ஆந்திர சட்டமன்றத்தேர்தலில் படுதோல்வி அடைந்திருக்கிறார், பவன் கல்யாண். `முதல்வராவேன்’ என்று முழங்கியவர், சட்டமன்ற உறுப்பினர்கூட ஆக முடியாமல் முடங்கிப் போயிருக்கிறார். அவர் `ஏன் தோற்றார்’ என்பதைக் கடைசியில் பார்க்கலாம். அதற்கு முன்னால், பவனின் அரசியல் பற்றி பேசுவதற்கு நிறைய இருக்கிறது. பேசுவோம்...

ஒரு சுபயோக சுபதினத்தில், அரசியலில் இறங்க முடிவு செய்தார் பவன். அது, 2014ம் ஆண்டு! அதற்கு முன்னால், அண்ணன் சிரஞ்சீவி ஆரம்பித்த `பிரஜாராஜ்யம்' கட்சியில் பணிசெய்திருந்தார். பிரசாரக் கூட்டங்களில் பேசியிருந்தார். ஆனால், சிரஞ்சீவி சிலரின் பேச்சைக்கேட்டு கட்சியைக் கொண்டுபோய் காங்கிரஸில் சேர்த்தார். அங்கே ஆரம்பித்தது பிரச்னை. பவன் சொல்லிப் பார்த்தார். `காங்கிரஸுக்கு எதிராக ஆரம்பித்த கட்சியை, காங்கிரஸிலேயே இணைத்தால் எப்படி?' என்று கேள்வி கேட்டார். ஒத்துவரவில்லை. ஒதுங்கினார். சிலகாலம் அமைதியாக இருந்தார்.
திரைப்படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் பவன். அப்போதுதான் வெளியாகிறது அந்த அறிவிப்பு. நவீனகால அரசியலின் மிகப்பெரிய அறிவிப்பு! உடைகிறது, ஆந்திரப் பிரதேசம். அமைகிறது தெலங்கானா. பேரிடியாக ஹைதராபாத் தெலங்கானாவுக்குப் போகிறது. வேறு வழியுமில்லை! தெலங்கானா அமைய முக்கிய காரணகர்த்தா என்பதால், சந்திரசேகர ராவுக்கு மொத்த மாநிலமும் துணைநிற்கிறது. ஆக மொத்தம், அத்துவிடப்பட்டது ஆந்திரப் பிரதேசம். `பத்தாண்டுக்கு பொதுத் தலைநகரம். அதுக்குள்ளே உருவாக்கிக்கொள்ள வேண்டும் புதிய தலைநகரம்’ என்று விதிக்கப்பட்டது நிபந்தனை. யோசித்துப் பார்த்தால்... கொஞ்சம் கஷ்டமான சூழல்தான். சந்திரசேகர ராவ் வேறு `ஓடுங்கள், உங்கள் மாநிலத்துக்கு...' என மிரட்டிக் கொண்டிருந்தார்.
அடுத்த தேர்தலுக்கான காலமும் நெருங்குகிறது. `கை'கொடுத்த காங்கிரஸின் காலை சந்திரசேகர ராவ் வாருகிறார். எதிர்பார்த்ததுதான்! மாநிலப் பிரிப்பு பிரச்னையில் காங்கிரஸ் மீது பயங்கர காண்டாக இருக்கிறார் சந்திரபாபு நாயுடு. அதனால், ’மத்தியிலும் வேண்டும் ஆட்சி மாற்றம், மாநிலத்திலும் வேண்டும் ஆட்சி மாற்றம்’ என முழங்குகிறார். இன்னொரு பக்கம் ஜெகன்மோகன் ரெட்டியும் வெறிப்பிடித்து வேலை பார்க்கிறார். அம்மா, மனைவி என எல்லோரையும் களத்தில் இறக்குகிறார். ஜெயிலுக்குப் போய் வந்த சிம்பதியும் ஜெகனுக்கு கைகொடுக்கிறது. வீட்டுப் பெண்கள் வேறு பிரசாரத்தில் அழுது துடிக்கிறார்கள்.

