருக்கிறதோ என்ற சந்தேகமும் எங்களுக்கு இருக்கிறது. ஏற்கெனவே, நாங்குநேரி தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக தி.மு.க-வோடு முரண்பாடு ஏற்பட்டது. இப்போது உள்ளாட்சித் தேர்தலில் வந்து நிற்கிறது. அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சமும் மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் இருக்கிறது" என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். 
 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு