Published:Updated:

நன்றி உணர்ச்சியே இல்லாமல்...!

விஜயகாந்த்தை வறுக்கும் இப்ராஹிம் ராவுத்தர்

நன்றி உணர்ச்சியே இல்லாமல்...!

விஜயகாந்த்தை வறுக்கும் இப்ராஹிம் ராவுத்தர்

Published:Updated:
##~##

திர்க்கட்சித் தலைவரான விஜயகாந்த், சட்டசபையில் நாக்கைத் துருத்தி, கையை நீட்டி அ.தி.மு.க-வுக்கு எதிராக கர்ஜிக்க... கிராமத்து டீக்கடை முதல் ஃபேஸ்​புக் வரை பரபரப்பு பற்றிக்கொண்டது. இந்த நேரத்தில் விஜயகாந்தின்பால்ய நண்பரான இப்ராஹிம் ராவுத்​தர் அ.தி.மு.க-வில் இணைய... அது, அரசி யல் நோக்கர்களையும் மக்​களையும் ஆச்சர்யத்துடன் திரும்பிப் பார்க்க​வைத்துள்ளது.   

''அம்மா முன்னிலையில் அ.தி.மு.க-வுல சேர்ந்ததுல இருந்து வரிசை​​யா நண்பர்கள் போன் செய்து விசாரிச்சுக்கிட்டே இருக்காங்க. பதில் சொல்லி மாளல...'' என்று சந்தோ​ஷமாக அலுத்துக்கொண்ட இப்ராஹிம் ராவுத்​தரிடம் சில கேள்விகளை முன்​வைத்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'' 'என் ஃப்ரெண்டைப் போல யாரு மச்சான்’னு விஜயகாந்தும் நீங்களும் இருந்​தீங்க. நடுவுல என்னாச்சு..?''

நன்றி உணர்ச்சியே இல்லாமல்...!

''சின்ன வயசுல இருந்தே ரெண்டு பேரும் ஒண்ணா மதுரையில் படிச்​சோம். ஒரே நேரத்துலதான் சென்​னைக்கு வந்தோம். சாப்பாட்டுக்​குக் கூட ரொம்பக் கஷ்டப்பட்டோம். அப்ப கேரியர் மீல்ஸ் மூணு ரூபா. அது வாங்கக்கூட எங்ககிட்ட பல நேரங்களில் காசு இருக்காது. எனக்குக் கதை ஆசிரியரா ஆகணும்னு ஆசை. அவருக்கு நடிகன் ஆகணும்னு ஆசை. அவருக்காக நானும், எனக்காக அவரும் வாய்ப்பு கேட்டு அலைஞ்சோம்.

ஆண்டவன் கிருபையால் ரெண்டு பேரும் சினிமாவுல ஒரு உயரத்துக்கு வந்துட்டோம். 'பூந்​தோட்​டக் காவல்காரன்’, 'கேப்டன் பிரபாகரன்’னு விஜயகாந்த்தை வெச்சு வெற்றிப் படங்களைக் கொடுத்தேன். ஒருத்தர் இல்லாம இன்னொருத்தர் இல்லை என்ற அளவுல இருந்த எங்க நட்பில், 15 வருஷங்களுக்கு முன்ன விரிசல்விட ஆரம்பிச்சது. அது நண்பர்களுக்கு இடையேயான தனிப்பட்ட விஷயம். அதைப்பத்தி எல்லாம் வெளிப்படையாப் பேசினா நல்லா இருக்காது. விரிசலுக்குப் பிறகும்கூட அப்பப்போ பேசுவோம்.

கட்சி ஆரம்பிக்கிற சமயத்துல ஆலோசனை கேட்டார். நான் மூப்பனார் ஐயாகூட கட்சியில் இருந்தவன். அதனால அவர் தனிக் கட்சி ஆரம்பிச்சு என்ன கஷ்டப்பட்டாருன்னு எனக்கு நல்லாத் தெரியும். அதனால, 'கட்சி ஆரம்பிக்க வேண்டாம். வேற ஏதாவது பெரிய கட்சியில சேர்ந்து அரசியல் சேவை செய்’னு சொன்னேன். அதுவும் அ.தி.மு.க-வுல சேரச்சொல்லித்தான் அறிவுரை சொன்னேன். அவர் கேட்கலை. அரசியலுக்கு அவர் வந்த பின்னாடி எப்போதாவது பேசுவார். சமீபகாலமா பேச்சுவார்த்தையே இல்லாமப் போச்சு.''

''அ.தி.மு.க-வுக்கு எதிராக விஜய​காந்த் சீறி இருக்கும் நிலையில், நீங்க அ.தி.மு.க-வில் இணைந்து இருக்கிறீர்களே?''

''இந்தியாவுல உண்மையான மக்கள் இயக்கம்னா... அது அ.தி.மு.க-​தான். அதுதான் மக்கள் நலனை மட்டுமே கருத்தில்கொண்டு செயல்​படும் இயக்கம். மற்ற கட்சிகள் எல்லாமே குடும்ப இயக்கம். அவங்களுக்கு அவங்கவங்க குடும்ப நலன் மட்டும்தான் முக்கியம். தி.மு.க., பா.ம.க., காங்கிரஸ் எதுவும் இதற்கு விதிவிலக்கு இல்லை. தே.மு.தி.க-வுலகூட மனைவி, மச்சி​னன்னு குடும்ப ஆதிக்கம்தான் இருக்குது. தமிழ்நாட்டுல மட்டும் இல்லை... வேறு எந்த மாநிலத்திலும் குடும்பக் குறுக்கீடு இல்லாத இயக்கம் இல்லை. அதனால, உண்மையான மக்கள் இயக்கம்னு சொல்லிக்கிற தகுதி அ.தி.மு.க-வுக்கு மட்டும்தான் இருக்கு.

ரொம்ப வருஷமாவே தம்பி வெற்றிவேல் (ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ.) கிட்ட அம்மாவோட தொலைநோக்குத் திட்டங்களைப்பத்தி பகிர்ந்துக்குவேன். திடீர்னு இப்ப கட்சியில சேரணும்னு தோணுச்சு. வெற்றிவேலிடம் சொல்​லவும் அவர் அம்மாகிட்ட அழைச்சுட்டுப் போனார். மூப்பனார் ஐயாவுக்குப் பிறகு எனக்கும் அரசியலுக்கும் பெரிய இடைவெளி இருந்தது. அம்மாகிட்ட சேர்ந்ததுக்குப் பிறகு அந்த இடைவெளி நிரப்பப்பட்டு இருக்குது.''

'' 'எங்களுடன் இருந்ததால்தான் அந்த அம்மா ஜெயிச்சாங்க’ என்று விஜயகாந்த் சொல்​கிறாரே''

''இது விஜயகாந்தோட அதீதமான கற்பனை. சில மீடியாக்கள்தான் மிகைப்படுத்தி அவரைப் பெரிய

நன்றி உணர்ச்சியே இல்லாமல்...!

ஆளாக் காட்டிட்டாங்க. அந்தக் கட்சிக்கு ஓட்டு வங்கி பெருசா இல்லை. அதைத்தான் இதுக்கு முன்னாடி நடந்த தேர்தல்​கள்ல பாத்துட்டோமே. இப்ப அவரு கட்சிக்கு 29 எம்.எல்.ஏ-க்கள் இருக்காங்கன்னா... இதுல அவர் பங்கு எதுவுமே இல்லை. அம்மா ஆட்சிக்கு வரணும்னு மக்கள் நினைச்சாங்க. அம்மாவோட இவரும் இருந்ததால், அவரால் ஜெயிக்க முடிஞ்சது. இதுக்கு முன்னாடி தனியா நின்னப்ப இத்தனை எம்.எல்.ஏ-க்கள் அவருக்கு கிடைச்சாங்களா..? தனி ஆளா அவர் மட்டும்தானே சட்டசபைக்கு வர முடிஞ்சது. அப்புறம் எப்படி இவரோட ஆதரவு இல்லாம மத்தவங்க ஜெயிக்க முடியாதுன்னு சொல்றார்?''

