``தமிழக அரசின் சார்பில் நான் ஒரே எம்.பி தான். ஆனால், அவர்கள் 37 பேர் இருக்கிறார்கள். என் தரப்பு நியாயத்தைக் கூற என்னைப் பேச அனுமதிக்க வேண்டும்’ என்று ரவீந்திரநாத் கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்திற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. இதில், அ.தி.மு.க எம்.பி.ரவீந்திரநாத் குமார் பேசினார். அப்போது, ``சுவாமி விவேகானந்தர், 'எனக்கு வலிமையான 100 இளைஞர்களை மட்டும் தாருங்கள். இந்தியாவையே மாற்றிக் காட்டுகிறேன்' என்றார். அந்த விவேகானந்தரைத்தான், நமது பிரதமர் மோடியின் முகத்தில் காண்கிறேன். மழைநீர் சேகரிப்புத் திட்டத்துக்கென தனி மசோதா கொண்டுவர வேண்டும். கிராமங்களிலும் குறைந்த விலை மருந்தகங்களை மத்திய அரசு திறக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

அதேபோல, நேற்று பேசிய தி.மு.க எம்.பி தயாநிதி மாறன், தமிழக அரசின்மீது சரமாரி குற்றச்சாட்டுகளை வைத்தார். அவர் பேசும்போது, ``தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறைக்காக அ.தி.மு.க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 8 வருடங்களாக, தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.க அரசு, சரியான திட்டத்தைச் செயல்படுத்தியிருந்தால், இந்த நிலைமை வந்திருக்காது. ஊழல் ஒழிப்புகுறித்து நாடாளுமன்ற கூட்டத்தில் ஜனாதிபதி பேசினார்.
ஒரு மோசமான ஊழல் மிகுந்த அரசு தமிழகத்தில் செயல்பட்டுவருகிறது. தமிழக மக்களின் நலனுக்காக அவர்கள் செயல்படவில்லை. 2014-ல் பணபலத்தால் அ.தி.மு.க வெற்றிபெற்றது. தமிழகத்தில் தலைமைச் செயலகத்தில் சோதனை நடந்தது'' என்று பேசினார். அப்போது குறுக்கிட்ட பா.ஜ.க எம்.பி-க்கள், தயாநிதி மாறன் தேவையில்லாததைப் பேசுகிறார். தமிழக அரசுமீது குற்றம் சுமத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழக அரசு ஊழல் மிகுந்த அரசு என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ‘ஊழல்’ என்ற வார்த்தையை அவர் பயன்படுத்த அனுமதிக்க முடியாது'
இந்நிலையில் இன்று பேசிய அவர், ``தமிழக அரசு சார்பில் ஒரே பிரதிநிதியாக நான்மட்டுமே வந்துள்ளேன். ஆனால், அவர்கள் 37 பேர் உள்ளனர். என்னிடம் தண்ணீர் பிரச்னை தொடர்பாக தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்த புள்ளிவிவரப்பட்டியல் உள்ளது. அவர்கள் விரும்பினால், நான் அவர்களிடம் அதைக் கொடுக்கிறேன். அவர்கள் அதை மறைக்காமல் மீடியாவில் வெளியிட வேண்டும். என்னைப் பேச அனுமதியுங்கள். தமிழகத்தில் நிலவும் பிரச்னைகள்ப் குறித்து விளக்க, தமிழக அரசின் ஒரே பிரதிநிதி நான் மட்டும்தான். தமிழகத்தில் தண்ணீர் பிரச்னையைத் தீர்க்க தற்போதும், எதிர்காலத்துக்குமான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். நான் தவறான தகவல்கள் எதையும் கூறவில்லை” என்றார்.