##~## |
திவாகரன் கைதுக்குப் பின் டெல்டா மாவட்டங் களில் அடுத்தடுத்து அரசியல் திருப்பங்கள். இந்த விவகாரத்தில் மௌனம் காத்துவந்த தி.மு.க., இப்போது மன்னார்குடி பக்கம் பார்வையைத் திருப்பி இருப்பதால் தமிழக அரசியல் படபடக்கிறது.
தி.மு.க. பிடியில் கஸ்தூரி?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அ.தி.மு.க-வில் இருந்து கடந்த 2009-ம் ஆண்டு தி.மு.க-வுக்கு மாறியவர் ரிஷியூர் தமிழார்வன். இவரது டிரைவரின் மனைவி கஸ்தூரியின் வீடு இடிப்புப் புகாரை வைத்துதான் திவாகரன் கைது செய்யப்பட்டார். கடந்த 6-ம் தேதி மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் கூட்டத்துக்காக ஸ்டாலின் திருவாரூர் வந்தார். அப்போது பூண்டி கலைவாணன், ஸ்டாலினிடம்

கஸ்தூரியை அறிமுகம் செய்துவைத்தார். அறக்கட்டளை சார்பில் 'தானே’ புயல் நிவாரண நிதியாக கஸ்தூரிக்கு

10,000 வழங்கப்பட்டது.
இந்த விவகாரம் குறித்துப் பேசும் டெல்டா உடன்பிறப்புகள், ''கஸ்தூரியின் ஊர் புயலால் பாதிப்பு அடையவில்லை. ஆனாலும் கஸ்தூரிக்கு நிதி கொடுத்து இருப்பதுதான் தி.மு.க-வின் தந்திரம். கஸ்தூரி வழக்கை வாபஸ் பெற்றுவிட்டால், திவாகரன் வெளியே வந்துவிடலாம். அதனால் கிட்டத்தட்ட இது மன்னார்குடி குடும்பத்துக்கான அழைப்பு. இதன் மூலம் அவர்களை தி.மு.க. பக்கம் திருப்பி, அவர்கள் மூலம் பதவிக்கு வந்த கணிசமான எம்.எல்.ஏ-க்களை சஞ்சலப்பட வைக்கலாம் என்று நினைக்கிறார்கள்.
ஏற்கெனவே ஸ்டாலின், திவாகரனைப் பற்றி டெல்டா தி.மு.க. நிர்வாகிகளிடம் விசாரித்து உள்ளார். திவாகரனின் உறவினர்கள் பலர் தி.மு.க-வில் முக்கியப் பொறுப்புகளிலும் உள்ளனர். இதுவரை இந்த விவகாரம் பற்றிப் பேசாத கருணாநிதி, 'தவறு

செய்தவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்’ என்று அறிக்கை விடுகிறார். கூட்டிக் கழித்துப் பாருங்கள்... அ.தி.மு.க-வின் கூடாரத்தைக் கலைக்கும் தி.மு.க-வின் கணக்கு சரியாக இருக்கும்...'' என்கிறார்கள் டெல்டாவின் உடன்பிறப்புகள்!
பாயும் வழக்குகள்
கஸ்தூரியின் வீடு இடிப்புப் புகார் தாக்குப்பிடிக்காது என்பதால், திவாகரன் மீது அடுத்தடுத்து வழக்குகளைப் பாய்ச்சத் தயாராகி வருகிறது போலீஸ்.
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள எடையூரைச் சேர்ந்த சரவணன் என்பவர் புதிய புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். ''திவாகரன், அவரது கல்லூரி ஊழியர் ரகுநாதன் உள்ளிட்ட சிலர் கடந்த 9.9.11 அன்று என்னைக் கடத்திச் சென்று கத்தியைக் காட்டி மிரட்டி, ஒரு லட்சம் ரூபாய் பறித்தனர்’ என்று கடந்த 8-ம் தேதி புகார் கொடுத்து உள்ளார். அதில் எடையூர் போலீஸார் திவாகரன், ரகுநாதன் ஆகியோர் மீது கொலை மிரட்டல், ஆள்கடத்தல், கலகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இவை தவிர, மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் தினக்கூலிகளாகப் பணியாற்றிய 25 பணியாளர்கள் பணிநீக்கம் செய் யப்பட்ட விவகாரமும் திவாகரன் மீது வழக்காகப் பாய இருக்கிறது. பணிநீக்கம் செய்யப்பட்ட கோயில் பணியாளர்கள், 'நாங்கள் நீக்கப் பட திவாகரன்தான் காரணம்’ என்கிறார்கள். இவை போக, நில அபகரிப்புத் தொடர்பான புகார் களும் அடுத்தடுத்து திவாகரனுக்காகத் தயாராகி வருகின்றன. குண்டாஸில் போடும் வரை விட மாட்டார்கள்...'' என்கிறது போலீஸ் தரப்பு.
ஆர்.காமராஜுக்கு வேட்டு?
திவாகரனின் ஆதரவாளர் என்பதால், கடந்த 12 ஆண்டுகளாக திருவாரூர் மாவட்டச் செயலாளராக இருப்பவர் ஆர்.காமராஜ். இவர் எம்.எல்.ஏ. ஆனதும், 'திவாகரனின் ஆதரவால்தான் வெற்றி பெற்றேன்’ என

பகிரங்கமாக உணர்ச்சி வசப்பட்டார். இதனால், திவாகரன் தயாரித்த முதலாவது அமைச்சரவைப் பட்டியலில் இவர் பெயர் இருந்தது. ஆனால், அப்போது முதல்வர் இவர் பெயரை 'டிக்’ செய்யவில்லை. ஆனாலும், அடுத்த அமைச்சரவை மாற்றத்தில் இவரை உணவுத் துறை அமைச்சராக்கிக் காட்டினார் திவாகரன்.
மன்னார்குடி ஆக்ஷனுக்குப் பிறகு காமராஜ் பதவிகளுக்கும் ஆபத்து ஏற்பட்டது. ஆனால், உஷார் அடைந்தவர் மன்னார்குடி குடும்பத்தைப் பற்றி தனக்கு தெரிந்த எல்லாவற்றையும் மேலிடத்தில் கொட்டி சரண்டர் ஆகிவிட்டார். இவரை வைத்துத்தான் மன்னார்குடி குடும்பத்தின் அடுத்தடுத்த அசைவுகளை அறிந்து கொள்கிறார்கள். ஆனாலும், காமராஜ் வகிக்கும் மாவட்ட செயலாளர் பதவி விரைவில் பறிக்கப் படலாம் என்றே சொல்கிறார்கள். அவருக்குப் பதில் தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியான திருவாரூர் அசோகன், கடந்த தேர்தலில் கருணாநிதியை எதிர்த்துப் போட்டியிட்ட ராஜேந்திரன், திவாகரனின் தீவிர ஆதரவாளராக இருந்து, நீடாமங்கலம் சேர்மன் பதவியில் இருந்து ராஜினாமா செய்த எஸ்.காமராஜ் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படலாம்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் முதல் களை எடுப்பாக கும்பகோணம் நகரச் செயலாளர் பி.எஸ்.சேகர் நீக்கப்பட்டு உள்ளார். இது ஆரம்பம்தான்... இனிமே இருக்கிறது பெரும் தலைகள் மீதான களை எடுப்பு'' என்று காத்துக்கிடக்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.
- சி.சுரேஷ், படங்கள்: கே.குணசீலன்