Published:Updated:

ஸ்டாலினின் வெற்றியா... ஓ.எம்.ஜி-யின் வெற்றியா? சர்ச்சையைக் கிளப்பிய மாஃபா பாண்டியராஜன்

ஆ.பழனியப்பன்

``இந்தக் கருத்தை நான் சொல்லி இரண்டு வாரங்கள் ஆகின்றன. இத்தனை நாள்களாக யாரும் அதை மறுக்கவில்லையென்றால், நான் சொன்ன அந்தக் கருத்துகளை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்றுதானே அர்த்தம்."

ஸ்டாலினின் வெற்றியா... ஓ.எம்.ஜி-யின் வெற்றியா? சர்ச்சையைக் கிளப்பிய மாஃபா பாண்டியராஜன்
ஸ்டாலினின் வெற்றியா... ஓ.எம்.ஜி-யின் வெற்றியா? சர்ச்சையைக் கிளப்பிய மாஃபா பாண்டியராஜன்

"நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்டமன்ற இடைத்தேர்தலிலும் தி.மு.க பெற்ற வெற்றிக்குக் காரணம் தி.மு.க-வோ, அதன் தலைவர் ஸ்டாலினோ அல்ல... அந்த வெற்றிக்குக் காரணம், ஓ.எம்.ஜி நிறுவனம்தான்" என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்த கருத்து, சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. அவரது கருத்துக்குப் பதிலடி கொடுத்திருக்கிறார், தி.மு.க-வின் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்.

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் விவாத நிகழ்ச்சியில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பங்கேற்றார். அப்போது, தி.மு.க-வின் வெற்றிகுறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை அவர் தெரிவித்தார். அதற்குக் கடுமையாக எதிர்வினையாற்றியிருக்கிறார் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். அவரிடம் நாம் பேசியபோது, ``தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், `நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் வெற்றிபெற்றது தி.மு.க-வோ, தலைவர் மு.க.ஸ்டாலினோ அல்ல; ஓ.எம்.ஜி நிறுவனம்தான்’ என்று கூறியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது” என்றார்.

ஸ்டாலினின் வெற்றியா... ஓ.எம்.ஜி-யின் வெற்றியா? சர்ச்சையைக் கிளப்பிய மாஃபா பாண்டியராஜன்

மேலும் அவர், ``மாஃபா பாண்டியராஜன் பேசிய அந்தக் காணொலி, திட்டமிட்டுச் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்படுகிறது. ஓ.எம்.ஜி என்ற நிறுவனத்தில் 250 ஊழியர்கள் பணிபுரிவதாகவும், எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகள் மற்றும் முடிவுகளை அந்நிறுவன ஊழியர்கள் ஏதோவொரு வகையில் கட்டுப்படுத்துவதாகவும், அவர் நிறுவ முயற்சி செய்துள்ளார். அமைச்சர் பாண்டியராஜனின் உள்நோக்கம் மற்றும் நேர்மையற்ற தன்மையை இந்தப் பேச்சு வெளிப்படுத்துகிறது.

அமைச்சரின் பேச்சு முற்றிலும் பொய்யாக இருப்பதால், அவர் தாமாகவே விரும்பி முன்வந்து பொய்களைப் பேசுகிற நபர் என்றோ, தொலைக்காட்சி உள்ளிட்ட பொதுத்தளங்களில் பொய்யான தகவல்களை வேண்டுமென்றே பேசுபவர் என்றோ நாம் கருத வேண்டியிருக்கிறது. அதுமட்டுமல்ல, அவர் திணிக்க முற்படும் பொய்களில் மிகவும் கொடுமையானது, செயல்படாத கற்பனையான ஒரு நிறுவனம்தான், தி.மு.க கூட்டணியின் வெற்றிக்குக் காரணம் என்று சொல்லியிருப்பது.

ஸ்டாலினின் வெற்றியா... ஓ.எம்.ஜி-யின் வெற்றியா? சர்ச்சையைக் கிளப்பிய மாஃபா பாண்டியராஜன்

மேலும், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகள் மற்றும் அறிக்கைகளுக்கு அந்த நிறுவனம்தான் காரணம் என்றும் தெரிவித்திருப்பது, இன்னும் கொடுமையானது, உண்மைக்கு மாறானது.

ஏதோ சில ஊழியர்கள் கணினிகளை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த தமிழக மக்களையும் ஏமாற்ற முடியும் என அமைச்சர் முன்வைக்கும் கருத்தானது, முதலில் தமிழக வாக்காளர்களை அவமதிப்பதற்குச் சமம். அது மட்டுமல்ல, பாண்டியராஜன் சார்ந்துள்ள கட்சியும், அந்தக் கூட்டணியும், தமிழக மக்களால் புறக்கணிக்கப்பட்டு, மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டதற்கான உண்மையான காரணத்தை, பொய்கள் நிறைந்த அவரது பேச்சே வெளிப்படுத்துகிறது.

`250 ஊழியர்களைக் கொண்ட ஓ.எம்.ஜி என்கிற நிறுவனம், நடந்துமுடிந்த தேர்தலில் தி.மு.க-வின் தேர்தல் பரப்புரையில் பணியாற்றியது’ என்று பாண்டியராஜன் பொய் சொல்கிறார். அப்படியொரு நிறுவனம் இயங்கவும் இல்லை, அதில் எந்த ஊழியரும் பணிபுரியவும் இல்லை. எங்கள் கழகத்தின் எதிர்காலத் திட்டமிடல் மற்றும் கழகம் பயணிக்க வேண்டிய பாதை ஆகியவற்றைத் தீர்மானிப்பவர் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின்தான். அமைச்சர் பாண்டியராஜனின் இந்த அபாண்டமான குற்றச்சாட்டு, தீய எண்ணத்துடன் எங்கள் தலைவரைக் களங்கப்படுத்தும் முயற்சி. இது கண்டிக்கத்தக்கது” என்றார்.

ஸ்டாலினின் வெற்றியா... ஓ.எம்.ஜி-யின் வெற்றியா? சர்ச்சையைக் கிளப்பிய மாஃபா பாண்டியராஜன்

இதுதொடர்பாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜனிடம் நாம் கேட்டபோது, ``இந்தக் கருத்தை நான் சொல்லி இரண்டு வாரங்கள் ஆகின்றன. இத்தனை நாள்களாக யாரும் அதை மறுக்கவில்லையென்றால், நான் சொன்ன அந்தக் கருத்துகளை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்றுதானே அர்த்தம். நான் பேசியபோது, அந்த மேடையில் இருந்த தி.மு.க-வைச் சேர்ந்த கோவி.செழியன் எதுவும் சொல்லவில்லை. ஆனால், திடீரென இப்போது தி.மு.க எம்.எல்.ஏ பழனிவேல் தியாகராஜன் அதை மறுத்துப் பேசுகிறார். இதை வைத்தே நான் சொன்ன கருத்துகள் எந்த அளவுக்கு உண்மை என்பது புரியும்.

ஒரு நிறுவனம் திட்டமிட்டுக் கொடுத்தபடி செயல்படுவதை நான் தவறு என்று சொல்லவில்லை. பி.ஜே.பி உட்பட பலரும் அதைச் செய்கிறார்கள். அதை நான் நெகட்டிவ் ஆகக்கூடச் சொல்லவில்லை. இந்தத் தேர்தலில் தி.மு.க பெற்ற வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம் என்பதைச் சொன்னேன். அவ்வளவுதான். அவர் சொல்வதுபோல ஓ.எம்.ஜி. நிறுவனம் என்கிற ஒன்றே இல்லை என்றால், அதைச் சொல்லிவிட்டுப்போங்கள். அதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், எனக்கு மிகவும் நண்பரான பழனிவேல் தியாகராஜன், தனிப்பட்ட முறையில் என்னைக் குறிவைத்து தாக்குவது ஏன் என்று புரியவில்லை” என்றார்.

Vikatan