``ஆவணப்படுத்தப்படுகிறதா கோயில் சிலைகள்..?!'' - அரசு சொல்வதில் எந்தளவு உண்மை?

"சட்டப்படி சிலைகளை நாங்கள் விலை கொடுத்துத்தான் வாங்கியிருக்கிறோம். சிலை கடத்தல்காரர்களிடம் வாங்கவில்லை" என்று அருங்காட்சியக உரிமையாளர்கள் சொல்கிறார்கள். அதற்கு ஆதாரமாக சில ஆவணங்களையும் காட்டுகிறார்கள்.
``தமிழகத்தில், புராதன கலைப்பொருள்கள் நிறைய உள்ளன. குறிப்பாக, வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில் சிலைகள் உள்ளன. அதன் எண்ணிக்கை எவ்வளவு; அவற்றில் எத்தனை சிலைகள் காணாமல் போயின; மீட்கப்பட்ட சிலைகளின் எண்ணிக்கை எவ்வளவு போன்ற தகவல்களை ஆவணப்படுத்த வேண்டும். அதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மக்களவையில் வலியுறுத்தியுள்ளார். கனிமொழி மக்களவையில் இதுபற்றிப் பேசியதையடுத்து, சிலைக் கடத்தல் மற்றும் சிலைப் பாதுகாப்பு குறித்த பேச்சுகள் மீண்டும் அதிகரித்திருக்கின்றன.

``மத்திய அரசு, கலாசாரத் துறையின் கீழ் ஒரு குழு அமைத்துச் சிலைகளை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்தக் குழுவுடன் தமிழக அரசும் இணைந்து பணியாற்றி வருகிறது. `சட்டப்படி சிலைகளை நாங்கள் விலை கொடுத்துதான் வாங்கியிருக்கிறோம். சிலை கடத்தல்காரர்களிடம் வாங்கவில்லை’ என்று அருங்காட்சியக உரிமையாளர்கள் சொல்கிறார்கள். அதற்கு ஆதாரமாக சில ஆவணங்களையும் காட்டுகிறார்கள். சிலைகளை மீட்பதில் சட்டச் சிக்கல்கள் நிறைய இருக்கின்றன. அருங்காட்சியகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு அவற்றை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். தமிழகத்தில் உள்ள 91 புராதனச் சின்னங்கள் தமிழக அரசாலும், 412 புராதனச் சின்னங்கள் மத்திய தொல்லியல் துறையாலும் நிர்வகிக்கப்படுகின்றன. புராதனச் சின்னங்களை அருங்காட்சியகங்களில்தான் பாதுகாத்து வருகிறோம். மொத்தம் 1,22,000 அரும்பொருள்களைக் கணக்கெடுத்து அவற்றை ஆவணப்படுத்தியிருக்கிறோம். கிடங்கில் இருக்கும் அரும்பொருள்களையும் மக்கள் பார்வைக்கு வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்று சில மாதங்களுக்கு முன் நமக்கு விளக்கமளித்தார் தமிழக தொல்லியல்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். இதன்பிறகும் தமிழகத்திலிருந்து காணாமல்போன சிலைகளில் ஒன்றுகூட மீட்கப்பட்டு கொண்டுவரப்படவில்லை என்பதுதான் உண்மை.

இந்தியாவில் 1972 முதல் 2000-ம் வரை 17 சிலைகள் மட்டும்தான் மீட்கப்பட்டுள்ளன. 2000 முதல் 2012-ம் ஆண்டுவரை ஒரு சிலைகூட மீட்கப்படவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள் தொல்லியல் துறை அறிஞர்கள். காணாமல் போன சிலைகளை மீட்கத் தமிழகத்தில்தான் முதன்முதலாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஏற்படுத்தப்பட்டது. அதன்பின்னரும், சிலைகள் பெரிய அளவில் மீட்கப்படவில்லை. சிலைக்கடத்தல் பிரிவின் முக்கிய குற்றவாளி சுபாஷ்கபூர் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். ஆனால், அவரிடமிருந்து பெரும்பாலான கலைப்பொருள்கள் மீட்டுக் கொண்டுவரப்படவில்லை. அதற்கு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சொல்லும் காரணம், `நம்மிடம் அதற்கான ஆதாரங்கள் இல்லை' என்பதாகவே இருக்கிறது.
`பிரெஞ்ச் இன்ஸ்டிடியூட் ஆஃப் பாண்டிச்சேரி’ நிறுவனத்திடம்தான், 1950-ம் ஆண்டிலிருந்து கோயில் சிலைகள் ஆவணமாக உள்ளன. அதேசமயம், தமிழக இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழுள்ள கோயிலுக்குமான ஆவணங்கள் இல்லையென்றே தெரியவருகிறது. பல கோயில் சிலைகள் காணாமல் போனதற்கு முதல் தகவல் அறிக்கைகூட பதியாமல் இருப்பதற்கு, `சிலைகள் குறித்த ஆவணங்கள் இல்லையென்பதுதான்' என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். சுமார் 1,400 சிலைகள் காணாமல் போயிருப்பதாக அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. ஆனால், இந்தியா முழுவதுமே வெறும் பதினான்கு சிலைகள் மட்டும்தான் மீட்டுக் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. சிலைகளை அடையாளம் காட்ட பல தன்னார்வ நிறுவனங்கள் இருந்தாலும், சிலைகள் மீட்கப்படுவதில் சுணக்கம் இருந்துகொண்டேதான் இருக்கிறது.

இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் கேள்விக்குப் பதிலளித்த, மத்திய கலாசாரத்துறை அமைச்சர் பிரஹலாத் சிங் படேல், ``நாட்டில் மொத்தம், 39,000 கலைப்பொருள்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில், 40 கலைப்பொருள்கள், வெளிநாட்டிலிருந்து மீட்டு, கொண்டுவரப்பட்டுள்ளன. இவற்றில் 32 பொருள்கள், தமிழகத்தைச் சேர்ந்தவை. கோயில்களைப் பொறுத்தவரை, அவை அறக்கட்டளையின் கீழ் இயங்குகின்றன. எனவே, அங்குள்ள சிலைகளின் கணக்கெடுப்பை, மாநில அரசுகள் செய்வதே சரியாக இருக்கும். வெளிநாட்டு அருங்காட்சியகங்களில் சிக்கியுள்ள இந்திய கலைப்பொருள்கள், நகைகள் குறித்து சரியான தகவல்கள், இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழகத்திடம் இல்லை. ஆனால், சட்ட விரோதமாக வெளிநாட்டுக்குக் கடத்தப்பட்ட தொல்பொருள்களை மீட்கும் நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகிறது'' என்றார்.

மத்திய கலாசாரத்துறை அமைச்சர் கூறியபடி சிலைகள் கணக்கெடுப்பை, மாநில அரசு செய்வதே சரியாக இருக்கும். ஆனால், தமிழக கோயில்களில் உள்ள சிலைகள் குறித்து ஏற்கெனவே ஆவணப்படுத்திவிட்டதாகத் தெரிவித்திருக்கிறது. அப்படியிருந்தால் அந்தத் தகவல்களை சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுக்குக் கொடுத்து உதவலாமே என்பதுதான் எல்லோருடைய கேள்வியாக இருக்கிறது. இந்திய சிலைகளை மீட்டுக்கொண்டுவர உதவியாக இருக்கும் `பிரைட் ப்ராஜெக்ட்' அமைப்பைச் சேர்ந்த விஜயகுமார் கூறுகையில், ``சிலைகளை மீட்பதில் சுணக்கம் இருப்பது உண்மைதான். ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்ட சிலைகளில் 44 சிலைகள் விரைவில் தாயகம் திரும்பவுள்ளன. தமிழகத்தின் அறநிலையத்துறையில் பிரச்னை இருப்பதுபோல், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவிலும் பிரச்னை இருக்கிறது. இந்த இரு துறைகளும் இணைந்து செயல்பட வேண்டும். தமிழக சிலைகள் இன்னும் முழுமையாக ஆவணப்படுத்தப்படவில்லை'' என்றார்.
சிலைகளை ஆவணப்படுத்துவதிலேயே பிரச்னைகள் இருக்கும்போது, சிலைகளை மீட்டுக்கொண்டுவருவது குறித்து நாம் யோசிக்க மட்டுமே முடியும்.