Published:Updated:

பெயர்: வி.பி.சிங்.. தொழில்: சமூகநீதி காப்பது...ஊழல் ஒழிப்பு..! பிறந்த தின சிறப்புப் பகிர்வு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பெயர்: வி.பி.சிங்.. தொழில்: சமூகநீதி காப்பது...ஊழல் ஒழிப்பு..! பிறந்த தின சிறப்புப் பகிர்வு
பெயர்: வி.பி.சிங்.. தொழில்: சமூகநீதி காப்பது...ஊழல் ஒழிப்பு..! பிறந்த தின சிறப்புப் பகிர்வு

உத்தரப்பிரதேசத்தைச் சார்ந்த ஒருவர், இந்தியப் பிரதமராவது என்பது இயல்பான அரசியல் நிகழ்வுதான். ஆனால், அதற்காகத் தமிழகம் உழைப்பது என்பதுதான் இயல்புக்கு மாறானது. 1989 நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய முன்னணியைக் கட்டமைத்து ஆட்சியையும் அமைத்துக் காட்டினார், வி.பி.சிங். 

விஸ்வநாத் பிரதாப் சிங். அனைவரும் அறிந்தவகையில் சொல்ல வேண்டுமென்றால் வி.பி.சிங். எப்போதும் வட மாநிலத் தலைவர்களைக் கொஞ்சம் விளக்கிவைத்தே பார்க்கும் தமிழகம், கடந்த 30 ஆண்டுகளாகத் தூக்கிவைத்துக் கொண்டாடும் வடக்கத்திய தலைவர் வி.பி.சிங் ஒருவர் மட்டுமே. அதற்குக் காரணங்கள் பல உண்டு. அவற்றில் முதன்மையானது, அவர் பேசிய சமூக நீதி அரசியல்தான். ஊழலுக்கு எதிராகக் குரல் எழுப்புபவர்கள் சமூகநீதி சார்ந்த அரசியலில் பெரும்பாலும் கவனம் செலுத்த மறுப்பார்கள். ஆனால், ஊழல்... சமூக நீதி அரசியல் என இவை இரண்டையும் ஒரே தளத்தில் நிறுத்தி அரசியல் களம்கண்டவர் வி.பி.சிங். அதனால்தான் தமிழக அரசியல் களம் வி.பி.சிங்கை மறவாமல் புகழ்ந்து பாராட்டுகிறது. இன்றும் கொண்டாடுகிறது.

வி.பி.சிங், அரண்மனை போன்ற 'வீட்டில்' வளர்ந்தவர் இல்லை... அரண்மனையிலேயே வளர்ந்தவர். ஆம், உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு ராஜ குடும்பத்தால் தத்தெடுத்து வளர்க்கப்பட்டவர், வி.பி.சிங். அவருடைய தனிப்பட்ட வாழ்வென்னவோ, அரச குடும்பத்தின் வாழ்வியலாக இருக்கலாம். ஆனால், அவரின் பொதுவாழ்வு, அவர் பேசியது, உழைத்தது; வாழ்ந்தது எல்லாம் ஏழை எளிய, தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே அமைந்தவை. அரசக் குடும்பத்தில் பிறந்ததால், அவரின் அரசியல் பயணம் எளிமையானதாக அமைந்துவிடவில்லை. அவரின் உழைப்பு, அவரை உச்சத்தில் நிறுத்தியது. வி.பி.சிங்கின் நேர்மையும் அவர் கொண்டிருந்த கொள்கை உறுதியும் அவரின் அரசியல் பயணத்தில் பெரும் கடினமான பாதைகளை அமைத்துத் தந்தன. அவற்றையெல்லாம் தனக்கானதாக்க விரும்பியே அவற்றை ஏற்றுக்கொண்டு மக்களுடன் நின்றார்; மக்களுக்காக நின்றார். 

வி.பி.சிங்கின் அரசியல் வாழ்விற்கு அடித்தளமிட்டது, அலகாபாத்தில் அவருடைய கல்லூரிக் காலம்தான். கல்லூரி மாணவத்  தலைவராகத் தேர்தலில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே அலகாபாத்தான் பிற்காலத்தில் அவருடைய அரசியல் வாழ்வில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்த இடமாகவும் அமைந்தது. இந்திய அரசியல் வரலாற்றை எழுதும் எவரும், எமர்ஜென்சியைக் கடந்துவிட்டுச் சென்றுவிட முடியாது. எமர்ஜென்சி காலகட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும், பத்திரிகைகளும் பாதிக்கப்பட்டன. ஆனாலும், அந்தச் சூழலிலும் சிறப்பாகச் செயல்பட்ட துறைகளில் வர்த்தகத் துறையும் ஒன்று. பதுக்கல் ஒழிக்கப்பட்டதன் வாயிலாக, விலைவாசி அரசின் கட்டுப்பாட்டிற்குள் இருந்தது. அப்போது வர்த்தகத் துறை இணை அமைச்சராக இருந்தவர் வி.பி.சிங். அதன் பிறகான காலங்களில் இந்திரா காந்தியின் (மறைந்த முன்னாள் பிரதமர்) நம்பிக்கைக்குரிய தலைவராக உருவாகினார், வி.பி.சிங். இன்று பிரியங்கா காந்தியை உத்தரப்பிரதேசத்தில் கட்சியை வளர்க்க முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அனுப்பிவைத்துள்ளது போல், அன்று இந்திரா காந்தியால் உத்தரப்பிரதேசத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டவர் வி.பி.சிங்.

பெயர்: வி.பி.சிங்.. தொழில்: சமூகநீதி காப்பது...ஊழல் ஒழிப்பு..! பிறந்த தின சிறப்புப் பகிர்வு

1980-களில் உத்தரப்பிரதேசத்தில் நிறைய கொள்ளைச் சம்பவங்கள் நடந்தேறிவந்தன. அவற்றின் தலைமையிடமாகத் திகழ்ந்தது சம்பல் பள்ளத்தாக்கு. அந்தத் தறுவாயில், நடந்த உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் வி.பி.சிங் தலைமையில் களம்கண்டது, காங்கிரஸ். வி.பி.சிங் மீது காங்கிரஸ் தலைமைகொண்டிருந்த நம்பிக்கைக்குச் சற்றும் குறையாமல் உத்தரப்பிரதேச மக்களும் நம்பிக்கை  கொண்டிருந்தனர். ``காங்கிரஸ் ஆட்சி அமையும்பட்சத்தில் உத்தரப்பிரதேசத்தில் நிலவி வரும் தீவிரவாதச் செயல்களுக்கு முடிவு எடுக்கப்படும்” என பிரசார வீதிகளில் எல்லாம் முழங்கினார், வி.பி.சிங். அதை ஆமோதித்து அம்மாநில மக்கள் வாக்குகளையும் வழங்க, உத்தரப்பிரதேசத்தின் 12-வது முதல்வராகப் பதவியேற்றார், வி.பி.சிங். வாக்குறுதிகளை நிறைவேற்ற, தீவிரவாதத்தையும் கொள்ளைச் சம்பவங்களையும் தடுத்து நிறுத்த அவர் கையில் எடுத்தது ஆயுதங்களை அல்ல... பேச்சுவார்த்தைகளைத்தான்.

அதன் மூலம் தீர்வுகளைக் காணமுடியும் எனத் தீர்க்கமான நம்பிக்கைகொண்டிருந்தார். ஆனால், இவற்றின் பின்விளைவுகளால் அவருடைய சகோதரர் கொலைசெய்யப்பட, ``என்னுடைய தம்பியையே காப்பாற்ற முடியாதவன் எப்படி இந்த நாட்டு மக்களைக் காப்பாற்றப் போகிறேன்” எனக்கூறி தன்னுடைய உத்தரப்பிரதேச முதல்வர் பதவியை, பதவியேற்ற இரண்டு வருடங்களில் ராஜினாமா செய்தார் வி.பி.சிங். 

அதன் பிறகு மீண்டும் ராஜீவ் காந்தி (மறைந்த முன்னாள் பிரதமர்) அமைச்சரவையில் நிதியமைச்சராகப் பொறுப்பேற்றார். பதவிக்கு வந்தவுடன், வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வந்த நிறுவனங்களுக்கு இடையிலான மோதலில் வெறுப்பைச் சம்பாதித்தார். அதனால்  அமைச்சரவைக்குள் பல அரசியல் அழுத்தங்கள் உருவாக, நிதியமைச்சராக இருந்த வி.பி.சிங்கை பாதுகாப்புத் துறை அமைச்சராக்கினார் ராஜீவ் காந்தி. அது, பின்னாள்களில் ராஜிவ் காந்திக்கே ஆபத்து விளைவிக்கக்கூடியதாக முடிந்தது. ராஜீவ் காந்தி சம்பந்தப்பட்ட போபர்ஸ் ஊழலையே கையில் எடுக்க, இப்போது துறைமாற்றத்திற்குப் பதில் அமைச்சர் பதவியிலிருந்தே நீக்கப்பட்டார். உடனே தன்னுடைய எம்.பி பதவியையும் ராஜினாமா செய்ய அவருக்காகக் காத்திருந்தது, 1988-ல் நடந்த அலகாபாத் இடைத்தேர்தல். பைக்கில் பயணம், தலையில் கட்டப்பட்ட துண்டு என மக்களோடு மக்களாகத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வெற்றி அவருக்கானது. 

