Published:Updated:

``இனி பாட்டாளி மக்கள் கட்சிக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம்!” - தர்மபுரி எம்.பி.செந்தில் குமார்

அன்புமணி மற்றும் பியுஷ் கோயல் இருவரும் அப்பணிக்கான அடிக்கல்லை நாட்டியிருக்கிறார்கள். அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது, நிலம் கையகப்படுத்த மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்று விரைவில் பணியைச் செய்துமுடிப்போம்.

``இனி பாட்டாளி மக்கள் கட்சிக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம்!” - தர்மபுரி எம்.பி.செந்தில் குமார்
``இனி பாட்டாளி மக்கள் கட்சிக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம்!” - தர்மபுரி எம்.பி.செந்தில் குமார்

பாட்டாளி மக்கள் கட்சியின் செல்வாக்கு மிக்க தொகுதியாகக் கருதப்பட்ட தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதியில், 70,300 வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்டார் வேட்பாளரான அன்புமணி ராமதாஸை வீழ்த்தி, உதயசூரியனை உதிக்கச் செய்துள்ளார் முதல்முறை வேட்பாளரான தி.மு.க.செந்தில்குமார். சந்தித்த முதல் தேர்தலிலேயே வெற்றிவாகை சூடி நாடாளுமன்றத்துக்குச் சென்ற செந்தில்குமாரைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

`` `பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெற்றிபெறப் போகிறார்’ என்றே அனைத்து ஊடகங்களிலும் கருத்துக்கணிப்புகள் வெளியாகின. அதைப் பொய்யாக்கும் வகையில், ஜெயித்தது எப்படியிருந்தது?"

``கருத்துக்கணிப்புகள் எப்படியிருந்தால் என்ன? எங்களுடைய வெற்றி என்பது ஏற்கெனவே முடிவுசெய்யப்பட்டதுதான். தேர்தல் பிரசாரத்தில் மக்கள் மத்தியில் உற்சாக வரவேற்பு மற்றும் ஆதரவு, அவர்களைக் காட்டிலும் எங்களுக்கு அதிகமாகவே இருந்தது. வாக்கு எண்ணிக்கையின்போதும் முதல் 8 சுற்றுகள் மட்டுமே முன்னிலையில் இருந்தார். மற்ற அனைத்துச் சுற்றுகளிலும் நாங்களே முன்னிலை வகித்தோம்”.

``இனி பாட்டாளி மக்கள் கட்சிக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம்!” - தர்மபுரி எம்.பி.செந்தில் குமார்

``மறு வாக்குப் பதிவுக்கான காரணம் என்ன? அதனால் வாக்கு வித்தியாசம் குறைந்துள்ளதா?"

``நத்தமேடு, சிட்டிலிங்கி போன்ற கிராம மக்களுக்குக் கைகளில் வெறுமனே மை மட்டும் வைத்து பிரமுகர்கள் அவர்களுக்குப் பிடித்த வேட்பாளர்களுக்கு வாக்கினைப் பதிவுசெய்தது, பூத்களில் பூத் பிரமுகர்கள் உள்ளே செல்லவிடாமல் தடுத்தது, கேமராமேன்கள் தாக்கப்பட்டது எனச் சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் அரங்கேறின. ஜனநாயகக் கடமையான வாக்குரிமையை உங்களுக்குத் திரும்பப் பெற்றுத் தருவோம்; நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் சுதந்திரமாக வாக்களியுங்கள்; உங்கள் வாக்கினைத் திரும்பப் பெற்றுத் தருவது என்னுடைய கடமை என்று அம்மக்களிடத்தில் தெரிவித்துவிட்டு மறுவாக்குப் பதிவு நடத்தக்கோரி வேண்டுகோள் விடுத்ததையடுத்து, தேர்தல் ஆணையம் நடத்த அனுமதி வழங்கியது. வாக்கு வித்தியாச அளவில் பா.ம.க-வுக்கு 500 வாக்குகளும் தி.மு.க-வுக்கு 1,500 வாக்குகளும் கிடைத்தன. இனி, ஒரு தடவைகூடப் பாட்டாளி மக்கள் கட்சிக்கு விட்டுக்கொடுக்கக் கூடாது. படித்த இரு மருத்துவர்கள் சட்டத்திற்குப் புறம்பான செயல்களுக்கு ஆதரவாகச் செயல்படுவது வெட்கக்கேடான விஷயம். அவங்களுக்கான பதிலடிதான் இது. `முதன்முறையா இப்போதுதான் நாங்க வாக்கு மெஷினையே பார்க்கிறோம்' என்று சில மக்கள் சொன்னபோதுதான், நாங்கள் செய்துமுடித்தது எத்தனை பெரிய காரியம் எனத் தெரிந்தது”.

``மக்களுக்கு அளிக்கப்பட்ட கோரிக்கைகளை, எப்படி நிறைவேற்ற இருக்கிறீர்கள்?"

``தர்மபுரி சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற மத்தியில் ஆட்சி அமைத்திருந்தால்தான் முடியும் என்றில்லை. மக்களுக்காகச் செய்ய வேண்டும் என்ற மனமிருந்தால் போதும். எப்படி வேண்டுமானாலும் செய்யலாம்".

``அனைத்துக் கட்சித் தலைவர்களும் பிரசாரத்தில் ஈடுபட்ட நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அந்தத் தொகுதியில் பிரசாரம் செய்யாதது ஏன்?"

``அனைத்துச் சமூக மக்களும் என்னைப் பொது வேட்பாளராகத்தான் கருதினார்கள். வெற்றிபெற வைத்திருக்கிறார்கள். அதைத் தவிர, தொல்.திருமாவளவன் வராதது எனக்கு ஒரு பெரிய விஷயமாகத் தோன்றவில்லை".

``இனி பாட்டாளி மக்கள் கட்சிக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம்!” - தர்மபுரி எம்.பி.செந்தில் குமார்

``அரசியலுக்கு எப்படி வந்தீர்கள்?"

``என் தாத்தா D.N வடிவேலு ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்திலிருந்து தர்மபுரியை, தனி மாவட்டமாகக் கொண்டுவர முக்கியக் காரணமாக இருந்தார். அவருடைய முயற்சியால் மட்டுமே கிருஷ்ணகிரிக்குப் போக வேண்டிய தலைநகர் அந்தஸ்து, தர்மபுரிக்குக் கிடைத்தது. என் குடும்பத்தில் யாரும் அரசியலுக்கு வரத் தயாராக இல்லை. என் தாத்தாவுடைய பெயரை அவரோடு பேரனா நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக  5 வருடங்களுக்கு முன்பு திராவிட முன்னேற்றக் கழகத்தில் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டேன். பின்னர் மாவட்ட அளவில் இளைஞர் அணியில் பொறுப்பு கிடைத்தது. தற்போது தேர்தலில் போட்டியிட்டு, வெற்றியையும் பெற்றிருக்கிறேன்”.

``முதல் முறையாகச் சந்தித்த தேர்தல் அனுபவம் எப்படியிருந்தது?"

"வேட்பாளராக அறிவித்ததிலிருந்து வாக்கு எண்ணிக்கை வரையிலுமே எந்தவித பதற்றமோ, பயமோ வரவில்லை. இளம்கன்று பயமறியாது என்பதாலோ, என்னமோ தெரியவில்லை. தேர்தல் பயணம் நிறைய சந்தோஷமாக இருந்தது. அனைத்துப் பகுதி மக்களிடையேயும் எழுச்சியுடன்கூடிய உற்சாக வரவேற்பு கிடைத்தது".

``தர்மபுரி மக்களின் 78 ஆண்டுக்கால கனவான தர்மபுரி - மொரப்பூர் ரயில் பாதை அமைக்கும் திட்டத்தைச் செய்வீர்களா?"

``கண்டிப்பாக. அன்புமணி மற்றும் பியுஷ் கோயல் இருவரும் அப்பணிக்கான அடிக்கல்லை நாட்டியிருக்கிறார்கள். அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது, நிலம் கையகப்படுத்த மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்று விரைவில் பணியைச் செய்துமுடிப்போம். அ.தி.மு.க., பி.ஜே.பி தலைவர்கள் யாரிடம் வேண்டுமானாலும் கோரிக்கைகள் வைத்து இத்திட்டம் நிறைவேற்றப்படும். அதுமட்டுமன்றி, அன்புமணியின் கோரிக்கை என்பதைத் தாண்டி மக்களுக்கு நன்மை பயக்கும் அனைத்துத் திட்டங்களும் நிறைவேற்றப்படும்”. 

Vikatan