நாஞ்சில்சம்பத், செந்தில் பாலாஜி, கலைராஜன் வரிசையில் தங்க தமிழ்செல்வனும் இணைந்துள்ளார். மதுரையில் பேசிய அவர், `` டி.டி.வி.தினகரனுக்கு பெட்டிப் பாம்பாக அடங்குவதற்கு அவர் என்ன, எனக்கு சம்பளம் கொடுத்து வேலை வாங்கினாரா. இதுபோன்று பேசுவது தலைமைப் பண்புக்கு அழகல்ல. டி.டி.வி.தினகரனின் பண்பாடே மோசமாக உள்ளது. டி.டி.வி.தினகரன், தொண்டர்கள் நிர்வாகிகள் உள்ளிட்ட யாருடைய கருத்துகளையும் ஏற்காமல் ஒன் மேன் ஆர்மியாகச் செயல்படுவதால் கட்சியில் உள்ளவர்கள் வெளியேறி வருகிறார்கள். மீதி உள்ளவர்களும் விரைவில் வெளியேறுவார்கள்” என்று பேசியுள்ளார்.

சசிகலாவை நம்பி எடப்பாடிக்கு எதிராகக் கொந்தளித்தவர் தங்க தமிழ்செல்வன். தன் எம்.எல்.ஏ பதவி போனாலும் பரவாயில்லை என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். கட்சியின் கொள்கை பரப்புச்செயலாளர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட, முக்கிய நிர்வாகியாகவும் வலம் வந்தார்.

தேர்தல் தோல்வியில் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான அவர் தன் அதிருப்தியை தொலைக்காட்சி விவாதங்களில் வெளிபடுத்தியது, தலைமைக்கு அவர்மீதான நம்பிக்கையை நீர்த்துப்போகச்செய்ய காரணமாகிவிட்டது. தலைமையின் செயல்பாடுகளை விமர்சிக்கத் தொடங்கிய தினகரனின் உச்சம்தான் அந்த ஆடியோ. 20 ஆண்டுகளாக நீடித்த பந்தம் முற்றுப்பெற்றுவிட்டது. அ.ம.மு.கவின் மதுரை தொழிற்சங்க நிர்வாகி, செல்லபாண்டியன் தன்னிடம் தங்க தமிழ்செல்வன் பேசிய ஆடியோவை தினகரனுக்கு அனுப்பியிருக்கிறார். இதைக்கேட்டு கடுப்பான தினகரன், தங்க தமிழ்செல்வனை நீக்கவிடவேண்டியதுதான் என முடிவு செய்து, பெசன்ட் நகரில் உள்ள தனது வீட்டில் ஆலோசனைக்கூட்டத்துக்குத் திட்டமிட்டார். எப்படியும், `கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தங்க தமிழ்செல்வன் நீக்கப்பட்டார்’ என்றுதான் தினகரன் சொல்வார் என எதிர்பார்த்தவர்களுக்கு அந்த பதில் வரவில்லை.

எதற்கு இந்த ட்விஸ்ட் என்ற விசாரித்தோம். ``தேனி மாவட்ட நிர்வாகிகள் பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். வெற்றிவேல் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. தினகரன்தான் வேண்டாம் என்று சொல்லியிருந்தார். `தங்கத்தின் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கிவிடலாம்னு இருக்கேன். என்ன சொல்றீங்க’ எனக் கேட்டுள்ளார் தினகரன். நிர்வாகிகள், `அண்ணே! வேண்டாம். இப்போ நீக்குனா அவர், அதை வைச்சு அரசியல் செய்வார். என்னை வேணும்னே தூக்கிட்டாங்கனு.. நம்ம மேல பழிபோடுவார்’ கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. அவரே போயிடுவார். கொள்கைபரப்புச்செயலாளருக்கு அடுத்து யார போடலாம்னு முடிவு செய்வோம்” என்று பேசியுள்ளனர். அ.ம.மு.கவின் செய்தி தொடர்பாளராக இருக்கும் சி.ஆர்.சரஸ்வதியை கொள்கை பரப்புச்செயலாளராக நியமிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர் அ.ம.மு.க வட்டராத்தில்.
இதனிடையே தனதுவிட்டர் பக்கத்தில் டி.டி.வி தினகரனுடன் இருந்த புகைப்படத்தை மாற்றியுள்ளார் தங்க தமிழ் செல்வன்...ஜெயலலிதாவுடன் உள்ள புகைப்படத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் சேர்த்துள்ளார். இன்று நண்பகல் வரை டி.டி.வி தினகரனுடன் இருந்த புகைப்படமே இருந்தது குறிப்பிடத்தக்கது.