பெயர்: வி.பி.சிங்.. தொழில்: சமூகநீதி காப்பது...ஊழல் ஒழிப்பு..! பிறந்த தின சிறப்புப் பகிர்வு

உத்தரப்பிரதேசத்தைச் சார்ந்த ஒருவர், இந்தியப் பிரதமராவது என்பது இயல்பான அரசியல் நிகழ்வுதான். ஆனால், அதற்காகத் தமிழகம் உழைப்பது என்பதுதான் இயல்புக்கு மாறானது. 1989 நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய முன்னணியைக் கட்டமைத்து ஆட்சியையும் அமைத்துக் காட்டினார், வி.பி.சிங். ஆனால், அவர் ஆட்சி செய்தது என்னவோ 11 மாதங்கள்தான். ஆனாலும், அவை இந்திய அரசியல் வரலாற்றில் மறக்க முடியாதவை. வி.பி.சிங்கை இந்தியா காலமெல்லாம் நினைத்துப் பார்க்கக்கூடிய அளவுக்கு அவர் செய்த செயல், மண்டல் கமிஷன் வழங்கிய அறிக்கையை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ததுதான். பத்து ஆண்டுகளாகச் சமர்ப்பிக்கப்பட்டுக் கண்டுகொள்ளப்படாததாகவே இருந்தது மண்டல் அறிக்கை. சமூகத்தில் நிலவிவரும் ஏற்றத்தாழ்வுகளைப் போக்கிட பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு தேவை என உணர்ந்து மண்டல் கமிஷனை நடைமுறைப்படுத்தும் முயற்சிகளில் இறங்கினார், வி.பி.சிங்.  

1990 ஆகஸ்ட் 7-ம் தேதி மண்டல் கமிஷனை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்தார். கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. ரணகளமானது, நாடாளுமன்றம். அவற்றையெல்லாம் பற்றி அவர் கவலைப்படவில்லை. ``ஒரு நல்ல பொருளை வாங்க அதிக விலை கொடுக்க வேண்டிவரும்” என்றார், வி.பி.சிங். ஆனால் அதற்காக அவர் இழந்தது உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் பிரதம மந்திரிப் பதவியை. இன்றைக்கும் தமிழக அரசியலோடு கலந்துள்ள காவிரி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்னைக்கு நடுவர் மன்றம் அமைக்க முயன்றவர், வி.பி.சிங். அமைச்சர் பதவி, இரண்டு வருடம் மட்டுமே நீடிக்க முடிந்த முதல்வர் பதவி, ஓராண்டுகூட நிறைவு செய்ய முடியாத பிரதமர் பதவி என இப்படியாகத்தான் அமைந்தது அவரது அரசியல் வாழ்வு. ஆனால் இவை எதுவுமே வி.பி.சிங்கை வீழ்த்திவிட வில்லை. அவர் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டுதான் இருந்தார், அவர் இறந்தபிறகும், அவரின் கொள்கைகள் செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. இன்றைக்கும் இடஒதுக்கீடு சம்பந்தமான பிரச்னைகள் உருவாகும்போதெல்லாம் வி.பி.சிங்கின் புகைப்படத்தோடு தெருவில் இறங்கி, ‘இவரு யாரு தெரியுமில்ல... சமூக நீதிக்காவலர் வி.பி.சிங்’ எனப் போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்துவிடுகிறது, தமிழகத்தில் கடைக்கோடியிலுள்ள ஒரு கிராமம். ஆம், இந்திய அரசியலில் என்றைக்குமே மறக்க முடியாத பெயர் வி.பி.சிங்.

இன்று வி.பி.சிங்கின் பிறந்த நாள். அவரின் நினைவைப் போற்றுவோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு