
சீ.பாஸ்கர், குரோம்பேட்டை.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
முதலமைச்சராகப் பதவி ஏற்ற பின், வாரத்துக்கு ஒருமுறை பத்திரிகையாளர்களைச் சந்திப்பேன் என்று ஜெயலலிதா கூறினாரே! என்ன ஆயிற்று?
நீங்களாவது இதை மறக்காமல் இருக்கிறீரே... பாஸ்கருக்கு, பத்திரிகையாளர்கள் சார்பில் நன்றி!
'நமக்குள்ளே ஒரு டீல் வைத்துக் கொள்ளலாம்’ என்று ஆட்சிக்கு வந்தவுடன் பிரஸ்மீட்டில் ஜெ. சொன்னார். டீல் என்னாச்சு... என்று யாரிடம் கேட்பது என்றுகூடத் தெரியாமல் ஃபீல் பண்ணுகிறார்கள் பத்திரிகையாளர்கள்.
சிவாஜி மூக்கையா, தர்காஸ்.


தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திடம் கழுகாருக்குப் பிடித்த விஷயம் எது? பிடிக்காத விஷயம் எது?
பின்விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் கருத்துச் சொல்வது பாராட்டப்பட வேண்டியது. ஆனால், எடுத்ததற்கெல்லாம் கோபப்படுவது... மாற்றிக்கொள்ள வேண்டியது!
எம்.கல்யாண சுந்தரம், கோயம்புத்தூர்-6.

நேருவின் காலத்து முந்திரா ஊழல்... ராஜீவ் காலத்தில் போஃபர்ஸ் ஊழல்... அண்மைக் காலத்தில் ஸ்பெக்ட்ரம் ஊழல்.. இதில் எது காங்கிரஸின் காலை வாரிவிட்டது?
##~## |
முந்திரா ஊழல் அந்தக் காலத்தில் இவ்வளவு வெளிச்சத்துக்கு வரவில்லை. ஆனால், போபர்ஸ் ஊழல்தான் ஏக இந்தியாவிலும் பிரபலமாகி, 'மிஸ்டர் க்ளீன்’ என்று பெயர் எடுத்திருந்த ராஜீவ் காந்தியின் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. அந்த வழக்கு இன்னமும் முடியாமல் இருக்கிறது. அதுவாவது தனிப்பட்ட ராஜீவ் காந்தியின் இமேஜைக் காலி செய்தது. ஆனால், ஸ்பெக்ட்ரம் ஊழல்... ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் கட்சியையே அம்பலப்படுத்தி நிற்கிறது.
ப.சிதம்பரத்தின் பதவி மட்டும் அல்ல... மன்மோகன் சிங், சோனியா ஆகிய இருவரது முகமும் அம்பலப் பட்டுக்கிடக்கிறது. அண்ணா ஹஜாரேவுக்கு நாடு முழுவதும் கிடைத்த வரவேற்புகூட ஸ்பெக்ட்ரம் கோபம்தான். இதன் வெளிப்பாடு வரஇருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில்தான் தெரியும்.
இரா.வளன், புனல்வாசல்.

ஏழ்மையான கட்சி எது? பணக்காரக் கட்சி எது?
ஏழ்மையான கட்சியாக எதுவுமே இருக்க முடியாது 'இழப்பதற்கென்று எதுவும் இல்லை’ என்ற கட்சிக்குக்கூட கோடிக்கணக்கில் சொத்து இருக்கிறது. பணம் இல்லாமல் அவர்களால்கூட கட்சி நடத்த முடியாது.
எஸ்.ஈஸ்வர பிள்ளை, கொல்லம்.

கூட்டணி அமைத்து வெற்றிபெற்ற இரு கட்சித் தலைவர்களும், கூட்டணி வைத்ததற்காக வெட்கப்படுகின்றனர். இந்தக் கூட்டணிக்கு வாக்களித்த மக்கள் என்ன நினைப்பார்கள்?
வாக்களித்ததற்காக வெட்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் அந்த இரு கட்சிகளும்!
எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் உருப்படியாக என்ன நடந்தது?

பேராசிரியர் அன்பழகனின் பேச்சு! 'இதுதானப்பா சரியான நேரம்’ என்று எதிர்பார்த்துக் காத்திருந்தது போல கருணாநிதி உட்பட அவரது மொத்தக் குடும்பத்துக்கும் சேர்த்து புத்திமதி சொல்லும் வகுப்பு எடுத்து விட்டார் அன்பழகன். 'நானும் பேராசிரியரும் கலந்து பேசி முடிவெடுப்போம் என்று கலைஞர் சொல்வார். கலந்துகொள்வது உண்மைதான். பேசுவதும் உண்மைதான். ஆனால், முடிவு எடுப்பது நான் அல்ல’ என்று அந்தக் கலவர நேரத்திலும் தமிழ் விளையாடியது பேராசிரியரிடம்!
எஸ்.அஜீம், உடையார்பாளையம்.

தன்மானத் தலைவன் என்கிறார்களே அரசியல்வாதிகள். அது யார்?
கண்டுபிடித்தால் சொல்கிறேன்!
காந்தி லெனின், திருச்சி.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆ.ராசா உள்ளே போய் ஒரு வருடம் ஆயிற்றே?
இந்த ஓர் ஆண்டு காலத்தில் ஆ.ராசா எந்த மாதிரியான படிப்பினை பெற்றார் என்று தெரியவில்லை. ஆனால், அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளமாக இருக்கின்றன.
'குறுக்குவழிப் பயணத்துக்கு ஆயுள் குறுகிய காலம்தான்’ என்பது அதில் முக்கியமானது!
தி.கருணாநிதி, விழிதியூர்.

தேர்தலில் போட்டியிட என்ன தகுதி வேண்டும்? தேர்தலில் வெற்றி பெற என்ன தகுதி வேண்டும்?
தகுதியே இல்லாதவர்களுக்குக்கூட தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால், ஏதாவது ஒரு தகுதி இருந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும்!
சொந்த செல்வாக்கு, சாதிப் பின்புலம், பண பலம்... ஆகியவை அதில் மிக முக்கியமான மூன்று!
அ.இராஜப்பன், கருமத்தம்பட்டி.

'தி.மு.க. ஆட்சியின்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா, சட்டசபையில் நடந்துகொண்ட விதம் பற்றி ஒரு புத்தகமே போடலாம்’ என்று விஜயகாந்த் கூறியுள்ளது பற்றி..!
புத்தகம் போடக்கூடிய அளவுக்கு அதில் மேட்டர் எதுவும் இல்லை. ஏனென்றால், எண்ணிச் சில நாட்களே சபைக்கு ஜெயலலிதா வந்தார். எதிர்க்கட்சித் தலைவருக்கான கடமையை அவர் அப்போது செய்யவில்லை. எதிர்க்கட்சியாக இருந்தபோது கருணாநிதி சபையில் பேசியதே இல்லை. ஆளும் கட்சியாக இருக்கும்போது சபைக்கு எல்லா நாட்களும் வருவதும், எதிர்க்கட்சியானால் எப்போதாவது வருவதுமான நிலைப்பாட்டில் கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஒரே கட்சிதான். விஜயகாந்தும் இந்த வரிசையில் சேர்ந்துவிடக் கூடாது. அவரும் சபைக்கு எப்போதாவதுதான் வருகிறார். ஸ்கூலுக்கு வர இஷ்டம் இல்லாத பையன் டிஸ்மிஸ் செய்யப்பட்டால் எப்படி சந்தோஷப் படுவானோ... அந்த மனநிலை விஜயகாந்துக்கும் வந்துவிடக் கூடாது!
ரா.வளன், புனல்வாசல்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக காங்கிரஸ் - கேரள காங்கிரஸ்... ஒப்பிடுக!

செய்யக் கூடாதது எல்லாம் செய்து முடித்து களைத்துப்போய் உட்கார்ந்து விட்டது கேரள காங்கிரஸ். செய்ய வேண்டிய எதையுமே செய் யாமல், 'ஆனால் சாதித்து விட்டதைப் போல’ களைத்துப் போய்விட்டதாகக் காட்டிக்கொள்கிறது தமிழக காங்கிரஸ்.
இந்த விஷயத்தில் உருப்படியாய் பேசியது ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மட்டும்தான்!
கே.எஸ்.சம்பத்குமார், பெங்களூரு.

'தானே புயலின் நிவாரணப் பணிகளில் தமிழக அரசு சாதனை புரிந்துள்ளது என்று ஜெயலலிதா கூறியுள்ளாரே?
ஜெயலலிதா இப்போது அறிவித்துள்ள திட்டங்களை முறைப்படுத்தி செய்து கொடுத்தால், 'பெரும் சாதனை செய்தார்’ என்ற பாராட்டை நிச்சயம் பெறுவார்!