சந்திரசேகரராவுக்குத்தான் தெலங்கானா என்பது முடிவாகி விட்டது. ஆனால், ஆந்திரா..?! கடும்போட்டி. அதுவுமில்லாமல், இந்தத் தேர்தல் அங்கே ரொம்பவே முக்கியமான ஒன்று. மாநிலப் பிரிப்புக்குப் பிறகு நடக்கும் முதல் தேர்தல். அந்தச் சமயத்தில்தான் களமிறங்க முடிவெடுக்கிறார் பவன்! இது முக்கியமானது. அதாவது, இருபுறமும் இரண்டு பெரிய கட்சிகளின் தலைவர்கள் வலுவாக அரசியல் செய்து கொண்டிருக்கும்போது களத்தில் இறங்கினார், பவன். `ஆளில்லாத கடையில் ஆட்டையப் போடலாம்' என்ற மனநிலையில் அவர் அரசியலில் இறங்கவில்லை!
2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஏழெட்டு மாதங்களுக்கு முன்பு கட்சி ஆரம்பிப்பதை உறுதி செய்கிறார், பவன். அடுத்த சில நாள்களில், தேர்தல் ஆணையத்தில் கட்சி ஆரம்பிப்பதற்கான விண்ணப்பத்தைக் கொடுக்கிறார். அடுத்த நான்கு நாள்களில் ஹைதராபாத்தில் அரசியல் மேடையை அமைக்கிறார். அழைப்பு விடுக்கிறார், ஹைடெக் சிட்டி முதல் பட்டிதொட்டிவரை உள்ள `பவனின் படை' படையெடுக்கிறது தலைநகரத்துக்கு. செம கூட்டம்! பவன் மேடை ஏறுகிறார். தீர்க்கமாகப் பார்க்கிறார். கைதூக்கி அறிவிக்கிறார் கட்சியின் பெயரை... 'ஜனசேனா'! அந்த மேடையில், கிட்டத்தட்ட இரண்டு மணிநேரத்துக்கும் மேலாக பவன் பேசினார். ஒரு சினிமாக்காரனின் அரசியல் பேச்சு எப்படியிருக்குமோ, அதையெல்லாம் தாண்டி வேற லெவலில் இருந்தது, அந்தப் பேச்சு!
பவனின் கட்சி அறிவிப்பு, ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களையும் தாண்டி அவ்வளவாக கவனிக்கப்படவில்லை. அதுவும் ஒரு செய்தியாக மட்டுமே பார்க்கப்பட்டது. அடுத்த சில மாதங்களில் (அதாவது 2014) நாடாளுமன்றத் தேர்தல் தேதியை அறிவிக்கிறது தேர்தல் ஆணையம். அந்தத் தேர்தலுடன் தெலங்கானா, ஆந்திரா சட்டமன்றத் தேர்தல்களையும் அறிவிக்கிறது. அப்போதைய நிலையென்ன? தேர்தல் களத்தில் பவன் இறங்குவார் என எதிர்பார்த்தார்கள். பவனின் ரசிகர்களைத் தாண்டியும் ஓரளவுக்கு வரவேற்பே இருந்தது. நினைத்தால் இறங்கிப் பார்த்திருக்கலாம். ஆனால், பவன், இந்தத் தேர்தலை நிதானமாகவே அணுகினார். கட்சிக்கு கட்டமைப்பு என்ற ஒன்றே இல்லை என்பதை உணர்ந்தார். பலரும் போட்டியிடச் சொன்னார்கள். ஆனால், மறுத்தார்.

பவன் ஒரு விருப்பத்தையும் ஒரு கோரிக்கையையும் ஒரு வேண்டுகோளையும் மனதில் வைத்திருந்தார். மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சிமாற்றம் வேண்டுமென விரும்பினார். `ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து கொடுத்தே ஆகவேண்டும்' என்பதை கோரிக்கையாக வைத்திருந்தார். ஆக...வேறெதையும் யோசிக்காமல் பி.ஜே.பி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவளித்தார். அதே கூட்டணியில்தான் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசமும் அப்போது அங்கம் வகித்தது. இரு தரப்புமே, ஆந்திர மண்ணின் புதிய அரசியல் சக்தியான பவனின் ஆதரவைப் பெற அதிகமாகவே ஆர்வம் காட்டினர். அப்போது அதற்கான தேவையும் இருந்தது. ஏனென்றால், எதிரே ஜெகன்மோகன் ரெட்டி வலுவான எதிரியாக இருந்தார்.
ஆக...இரு கட்சிக்கும் பவன் தேவைப்பட்டார். ஏனென்றால், பவனின் பின்னால் ஒரு படை இருந்தது. முன்னால் பவன் இருந்தார். பவன் கேட்கும் இடங்களையெல்லாம் தரத் தயாராகவே இருந்தனர். கொஞ்சம் முன்னபின்ன இருந்தாலும் 'கேட்டால் கிடைக்கும்' என்பதே உண்மை நிலையாக இருந்தது. ஆனால், ஆதரவளிக்க பவன் முன்வைத்த ஒரே வேண்டுகோள் `நல்லது செய்யுங்கள்' என்பதே! ஒரு தொகுதியில்கூட பவனின் `ஜனசேனா' போட்டியிடவில்லை. சந்திரபாபு நாயுடு அந்த நேரத்தில் எதிர்பார்த்தது வெண்பொங்கல். ஆனால், சர்க்கரைப் பொங்கலே அவருக்குக் கிடைத்து விட்டது.
பல தொகுதிகளிலும் பவன் பிரசாரத்தில் களமிறங்கினார். முழங்கினார். பி.ஜே.பி மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளை வென்று கொஞ்சம் அகலத்தை அதிகரித்தது. தெலுங்கு தேசம் 106 சட்டமன்ற தொகுதிகளைக் கைப்பற்றியது. மத்தியில் பி.ஜே.பி ஆட்சி அமைந்தது. மாநிலத்தில் தெலுங்கு தேசம் அமர்ந்தது. ஆட்சியமைக்க அணிலாக அல்ல, அனுமானாகவே உதவினார் பவன். பவனால்தான் ஜெயித்தது என்றில்லை. ஆனால், பவனாலும் ஜெயித்தது. ஒரே ஒரு நிரூபணம் போதும்... பவனின் முதல் பிரசாரக்கூட்டத்தைப் பற்றி இப்படி எழுதியது டெக்கான் கிரானிக்கல், 'இப்படியொரு மக்கள் திரளை எதிர்பார்க்கவில்லை'!

நாள்கள்... மாதங்கள்... கடந்தன. பார்த்தார் பவன்... பி.ஜே.பியும் பெருசாக எதுவும் செய்யவில்லை. தெலுங்கு தேசமும் வேகம் காட்டுவதாகத் தெரியவில்லை. ஆளுங்கட்சியினர் அராஜகம் அதிகமாகவே அரங்கேற ஆரம்பித்தது. அதுவும் `நிலம் கையகப்படுத்துதல்' திட்டத்தில் ஏகப்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட ஆரம்பித்தார்கள். அப்போது எழுந்த அழுகுரல்களுக்கு, பவன் செவிசாய்த்தார். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக ஓங்கிக் குரலெழுப்பினார். ஆனால், ஜெகன் அளவுக்குப் பவன் கவனம் பெறவில்லை. ஏனென்றால், ஜெகனுக்கு வலுவான கட்சி அமைப்பும், அரசியல் பாரம்பர்யமும் துணையாக இருந்தன. ஆனால், பவன் தனியாள்!
ஒரு கட்டத்தில் பவன் திரும்பினார். சொன்னதை நினைவு கூர்ந்தார். `பி.ஜே.பிக்கும் தெலுங்குதேசத்துக்கும் அப்போதே சொன்னேன். சொன்னதைச் செய்யாவிட்டால், செய்ய முயற்சி செய்யாவிட்டால் எதிர்க்கவும் தயங்கமாட்டேன் என்று. இனிமேல் எதிர்க்கிறேன்...' என அறிவித்தார். அடுத்த அடியை ஜெகன்மோகன் மீது இறக்கினார். `எதிர்க்கட்சிகள் ஒழுங்காகச் செயல்பட்டால் மட்டுமே ஆளுங்கட்சி செயல்படும். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எதிர்க்கட்சியாக நடந்துகொள்வதில்லை எனக் குற்றம் சாட்டினார். ஜெகன், குறிப்பெடுத்துக் கொண்டார்.
