Published:Updated:

ஸ்டாலினைச் சந்திக்கும் தங்க தமிழ்ச்செல்வன்?! - பலனளிக்காத எடப்பாடியின் வாக்குறுதிகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஸ்டாலினைச் சந்திக்கும் தங்க தமிழ்ச்செல்வன்?! - பலனளிக்காத எடப்பாடியின் வாக்குறுதிகள்
ஸ்டாலினைச் சந்திக்கும் தங்க தமிழ்ச்செல்வன்?! - பலனளிக்காத எடப்பாடியின் வாக்குறுதிகள்

தி.மு.க முகாமில் இருந்து தூண்டில் வீசப்படுவதை அறிந்த எடப்பாடி பழனிசாமியோ, `கொஞ்சம் பொறுமையாக இருங்கள் தங்கம். மாவட்டப் பொறுப்பை வழங்க முடியாவிட்டாலும் மாநில அளவிலான பொறுப்பைக் கொடுக்கிறேன். உங்களுடைய பொருளாதார சிரமங்களை எல்லாம் பார்த்துக்கொள்கிறேன். வேறு எங்கும் போய்விட வேண்டாம்' என வலியுறுத்திக் கூறியிருக்கிறார்.

செந்தில் பாலாஜியைத் தொடர்ந்து தி.மு.க முகாமுக்கு இடம்பெயரும் முயற்சியில் இருக்கிறார் அ.ம.மு.க கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன். "அறிவாலயத்தில் ஸ்டாலினைச் சந்தித்துப் பேச இருக்கிறார் தங்க தமிழ்ச்செல்வன். எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்தும் தொடர் முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன" என்கின்றனர் அரசியல் வட்டாரத்தில். 

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனோடு முரண்பட்டார் தங்க தமிழ்ச்செல்வன். சென்னை அசோக் நகரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்திலும் தன்னுடைய நிலைப்பாட்டை வலுவாக முன்வைத்தார் தங்கம். இந்தக் கருத்தில் தினகரன் உடன்படவில்லை. இதன் அடுத்தகட்டமாக, தினகரனைக் கடுமையாக விமர்சித்து தங்க தமிழ்ச்செல்வன் பேசும் ஆடியோ ஒன்று வெளியானது. `தேனியில் எனக்குத் தெரியாமல் கூட்டம் போடுகிறீர்கள். மதுரையில் நான் கூட்டம் போடட்டுமா... நான் விஸ்வரூபம் எடுத்தால் நீங்கள் எல்லாம் அழிந்துபோவீர்கள்' எனக் கடுமையாக வார்த்தைகளை வெளிப்படுத்தினார் தங்க தமிழ்ச்செல்வன். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகவே, `என்னைப் பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார் தங்க தமிழ்ச்செல்வன். அவரைக் கட்சியிலிருந்து நீக்குவேன்' எனப் பத்திரிகையாளர்களிடம் விவரித்தார் தினகரன். அதேநேரம், `அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க இருக்கிறார் தங்கம்' என்ற தகவலும் கிளம்பியது. இதற்காகப் பன்னீர்செல்வத்தைச் சமாதானப்படுத்தும் வேலைகள் நடப்பதாகவும் செய்திகள் கிளம்பின. இதற்கு மறுப்பு தெரிவித்த தங்கம், `எந்தக் கட்சியிலும் சேரும் முடிவில் இல்லை. இதுதொடர்பாக யாரும் என்னை அணுகவில்லை' என விளக்கம் கொடுத்தார். 

ஸ்டாலினைச் சந்திக்கும் தங்க தமிழ்ச்செல்வன்?! - பலனளிக்காத எடப்பாடியின் வாக்குறுதிகள்

இந்தநிலையில், அறிவாலயத்திலிருந்து தங்க தமிழ்ச்செல்வனுக்கு அப்பாயின்மென்ட் கிடைத்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக நம்மிடம் பேசிய தி.மு.க முன்னணி நிர்வாகிகள் சிலர், ``அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து தி.மு.க-வுக்கு வந்த செந்தில்பாலாஜிக்கு மாவட்டப் பொறுப்போடு எம்.எல்.ஏ சீட்டும் வழங்கப்பட்டது. அதே நேரத்தில், தங்க தமிழ்ச்செல்வன் வந்திருந்தால், அவருக்கு ஆண்டிப்பட்டியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை ஸ்டாலின் வழங்கியிருப்பார். அப்போது இருந்தே தங்கத்தைத் தி.மு.க பக்கம் இழுக்கும் வேலைகள் நடந்தன. `தொடக்கத்திலிருந்தே என் குடும்பமே இரட்டை இலையைச் சார்ந்தது. அப்படியிருக்கும்போது தி.மு.க பக்கம் வருவதற்கு வாய்ப்பில்லை' என உறுதிப்படத் தெரிவித்துவிட்டார். இதனால் அவரைக் கொண்டு வரும் வேலைகளில் தொய்வு ஏற்பட்டது. இருப்பினும், தங்க தமிழ்ச்செல்வன், பழனியப்பன் ஆகியோரைக் கொண்டு வரும் பொறுப்பை மூன்று பேர் ஏற்றுக்கொண்டனர். 

ஸ்டாலினைச் சந்திக்கும் தங்க தமிழ்ச்செல்வன்?! - பலனளிக்காத எடப்பாடியின் வாக்குறுதிகள்

அன்பில் பொய்யாமொழி மகேஷ், செந்தில் பாலாஜி, குடும்ப உறுப்பினர் ஒருவர் ஆகியோர் களமிறங்கி, இதற்கான வேலைகளைத் துரிதப்படுத்தினர். `செந்தில் பாலாஜிக்கு என்ன வழங்கப்பட்டதோ, அதே பொறுப்பு உங்களுக்கும் வழங்கப்படும்' என்ற வாக்குறுதிகளை அளித்தனர். தேனி மாவட்டச் செயலாளராக கம்பம் ராமகிருஷ்ணன், சீனியரான மூக்கையா ஆகியோர் தங்கத்தின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. `அவர் வந்தால் கட்சி பலப்படும்' என்ற வார்த்தைகளைத்தான் முன்வைத்தனர். இதற்காக நடந்த பேச்சுவார்த்தைகளில், பணரீதியாக எந்த விஷயங்களும் பேசப்படவில்லை. நாளை காலை 10 மணியளவில் ஸ்டாலினை, தங்க தமிழ்ச்செல்வன் சந்திப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்" என்கின்றனர் ஆச்சர்யத்துடன். 

ஸ்டாலினைச் சந்திக்கும் தங்க தமிழ்ச்செல்வன்?! - பலனளிக்காத எடப்பாடியின் வாக்குறுதிகள்

தி.மு.க முகாமிலிருந்து தூண்டில் வீசப்படுவதை அறிந்த எடப்பாடி பழனிசாமியோ, "கொஞ்சம் பொறுமையாக இருங்கள் தங்கம். மாவட்டப் பொறுப்பை வழங்க முடியாவிட்டாலும் மாநில அளவிலான பொறுப்பைக் கொடுக்கிறேன். உங்களுடைய பொருளாதார சிரமங்களை எல்லாம் பார்த்துக்கொள்கிறேன். வேறு எங்கும் போய்விட வேண்டாம்" என வலியுறுத்திக் கூறியிருக்கிறார். இதற்குப் பதில் அளித்த தங்க தமிழ்ச்செல்வன், "என்னால் யாருக்கும் மனவருத்தம் ஏற்படுவதை என்னால் ஏற்க முடியாது. எந்த இடத்தில் மரியாதை கிடைக்கிறதோ, அங்கு நான் இருப்பேன்" எனக் கூறியிருக்கிறார். 

ஸ்டாலினைச் சந்திக்கும் தங்க தமிழ்ச்செல்வன்?! - பலனளிக்காத எடப்பாடியின் வாக்குறுதிகள்

நான்கு நாள்களுக்கு முன்னரே, தி.மு.க முகாமுக்குத் தங்க தமிழ்ச்செல்வன் வர இருப்பதைத் தேனி மாவட்ட நிர்வாகிகள் உறுதிப்படுத்திவிட்டனர். இதை அறிந்து கூடுதல் உற்சாகத்தில் திளைக்கிறது அண்ணா அறிவாலயம். 

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு