அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனை, அக்கட்சியின் முக்கிய நிர்வாகியாகச் செயல்பட்ட தங்க தமிழ்ச்செல்வன், கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துப் பேசிய விவகாரம் தமிழக அரசியல் சூழ்நிலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அவர் மீண்டும் அ.தி.மு.க-வில் இணையப்போகிறார் என்று தகவல்கள் வந்துகொண்டிருகின்றன.

நேற்று சென்னையில் தேனி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்திய தினகரன், தனி நபரை நம்பி கட்சி நடத்தவில்லை என்று கூறியிருந்தார். இது சம்பந்தமாக எந்தக் கருத்தும் சொல்லாமல், போனை எடுக்காமல் தொடர்பில் வராமல் இருந்த தங்க தமிழ்ச்செல்வன், சென்னை செல்வதற்காக இன்று மதுரை விமான நிலையம் வந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம், ``வேறு எந்த இயக்கத்திலும் இணையும் எண்ணம் இல்லை. அ.தி.மு.க-வை அழித்து ஆட்சிக்கு வர வேண்டும் என நினைத்தால் அது எப்படி முடியும்? அ.ம.மு.க-வினர் என்னைப் பற்றி தவறான செய்தியைப் பரப்பி வருகிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே ஒரு தோல்வி என்றாலும் அது மிகப்பெரிய தோல்வி. வீடியோ, ஆடியோ வெளியிடுவது, நல்ல தலைவனுக்கு பண்பல்ல. தற்போது அமைதியாக, மனநிறைவோடு இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

அ.ம.மு.க-வின் நிர்வாகம் சரியில்லை. எந்தக் கட்சியும் என்னிடம் பேசவில்லை, நானும் யாரிடமும் பேசவில்லை. ஊடகங்களில் அவர்கள் தவறாகச் சொல்லி வருகிறார்கள். டி.டி.வி.தினகரனுக்கு பெட்டிப்பாம்பாக அடங்குவதற்கு அவர் என்ன, எனக்கு சம்பளம் கொடுத்து வேலை வாங்கினாரா. இதுபோன்று பேசுவது தலைமைப் பண்புக்கு அழகல்ல. டி.டி.வி.தினகரனின் பண்பாடே மோசமாக உள்ளது.
டி.டி.வி.தினகரன், தொண்டர்கள் நிர்வாகிகள் உள்ளிட்ட யாருடைய கருத்துகளையும் ஏற்காமல் ஒன் மேன் ஆர்மியாகச் செயல்படுவதால் கட்சியில் உள்ளவர்கள் வெளியேறி வருகிறார்கள். மீதி உள்ளவர்களும் விரைவில் வெளியேறுவார்கள்.

18 தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் இல்லையென்றால் டி.டி.வி.தினகரன் இல்லை. ஆனால், 18 பேர் பதவி இழந்து அவர்களின் குடும்பத்தினர் கஷ்டப்படுகிறார்கள். ஆரம்பத்திலிருந்தே டி.டி.வி.தினகரனின் செயல்பாடு முரண்பாடாகவே இருந்து வந்துள்ளது. குறிப்பாக, கவர்னரைச் சந்தித்தது, கட்சி தொடங்கியது, மேல் முறையீடு, இரட்டை இலை மீட்பதில் முரண்பாடு ஏற்பட்டு தேர்தலில் தோற்ற பின்னரும் அ.தி.மு.க தங்களது பக்கம் உள்ளதாகக் கூறுவதை எப்படி ஏற்க முடியும்? கொள்கையே இல்லாத கட்சிக்குக் கொள்கை பரப்புச் செயலாளர் தேவையா என்பதுதான் எனது கேள்வி. அ.ம.மு.க கூடாரம் கலையுமா என்பதைத் தொண்டர்கள்தாம் முடிவு செய்வார்கள்'' என்று கூறினார்