`சாதி அரசியல்’ அப்பட்டமாகப் புழங்கும் மாநிலங்கள் ஆந்திராவும் தெலங்கானாவும். கம்மாக்களும், ரெட்டிகளும் வைத்ததுதான் அங்கே சட்டம். ஆனால், 'நான் அரசியலுக்கு வந்ததற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று சமூகநீதி' எனப் பிரகடனப் படுத்தினார் பவன்! ஆந்திராவை உங்களுக்குத் தெரியும். ஆனால், உத்தராந்திராவை தெரியுமா? விஜயநகரம், ஸ்ரீகாகுளம், விசாகப்பட்டினம் சேர்ந்ததுதான் உத்தராந்திரா. கல்வி, வேலைவாய்ப்பு, வளர்ச்சித் திட்டங்கள் என எல்லாவற்றிலும், ஆட்சியாளர்களால் ஏமாற்றப்பட்ட பகுதி அது. அந்த மக்களைக் கண்டுகொள்ளும் முதல் அரசியல் தலைவனாக எழுந்து வந்தார், பவன்!’ `தெலங்கானாவுக்கு சந்திரசேகரராவ் போல, உத்தராந்திராவுக்கு பவன் கல்யாண்’ என்று எழுந்த முழக்கங்கள் அதை உறுதிப்படுத்தக் கூடியவை. அதுவும், உத்தனம் பகுதி மக்களுக்குப் பவன் சாமி போல!

இங்கே சேலம் இரும்பாலை தனியார்மயம் போல அங்கே விசாகப்பட்டினம் கடல்நீர் சுத்தீகரிப்பு நிலையம் தனியார்மயம். அதுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு தொழிலாளி இறக்க, முந்தியடித்துப் போய் நின்றார் பவன். அதற்குச் சில தினங்கள் முன்பு, தமிழ்நாட்டு முதலமைச்சர் பழனிசாமி பிரதமர் மோடியைச் சந்தித்து ஒரு மனு அளித்திருந்தார். அதில், `சேலம் இரும்பாலையைத் தனியார் மயமாக்கக் கூடாது’ என்று வலியுறுத்தியிருந்தார். பவன் அந்தக் கடிதத்தைக் கேட்டுவாங்கி வாசித்தார். `இதுவும் நியாயமான கோரிக்கையே’ என்ற முடிவுக்கு வந்தார். தமிழக அரசின் கடிதத்தை இணைத்து, கடிதவரிகளை மேற்கோள் காட்டி `பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை நிறுத்துங்கள். அவை நாட்டு நிர்வாகத்தின் நரம்புகள்’ என்று குரல் கொடுத்தார். அப்போது ஜெகன் எங்கே இருந்தார்? அவர் , `அம்மாவையும் மனைவியையும் எப்படி அழவைத்து வாக்கு வாங்கலாம்’ என்று திட்டம் தீட்டிக்கொண்டிருந்தார்!

ஆந்திராவில் இப்போதுவரை `சிறப்பு அந்தஸ்து' கோரிக்கையை உரக்க ஒலித்து வரும் முக்கியக்குரல் பவனுடையதுதான். உண்மையில், ஜெகனுக்குச் சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் அவ்வளவாக ஆர்வமே இல்லை. அதையோர் அரசியல் கருவியாகவும் ஆரம்பத்தில் அவர் பார்க்கவில்லை. ஆட்சியில் அமர்ந்தபிறகு ஜெகன் என்ன சொல்கிறார் என்பதைப் பார்த்தால், அது புரியும். என்ன சொல்கிறார் அவர்? டெல்லிக்குப் போய் மோடியைப் பார்த்துவந்ததும், ஒரு பேட்டி கொடுத்தார் ஜெகன். `நான் ’சார்... ப்ளீஸ் சார்...’ என்று கெஞ்சுகிறேன். ஆனால் அவர்கள் கொடுக்கமாட்டேன் என்கிறார்களே’ என்று, புலம்புகிறார். `கெஞ்சிக் கேட்பதற்கு அது என்ன உதவியா... உரிமை’ என்று கொதிக்கிறார்கள், ஆந்திர இளைஞர்கள். `OK.. Good with that approach' என்றும் கலாய்த்து தள்ளுகிறார்கள். அவரது அத்தனை நகர்வுகளுமே, `பாரத் அனே நேனு’ போன்ற ஆந்திர சினிமாக்களை ஞாபகப்படுத்துகின்றன. ஜெகன் அரசியலில் இருந்த சினிமாக்காரன்!
ஒன்று தெரியுமா? பவன், தனியாகக் களம் காணவில்லை. கம்யூனிஸ்ட்களையும், பகுஜன் சமாஜையும் இணைத்துக்கொண்டே களத்தில் நின்றார். தமிழ்நாட்டில் ஸ்டாலின் செய்ததைப் போன்ற `Inclusive politics' அது. ஆனால், கடைசிவரை ‘சினிமாக்காரன்’ என்றே பவனைப் பார்த்து விட்டார்கள், ஆந்திர மக்கள். ப்ச்! இன்னொன்றும் தெரியுமா? பவன் சமீபத்தில் தமிழ்நாடு வந்தார். தமிழ்ப் பத்திரிகை நண்பர்களையும் சந்தித்தார். அத்தனை கேள்விகளுக்கும் சடசடவென வந்துவிழுந்தன அவரிடமிருந்து பதில்கள். பேட்டி முடிந்ததும் ஒரு பத்திரிகை நண்பர் சொன்னார், ’ `ஏதோ ஒரு ஆந்திர நடிகர் வந்திருக்கிறார். பெயர், பவன்’ என்று சொன்னார்கள். என்ன பெரிதாய்ப் பேசப்போகிறார் என்று எளிதாக நினைத்து வந்துவிட்டேன். ஆனால், இவர் வேறு மாதிரி தெரிகிறார்’. பவன், சினிமாவில் இருந்த அரசியல்வாதி!
பவனுக்கு அண்ணாவும் பெரியாரும் அம்பேத்கரும் பெரிய ஆதர்சங்கள். அண்ணா முன்வைத்த `வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது' முழக்கத்தை, இங்கிருக்கும் திராவிட இயக்கங்கள் கூட இப்போது எழுப்புவதில்லை. ஆனால், பவன் எழுப்புவார். வேறு மாதிரி சொல்வார், `Up North Down South'! அட, பவனுக்குத் தமிழ்நாட்டுக்கு வரவேண்டுமென்று என்ன தலையெழுத்தா? ஆனால், வந்தார். வந்ததோடு நில்லாமல், `திராவிட சித்தாந்தம் நீர்த்துப்போவதாக நான் நினைக்கவில்லை. இப்போதும் இங்கே திராவிட சிந்தாத்தத்தை சூடும் கட்சிகள் மட்டுமே வெல்லமுடியும்’ என்று பேசிச் சென்றார். பவன் நினைத்திருந்தால், ஜனசேனாவை காப்பு இனத்தின் கட்சியாக மட்டுமே மாற்றியிருக்க முடியும். அவரது அண்ணன் சிரஞ்சீவி அப்படிச்செய்துதான் ஒருங்கிணைந்த ஆந்திரத்தில் 18 தொகுதிகள் வரை ஜெயித்தார். ஆனால், பவன் அதை விரும்பவில்லை! 'இந்தியாவுக்கு ஒரு பட்டியலினத்தவர் பிரதமராக வேண்டும்’ என்று ஆசைப்பட்டவர், அதை எப்படிச் செய்வார்?

அறிவீர்களா? பவன் கல்யாணுக்கும் தூண்டிலை வீசியது பி.ஜே.பி. எல்லாத்தையும், எல்லோரையும் கபளீகரம் செய்யும் கரங்களாக மாறிக் கொண்டிருக்கிறது அந்தக் கட்சி. அந்தக் கரங்களில் ஒன்று பவனை நோக்கியும் நீண்டது. அமித் ஷாவே நேரடியாகப் பேசினார். `இணைந்து விடுங்கள் கட்சியில்...' என அழைத்தார், இழுத்தார்! பவன் ஒரே வார்த்தையில் மறுத்தார், `அது அரசியல் சந்தர்ப்பவாதம்'! இதை ஒரு பேரணியில், மக்களுக்கு முன்னால் பவனே தெரிவித்தார். `பிரஜா ராஜ்யம் செய்த தவற்றை எப்போதுமே ஜனசேனா செய்யாது' என்றும் அறிவித்தார். இப்போதுவரை பி.ஜே.பிக்கு பவன்தான் பிரதான எதிர்ப்புக்குரல் அங்கே. அதுவும், `சிறப்பு அந்தஸ்து' விவகாரத்தில் பொளந்து எடுப்பார். மேடைக்கு மேடை `நாங்கள் கேட்பது 'சிறப்பு அந்தஸ்து' மத்திய அரசே! லட்டோ, பூந்தியோ அல்ல. அது எங்களிடமே நிறைய இருக்கிறது' எனச் சாத்துவார். `லஹாங்கே... லடாங்கே' என்று செம லடாய் கொடுப்பார்.

பவனிடம் முக்கியமாகப் பார்க்க வேண்டியது ஒன்றுதான். அவர் மக்களிடம் உரையாடிக்கொண்டே இருக்கிறார். மக்களைப் புரிந்துகொள்ள முயல்கிறார். இந்தக் காரணங்களால்தான், கவனிக்கப்பட வேண்டிய அரசியல்வாதியாக அவர் இருக்கிறார். வெற்றி இன்று வரும், நாளை போகும். ஆனால், செயல் நிலையானது, நிரந்தரமானது! ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைத்தும் கைவிட்ட பிறகு, `பவனிடம் போய் நிற்கலாம்' என்ற எண்ணம் ஆந்திர மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்றால், அது சும்மா இல்லை. இங்கே இருக்கும் தேவதூதர்கள் அதை உணரவேண்டும். உட்கார்ந்த இடத்திலேயே உரசிப்பார்க்க மக்களொன்றும் நகைநட்டுகள் அல்ல. அவர்கள், நாடி நரம்புகள்! இறங்கிவந்து கையைப்பிடித்து பார்த்துத்தான் அறிய முடியும். அறியவும் வேண்டும்.
`அஞ்ஞாதவாசி' ஆடியோ விழாவில் இப்படிப் பேசினார் பவன்... `இந்தப் படத்தில் தமிழ்நாட்டின் அனிருத், குஷ்பூ இருக்கிறார்கள். மலையாளத்தின் கீர்த்தி சுரேஷ் இருக்கிறார். கன்னடத்தின் சண்டைப் பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள். இந்தியின் பொம்மன் இரானி இருக்கிறார். எல்லோரும் சேர்ந்து ஒரு படத்தை எடுத்திருக்கிறோம். இதையே இந்தப் படத்தின் சிறப்பாக நினைக்கிறேன்'. இதுதான் பவனின் அரசியல் கொள்கைகளில் முக்கியமான கொள்கை. இத்தேசத்தின் பன்மைத்துவத்தை உணர்ந்த தேசியவாதி பவன்! ஆனால், சினிமா மேடையில் அரசியல் பேசமாட்டார். அரசியல் மேடையில் சினிமாவைப் பேசமாட்டார்!
பவனிடம் வெளிப்படையாகக் கேள்வி கேட்கவும் முடியும். பதில்பெறவும் முடியும். இரண்டு திருமணமுறிவுகளைச் சந்தித்தவர், அவர்! காரணம் கேட்டார்கள்... 'நான் வாழ்க்கை முழுவதும் பெண் துணையின்றி வாழவே நினைத்தேன். ஆனால், ஏன்... எதனால்... திருமணப் பந்தத்துக்குள் சென்றேன் என்றே தெரியவில்லை. அதெல்லாம் சரிவர அமையாததுக்கு என் பொறுமையின்மையே காரணம். நானே பொறுப்பு' என்று மனம் திறந்தார். என்னவென்று சொல்வது? அதை வைத்தும் அரசியல் செய்தார் ஜெகன். `பவனால் அவரது மனைவியை வைத்தே வாழ முடியவில்லை’ என்று, அநாகரிகத்தின் உச்சியில் நின்று பேசினார். அதற்குப் பவனின் பதில், `பதில் சொல்ல விரும்பவில்லை’ என்பது மட்டுமே.

பவன் சரிந்ததற்குப் பின்னால், நிச்சயம் கண்ணுக்குத் தெரியாத சில காய் நகர்த்தல்கள் இருக்கின்றன. ஏற்கெனவே, சினிமாத்துறையில் இதே போல வீழ்த்தப்பட்டவர்தான், அவர். அந்தத் தருணங்களில், பவனை எந்தத் தயாரிப்பாளர்களும் தேடி வரவில்லை. தானே தயாரித்தார். தானே இயக்கினார். தானே வெளியிட்டார். ஆனால் சிரித்துக்கொண்டே சொன்னார், `எனக்கு நான் ஜெயித்த காலத்தை விட தோற்றகாலத்தில்தான் அதிகமாகச் சம்பளம் கொடுத்தார்கள். இதை எப்படிப் புரிந்துகொள்வதெனத் தெரியவில்லை'. அப்புறம், கப்பார் சிங் வந்து பவன் அனைவரையும் தாண்டி பாகுபலியாக எழுந்து நின்றது வரலாறு!
உண்மையில், பவன் ஓர் அமைதியற்ற சூழலில்தான் வாழ்கிறார். அண்ணன்கள் ஆதரவாக இல்லை. சொந்தங்கள் துணையில்லை. ஒவ்வொரு விழாவிலும் பவனை ஒருமாதிரியே பார்ப்பார்கள். வெளிநாட்டுப் பெண்ணைத் திருமணம் செய்ததால் ஒருவகை கசப்பைக் காட்டுவார்கள். இது எல்லாத்துக்கும் மேலே பணக்கஷ்டம். பவன் நினைத்தால் திரைப்படத்தில் பல கோடிகளை அள்ள முடியும். பவனுக்கு இருக்கும் மார்க்கெட், இப்போது தென்னிந்தியாவில் ரஜினிக்குச் சமானமானது. ஆனால், பவன் பல ஆண்டுகளுக்கு முன்னரே சினிமா மீதான ஆர்வத்தை இழந்துவிட்டார். சினிமாவை ஒரு 'வாழ்வாதாரம்' எனச் சொன்ன மாஸ் ஹீரோ, அவர் மட்டும்தான்.

பவனின் இந்தச் சூழலை, அங்கிருக்கும் மற்ற மாஸ் ஹீரோக்களுடன் ஒப்பிட்டால் புரிந்து கொள்ள முடியும். அங்கே எல்லோருமே ராஜ வாழ்க்கையே வாழ்வார்கள். எல்லோருக்கும் பின்னாலும் ஒரு பாரம்பர்யக் குடும்பம் இருக்கும். நமக்குத் தெரிந்த பிரபாஸுக்கும் இருக்கிறது. ராணாவுக்கும் இருக்கிறது. ஆனால், பவன் எப்போதும் மெகா குடும்பத்தின் நிழலில் நின்றதில்லை, நிற்க விரும்பியதும் இல்லை. பவனுக்கு, சாய் தரம் தேஜூம் ஒன்றுதான், நிதினும் ஒன்றுதான்!
இப்படிப்பட்ட பவன் அரசியலில் எங்கே சறுக்கினார்? ஒரே ஓர் இடத்தில்தான் சறுக்கினார்... அது, ரசிகனை 'அரசியல்மயப்படுத்துதல்'. ஆம், அரசியல்மயப்படுத்துதல்! இதுதான், ஒரு சினிமாக்காரன் அரசியலுக்கு வருவதன் ஆதாரப்புள்ளி. இதற்கு விளக்கம், ரசிகனைத் தொண்டனாக்குவது என்பதல்ல, ரசிகனையும் ஓர் 'அரசியலாளன்' ஆக்குவது. பவன் அதைச் செய்யத் தவறினார். அவர் ரசிகர்கள் அவரைக் கவனித்த அளவுக்கு, அவர் அரசியலை கவனிக்கத் தவறினார்கள். அப்படிக் கவனித்திருந்தால், பவனை சே குவேராவோடு ஒப்பிடும் அபத்தத்தை எல்லாம், அவர்கள் செய்திருக்க மாட்டார்கள். பவனின் ரசிகர்களில் பெரும்பாலும் இளைஞர்கள். இங்கே அஜித்துக்கு இருப்பது போல. அதனாலேயே ஆர்வக்கோளாறில் ஏதேதோ செய்து ஏளனத்துக்கு ஆளாவார்கள். பவன் இனிமேலேனும் அவர்களை அரசியலாளர்களாக மாற்ற முயற்சி செய்ய வேண்டும். அதை மட்டும் செய்துவிட்டால், அடுத்த சில ஆண்டுகளில் அவர் ஆந்திரத்தின் அசைக்க முடியாத அரசியல் சக்தி!