``தி.மு.க கரைவேட்டி பார்சல் பண்ணுங்க!’ - ஆதரவாளர்களுக்கு தங்கதமிழ்ச்செல்வன் உத்தரவு

``தி.மு.க கரைவேட்டி பார்சல் பண்ணுங்க!’ - ஆதரவாளர்களுக்கு தங்கதமிழ்ச்செல்வன் உத்தரவு
தி.மு.க-வில் இணைவது கிட்டத்தட்ட உறுதியான நிலையில், தனது ஆதரவாளர்களை தி.மு.க கரைவேட்டி வாங்கிக்கொள்ளும்படி உத்தரவிட்டுள்ளார் தங்க தமிழ்ச்செல்வன்.

அ.ம.மு.க கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த தங்க தமிழ்ச்செல்வன், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை வசைபாடும் ஆடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர், அ.தி.மு.க-வில் இணைய இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமியிடம் பேசிவிட்டதாகவும், கட்சியில் இணைய ஓ.பன்னீர்செல்வம் முட்டுக்கட்டை போடுவதாகவும் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த இரண்டு நாள்களாக சென்னையில் குடும்பத்தோடு முகாமிட்டிருக்கும் தங்க தமிழ்ச்செல்வன் அ.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்துப் பேசியதுபோல, தி.மு.க தரப்பிலும் பேசியதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், நாளை காலை அண்ணா அறிவாலையத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் முன்னிலையில், தனது ஆதரவாளர்களோடு தி.மு.க-வில் இணைய இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதனை மெய்ப்பிக்கும் விதமாக, தங்க தமிழ்ச்செல்வனின் ஆதரவாளர்கள் தேனியில் இருந்து பேருந்தில் சென்னை கிளம்பிக்கொண்டிருக்கிறார்கள். "சென்னை வரும்போது, தி.மு.க கரை வேட்டி பார்சல் பண்ணிக்கோங்க!" என தங்க தமிழ்ச்செல்வன் தனது ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதனால், தேனியில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் நூற்றுக்கணக்கான தி.மு.க கரை வேட்டிகள் விற்பனை செய்யப்பட்டது மட்டுமல்லாமல், மேலும் ஆர்டர்களும் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.