''சட்டசபையில் விஜயகாந்தின் நடவடிக்கை மீதான உங்களது விமர்சனம் என்ன?''

''மாண்புமிகு மன்றத்துல அவர் நடந்துக்கிட்டது ரொம்ப அசிங்கம். சட்டசபை எவ்வளவு கண்ணியமான இடம். அதுல போய் இப்படி நடந்துக்கலாமா..? அதை எப்படி ஏத்துக்க முடியும்? இது ரொம்பவே கண்டிக்கத்தக்கது. அவரு இத்தனை எம்.எல்.ஏ-க்களோட சட்டசபைக்கு எதிர்க்கட்சித் தலைவரா வரக் காரணமே அம்மாதான் என்ற நன்றி உணர்ச்சியே இல்லாம நடந்துக்கிட்டார்.''

''விஜயகாந்தை கறுப்பு எம்.ஜி.ஆர்னு சொல்றாங்களே?''

''நான் பரம எம்.ஜி.ஆர். ரசிகன். அவரை ஒப்பிட உலகத்துல யாரும் இல்லை. ஆரம்ப காலத்துல எம்.ஜி.ஆர். படாத கஷ்டமே இல்லை. தான் பட்ட கஷ்டம் இந்தச் சமுதாயம் படக்கூடாதுன்னு நினைச்சு அரசியலுக்கு வந்தார். அவர்தான் தலைவன். விஜயகாந்த் அப்படியா..?

அவர் எம்.எல்.ஏ-வா இருக்கிற ரிஷிவந்தியம் தொகுதி 'தானே’ புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில்தானே இருக்குது? இருந்தும் அவர் 'தானே’ புயலுக்குக்காக என்னத்தப் பெருசா செஞ்சாரு. நிவாரண உதவிகளைச் செய்யறதா புறப்பட்டுப் போனவரு, மூணு போர்வையையும் நாலு பேருக்கு அடியையும் கொடுத்துட்டுத் திரும்பி வந்துட்டார். வேற எதையும் அவர் செஞ்ச மாதிரி தெரியலையே... அவரை எப்படி மக்கள் தலைவன்னு ஏத்துக்க முடியும்?''

நன்றி உணர்ச்சியே இல்லாமல்...!

''விஜயகாந்த் உடன் இருக்கும் உங்கள் பால்ய கால நண்பர்களையும் அ.தி.மு.க-வுக்குக் கொண்டு​வரும் திட்டம் இருக்கிறதா..?''

''விஜயகாந்த் கட்சியில் இணைச் செயலாளரா இருந்தார் ரவி. அவரும் இப்ப வெளியே வந்துட்டார். இன்னொருத்தர் பொருளாளர் சுந்தர்ராஜன். அவர்கூடவும் பேசி வருஷக்கணக்கா ஆச்சு. இது வரைக்கும் நீங்க சொல்றது போல் ஒரு எண்ணம் இல்லை. வருங்காலத்தில் எப்படியோ..?''

''ஒரு நண்பரா விஜயகாந்துக்கு என்ன அட்வைஸ் சொல்ல விரும்புறீங்க..?''

''ஓரளவு தொடர்புல இருக்கும்போதே என் பேச்சைக் கேட்காதவர், இப்ப சொல்லியா கேட்கப்​போறார்? அதுவும் இப்ப நான் சார்ந்திருக்கும் கட்சிக்கு எதிரா செயல்படுறவருக்கு நான் என்ன அட்வைஸ் சொல்றது...!

வருங்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அம்மா ஆணையிட்டால், அ.தி.மு.க. மேடைகளில் விஜயகாந்தை விமர்சித்துப் பேசும் சூழலும் வரலாம். அதை எல்லாம் காலம்தான் தீர்மானிக்கும்!''

கானாடுகாத்தான் தொடங்கி கஸ்தூரிபாய் நகர் வரை ராவுத்தரை களம் இறக்கத் தயாராகிறதாம் அ.தி.மு.க.!

- ஆர்.லோகநாதன், படங்கள்: என்.விவேக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism