Published:Updated:

"எம்.எல்.ஏ ஒருவரின் இறப்புக்காக நாடு முழுவதும் தேர்தல் நடத்தப்படுமா?" - சீமான் கேள்வி

ஒரே நாடு... ஒரே தேர்தல் கொள்கைக்காக, எல்லாக் கட்சிகளும் ஒப்புக்கொண்டுவிட்டன என்கின்றனர், சில பெரிய அறிஞர்கள். ஆனால், நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை. எந்தக் கட்சியும் ஒப்புக்கொள்ளாது.

"எம்.எல்.ஏ ஒருவரின் இறப்புக்காக நாடு முழுவதும் தேர்தல் நடத்தப்படுமா?" - சீமான் கேள்வி
"எம்.எல்.ஏ ஒருவரின் இறப்புக்காக நாடு முழுவதும் தேர்தல் நடத்தப்படுமா?" - சீமான் கேள்வி

‘‘ ‘ஒரே நாடு... ஒரே தேர்தல்’ கொள்கையால், நாடு வேகமாக வளரும். அனைத்து எம்.பி-க்களும் இதில் கூடுதல் கவனம்செலுத்த வேண்டும்” - மீண்டும் பிரதமராகப் பதவியேற்ற பின்பு, மோடி பேசிய வார்த்தைகள்தான் இவை. அப்படிப்பட்ட ‘ஒரே நாடு... ஒரே தேர்தல்’ கொள்கைக்குத்தான், நாடு முழுவதும் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது. ஆதரவைவிட, எதிர்ப்பே அதிகம். அதே நேரத்தில், 'மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதில், ஏற்கெனவே இருந்த வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவர வேண்டும்' என சில தொடர்ந்து குரலெழுப்பிவருகின்றன. இந்த விஷயத்தில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெளிவுடனும் உறுதியுடனும் இருக்கிறார். இந்த நிலையில், 'ஒரே நாடு... ஒரே தேர்தல்' கொள்கையை நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்கிறார், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். 

"ஒரு நாடாளுமன்றத் தேர்தலையே பலகட்டமாக நடத்துகிற நம் நாடு, சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் ஒரே தேர்தலை எப்படி நடத்த முடியும்?  ஒரே நேரத்தில் தேர்தல் செலவை மிச்சம் செய்ய வேண்டும். சரி, சட்டமன்றத்துக்கு இவ்வளவு, நாடாளுமன்றத்துக்கு இவ்வளவு என்று செலவுத் தொகையை ஒதுக்குகிறீர்கள். இதைத்தானே செலவு செய்வீர்கள். அப்படியெனில், இதனால் எப்படி செலவு குறையும்? அதாவது, ஒன்றாகத் தேர்தலை நடத்துவதால் எப்படி செலவு குறையும்? பி.ஜே.பி இரண்டு முறையும் அறுதிப் பெரும்பான்மையுடன் வென்றுவிட்டது. அதனால், அந்தக் கட்சி தனித்து ஆட்சியமைத்ததுடன், ஐந்து ஆண்டுகளுக்கு பிரச்னை இல்லை. அதேநேரத்தில், முந்தைய காலங்களைப்போன்று மத்தியில் கூட்டணி ஆட்சி அமைந்து, ஒருகட்டத்தில் போதிய உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமல் அந்த ஆட்சி கவிழும்பட்சத்தில், ஒரே நேரத்தில் நாடாளுமன்றத் தேர்தலையும், சட்டமன்றத் தேர்தலையும் எப்படி நடத்த முடியும்? 

"எம்.எல்.ஏ ஒருவரின் இறப்புக்காக நாடு முழுவதும் தேர்தல் நடத்தப்படுமா?" - சீமான் கேள்வி

தமிழகத்தில், 2021-ல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி முடியப்போகிறது. 2021 என்று தோராயமாக வைத்துக்கொள்வோம். அவருடைய ஆட்சி முன்கூட்டியே கலைந்துவிடுகிறது என்று வைத்துக்கொண்டால், தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், ஒரே தேர்தல் என்ற கொள்கைப்படி, சமீபத்தில் பதவியேற்று இருக்கிற ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியையும், இந்தியா முழுமைக்கும் உள்ள எல்லா மாநில ஆட்சிகளையும் கலைத்துவிட்டு, மறுபடியும் சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் தேர்தல் நடத்த முடியுமா? ஒரே நாடு... ஒரே தேர்தல் கொள்கைக்காக, எல்லாக் கட்சிகளும் ஒப்புக்கொண்டுவிட்டன என்கின்றனர், சில பெரிய அறிஞர்கள். ஆனால், நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை. எந்தக் கட்சியும் ஒப்புக்கொள்ளாது. இந்தியா என்பது பல தேசங்களின் ஒன்றியம். இப்போதுதான் ஆந்திராவில் தேர்தல் நடந்திருக்கிறது. அடுத்து, என் மாநிலத்தில் தேர்தல் வரப்போகிறது. இப்போதுதான் பல மாநிலங்களிலும் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடந்திருக்கிறது. புதிய ஆட்சி நிறுவப்பட்டிருக்கிறது. 

குறிப்பாக, தமிழ்நாட்டுக்கு 2021-ல் தேர்தல் நடக்கிறது என்றால், மொத்த சட்டமன்றத்தையும் நாடாளுமன்றத்தையும் கலைத்துவிட்டு தேர்தல் நடத்துவது என்பது எப்படிப்பட்ட பைத்தியக்காரத்தனம்? ஏதோ ஒரு மாநிலத்தில் முதல்வர் செத்துவிடுகிறார். இல்லை, எங்கோ ஒரு சட்டமன்ற உறுப்பினர் இறந்துவிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். சமீபத்தில், விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ ராதாமணி இறந்துவிட்டார். இப்போது அவர் ஒருவர் இறந்துவிட்டார் என்பதற்காக மாநிலம் முழுமைக்கும் இந்தியா முழுமைக்கும் தேர்தல் நடத்துவீர்களா? இல்லை, இடைத்தேர்தல் மட்டும்தான் நடத்துவீர்களா? தேர்தல் அமைப்பு முறையில் நிறைய மாற்றங்களைச் செய்யவேண்டியிருக்கிறது. வாக்கு இயந்திரங்களை ஒழிக்க வேண்டும்; வாக்குச்சீட்டு முறைக்கு வரவேண்டும்; ஓட்டுக்கு நோட்டு கொடுக்கும் முறையை ஒழிக்க வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை" என்கிறார், சீமான்.

தேர்தல் முறையில் மாற்றம் வந்தால், நாட்டிலும் மாற்றம் வரும்.

Vikatan