Published:Updated:

``கைகூடாத ஆதரவு கணக்கு!” - நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தி.மு.க பின்வாங்கியது ஏன்?

``கைகூடாத ஆதரவு கணக்கு!” - நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தி.மு.க பின்வாங்கியது ஏன்?
``கைகூடாத ஆதரவு கணக்கு!” - நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தி.மு.க பின்வாங்கியது ஏன்?

இதோ, அதோ வெடிக்கப் போகிறது என உதார் காட்டி வந்த தி.மு.க-வின் நம்பிக்கையில்லாத் தீர்மானம், சட்டமன்றத்தில் வெற்றியடைய வாய்ப்பில்லை என்பதால் நமத்துப் போய்விட்டது.

``கைகூடாத ஆதரவு கணக்கு!” - நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தி.மு.க பின்வாங்கியது ஏன்?

மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு சட்டமன்றம் இன்று கூடியுள்ளது. ஜூலை 30-ம் தேதி வரையில் மொத்தம் 23 நாள்கள் நடைபெறும் இக்கூட்டத்தொடரில், ஒவ்வொரு துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெறவுள்ளன. இந்த நிலையில், சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரக் கோரி, முன்னர் தி.மு.க மனு அளித்தது.

நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெற வேண்டுமென்றால், குறைந்தபட்சம் 118 எம்.எல்.ஏ-க்களாவது வேண்டும். தற்போது தி.மு.க கூட்டணியின் பலம் 109 ஆக உள்ளது. தீர்மானம் வெற்றிபெற மேலும் 9 எம்.எல்.ஏ-க்கள் தேவைப்பட்ட நிலையில், அ.தி.மு.க-வில் இருந்து சில எம்.எல்.ஏ-க்களை இழுக்க, தி.மு.க-வினர் முயற்சி செய்வதாக தகவல் வெளியானது. ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் குறைந்தபட்சம் ஒரு எம்.எல்.ஏ-வாவது இழுக்க வேண்டும் என்றும், கண்டிப்பாக 12 எம்.எல்.ஏ-க்கள் தி.மு.க சார்பு நிலையை எடுத்தால் மட்டுமே, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எடுத்துச் செல்ல முடியும் என்றும் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருந்தார்.

``கைகூடாத ஆதரவு கணக்கு!” - நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தி.மு.க பின்வாங்கியது ஏன்?

அமைச்சர் பதவி கிடைக்காமல் வருத்தத்தில் இருப்பவர்கள், அமைச்சர்களோடு `ஈகோ’ யுத்தத்தில் உள்ள எம்.எல்.ஏ-க்கள் என சுமார் 8 பேரிடம் தி.மு.க தரப்பு பேச்சுவார்த்தையும் நடத்தி வந்தது. அணி மாறுவதற்கு பிரதிபலனாக பெரும் தொகையை எம்.எல்.ஏ-க்கள் எதிர்பார்க்க, தி.மு.க வட்டாரங்கள் கப்சிப் ஆகிவிட்டன. அ.தி.மு.க சார்பில் நடைபெற்ற ரமலான் நோன்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எம்.எல்.ஏ-க்களை மாவட்ட வாரியாக சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``சிலர் தி.மு.க- கூட பேசிட்டு இருக்குறதா தெரியுது. நம்ம ஆட்சி நீடிச்சாதான் உங்களுக்கும் நல்லது. தி.மு.க-வை நம்பிப் போய் ஏமாந்துடாதீங்க. என்ன பிரச்னைனாலும், என்கிட்ட சொல்லுங்க. நான் கவனிக்கிறேன்” என மனதைத் தொடும் வகையில் பேசியது சஞ்சலத்தில் இருந்த எம்.எல்.ஏ-க்களின் மனதை மாற்றிவிட்டதாம்.

``கைகூடாத ஆதரவு கணக்கு!” - நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தி.மு.க பின்வாங்கியது ஏன்?

இந்த நிலையில், இன்று சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், ``நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பாக சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அப்போதைய சூழ்நிலையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர தி.மு.க. மனு கொடுத்தது. தற்போதைய சூழலில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தப் போவதில்லை” என்றார்.

தி.மு.க-வின் இந்த `யூ - டர்ன்’ பின்னணிக்கு, போதிய எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இல்லாததே காரணமாக கூறப்படுகிறது. 

Vikatan