Published:Updated:

இடைத்தேர்தலுக்கு 26 அமைச்சர்கள்!

பயந்துவிட்டாரா ஜெயலலிதா?

இடைத்தேர்தலுக்கு 26 அமைச்சர்கள்!

பயந்துவிட்டாரா ஜெயலலிதா?

Published:Updated:
##~##

ங்கரன்கோவில் இடைத்தேர்தலுக்கு தேதி இன்னும் அறிவிக்கவில்லை என்றாலும், தொகுதி முழுவதும் அனல் பறக்கிறது. 

இப்போது, சங்கரன்கோவில் நகராட்சித் தலைவராக இருக்கும் முத்துச்செல்வியை வேட்​பாளராக அ.தி.மு.க. அறிவித்துவிட்டது. முன்னாள் எம்.எல்.ஏ-வான சங்கரலிங்கத்தின் மகளான இவர், இப்போதே வீதி வீதியாகச் சென்று வாக்குச் சேகரிக்கத் தொடங்கி விட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இவரை ஜெயிக்க வைப்பதற்காக, தேர்தல் பணிக்குழுப் பொறுப்பாளர்​களாக 36 பேர் நியமிக்கப்பட்டு இருக்​கிறார்கள். இதில், 26 பேர் அமைச்​சர்கள். இங்கே, ஜெயலலிதா மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்​கொள்ளவும் திட்டமிட்டு இருக்கிறாராம்.

இடைத்தேர்தலுக்கு 26 அமைச்சர்கள்!
இடைத்தேர்தலுக்கு 26 அமைச்சர்கள்!

இதனிடையே, தேர்தல் அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பாக பெரும்பான்​மையான மக்களுக்கு அரசின் திட்டங்​களைக் கிடைக்கச் செய்துவிட நினைக்​கிறார்கள். தி.மு.க-வும் இந்தத் தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகிவிட்ட நிலையில், வேட்பாளர் தேர்வில் தீவிரம் காட்டி வருகிறார்கள். வழக்குகள், தோல்விகள் போன்ற​வற்றால் உற்சாகம் இழந்து போயிருக்கும்  தி.மு.க-வின் தொண்டர்கள் இன்னும் சோர்வில் இருந்து மீளவில்லை என்றாலும் கடும் போட்டியைக் கொடுப்பார்கள்.

'சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடத் தயாரா?’ என்று, சட்டசபையில் ஜெயலலிதா சவால்விட்டதால் ஆத்திரத்தில் இருக்கும் தே.மு.தி.க-வினர், இந்தத் தேர்தலில் தங்கள் பலத்தை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்ற ஆவேசத்தில்

இடைத்தேர்தலுக்கு 26 அமைச்சர்கள்!

இருக்கிறார்கள். இதற்காக, மாஃபா பாண்டியராஜன் தலைமையில் கட்சியின் மேல்மட்ட உறுப்பினர்கள் சிலர், சங்கரன்கோவிலுக்கு ரகசியமாக வந்து தொண்டர்களின் கருத்தைக் கேட்டு சென்று இருக்கிறார்கள். பெரும்பாலான உறுப்பினர்கள், 'நிச்சயம்  போட்டியிட வேண்டும்’ என்று பிடிவாதம் பிடிக்கும் நிலையில், கட்சித் தலைமை முடிவு எடுக்காமல் இன்னும் யோசனையில் இருக்கிறது.

அ.தி.மு.க-வுக்கு இணையாக பிரசாரக் களத் தில் ம.தி.மு.க. மட்டுமே நிற்கிறது. வைகோ இரண்டு கூட்டங்களில் பங்கேற்று விட்டார்.  நாஞ்சில் சம்பத் நான்கு கூட்டங்கள் பேசிவிட்டார்.  ம.தி.மு.க-வின் சார்பில் ஒவ்வொரு கிராமத்திலும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு விட்டனர். தொகுதியின் வேட்பாளராக டாக்டர்.சதன் திருமலைக்குமார் அறிவிக்கப்பட இருப்பதாகச் சொல்கிறார்கள். அவர், தொகுதிக்கு நன்கு அறிமுகம் ஆனவர் என்பது ம.தி.மு.க.வுக்குச் சாதகமான அம்சம்.

ம.தி.மு.க-வின் மாவட்டச் செயலாளர் ப.அ.சரவணன் நம்மிடம், ''எங்களின் தேர்தல் வேலையைப் பார்த்து அ.தி.மு.க. பயந்து விட்டது. இது, வைகோவின் சொந்தத் தொகுதி என்பதால், எங்களுக்கு ஆதரவு அதிகம். இப்போது அரசின் நடவடிக்கைகளில் மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டு இருப்பதால், மாற்று சக்தியாக மக்கள் எங்களை நம்புகிறார்கள். இந்தத் தொகுதியில் ஜெயலலிதாவே நேரடியாகப் பிரசாரம் செய்வதுடன், 26 அமைச்சர்களைக் களம் இறக்கி இருப்பதும், ம.தி.மு.க. மீது ஆளும் கட்சிக்கு உள்ள பயத்தையே காட்டுகிறது'' என்றார்.

புதிய தமிழகம், ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் போன்ற​வையும் வேட்பாளர் தேர்வில் தீவிரம் காட்டு​வதால் வாக்குகள் பிரியும் ஆபத்து இருக்கிறது.

இன்னொரு பக்கம், இலவசங்கள், அன்பளிப்புகள் என என்னென்ன கொட்டும் என வாக்காளர்களின் எதிர்பார்ப்புகளும் எகிறிக்கிடக்கின்றன!

- ஆண்டனிராஜ்

படங்கள்: எல்.ராஜேந்திரன் 

திக்திக் ராத்திரிகள்

இடைத்தேர்தலுக்கு 26 அமைச்சர்கள்!

இடைத்தேர்தல் ஏற்பாடுகளில் அரசியல் கட்சிகள் கவனம் செலுத்திவரும் சூழலில், தலித் மற்றும் முஸ்லீம் மக்களுக்கு இடையே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு பெரும் வன்முறையாக கடந்த 7-ம் தேதி இரவு வெடித்தது. இரு தரப்பினரும் பெட்ரோல் குண்டுகள் சகிதம் மோதியதுடன் கடைகளையும் அடித்து நொறுக்கினார்கள். இரண்டு பக்கமும் பலருக்குக் காயம். வாகனங்கள் தீ வைக்கப்பட்டன. நான்கு மாவட்ட போலீஸார் குவிக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால், மீண்டும் வன்முறை எந்த நேரத்திலும் வெடிக்கும் என்ற அச்சம் பரவிக்கிடக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism